தலைப்பு

திங்கள், 13 ஜூலை, 2020

சாவியை கண்டுபிடித்து பக்தியை திறந்த சாயி!


Sri Lankan Business leader, D. Eswaran who was the Ex- Chairman of the famed Eswaran Brothers (Pvt) Ltd

இலங்கையில் பிரபல வர்த்தகர், மொரிஷியஸ் நாட்டு தூதுவர், இலங்கை சத்ய சாயி நிறுவனத்தின் அறங்காவலர், பல ஆலயங்களின் தர்மகர்த்தா, சிறந்த ஆன்மீக சொற்பொழிவாளர், எழுத்தாளர், சமூக சேவையாளர் என்று வாழ்ந்தவர் அமரர் தெய்வநாயகம் பிள்ளை ஈஸ்வரன். பிரசாந்தி நிலையத்தில் நடைபெற்ற, இலங்கை பக்தருக்கான புத்த பூர்ணிமா நிகழ்வொன்றில், பகவான் இவரை அழைத்து, சொற்பொழிவாற்றும்படி கூறியதுடன் பகவானிடம் மறக்க முடியாத மோதிரம் பரிசையும் பெற்றவர்.

அமரர். தெ.ஈஸ்வரன் அவர்கள்,1976 ஆம் ஆண்டு, பகவான் மீது நம்பிக்கை இல்லாது வாழ்ந்து வந்த காலகட்டம். பகவானைப் பற்றி கிண்டலாகவும் தமாஷாகவும் பேசி வந்த நேரம். தன்னிடம் வேலை செய்பவர்களின் மீது அன்பானவர். ஆனால் வேலை விஷயத்தில் மிகக் கண்டிப்பானவர்.


ஒருநாள், அவரது தேயிலை ஏற்றுமதி செய்யும் காரியாலயத்தில், தேயிலை சம்பந்தமாக, பெறுமதியான வியாபார ஒப்பந்தம். தனது காரியதரிசி புஷ்பாவை அழைத்து, அது சம்பந்தமான கடிதமொன்றை தயாரிக்கும்படி உத்தரவிடுகிறார். புஷ்பா திறமையான, கடமை தவறாத, உண்மையான, நம்பிக்கையான ஊழியர். அன்றோ வியாழக்கிழமை மாலை நேரம். புஷ்பா தீவிர சத்ய சாயி பக்தை. அதுவும் வியாழக்கிழமை சாயி பஜனையை தவறவிடாத பக்தை. அதனை ஒரு கொள்கையாக கடைபிடிப்பவர். என்ன செய்வது? அந்த கடிதத்தை வாங்கிய புஷ்பா, அங்குள்ள கடிகாரத்தை பார்த்து விட்டு, ஏதோ ஒரு தைரியத்தில்,சாயி பஜனைக்கு போகவேண்டியதை தெரிவித்து விட்டு புறப்பட்டு விட்டார்.


 அவருக்கோ கடும் கோபம். தன் வார்த்தைக்கு மதிப்புக் கொடுக்கவில்லை என்ற ஆதங்கம். பாபாவுக்காக தன்னை உதாசீனம் செய்து விட்டார் என்ற கொந்தளிப்பு. அந்த கடிதத்தை வேறு ஒருவர் மூலமாக செய்து முடித்துக் கொண்டார்.

சில மாதங்கள் ஓடின. ஆனால் எப்போதும் புஷ்பாவை பார்க்கும்போது, பாபாவுக்காக தன்னை உதாசீனம் செய்து விட்ட அந்த எரிச்சல் அவரது மனதை தைத்துக் கொண்டிருந்தது. ஒருநாள், புஷ்பா காரியாலயத்துக்கு மிகவும் தாமதமாக வந்தார். அதுவும் நேராக அவரது அறைக்குள் சென்றார். கண்கள் அழுது சிவந்திருந்தன. தலைமுடி கலைந்திருந்தது. ஒரே பதட்டம்.  "ஐயா! எனது கைப்பையை ஒருவன் திருடி விட்டான். அதனுள் பணமும், அதைவிட முக்கியமான சாவிக்கொத்தும் உள்ளது. பணம் வேண்டாம். அந்த சாவிக்கொத்து மட்டும் கிடைத்தால் போதும்" என்று அழுதாள். ஈஸ்வரன் அவர்கள், தனக்கு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, ஐயோ! அப்படியா!! அழாதீர்கள். இப்போது என்ன செய்யவேண்டும்? என்று அவர் கேட்க, அதற்கு புஷ்பா, ஆபீஸ் கார் ஒன்றையும், துணைக்கு ஒருவரையும் தந்துதவும்படியும், அவரது செல்வாக்கை பயன்படுத்தி, போலீஸ் உதவி செய்து தரும்படியும் மன்றாடினார்.என்றோ ஒருநாள் அவர் பாபாவின் பஜனைக்காக, தன்னை உதாசீனம் செய்ததை ஞாபகப்படுத்தி, அதற்காக நேரம் பார்த்து வஞ்சம் தீர்த்துக் கொள்வதற்காக, குமுறிய உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாதவராக, "ஐயோ புஷ்பா, என்ன இது? ஏன் அழுகிறீர்கள்? எங்கே உங்கள் பாபா?அவரிடம் போய் சொல்லுங்கள். அவர் தேடித் தருவார்" என்று கிண்டலாக,வஞ்சத்தை மறைத்து சிரித்துக்கொண்டே கூறினார். 


புஷ்பாவின் முகம் சிறுத்தது. முதலாளியிடம் என்ன சொல்ல முடியும்?
 "ஐயா அப்படி சொல்லாதீர்கள். பாபாவினால் எல்லாம் முடியும்" என்று தாழ்ந்த குரலில் சொன்னார். ஒரு நிமிடம் கண்களை மூடியபடி, புஷ்பாவுக்கு ஒரு பெருமிதம். பதிலுக்கு நன்றாக கொடுத்துவிட்டேன் என்ற திருப்தி. அங்கு தான் ஆச்சரியம்! ஈஸ்வரன் அவர்களின் மேஜையிலுள்ள தொலைபேசி ஒலித்தது.மறு முனையில் போலீஸ் அதிகாரி.


"உங்கள் காரியாலயத்தில் வேலை பார்க்கும் புஷ்பா என்பவரது கைப் பையொன்று கிடைத்துள்ளது. அதனுள் இந்த முகவரியைக் கண்டுபிடித்தேன். சாவிக்கொத்தொன்றும் உள்ளது. இதனை வந்து வாங்கிச் செல்லும்படி கூறுங்கள்" என்றார். ஈஸ்வரன் அவர்கள் பதில் ஒன்றும் பேசவில்லை. தலையை குனிந்து கொண்டு விபரத்தை, புஷ்பாவிடம் தெரிவித்தார்.

புஷ்பா வீறிட்டு அலறினார். "பாபா! பாபா!! என் பாபா கேட்டதும் சாவியைக் கொடுத்து விட்டீர்களே!!" ன்று உரக்கக் கத்தி அழுதார். ஈஸ்வரன் அவர்கள் கல்லானார். அவரது கல்லான மனம் கரையத் தொடங்கியது. அன்று பாபாவிடம் ஒரு சக்தி இருப்பதை, முதன் முதலில் உணரத் தொடங்கினார். தொடர்ந்து அவரது வாழ்வில்,பாபாவினால் ஏற்பட்ட பல அதிர்வுகள், அவரை அதிதீவிரமான சத்ய சாயிபாபாவின் பக்தனாக மாற்றியது. அதுமட்டுமல்ல, பாபாவின் இலங்கையிலுள்ள சாயி ஸ்தாபனத்தின் அறங்காவலராகவும் இருக்கச் செய்தது.

தொகுத்தளித்தவர்: எஸ்.என். உதயநாயகன், கொழும்பு ஸ்ரீ சத்ய சாயிபாபா மத்திய நிலையம், ஸ்ரீலங்கா.

🌻 பாபாவினால் ஏற்பட்ட பல அதிர்வுகள் என்கிறார். அதுவே இறைவன் சத்யசாயியின் தனிப்பெரும் ஆட்கொள்ளுதல்.
ஒருவரின் முற்பிறவி உணர்ந்து நற்பொழுதில் அவரை முழுதும் ஆட்கொள்வது என்பது இறைவன் சத்ய சாயிக்கே இருக்கின்ற கல்யாண குணம். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக