தலைப்பு

திங்கள், 27 ஜூலை, 2020

மைலாப்பூர் ஷிர்டி சாயி கோவில் தலைவர் உணர்ந்து கொண்ட சத்ய சாயி!

K. THANGARAJ - PRESIDENT, ALL INDIA SAI SAMAJ, SAI BABA TEMPLE, MYLAPORE, CHENNAI.

இறைவன் அவதரிக்கிறான் யுகங்கள் தோறும். அப்படி அவதரிக்கையில் எந்த வடிவம் எடுப்பது என்பதை சங்கல்பிப்பது இறைவன் தானே அன்றி பக்தர்கள் இல்லை. அவனை வா என அழைக்க மட்டுமே சாதகரும், பக்தரும் கடமைப்பட்டவர்கள். நரசிம்ம ரூபம் எடுத்துத் தான் நாராயணனான சாயி வருவார் என முன்பே பிரகலாதன் அறியாதது போல் தான் இதுவும். ஷிர்டி சாயியே சத்ய சாயி. ரூபம் மட்டுமே வேறாக இருக்கிறது. இதை மைலாப்பூர் ஷிர்டி சாயி கோவில் தலைவர் எவ்வாறு உணர்ந்தார் என்பதன் அனுபவக் குறிப்பும் இதோ...

2017 ஆம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி. இந்திய சாயி சமாஜத்தின் (மைலாபூர் சீரடி சாயி பாபா ஆலயம்) தலைவர் திரு.கே.தங்கராஜ் அவர்களும், செயலாளர் திரு. ஏ.செல்வராஜ் அவர்களும், இலங்கையிலுள்ள ஸ்ரீ சத்ய சாயி பாபா மத்திய நிலையத்திலுள்ள சீரடி மந்தீருக்கு, தங்களது ஆலயத்திலிருந்து, அவர்களது தாய் வீட்டு சீதனமாக, சிறப்பு பூஜை வழிபாடுகள் செய்து, சீரடி சாயி பாபா வெள்ளிப் பாதச் சுவடுகளுடன், இலங்கையிலுள்ள சாயி நிலையத்தில் பிரதிஷ்டை  செய்வதற்காக வந்திருந்தார்கள்.


அப்போது திரு. தங்கராஜ் அவர்கள், தனக்கும் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவுக்கும் உள்ள தொடர்பை.. உள்ளத் தொடர்பை தெரியப்படுத்தினார். ஒரு தடவை  சென்னைக்கு பகவான் வருகை தந்த போது, காங்கிரஸ் தலைவர் மூப்பனார் அவர்களின் அழைப்பில் சென்று, தனக்கும் பாபாவை தரிசிக்கும் பெரும் பாக்கியம் கிடைத்ததாகும்.. அங்கே  பாபாவின் பாதநமஸ்காரம் பெற்றதாகவும், அந்த சமயம் பாபா தனது கண்களை உற்று பார்த்தபோது, ஒரு வித புதுமையான ஆன்மிக  புத்துணர்ச்சியைப் பெற்றதாகவும் ...  தெய்வம் தந்த நேத்திர தீட்சையில் பக்தியும் பரமானந்தமும் கிட்டியதாகக் குறிப்பிட்டார்.  பகவான் மகா சமாதியடைந்த சமயம், சென்னையில் பல சத்ய சாயி பக்தர்கள் இருக்கும்போது, தனக்கு மட்டும் சென்னைத் தொலைக்காட்சியில் பாபாவைப் பற்றி பேசுவதற்கு ஒரு சந்தர்ப்பத்தையும் பாபா ஏற்படுத்திக்கொடுத்ததையும் கூறினார்.  அது மட்டுமல்ல தன்னை மைலாபூர்  சீரடி சாயி பாபா ஆலயத் தலைவர் என்று அறிமுகப்படுத்தியபோது. பாபாவின் கண்களில் ஒரு ஒளியைக் கண்டதாகவும் கூறினார். அந்த ஒளி பேரற்புத ஒளி.. விவரிக்க முடியாத விசித்திர ஒளி .. இறைவனின் பிரபஞ்ச ஒளியையே கண்டார்.. அதற்கு ஒரு அர்த்தம் இருக்கிறது, ஏற்கனவே பகவான் மைலாபூர் சீரடி சாயி பாபா ஆலயத்துள் சென்ற சம்பவம்.

1959ஆம் ஆண்டு ஜனவரி மாதம், சென்னையிலுள்ள அகில இந்திய சாயி சமாஜத்திற்கு (மைலாபூர் சீரடி சாயி பாபா ஆலயத்துக்கு) பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, வருகை தந்திருக்கிறார். இது சம்பந்தமான ஒரு கட்டுரை 2017 பிப்ரவரி சனாதன சாரதியில் இடம் பெற்றுள்ளது. அப்போது அங்கு உரையாற்றிய பாபா, “ஸ்ரீராமன் ஸ்ரீகிருஷ்ணன் ஆகிய அவதாரங்கள் இரண்டும் வாழ்க்கை நெறியிலும், கருத்திலும் மாறுபட்டே இருந்தன. இரண்டு அவதாரங்கள் போதித்த வழிகளும், ஒன்றுக்கொன்று சிறிது மாறானவை. ஆனால் இருவரும் ஒருவரே என்பதில் சிறிதும் ஐயமில்லை. அதை போலவே என்னுடைய தோற்றங்களின் அடிப்படைத் தன்மையை ஆராய்ந்து பார்ப்பவர், அந்த சீரடி சாயி மகாசக்தி தான் இன்றும் மானிட வடிவில் வந்திருக்கிறது என்பதை எளிதில் புரிந்துகொள்வர்” என்ற கருத்தை தெரியப்படுத்தினார்.


 சீரடியில் 1954 ஆம் ஆண்டு தான் பாபாவின் திருவுருச்சிலை பிரதீட்சை செய்யப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே, 1949 ஆம் ஆண்டில் சென்னை கிண்டியில் சீரடி சாயி பாபாவின் கருங்கல் விக்ரஹம் ஒன்றை, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா பிரதீட்சை செய்தது குறிப்பிடத்தக்கது.

 கலியுக அவதாரங்களில் முதன்மையான சீரடி சாயி பாபாவின் ஜனனதினம் செப்டம்பர் 28ம் தேதி. இந்த ரகசியத்தை தெரியப்படுத்தியவர் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா தான். சீரடி சாயி பாபாவின் சத்சரிதத்தின்படி, அவரது வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் சீரடிக்கு விஜயம் செய்த பின்தான், அனைவரும் சீரடி சாயி பாபாவை அறிந்துகொண்டார்கள். ஆனால் 1990ம் ஆண்டு, பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபா, தனது இறைப் பிரசங்கத்தின் மூலமாக, உலக மக்களுக்கு, சீரடி சாயி பாபாவின் வாழ்க்கையின் முன்பகுதியை அறிவித்திருந்தார். இரண்டு பாபாக்களும் ஒருவரே! என்பது அதனால் தான்.


மைலாப்பூரிலிருந்து வந்த சீரடி சாயி பாபாவின் வெள்ளிபாதச்சுவடும், பத்தாண்டுகளுக்கு முன் 2007  ஆம் ஆண்டு மதுரை சத்ய சாயி பாதுகா டிரஸ்ட் தலைவர் சீனிவாசன் செட்டியார் அவர்கள், இலங்கை கொழும்பிலுள்ள சாயி நிலையத்துக்காக,  விஷேசமாக பாபாவின் ஆசியைப் பெற்று, பாபாவின் பொற்பாதச்சுவட்டை வைத்திருந்தார். இந்தச் செய்தி கிடைத்தவுடன், சாயி நிலையத்தின் செயலாளர் திரு.எஸ்.தியாகராஜா அவர்களை மதுரைக்கு அனுப்பிவைத்து, அதனை எடுத்துவர ஏற்பாடு செய்தோம். செட்டியார் அவர்கள் திரு.தியாகராஜா அவர்களை மதுரையிலுள்ள தனது இல்லத்துக்கு வரவழைத்து, பூஜை வழிபாட்டுடன் தனது மனைவி சகிதம், அதனைக் கையளித்திருந்தார். அந்தச் செய்தி, அப்போது பத்திரிகைகளிலும் பிரசுரமாகியிருந்தது, அப்படிப்பட்ட அந்தப் பொற்பாதச் சுவடும், கடல்கடந்து ஒரே சாயி ஸ்தலத்திலிருப்பது விஷேசமானதாகும். இது போன்று இன்னுதொரு சம்பவம் நடந்தது.


2000ம் ஆண்டு, கொழும்பு வட்டவளை பெருந்தோட்டப்பயிற்சி ஸ்தாபனத்தில், கடமைபுரிந்த இந்தியரான, பகவானின் பக்தரான திரு.பாலசுப்ரமண்யம் அவர்களின் தொடர்பு  கிடைத்தது. அவரது மகள் பகவானின் அனந்தபூர் பெண்கள் கல்லூரியில் கல்வி கற்றுவந்தார். அப்போது அவருக்கு பகவான் தனது உடையொன்றை கையளித்திருந்தார். ஒரு நாள் இவரது கனவில், பாபா அந்த உடையை, தனது தந்தையிடம் கொடுக்கும்படி உணர்த்தியிருந்தார். அதன் பின் பல மாதங்கள் கடந்தபின் அவர் தனது தந்தையைப் பார்ப்பதற்காக கொழும்பு வந்திருந்தார். கூடவே அந்தப் பொக்கிஷமான உடையையும் எடுத்து வந்திருந்தார். அதே நேரத்தில் திரு பாலசுப்ரமண்யம் அவர்களின் கனவில் அந்தப் பொக்கிஷத்தை எங்களது சாயி நிலையத்துக்கு சமர்பிக்கும்படி, பாபா உணர்த்துவதாக அறிந்துகொண்டார். அதன்பின் அந்த பொக்கிஷம் சாயி நிலையம் வந்தடைந்தது. இதற்கும் ஒரு காரணம் உண்டு.


பல ஆண்டுகளுக்கு முன், 1970களில், சாயி நிலையத்தில் சாயி பஜனை நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம். அந்த பஜனையில் கலந்துகொள்வதற்கு, அந்த காலகட்டத்தில் அமைச்சராக இருந்த, கௌரவ கரு ஜெயசூரியா அவர்களின் மனைவி வந்திருந்தார். அப்போது பகவான் அவருக்குக் கொடுத்திருந்த பாபாவின் உடையை எடுத்து வந்து, பக்தர்கள் தரிசிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அந்த சமயத்தில் அங்கிருந்த அனைத்து சாயி பக்தர்களும், இப்படியானதொரு பொக்கிஷத்தை சாயி நிலையத்தில் நிரந்தரமாக இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்தார்கள். கடல் கடந்து, பல செலவு செய்து வந்து, பகவானை தொட்டு ஆராதனை செய்ய முடியாத பக்தர்களுக்கு. இந்தப் பொக்கிஷம்  இங்கிருந்தால், ஒருவகையில் ஆறுதல் அளிக்கும் என்ற மனத்திருப்திதான். இதனைத் தெரிந்து கொண்ட பகவான் ஏதோ ஒரு வழியில், இதனை நிறைவேற்றி வைத்தார். அது தான் இந்த கலியுக அவதாரத்தின் மகிகை.

ஆக்கம்: எஸ்.என். உதயநாயகன், ஸ்ரீசத்ய சாயி மத்திய நிலையம். கொழும்பு. ஸ்ரீ லங்கா.

🌻 அந்த ஜோதியே ... அதே ஜோதியே அந்த பரம்பொருள் ஜோதியே ஷிர்டி சாயி மற்றும் சத்ய சாயியாக வடிவெடுத்து வந்திருக்கிறது என்பதை ஜோதி மூலமாக கண்டுணர்ந்த மைலாப்பூர் ஷிர்டி சாயி கோவில் நிர்வாகியையும் கடந்து இறைவன் சத்ய சாயியே அந்தக் கோவிலில் தானே ஷிர்டி சாயி என சுயப்பிரகடனம் செய்திருக்கையில் வேறென்ன கல்வெட்டு வாசகங்கள் வேண்டி இருக்கிறது என்பதை சரணாகதி அடைந்த ஆத்மார்த்த பக்தர்கள் உணர்ந்து உய்வர். 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக