சந்தேகப்பட்ட ஷிர்டி சாயி பக்தர்களை எப்படி தானே ஷிர்டி சாயி என உணர வைத்தார் எனும் சத்ய சாயி மகிமா பதிவு இதோ...
இறைவன் ஷிர்டி சாயியோடு நேரடி பக்தி கொண்ட அவரின் ஆழமான பக்தர்கள் இறைவன் சத்ய சாயி பக்தர்களாக பிற்காலத்தில் மாறி இருக்கிறார்கள்.
அதற்கு ஒரு காரணம் .. இருவரும் ஒருவரே என அவர்கள் உணர்ந்ததால் தான்...
எப்படி உணர்ந்தனர்? செப்படி வித்தையா?
கண்கட்டு வித்தையா?
ஏதும் இல்லை..
அந்த நேரடி பக்தர்களுக்கும் இறைவன் ஷிர்டி சாயிக்கும் இருந்த தனிப்பட்ட விதமான உறவு/ பேச்சுவார்த்தை / ரகசியங்கள் எல்லாம் இறைவன் சத்ய சாயி அவர்களிடம் விவரிக்க மெய் மறந்து போய் காலடியில் கரைந்துவிடுவார்கள்.
அதில் சரணாகதி அடைந்தவர்கள் நிறைய பேர்..
இதை பெத்தபொட்டு அம்மாவான சாரதாதேவியே தனது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
இறைவன் ஷிர்டி சாயியையே தரிசிக்காத புதிய ஷிர்டி சாயி பக்தர்கள் இறைவன் சத்ய சாயியை பார்க்க வந்தாலும் ..
"உன்னை எனக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்பே தெரியும். நீ முதன்முதலில் ஷிர்டி வந்ததிலிருந்தே அறிவேன்" என்பார்.
அவர் ஷிர்டி சாயிக்கு செய்கின்ற பிரார்த்தனைகள் .. பூஜைகள் என எல்லாவற்றையும் ஒன்றுவிடாமல் அவரிடம் விவரிப்பார்.
தனக்கு சந்தோஷமே என்பார்.
பல ஷிர்டி சாயி பக்தர்களுக்கு இறைவன் ஷிர்டி சாயி உருவம் பதித்த மோதிரம்.. பதக்கம் என பலவற்றை பிரசாதமாக வழங்குவார்.
பரகாயபிரவேசம் மேற்கொண்டு உடம்பிற்கு திரும்புகின்ற போதும் இப்படித் தான் ஷிர்டியில் இருக்கின்ற போதும் செய்திருக்கிறேன் என்பார்.
யாராவது ஒரு கேள்வி கேட்டால்.. இதைப் போலவே மஹாராஷ்டிரா மண்ணிலிருந்து ஷிர்டி கிராமத்திற்கு வந்த ஒருவனும் கேட்டான் என்பார்.
ஷிர்டிக்கு ஒருமுறை கூட போய்வராத தனது பல பக்தர்களையும் ஷிர்டி போய் வர ஊக்குவிப்பார்...
ஷிர்டிக்கு போகின்ற வழி.. அந்த மக்களின் வாழ்வியல் சூழல்.. விவசாய முறை.. சமாதியில் வைக்கப்பட்டிருக்கின்ற படங்கள் என ஒன்றுவிடாமல் அவர்களுக்கு விவரிப்பார்.
அங்கே சென்ற பிறகு சுவாமி சொன்ன பொருத்தங்களை எண்ணிப் பூரிப்பார்கள் அவர்கள்.
நீங்கள் துவாரகா மாயிக்கு சென்று படுத்து உறங்குங்கள்.. அங்கே உங்களுக்கு கனவில் வருவேன் என்பார்.
சொன்னது போல் செய்வார்.
சுவாமியை தரிசனம் செய்த ஷிர்டி சாயி பக்தர்கள் பலரும் இதை அனுபவித்திருக்கின்றனர்.
ஷிர்டி யாத்திரைக்கு சென்று வரும் ஷிர்டி சாயி பக்தர்கள் குண்டக்கல் வந்தபிறகு சாயிபாபா அவதாரம் எடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டு புட்டபர்த்திக்கு வருவதும் உண்டு.
அவர்களை சுவாமி பேரன்பு ததும்ப வரவேற்று நேர்காணல் வழங்கி..
ஷிர்டி சாயி பாபாவிடம் என்ன கேள்விக்கான விடையை பெறச்சென்றார்கள் என்பது முதல் அந்த விடைக்கும் பதில் அளித்து.. அவர்களின் பிரார்த்தனைகளையும் விவரித்து அதற்கும் அவர் நிறைவேற்றித் தருவதாக உத்தரவாதமும் அளித்திருக்கிறார்.
இதை அனுபவித்த ஷிர்டி சாயி பக்தர்கள் ஏராளம்.
(ஆதாரம் :- சத்தியம் சிவம் சுந்தரம் -- பாகம் 1. ஆசிரியர் ஸ்ரீ கஸ்தூரி)
ஷிர்டி சாயியிடம் கேள்விக் கேட்டால்
சத்ய சாயி பதில் அளிப்பார்.
ஷிர்டி சாயியிடம் வேண்டிக் கொண்டால் சத்ய சாயி நிறைவேற்றுவார்.
பசுவின் காம்புகள் மூன்றில் எதைப் பிடித்துப் பக்குவமாய் கறந்தாலும் பால் வரும்.
அதைப் போலவே
ஷிர்டி சாயி.. சத்ய சாயி.. பிரேம சாயி.
ராமரே கிருஷ்ணர் என்பது அனைவரும் உணர்ந்த ஒன்றே.
அறிதல் நிலையிலிருந்து உணர்தல் எனும் உன்னத நிலைக்கு உயர்வதே ஆன்மீகம்.
மனிதர் கர்மாவினால் பிறவிகள் எடுக்கிறார்கள்.
இறைவன் அவர்களைக் காப்பாற்றி பிறவிகள் இல்லாமல் செய்வதற்கே குறித்த காலத்தில் அவதாரங்கள் எடுக்கிறார்.
ராமர்.. கிருஷ்ணர்.. ஷிர்டி சாயி.. சத்ய சாயி .. வரப்போகின்ற பிரேம சாயி என நால்வரும் ஒருவரே.
மனிதர் இறை நெறியில் பிறழாமல் வாழ்ந்தால் மறுபிறவியே இல்லாமல் முடிந்து போகிறது.
அப்படி நேர்ந்தால் இறைவன் அவதாரம் எடுப்பதற்கும் அவசியம் இல்லாமல் போய்விடுகிறது.
இந்த அவதாரங்களே நம்மால் தான் இறைவனே எடுத்துக் கொண்டு பூமியில் வருவது என்பதை உணர வேண்டும்.
அறுவை சிகிச்சையை மயிலிறகை வைத்தா மருத்துவர் செய்வர்?
அதைப் போலவே ஆணவமே கர்மங்களுக்கான அடிப்படை காரணம்.
அதிலிருந்தே சந்தேகம் எழுகின்றது...
அதைக் களையவே இறைவன் அவதாரம் எடுத்து நம்மை உய்விக்கவே கீழ் இறங்கி வருகிறார்.
அறிமுகமே இல்லா ஒருவர் ஓட்ட சந்தேகமே படாமல் பேருந்தில் பயணிக்கிறோம்..
முகமே தெரியாதவர் ஓட்ட துளி சந்தேகமே படாமல் ரயிலில் பயணிக்கிறோம்..
ஈரேழுலக இறைவன் அவதரித்து வருகையில் தேவையில்லாத வீண் சந்தேகம் கொண்டால் அற்புதமான ஆன்மீகப் பயணத்தை தவற விட்டுவிடுவோம் என்பதை மறக்காமல்
வாழ்வோமாக!
உங்கள் பக்தி என்னும் திருவிளக்கு இன்னமும் பிரகாசிக்க சந்தேகம் எனும் குடத்தில் இருந்து அந்தத் திருவிளக்கை வெளியே எடுத்துவிடுங்கள்.
அது சரணாகதி எனும் குன்றில் சுடர்விட்டுப் பிரகாசிக்கட்டும்.
அந்த பக்திப் பூர்வ உள்ளொளியே
இரு சாயிக்கும் ஆரத்தியாகட்டும்.
சத்தியம் வளரும்
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக