தலைப்பு

வியாழன், 16 ஜூலை, 2020

இரு சாயி அருளியதும் ஒரே சேவையே!


இரு சாயி அவதாரமும் ஒரே விதமான சேவையையே மனித குலத்திற்கு  செய்து வருகிறது என்பதை உணர்த்தி அக விழிப்புணர்வு தரும் ஒரு ஆழமான பதிவு... 

இறைவன் ஷிர்டி சாயியை பிரம்ம ஞானி என நினைக்கிறார்கள்.
இறைவன் சத்ய சாயியையும் சிறுவயது சத்யாவாக இருக்கையில் பிரம்ம பிட்லு என்றே அழைத்தனர்.
ஆனால் இருவரும் பிரம்ம ஞானிகள் அல்லர்.
அந்த பிரம்ம ஞானமே அவர்கள் தான்.

மனிதன் தியானத்தில் ஞானம் அடையும் போது ஞானியாகிறான்.
அவன் எந்த தியானத்தைப் புரிகிறானோ..எந்த ஞானத்தை அடைகிறானோ அந்த ஞானமே தான் ராமர்.. கிருஷ்ணர்.. ஷிர்டி சாயி.. சத்ய சாயி.. பிரேம சாயி..

இறைவன் நாமம் வேறு இறைவன் வேறல்ல... இறைவனின் பாடல் வேறு இறைவன் வேறல்ல... அதைப்போல் இறைவன் வேறு இறைவனின் சேவை வேறல்ல..

இரு சாயியும் மனித குலத்திற்கு மனிதர்கள் இறை நிலையை அடைவதற்காகவே சேவையாற்ற வந்தனர்.

இறைவன் கிருஷ்ணர் மகா பாரதப்போரில் நல்லவர் ஐவருகளுக்காக சேவையாற்றவே சாரதியானார்.
இறைவன் ஷிர்டி சாயி பக்தர்களின் நோய்களைப் போக்குகிறார்.. சிலவற்றை தாமே வாங்கி அனுபவிக்கிறார்.
இதுவும் பெருங்கருணையினால் அவர் மனித குலத்திற்கு செய்கின்ற சேவை...

பக்தர்கள் நாம் அவருக்கு சேவை செய்வதாக நினைத்துக் கொள்கிறோம்.
அது முற்றிலும் தவறு.
அவர் நம்மை வைத்து அவருடைய சேவையை உலகத்திற்கும்.. சமூகத்திற்கும் ஆற்றுகிறார்.

இறைவன் சத்யசாயியின் சேவையைப் பற்றி சொல்ல வேண்டியதே இல்லை‌.
அவர் மனித சேவையின் மகா வடிவம்.

விரல்கள் எழுதுவதில்லை.. விரல்கள் பேனாவைப் பிடித்தே எழுதுகின்றன...
வெறும் பேனா தன்னை வைத்துத் தானே எழுதிக் கொள்ள முடியாது.
விரல்களே இறைவன் ஷிர்டி சாயி.. சத்ய சாயி.. பிரேம சாயி...
வெறும் பேனாக்களே நாம்.


மையே இல்லாத பேனாக்களை வைத்தும் இறைவனால் அற்புதமாய் சேவையாற்ற முடியும்.
நாம் சேவை செய்கிறோம் என்ற பக்தர் சிலர் எண்ணமும் அந்த சேவைக்கு தடையாகப் போகிறது..
ஆன்மீக முன்னேற்றம் தடைபடுகிறது.

உண்மையில் நாம் எதுவும் செய்வதில்லை என்பதே நிஜம்.
தூங்குவதற்கு படுக்கையில் அமர்கிறோம்.
அதுவாக தூக்கம் வருகிறது.
மூச்சுக் காற்று அதுவாக வருகிறது.. போகிறது..
பசி அதுவாக வருகிறது..
உணவு உண்கிறோம்.. ஜீரணம் அதுவாக நிகழ்கிறது..
ஜீரணம் நிகழ்ந்து வெளியேறுவதும் அதுவாக நிகழ்கிறது.
கண்களை மூடி அமர்ந்து கொள்கிறோம்..
தியானம் அதுவாக நிகழ்கிறது.

இந்த "அதுவே" இறைவன் ஷிர்டி சாயி ... சத்ய சாயி.. பிரேம சாயி..
அது எப்படி "அது'" மூன்றாக முடியும் எனக் கேட்கலாம்..

ஒரே பேராற்றல் தான் உடம்பின் உள்ளும் சரி.. இயற்கை எனும் புறமும் சரி பலவித கோணங்களில் செயல்புரிகிற போது..
ஒரே பேராற்றல்  மூன்று வடிவங்கள் எடுத்து வந்ததில் ஒன்றும் ஆச்சரியமே இல்லை.

அந்த இறைப் பேராற்றல் இத்தனையையும் நமக்காக .. நமக்குள்ளும்.. நமக்கு வெளியிலும் புரிந்து வருகிறது..
இதுவே இறைவன் ஷிர்டி சாயி.. சத்ய சாயி ... பிரேம சாயி நமக்கு ஆற்றும் மனித குல சேவை...

ஒரு ஜீவன் பிறப்பதற்கு முன்பிலிருந்து .. இறந்தபிறகும்.. மறுபிறப்பிலும் என இறைவன் சேவையே யாவும்.

மனிதர்கள் நாம் சர்வ சாதாரண கருவிகளே!
அவர் நம்மை வைத்து சேவையாற்றுகிறார்..
அந்த முதல் சேவையே நமக்கு அவர் அளிக்கின்ற உயிராற்றல் தான்.
அந்த உயிராற்றலே அவர் தான்.


ஆகவே தான் இறைவன் சத்ய சாயி சேவைக்கு அதிக முக்கியத்துவம் தருவதும்..
"நானே இயக்குகிறேன்.. நீ என்னுடைய  சேவையை மட்டும் செய்" என்பதன் தாத்பர்யமும்...

இந்தப் பூவுலகில் நாம் எந்தவிதமான காரியமும் செய்வதில்லை..
அனைத்தும் தெய்வ சங்கல்பத்துடனேயே அரங்கேறுகிறது.

இது ஷிர்டி சாயி சத்சரிதத்திலும் இடம் பெறுகிறது...
அந்த சேவை பலவிதங்களில் .. பல்வேறு மனிதர்களுக்கு வழங்கப்படுவதைத் தான் இறைவன் சத்யசாயியும் வலியுறுத்துகிறார்.

"ஆண்டவர் வெவ்வேறு பணிகளை, வெவ்வேறு அடியவர்களிடம் ஒப்புவிக்கிறார். சிலர் கோயில் , மடம், கட்டுதல்களிலும் சிலர் புண்ணிய தீர்த்தங்களுக்குப் படிக்கட்டுகள் அமைத்தலுமான பணிகளும் அளிக்கப்படுகிறார்கள். சிலர் ஆண்டவன் புகழைப் பாட்டுவிக்கப்படுகிறார்கள். சிலர் ஷேத்ராடன யாத்திரைக்கு அனுப்பப்படுகிறார்கள்."
(ஸ்ரீ ஸாயி சத்சரித்திரம் -- ஆசிரியர் ஹேமாட் பந்த் , பக்கம் -- 15) 

இறைவன் சத்ய சாயியால் நமக்கும் இப்படிப் பிரித்தே சேவை ஒதுக்கப்படுகிறது.
சிலருக்கு குல்வந்த் ஹால்.. சிலருக்கு உணவுக் கூடம் என...

இறைவனின் பத்ரிநாத் யாத்திரைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களே அவரோடு பயணித்தனர்.
அவரே இழுக்கிறார்.. அவரே அழைக்கிறார்..
அவரே தன் சேவையை தன் பக்தர்களுக்கு அளித்து தனது சேவையை பக்தர்களின் வழி ஆற்ற வைக்கிறார்.

தான் செய்கிறேன் என்ற நினைப்பே அந்த சேவையில் பதட்டமும்.... அந்த சேவையைப் பாராட்ட வேண்டும் என்ற எதிர்பார்ப்பும்...
அந்த சேவை குறித்து அகந்தையும்... பெருமிதமும் ஏற்படுகிறது.

இதனால் தான் துவாபர யுகத்தில் நம் சுவாமி "கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!" என்றார்.

வெறும் வாய் வார்த்தை அளிப்பவர் அல்ல சத்ய சாயி கிருஷ்ணர். அதை வாழ்ந்தும் காட்டினார்.
எப்படி பல் தேய்க்க வேண்டும் என்று தாய் குழந்தைக்குக் கற்பிப்பது போல்..
எப்படி தன் சேவையை பக்தர் ஆற்ற வேண்டும் என்று தாமே சேவையாற்றி நமக்கு கற்பிக்கிறார்.

இறைவன் ஷிர்டி சாயியின் நோய்க்கு எதிர்ப்பான கோதுமை அரைப்பு சேவையில் ஷிர்டி கிராமத்தில் உள்ள அனைவரும் பங்கேற்றதைப் போல்..
இறைவன் சத்ய சாயியின் சேவையில் அவரால் தேர்ந்தெடுக்கப்படும் பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

ஒருமுறை சுவாமியின் நேர்காணலில் ஒரு பெண்மணி "சுவாமி நான் நிறைய நாராயண சேவை ஆற்றுகிறேன் " என சுவாமி சேவை குறித்து சுவாமியிடமே பெருமையடித்துக் கொள்கிறார்கள்.
எப்படி எழுதி இருக்கிறேன் தெரியுமா எனப் பேனாவே கவிதையைப் பற்றி பெருமையடித்துக் கொள்வதைப் போல்...


அதற்கு சுவாமி உடனே ஒரு மஞ்சள் நிறப் பையை வரவழைத்து "இதோ நீ நாராயண சேவை அளிக்கும் லட்சணம் தான் எனக்கு தெரியுமே!" என கோபமான முகத்தோடு நீட்டுகிறார்..
அந்தப் பை .. அந்தப் பெண்மணியின் வீட்டிலிருக்கும் பை.
உள்ளே மட்ட ரகமான புழு பூத்த சில அரிசி மணிகளும் காணப்படுகின்றன..

"இப்படி சேவை ஆற்ற நான் உனக்கு எப்போது சொன்னேன்?" எனக் கடிந்து கொள்கிறார்.

"நீ என்ன அரிசியை உணவாக்கிச் சாப்பிடுகிறாயோ அதே அரிசியைத் தான் நாராயண சேவைக்குப் பயன்படுத்த வேண்டும்" என்கிறார்.

அந்தப் பெண்மணி சிந்திய கண்ணீர் அவர்களின் சிந்தையையும் மாற்றுகிறது.

சுவாமிக்கு தெரியாதது எதுவும் இல்லை.
எல்லாம் சுவாமி சேவை .. நாம் வெறும் சிறு கருவி.
நாம் கருவி என்ற எண்ணத்தையும் துறந்துவிட வேண்டும். அதுவே பக்தி.

பக்தியோடு கருவியாகிறோம்..
பக்குவமில்லாததால் கர்வி ஆகிறோம்

எந்த சேவையும் எந்த சேவைக்கும் குறைந்தது இல்லை..
பார்வையற்றவருக்கு சாலையை கடக்க உதவி செய்வதும் இறைவன் சத்ய சாயி சேவையே...
எல்லா சேவையையும் இழுத்துப் போட்டு  நல்ல பெயர் எடுக்க வேண்டிய அவசியமே இல்லை...

வருகின்ற நல்ல பெயர்.. கெட்ட பெயர் எல்லாவற்றையும் கடந்து புரிவதே சேவை.
சேவை செய்கிறோம் என்கிற உணர்வே இல்லாமல் புரிவது தான் சேவை..
உண்மையில் இறைவன் சாயியே நமக்கு சேவையாற்றுகிறார்.
நம்மை கருவியாக்கி சேவையாற்ற வைக்கிறார்.
சத்தியமாய் நாம் செய்வது ஒன்றுமே இல்லை..

சத்தியம் வளரும்

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக