தலைப்பு

ஞாயிறு, 19 ஜூலை, 2020

முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி.V. பாலகிருஷ்ணா ஈரடி அவர்களின் சாயி அனுபவங்கள்!


திரு.பாலகிருஷ்ணா ஈரடி (19 ஜூன் 1922 - 30 டிசம்பர் 2010) 
இந்தியாவின் (சுப்ரீம் கோர்ட்) உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர். அவர் மேலும் கேரளா உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் தேசிய நுகர்வோர் தகராறு தீர்க்கும் ஆணையத்தின் தலைவராகவும் ரவி&பியாஸ் நீர் தீர்ப்பாயத்தின் தலைவராகவும் இருந்தார். மேலும் ஆன்மீகத் துறையிலும், கலாச்சாரத் துறையிலும், சமூக அமைப்புகளிலும் அனைவராலும் அறியப்பட்டவர். 

முதன்முதலாக நான் பகவானிடம் சென்றபொழுது கேரளாவின் மூத்த அரசாங்க வாதியிடம் வேலை பார்ப்பவர்களுள் ஒருவராக வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். எல்லா இளைய வழக்கறிஞரின் கனவான, லட்சியமான உயர்நீதிமன்றத்தின் பதவிக்கு உயர வேண்டும் என்ற எண்ணம் என்னிடமும் இருந்தது. ஆனால் முறையாக, அந்த மாதிரியான விருப்பங்களை அப்போது நான் விரும்பக் கூடாது. நான் முதன்முதலாக சுவாமியிடம் சென்ற பொழுது மிகவும் இளைய வயது உள்ளவனாக இருந்தேன். அந்த காலகட்டங்களில் 50 வயதுக்கு கீழே உள்ளவர்கள் உயர்நீதிமன்றத்தில் நீதிபதி துறைக்குத் தேர்வாக முடியாது.


நான் நம் பகவானிடம் என் வேலையைப் பற்றி எப்பொழுதுமே கூறியது கிடையாது. ஆனால் எல்லாம் அறிந்த பகவான், குறுகிய காலத்திலே அவரது பாதாரவிந்தங்களில் சரணடைந்த என்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி ஆக்கினார். அவருடைய சங்கல்பத்தினாலேயே 44 வயதிலேயே என்னை கேரள உயர்நீதி மன்றத்திற்கு உயர்த்தினர். அதன் பின்பு சிறிது காலத்திலேயே தலைமை நீதிபதியாக உயர்நீதிமன்றத்துக்கு என்னை எந்தவொரு முன்னறிவிப்பும் இன்றி தேர்ந்தெடுத்தார்கள். அதுவும் 1979ஆம் ஆண்டு பகவானின் பிறந்த நாளின் போது புட்டபர்த்தியில் இருந்த எனக்கு தபால் தந்தி மூலம் கிடைக்கப் பெற்றது. அதற்கு முன்பாகவே ஜனவரி 26, 1976ல் நம் பகவான் என்னிடம் டில்லியில் உள்ள உச்சநீதிமன்றத்திற்கு செல்ல தயாராக இருக்குமாறு அன்புடன் கூறினார்.


 1980 ஜூலை 17ஆம் தேதி குருபூர்ணிமாவின் போது, நம் பகவான் பிரசாந்தி நிலையத்தின் மந்திரில் உள்ள தாழ்வாரத்தில் அமர்ந்திருந்த பக்தர்களிடம் "ஈரடி உச்சநீதிமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்" எனக் கூறியுள்ளார்.அப்பொழுது வரை இந்திய அரசாங்கத்திடமிருந்தோ உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியிடமிருந்தோ  எந்த தகவலும் வரவில்லை. ஆனால் அடுத்தநாள் எர்ணாகுளத்திற்கு நான் திரும்பி வந்த பொழுது அதாவது ஜூலை 20-ஆம் நாள் எனக்கு தலைமை நீதிபதியிடமிருந்து உச்சநீதிமன்றத்திற்கு எனக்கு நீதிபதி பொறுப்பு தர இசைந்துள்ளதாகவும், என்னுடைய ஒப்புதலைக் கூறுமாறும் கேட்கப்பட்டது. இவ்வாறு சாயியின் சங்கல்பம் என்னை பலப்படுத்தியது.



ஆன்மீக குழுக்களிலும் நம் பகவான் நான் பங்கு கொள்ளவும் நமது சாய் அமைப்புகளிலும் மற்றும் மத்திய அமைப்புகளிலும் சேவை செய்ய எனக்கு அருமையான அற்புதமான வாய்ப்புகளை அளித்தார். 1967 டிசம்பர் மாதம் என்னை கேரள மாநிலத்தின் சத்யசாய் அமைப்புகளுக்கு மாநிலத் தலைவராக சுவாமி என்னை சேவை செய்ய வாய்ப்பளித்ததற்கு நான் சுவாமிக்கு மிகவும் கடமைப்பட்டுள்ளேன். 1975 ஆம் ஆண்டு வரை அந்த சேவை செய்தேன். புட்டபர்த்தியில் அப்போது சுவாமி மத்திய அமைப்பு (சென்ட்ரல் டிரஸ்ட்) உருவாக்கி, அதில் என்னையும் ஒரு அங்கத்தினராக்கி சுவாமி என் மீது அன்பை பொழிந்தார். தற்போது வரை அதில் உள்ளேன். மேலும் நம் பகவான் உலக சாய் அமைப்புகளிலும் என்னை அங்கத்தினராக்கினார். இந்த பொறுப்புகளும், அங்கீகாரங்களும், இறைவனின் கருணையினால் நமக்கு வழங்கப்பட்டு, அவருடைய தெய்வீகப் பணியில் நாமும் இணைந்து செயலாற்றுவது நமக்கு ஆத்ம திருப்தியையும் சந்தோஷத்தையும் வழங்குகிறது. அது என்னுடைய நீதித்துறையின் பணியை விட மிக உயர்வாகவும் மன திருப்தியோடும் உள்ளது என்றால் அது, பகவானின் அருளாசியினால் தான். எங்களது இல்வாழ்க்கையிலும் சுவாமியின் அருளையும், அவர் நம்மை பாதுகாத்துக் கொள்வதையும் அன்றாடம் உணருகிறோம். வாழ்க்கையின் துன்பமான நேரங்களிலும் நம் பகவான் உடனே உதவி புரிகிறார். எங்களை மிகப் பெரிய கார் விபத்திலிருந்து காப்பாற்றினார். என் மனைவிக்கும் இரண்டு குழந்தைகளுக்கும்  எனக்கும் ஏற்பட்ட விபத்திலிருந்து எங்களைக் காப்பாற்றி, அதற்கு மருந்துகளையும் (அழகான உருண்டைகள் எனக்கு, சீல்செய்து உரையிலிட்ட புனிதமான மருந்து எங்கள் மகனுக்கு) கொடுத்துக் காப்பாற்றினார். மற்றும் கஷ்டமான நேரங்களிலும் பகவான் எங்களுக்கு மருந்தாக பக்கபலமாக இருந்து காப்பாற்றினார். குடும்ப தலைமைப் பொறுப்புகளை ஏற்று, எங்கள் ஒரே மகளுக்கு 1985 ஆம் ஆண்டு பிரசாந்தி நிலையத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார். என்னுடைய ஒரே வேளை திருமணப் பத்திரிக்கை அடிப்பது மட்டுமே  இருந்தது. அந்த மகள் அமெரிக்காவில் இருக்கும் பொழுது அவளுடைய கஷ்டமான நேரத்தில், பிரசவ காலத்தின் போது சுவாமி ஆசீர்வதித்த விபூதியை அவளுக்கு தண்ணீரில் கலந்து கொடுக்க அவளுக்கு இயற்கையாகவே நார்மல் டெலிவரி ஆனது. சுவாமியின் ஆசீர்வாதம் விபூதி மூலம் அவளுக்கு அளிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற அரை மணி நேரத்தில் எந்த கஷ்டமும் இன்றி நார்மல் டெலிவரி ஏற்பட்டது. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்கள் (நம் சுவாமியின் தெய்வீக குணத்தை அறியாதவர்கள்) இதை ஏதோ அதிசயம் என்றே கூறினார்கள். அவர்கள் இதற்கு முன்பு இதைப் பார்த்ததும் கேள்விப்பட்டதும் இல்லையாதலால்.. சுருக்கமாகக் கூறினால் நமது வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருப்பதற்குக் காரணம் நம் பகவானின் அன்பும் கருணையும் தான். அவரில்லையென்றால் நம் வாழ்க்கை அர்த்தமற்றதாகிவிடும். ஒன்றுமில்லாததாகிவிடும்.

"த்வம் ஏவ ஸர்வம் மம தேவதேவ"
"நீரே எல்லாமும் ஆகி இருக்கிறாய், என்னுடைய இறைவா"

நிறைய பக்தர்களுக்கும் இதுபோன்ற அனுபவங்கள் நடந்திருக்கலாம்.1978இல் வெளிவந்த முதல் பதிப்பான "GOLDEN AGE" எனும் புத்தகத்தில் பகவானை "பெருங்கடல் அளவை போன்று அன்பையும் ஆசியையும் வழங்குபவர்" என்று கூறியிருப்பேன். 12 வருடங்கள் கழித்து இப்போது அதே வார்த்தைகளை மெருகேற்றி என் அனுபவத்தின் காரணமாக நம் பகவான், "பெருங்கடலைவிட அன்பையும், கருணையையும், இரக்கத்தையும், பேரின்பத்தையும் வழங்கக் கூடியவர்" என்று உறுதியாகக் கூறுகின்றேன்.

ஆதாரம்: Sai Vandana 1990 (65th Birthday Offering) 
தமிழாக்கம்: உமாராணி சங்கரலிங்கம், போரூர் சமிதி, சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக