தலைப்பு

சனி, 4 ஜூலை, 2020

பனிமலையில் பக்தரைக் காத்த சாயி - பில் எய்ட்கன்(Famous Travel Writer)


இறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஆபத்பாந்தவர்.. ஆபத்சகாயர்.. அவரை நினைத்த மாத்திரத்திலேயே (நம்மை அவரை நோக்கி நினைக்கவும் வைத்து) அங்கே இறங்கி பேரன்பால் இரங்கும் பரிபூரண பரம்பொருள் அவர்.. எப்பேர்ப்பட்ட ஆபத்திலும் நமக்கு உறுதுணையாக நின்றுதவும் ஆண்டவர் அவர் மட்டுமே என்பதை மெய்சிலிர்க்க விவரிக்கும் பதிவு.

பில் எய்ட்கன் ஸ்காட்லாந்தில் பிறந்து இந்திய குடியுரிமை பெற்றவர். பல இடங்களுக்கு பிரயாணம் செய்யும் பிரபலமான எழுத்தாளர் மற்றும் நன்கு மலையேற்றம் தெரிந்தவர். இவர் இந்திய நாட்டையும் அதன் மலைச் சிறப்புகளைப் பற்றியும் பல நூல்களை எழுதியுள்ளார். ஸ்காட்லாந்து நாட்டில் பிறந்த பில் அய்ட்கென், இந்திய நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் 1959ம் ஆண்டு இந்திய நாட்டில் குடியேறினார். அவரது படைப்புகளில் Seven Sacred Rivers,  The Nanda Devi Affair, Mountain Delight ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. மேலும் பகவான் சத்ய சாயி பாபாவைப் பற்றியும் அவர் ஒரு புத்தகம் எழுதினார். 'Sri Sathya Sai Baba: A Life' என்ற அவரது புத்தகம், பாபாவின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலித்தது. சுவாமியை நிகழ்காலத்தில் வாழும் ஒரு அவதாரம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.


சத்ய சாயி பாபா, என் மனதில் புயல் வீசும் அளவுக்கு உள்ளக் கிளர்ச்சிகளை ஏற்படுத்தியுள்ளார். நிச்சயம் இதே உணர்ச்சிதான் உலகத்தில் இருக்கும் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும்' என்று அவர் உறுதியாகச் சொல்கிறார். 1972-ம் வருடம் டில்லியில் பாபாவைச் சந்தித்தார், பில் எய்ட்கன். அவர் முதன்முதலாக பாபாவைச் சந்தித்த அந்த அனுபவத்தைக் கூறுகிறார். அவரைப் பார்த்த உடனேயே என்னை அவர் வெகுவாகக் கவர்ந்து விட்டார் ! உண்மையில் அவரிடம் ஒரு மின்சக்தி இருப்பதுபோல எனக்குத் தோன்றியது.'' அடுத்தபடி 1980 ஜூன் 14-ம் தேதி மீண்டும் அவர் பாபாவைச் சந்தித்தார். அந்தச் சந்திப்பு ஓர் அதிசயமான சந்திப்பு!


அதைப் பற்றி பில் எய்ட்கன் கூறுகிறார். அப்போது நான் இமயமலையில் நந்தாதேவி என்ற இடத்திற்கு புனித யாத்திரை மேற்கொள்வதாக இருந்தேன். அந்த மலைப்பாதையில் பயணம் செய்வது மிகவும் கஷ்டமானது. பயணத்தின்போது, நான் எடுத்துச் செல்லப் போகும் உபகரணங்களை பாபாவிடம் காட்டினேன். கயிறுகள், பாறையைப் பிடித்துக் கொள்ளும் கிடிக்கிகள், ஐஸை உடைக்கும் கோடரி இவைதான் மிக முக்கிய சாதனம்.
சுவாமி ! என்னுடைய பயணம் நல்லபடியாக அமைய என்னை ஆசீர்வதித்து அனுப்புங்கள் ! என்று கூறினேன். என்னிடமிருந்த கோடரியை வாங்கிப் பார்த்தார். அதன் பின்னர், தமது கையை மேலே உயர்த்தி திடீரென விபூதி உண்டாக்கினார். அந்த ஐஸ் கோடரியின் ஒரு பக்கத்தை தமது கையால் அழுத்தமாகத் தேய்த்தார். பிறகு அந்தக் கோடரியை திருப்பிக் கொடுத்து விட்டு, நீங்கள் வெற்றி அடைவீர்கள்! என்று வாழ்த்தினார்.


பாபா நிகழ்த்தும் அதிசயம் பற்றி நான் அவ்வளவு அதிகம் அறிந்தவன் அல்ல. ஆனால், ஒரு மாதம் சென்ற பின்னர்  அந்த மலை மேல் நான் ஏறிக்கொண்டு இருந்தபோது அந்த ஐஸ்கோடரி தான் என் உயிரைக் காத்தது. மலைப் பயணத்தின்போது, நான் எறிந்த கோடரி பனிப்பாறையில் ஆறு அங்குல நீளம்தான் சென்றது. அதன்பிறகு பாறை இருந்ததால் அதில் மோதிக் கொள்வது தெரிந்தது. அதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போதே கால் கட்டை விரலைப் பதிந்திருந்த இடம் நொறுங்கி விழுவதை உணர்ந்தேன். எனது உடம்பின் கனமும் சிறு பிடிப்பில் ஊசல் ஆடியது. நான் கீழே விழுந்து இறந்து விடுவேனோ என்று பயந்தேன். உடனே சத்யசாயி பாபாவை மனதில் நினைத்துக் கொண்டேன். அச்சமயம் எங்கிருந்தோ வந்த சில மலை ஜாதி போர்ட்டர்கள், சில ஆபத்துகளையும் தாண்டி என்னைக் காப்பாற்றி விட்டார்கள்.


பிறகு நந்தா தேவியை வெற்றிகரமாக அடைந்தேன். அன்று குருபூர்ணிமா தினமாக அமைந்திருந்தது ஓர் அதிசயம் ! அந்தச் சம்பவத்திற்குப் பிறகு பாபா எப்போதும் என்னைக் காத்து வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டேன்.


🌻 வாழ்க்கை என்பது இப்படிப்பட்ட மலையேற்றம் தான்...  இறைவன் சத்ய சாயி நாமமே அந்த ஏற்றங்களை எளிதாக்கும் வலிமையான உபகரணம். அவர் மேல் பிடிமானமிக்க அசைக்க முடியாத பக்தியே நம்மை பேராபத்திலிருந்து காப்பாற்றும் ஒரே மாமருந்து. வேறு உபாயம் ஏதும் சரணாகதி அடையும்  பக்திக்கு சிறந்ததாக இல்லவே இல்லை. 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக