தலைப்பு

புதன், 15 ஜூலை, 2020

தியானமே அஞ்ஞானத்தை அழிக்கிறது!


கடவுள் உரை.. கீதை உரை.. கடவுள் எழுத்து அழியாத கல்லெழுத்து என்பதை உணர்த்தும் பரம சத்திய பதிவு இதோ... இதை வாசிப்பவர்கள் தியானத்தில் மூழ்கி அஞ்ஞான சுழலிலிருந்து ஞானக் கரை ஒதுங்குவர்.. 

ஆத்மாவின் உண்மையை நமக்குள்ளேயே உணர்வதுதான் ஒரு மனிதனின் வாழ்க்கையின் நிறைவாகும். அதுவே ஆத்ம சாட்சாத்காரமெனப்படுவது. இதை அடைவதற்கு ஒருவர் வாசனைகளிலிருந்து முழுமையாக விடுபட வேண்டும். இத்தகைய உந்துதல்களின் பிணைப்பிலிருந்து விடுபடுவதே மோட்சம் அல்லது விடுதலையின் உண்மையான பொருளாகும். இந்த சுபாவங்களை நன்மை பயப்பவை, தீமை விளைவிப்பவை என இரண்டு வகையாகப் பிரிக்கலாம். நன்மை பயக்கும் தன்மைகள் புனிதத்தில் தோய்ந்தவையாக இருக்கும்.தீயவை தரும் சுபாவங்கள் மனதுக்கு ஊட்டங்கொடுத்து அதை மேலும் மேலும்  கட்டுக்கடங்காமலும் நிலையற்றதாகவும் செய்கின்றன. உலக இன்பங்களுக்கான ஆசையை பரவச்செய்து வலுப்படுத்துகின்றன.

 சுப வாசனைகள் அல்லது நன்மை தரும் தன்மைகளை ஒருவர் வளர்த்துக் கொண்டு வந்தால், அவை அளவில்லாமல் பெருகி, மனதைத் தளைப்படுத்தாது. அவை முளைவிடாத விதைகளாகும். சுபவாசனைகளிலேயே எப்போதும் மனதைச் செலுத்தினால், பிரம்ம ஞானத்தை சுலபமாக பெறலாம். இந்த வாசனைகளின் சிறப்பியல்புகள், மகாத்மாக்களுடன் தொடர்பு, சான்றோரிடம் பயபக்தி, அவர்களுடன் உரையாடல், அவர்கள் கூறியபடி நடத்தல், தானம், சகிப்புத் தன்மை, அன்பு, பொறுமை, உண்மை, தைரியம், புலனடக்கம் போன்றவையாகும். இவையெல்லாம் நல் வாசனைகளாகும். தீய வாசனைகள் (தீய சுபாவங்கள், தன்மைகள்) கீழ்க்கண்ட துன்மார்க்கங்களுக்கு இழுத்துச் செல்கின்றன.அவை; சினிமா பார்ப்பது போன்ற கீழ்த்தர ஆசைகள், (மீன் மாமிசம் போன்ற) ரஜோ குணம் நிறைந்த உணவுகளை உண்டல், ஆளுமையை அழிக்கும் மது போன்றவற்றை அருந்துதல், ஆகியவை. மேலும் அவை, கோபம், மயக்கம், பேராசை, அகந்தை, ஏமாற்றுதல், வெறுப்பு, பொறாமை போன்ற குணங்களை பெருக்குகின்றன. இத்தகைய துர்வாசனைகள் மூன்று வகையானவை.


 1. உடல் பற்றிய வாசனைகள்
 2. அறிவுபூர்வமான வாசனை
 3. உலக வாசனைகள்

உடல் சம்பந்தமான வாசனை:அழகியஉடல்,வலுவான உடல்கட்டு, சுருக்கமில்லாத பளிச்சென்ற தோல், வலிய தசைநார்.

அறிவுபூர்வமான வாசனைதன்னை மிஞ்சிய அறிவுள்ளவர் யாரும் இருக்கலாகாது என்ற ஆசை, போட்டிகளில் வெல்ல வேண்டுமென்ற பிடிவாதம்.

 உலக வாசனைகள்: புகழ், ஆற்றல், அதிகாரம், ஆடம்பரம், இவ்வாசனைகள் சம்சாரச் சக்கரத்தில் கட்டி உலகத்துடன் பிணைகின்றன. மனமென்ற ராக்ஷஸ மரத்துக்கு இரு விதைகள் உண்டு. ஒன்று 'வாசனா' மற்றது 'பிராணன்'விதை மரமாகிறது. மரம் விதையைக் கொடுக்கிறது. வாசனைகளால் பிராணன் அசைகிறது.பிராணன் உதவியால் வாசனைகள் வேலை செய்கின்றன.

இவற்றில் ஒன்று அழிக்கப்பட்டாலும், மற்றதும் அழிக்கப்படுகிறது. ஆகவே மனம் இவற்றின் ஆதிக்கத்திலிருந்து விடுபட, அஞ்ஞானம் அல்லது அறியாமை மாற்றப்படல் வேண்டும். அஞ்ஞானம் தனியாக இருப்பதில்லை. அஞ்ஞானத்துக்கு, அகங்காரம் அல்லது சுயநலம் என்ற பிள்ளை. அந்த அசுரனுக்கு இரண்டு பிள்ளைகள். ஒன்று ராகம் அல்லது தீவிர உணர்ச்சி. மற்றொன்று வாசனை அல்லது தீவிர ஆசை. இவையிரண்டும் நெருங்கிய தொடர்புடையவை.பற்றுதல் உணர்ச்சிக்குத் தகுந்தவாறு தான் ஆசையும் இருக்கும். அவை சகோதரிகள்.ராகம், பற்றுதல் அல்லது கவர்ச்சியாகும். ராகத்தின் மூலம் மனிதன் நான் எனது என்னும் உணர்ச்சியை அடைகின்றான். இந்த உணர்ச்சிகள் ஆசைகளைத் தூண்டுகின்றன. ஆசைகள் கவலைகளை உண்டாக்குகின்றன. அகங்காரத்தை அகற்ற, ராகம் வாசனை இரண்டையும் அறவே நீக்க வேண்டும். இதற்கு அஞ்ஞானம் விலக வேண்டும். அப்போதுதான் அகங்காரத்தைக் கொல்ல முடியும். அஞ்ஞானத்தை அழித்து, சுக்ஞானத்தை எப்படி அடைவது? தியானத்தின் மூலம் தான் இவ்வாறு செய்ய முடியும்.அஞ்ஞானம், அகங்காரம், ராகம், வாசனை இவைகளை வெற்றிக்கொண்டால், மோட்சம் அல்லது விடுதலை பிறக்கும் .
                 
ஆதாரம்:தியான வாஹினி

🌻 தியானமே அஞ்ஞானத்தை அழிக்கும் என தெய்வமே சொல்லிவிட்டபின் தியானம் புரிய தாமதிக்கலாமா? வீடு தீப்பற்றி எரிகையில் யோசித்தா வெளியேறுவோம்.. அஞ்ஞானம் உயிரை எரிக்கிறது.. அதற்கு தியானமே ஒரே மீட்பு.. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக