தலைப்பு

ஞாயிறு, 5 ஜூலை, 2020

லீலா மோகன சாய் - மல்லிகேஸ்வரன்

பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபாவின் கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் திரு. மல்லிகேஸ்வரன் அவர்களின் அனுபவங்கள். 

"தொலைக்காட்சி பார்க்காதே திரையரங்குகளுக்கு படம் பார்க்க செல்லாதே" இவ்வாறு பகவான் என்னிடம் குளிர் கால விடுமுறைக்கு நான் வீட்டிற்கு செல்ல ஆயத்தப் படும்போது அன்புடன் கூறினார்.

ஒரு நாள் என் சகோதரன் வீட்டிற்கு சென்று விட்டு என் வீட்டிற்கு திரும்பும்போது எனக்கு மிகவும் பிடித்த சினிமா நடிகரான சிவாஜி கணேசன் நடித்த படத்திலிருந்து சத்தம் ஒன்று தொலைக்காட்சியில் வந்தது. சட்டென்று என் கவனம் தொலைக்காட்சி பக்கம் அரைவினாடி திரும்பியது. பிறகு நான் என் வீட்டிற்கு சென்றுவிட்டேன். வேண்டுமென்றே நான் பார்க்கவில்லை. அதனால் இந்த முழு சம்பவத்தையும் நான் மறந்துவிட்டேன். பிருந்தாவனத்திற்கு திரும்பினேன். வந்தவுடனேயே, சுவாமி தரிசனத்திற்காக ஓடினேன். அவர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி துன்ன பொத்தா(எருமையே) ஏன் தொலைக்காட்சி பார்த்தாய்? அதற்கு நான் சுவாமி, நான் திரையரங்கு சென்று படமும் பார்க்கவில்லை, தொலைக்காட்சியும் பார்க்கவில்லை என்றேன். ஆனால் அகிலத்தையும் அறிந்த பகவான் "ஏய் நீ சிவாஜி கணேசனை அரை வினாடி பார்க்கவில்லை? எனக்கு எல்லாம் தெரியும் நல்ல பையா! என்று இனிமையாக கூறினார். ஸ்வாமி எப்போதும் என்னுடனே இருக்கிறார் என்று புரிய வைத்த என்னுடைய முதல் தெய்வீக அனுபவம் இது.


"அனன்யா சிந்தயந்தோ மாம் யே ஜனா பர்யுபாசதே" (பகவானை எப்போதும் தியானித்துக் கொண்டிருப்போர்க்கு அவர் எப்போதும் காப்பாற்றி பாதுகாப்பளிப்பார்) என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில் கூறியுள்ளார். ஆனால் இந்த சத்யசாய் அவதாரத்தில் நீங்கள் பகவானை தியானித்தாலும் சரி தியானிக்காவிட்டாலும் சரி அவர் உங்களை எப்போதுமே பாதுகாத்துக் காப்பாற்றுவார்.

நீ எப்படி இருந்தாலும் நீ என்னுடையவன் என்னுடையவள் உன்னை நான் கைவிடமாட்டேன் என்கிறார் சுவாமி. அப்பாவிற்காக சுவாமி ஒரு மோதிரத்தை உருவாக்கி அவருடைய மோதிர விரலில் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அணிவித்தார். என் அப்பாவின் மோதிரவிரல் பக்கவாதத்தால் செயலிழந்துவிட்டது. அவர் ஸ்வாமியிடம் வேண்டினார். உடனே மோதிரவிரல் சரியாகிவிட்டது. ஆள்காட்டிவிரல் பாதிக்கப்பட்டு செயலிழந்து விட்டது. நமது கர்மாவை நாம்தான் சந்தித்தாக வேண்டும் ஆனால் சுவாமியின் அருளாலும் அன்பாலும் இந்த வலியை எளிமையாக என் தந்தை திறமையாக கடந்து விட்டார்.


ஒரு  நேர்காணலின் போது என் சகோதரனைப் பார்த்து" நீ என்ன வேலை செய்கிறாய்"? என்று கேட்டார். எல்&டி யின் சகோதரி நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறேன் சுவாமி என்று பதிலளித்தார். ஆனால் சுவாமியோ நீ பொறியாளர் இல்லை, தணிக்கையாளர் என்று என் சகோதரனிடம் கூறினார் .என்னுடைய தொழிலே பொறியியல் தான் சுவாமி என்று என் சகோதரன் வற்புறுத்தினான். சிறிது நேரத்திற்கு இந்த விவாதம் சென்றது. இறுதியில் என் சகோதரன் வலு விழந்துவிட்டு, சுவாமி என்ன சொல்கிறீர்களோ அதுவே என் தொழில் என்று ஒப்புக்கொண்டான். எனது குடும்பம் சென்னை திரும்பியதும் என் சகோதரன் அலுவலகத்தில் இருந்து ஒரு கடிதம் அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது. அது அவனுடைய பதவி உயர்வுக்கான கடிதம். அதில் குறிப்பிட்ட பதவி என்னவென்றால் "தயாரிப்பு தணிக்கையாளர்" ஆகும். "நான் தற்செயலாக கூறும் வார்த்தைகளை நீ புரிந்து கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அதன் முக்கியத்துவத்தை இறுதியில் உணர்வாய்" என்று பகவான் கூறுவார். அவர் எது பேசினாலும் அதுவே உண்மை. அவர் எது செய்தாலும் அதுவே தர்மம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும். குணங்களுக்கும் நேரத்திற்கும் அப்பாற்பட்ட சுவாமியின் ஒவ்வொரு வார்த்தையும், நம்மால் புரிந்துகொள்ள முடியுமா என்ன? சுவாமியின் மகிமையை சிறிதேனும் புரிந்து கொள்ள அவருடைய கருணை மற்றும் தெய்வ விருப்பம் இருந்தால் தான் முடியும்.

என் வாழ்க்கையில் நிறைய சந்தர்ப்பங்களில் நான் சுவாமி நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவர் என்னை காப்பாற்றி இருக்கிறார். நிறைய நேரங்களில் சாப்பிடுவதற்கு கூட பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு இருக்கிறேன். அந்த கஷ்டமான நேரத்தில் சுவாமி யாரையாவது அனுப்பி எனக்கு விருந்து  கொடுக்க செய்துள்ளார். நான் சாப்பிட்டேனா என்று உறுதி படுத்தியுள்ளார். சுவாமியை தவிர யாரால் இதை செய்ய இயலும்? என் எல்லா பண நெருக்கடி நேரங்களிலும் கட்டுக்கட்டாக பணத்தை யார் மூலமாவது அனுப்பி என் மானம் மரியாதையைக் காப்பாற்றி உள்ளார். அவர் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்திலும் என்னுடனே இருப்பார். துக்க நாட்களிலும் சந்தோஷ நாட்களிலும் எப்போதுமே என்னுடன் இருந்து அவருடைய அன்பு மற்றும் கருணையை பொழிந்து அவர் என்னுடனேயே இருக்கிறார் என்று உறுதிப்படுத்தி இருக்கிறார். ஒரு அழகான தமிழ் பிரார்த்தனை  வசன வரிகளை இங்கு ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.


"இறைவா நீ தாய் என்றால் நான் உன்னுடைய குழந்தை.
நீ குழந்தை என்றால் நான் உன் கைகளில் இருக்கும் விளையாட்டு பொம்மை நீங்கள் தாயாக இருந்தாலும் சரி குழந்தையாக இருந்தாலும் சரி
என் வாழ்க்கை தங்களின் கைகளில்தான்" சுவாமி உங்கள் அன்புக்கும் கருணைக்கும் பாத்திரமாக என்னை தகுதி படுத்துங்கள்.

- Mallikeswaran
Alumnus, Sri Sathya Sai Institute of Higher Learning
Prasanthi Nilayam Campus
Currently, Staff Member,
Sri Sathya Sai Students and Staff Welfare Society
Prasanthi Nilayam


Source: Sai Nandana (90th Birthday Offering)

மொழிபெயர்ப்பு: D. காயத்ரி சாய்ராம், காஞ்சிபுரம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக