தலைப்பு

செவ்வாய், 7 ஜூலை, 2020

🎯 "சாய்ராம்" என்ற சொல்லின் சக்தி!


1986ஆம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி எனது மகன் முருகன், என் அண்ணன் மகன் மற்றும் அவரது நண்பர்கள் 5 பேர்களுடன் முதுமலை சரணாலயத்தில் பார்த்துவிட்டு, மாயாறுக்கு செல்லும் வழியில் மசினகுடி அருகில் செல்லும்போது, குறுகலான பாதையில் எதிரில் ஒரு பஸ் வருவதைக் கண்டு, ஓரமாக ஜீப்பை நிறுத்தியுள்ளான். ஆனால் பஸ் நிற்காமலும், வேகத்தை குறைக்காமலும் வருவதைக் கண்டு, ஜீப்புடன் மோதுவது நிச்சயம் என்பதை உணர்ந்து அஞ்சி, இனி பிழைக்க முடியாது என எண்ணி உடனே "சாய்ராம்" என தனது உள்ளத்தில் இருந்து பகவானை அழைந்துள்ளான்.
மற்றவர்களும் உயிர் பிழைக்க முடியாது என அஞ்சி உள்ளனர். கண்ணிமைக்கும் நேரத்தில் பஸ், ஜீப்புடன் மோதியுள்ளது. பிறகு ஒவ்வொருவரும் கண்ணை திறந்து பார்க்கையில், யாருக்கும் எந்தவித ஆபத்தும் நிகழவில்லை என்பதை உணர்ந்துள்ளனர். ஜீப்பிற்கு பலத்த சேதம் ஏற்பட்டு இருக்குமோ? என அஞ்சி கீழே இறங்கி பார்க்கையில், ஜீப்பிற்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லைஎன்பதை கண்டு ஏதோ தெய்வீக சக்தி தான் தங்களை காப்பாற்றி உள்ளது. அதுவும் முருகன் "சாய்ராம்" எனக் கூறியதன் பொருட்டே என அறிந்து ஒவ்வொருவரும் தெய்வத்திற்கு நன்றி செலுத்தினர்.


பஸ்சின் டிரைவர் பஸ்ஸில் பிரேக் இல்லாததாலும், இந்த ஜீப்பில் மோதுவதால் பஸ்ஸில் உள்ளவர்களை காப்பாற்றி விடலாம் என எண்ணி தன்னால் ஒன்றும் செய்ய முடியாததால் மோதும்படி ஆகிவிட்டதற்கு மன்னிப்பு கோரியும், நஷ்ட ஈடு தருவதற்கும் ஒப்புக்கொண்டுள்ளார். பகவானின் பேரருளால் மிகப்பெரிய விபத்து நீங்கியுள்ளது.

1987ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி வழக்கம்போல் எனது குடும்பத்தாருடன் பிரசாந்தி புறப்பட்டுச் சென்றோம். எங்களை பகவான் 13ஆம் தேதி இண்டர்வியூவிற்கு அழைத்தார். சுவாமி நாற்காலியில் அமர்ந்ததும் தனக்கு எதிராக அமர்ந்திருந்த முருகனை பார்த்து, என்ன இப்பொழுது ஜீப் ஆக்ஸிடெண்ட் ஆனதல்லவா? உங்களை யார் காப்பாற்றியது? என கேட்டார். அனைவரும் இந்த சம்பவம் எப்படி பகவான் அறிந்தார்? என நினைத்து ஆச்சரியமாகவும் வியப்பாகவும் பகவானைப் பார்த்தோம். அந்த சம்பவத்தை சுவாமி கூறியதும் முருகன் மிகுந்த பயத்துடன் காணமாட்டான். சுவாமி மீண்டும் கேட்டதும், சாமிதான் காப்பாற்றினார் என கைகளைக் கூப்பினான். ஆம்.. சுவாமி காப்பாற்றியாச்சு.. நீ தந்தையின் செல்வாக்கினால் லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுகிறாய் எனக் கூறினார். பிறகு அருகில் இருந்த என் பக்கம் திரும்பி, இவன் சினிமாவிற்கு போகிறான் தெரியுமா? எனக் கேட்டார். நான், ஆம் சுவாமி என்றேன் .

பிறகு முருகனை பார்த்து சினிமா என்றால் என்ன தெரியுமா? தியேட்டரில் ஹாலில் ஒரு புறம் புரொஜக்டரும், மறுபுறம் எதிரில் ஸ்கிரீனும் உள்ளது. ஸ்கிரீன் வெள்ளையாக உள்ளது ஏன் தெரியுமா? படம் நன்றாக தெரியும் அதற்காகத்தான் வெள்ளை ஸ்கிரீன் போட்டுள்ளார்கள். புரொஜக்டரில் பிலிமை போட்டு ஆம்ப்ளிஃபையரை ஆன் செய்தால் லென்ஸ் மூலம் திரையில் படம் வரும். திரையில் படம் வரும்போது வெள்ளம் வரும், ஆனால் ஸ்க்ரீன் நனைவதில்லை. படத்தில்  தீ வரும் ஆனால் ஸ்கிரீன் கருகுவதில்லை. அதைப் போலத்தான் நமது வாழ்க்கையில், இன்பம், துன்பம், லாபம், நஷ்டம், சுக துக்கங்கள் வரும்.


ஆனால் நாம் ஸ்கிரீன் போல் எப்போதும் வெள்ளை மனதுடன், எதற்கும் இடம் தராமல் நமது வாழ்க்கையை தொடர வேண்டும் எனக்கூறி, முருகனை பார்த்து, 'பிரண்ட்ஸ்' 'பிரண்ட்ஸ்' என போகாதே. கிணற்றில் நீர் இருந்தால் தவளைகள் வரும் நீர், இல்லை என்றால் ஒன்றும் இருக்காது, செல்வாக்கு இருந்தால் நண்பர்கள் குவிவார்கள், இல்லை என்றால் எவரும் எட்டிப் பார்க்க மாட்டார்கள் என என்னை பார்த்தார் நான் மவுனமானேன். ஏனெனில் எனது சோதனையான காலத்தில் எந்த நண்பரும் இல்லாமல் போய் விட்டனர். பிறகு இவன் சினிமாவிற்கு போய் அழுது கொண்டிருந்தான் எனக்கூறி, நடிகர்கள் காசு வாங்கி விட்டு அழுவது போல் நடிக்கின்றனர், ஆனால் நீங்களோ காசைக் கொடுத்துவிட்டு அழுதுகொண்டிருக்கிறீர்கள், மற்றும் எல்லோரும் சினிமாவிற்கு போவதற்கு முன், ஒவ்வொருவருக்கும் ரத்தக்கொதிப்பு அளவாக இருக்கும், சினிமா பார்த்துவிட்டு வந்து பார்த்தால், BPஅதிகமாக இருக்கும். இது தேவைதானா? என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும், எனக்கூறி இவனை என்ன பெயர் சொல்லி அழைப்பாய்? என கேட்டார். நான் முருகன் என்றேன். இல்லை, நீ இன்னொரு பெயர் சொல்லி அழைப்பாயே என கூறினார். நான் வேல் என்றேன்.

ஆம், வேல் வேல் என தனது கையை உயர்த்தி முருகப்பெருமான் வேல் பிடித்து உள்ளதைப் போல் காண்பித்தார். இந்த இண்டர்வியு மூலம் சுவாமி இல்லாத இடமே இல்லை என்பதையும், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும், நமது எல்லா சம்பாஷணைகளையும்  அறிகிறார் என்பது தெளிவாகிறது. முதுமலை காட்டிலும், சினிமா அரங்கிலும், வீட்டிலும், இருந்து நம்மை கவனித்துக் கொண்டு உள்ளார். "அவர் தெய்வம்". இண்டர்வியூ முடிந்ததும் சுவாமி முருகனுக்கு வெள்ளி செயினும், டாலரும் தந்தார்.

ஆதாரம்: ஸ்ரீ ஜோகையா லிங்கராஜ் எழுதிய "இதயத்தோடு இதயம்" என்ற புத்தகத்திலிருந்து..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக