தலைப்பு

ஞாயிறு, 19 ஜூலை, 2020

தியானத்தில் செய்ய வேண்டுவதும் செய்யக்கூடாததும்!


தியானமாக அமரத்தி ஞானமாக இதயத்தில் நடமிடும் சத்ய சாயி பரம்பொருளே தியானத்திற்கு வழிகாட்டுகிறார்.இதில் தியானத்திற்கு வழிகாட்டுவதும் அவரே.. தியானத்தின் முடிவாய் அடையப்போவதும் அவரையே என்பதை ஒவ்வொரு சாதகரும் உணர்கிற தருணம் உன்னதம்.. தியானம் பற்றிய சாயி ஞானம் இதோ.. 

தியானத்தில் அமர்வதற்கே சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும். முதல் தேவை பத்மாஸனத்தில் (தாமரை வடிவில்) உட்கார வேண்டும் என்பது. ஆஸனத்தில் அமரும் போது முதுகுத்தண்டு எந்தப்பக்கமும் சாயாமல் நேராய் நிமிர்ந்து இருக்க வேண்டும். சிலர் தியானத்தின் போது கழுத்தை வளைக்கின்றனர். இது மிகத்தீது. காரணம் மேலெழும் குண்டலினி சக்தி கழுத்துப் பகுதியில் தங்கிவிட்டால் அங்கே இருக்கின்ற நுண்ணிய நாடிகளை அது பாதித்து உடல் முழுதையுமே பாதித்து விடும்.


குண்டலினி தவறான பாதையில் பாய்வதனால் பலர் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளவராயினர். தியானத்தின்போது பின்பக்கம் சாயவும் கூடாது. அதுவும் கெடுதலே, தியானத்தின் போது இறுக்கமான உடை அணிதல் கூடாது. இடுப்புப் பகுதியில் ஆடை சற்று இறுக்கமற்றே இருக்க வேண்டும். கண்கள் நாசியின் நுனியில் குவிக்கப்பட வேண்டும். கண்கள் திறந்திருந்தால் அவை அங்குமிங்கும் அலைபாய்ந்து கவனம் சிதறக்கூடும். கண்கள் பாதி திறந்திருக்க வேண்டும். முழுதும் மூடினால் ஒருவர் உறக்கத்தின் வசப்படக்கூடும்.


தியானத்தில் அமரும் முன்னர் மனதில் உள்ள தீய எண்ணங்கள் விலக்கி புனித சிந்தை நிரப்ப வேண்டும். இதற்கு எல்லா புலன்கள் மேலும் கட்டுப்பாடு தேவைப்படுகிறது. தேவையற்ற அரட்டைகளிலும், ஓசைகளிலும் மனம் செல்லாமல் புனித விஷயங்கள் மட்டுமே கேட்கும் வண்ணம் செவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். கண்கள் இறைவனை நோக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனிதன் அலைபாயும் தன்மையை கட்டுப்படுத்தி சோஹம், சோஹம் (நானே அவன்) என்று மூச்சின் மீது கவனம் செலுத்த பயிற்றுவிக்க வேண்டும். இதனால் உயிர் மூச்சு கட்டுப்படுகிறது. பிறகு குண்டலினி சக்தியை எழுப்ப வேறு எந்த தனியான பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. மூச்சுப் பயிற்சியினாலேயே இது சாத்தியம் ஆகும்.

-ஸ்ரீ சத்ய சாயி பாபா 
11.3.84 - பிரசாந்தி நிலையம்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக