தலைப்பு

செவ்வாய், 28 ஜூலை, 2020

சேவை ஹீரோவான பிரபல நடிகர் சோனு சூட் சாய்ராம்!


பிரபல நடிகர் சோனு சூட் கொரோனா நிவாரண சேவையில் கோலோச்சுகிறார்.
அவரின் சேவைக்கு கிரியா ஊக்கியாக விளங்குவது கடவுள் சத்ய சாயியே என்பதன் அற்புதத்தை விளக்கும் மகிமைப் பதிவு...

சினிமா உலகம் பல அற்புத நடிகர்களை கொண்டிருக்கிறது. அதை எல்லாம் தாண்டி நல்ல மனிதர்களையும் அடையாளம் காட்டி இருக்கிறது.
அப்படிப்பட்ட ஒரு அற்புதமான நடிகர் என்பதையும் கடந்து ஒரு நல்ல மனிதர் சோனு சூட்...
பல மொழிகளில் நடித்துக் கொண்டிருக்கும் இவர் பேசுகின்ற ஒரு மொழியே இப்போது இணைய தளம் எங்கும் பரவிக் கொண்டிருக்கிறது.
அவரின் அதிசயமான அந்த மொழியே இதய மொழி..
உண்மையான சூப்பர் ஸ்டார் அந்தஸ்து என்பது ஒருவர் நல்ல மனிதராக இருப்பதே...
வில்லன் பாத்திரம் ஏற்பதால் யாரும் இங்கே நிஜ வாழ்வில் வில்லனாக இருக்க வேண்டிய அவசியமில்லை..
அதற்கு உதாரணம் நம்பியார் சாமியே.
அருந்ததி திரைப்படத்தில் நடிகர் சோனு சூட் ஏற்றிருந்த கதாபாத்திரம் ஈரக்குலை நடுங்க வைத்தது..
ஆனால் உண்மையில் இவர் ஈர மனதுக்காரர் என்பது தற்போது அனைவரும் கண்டு ஆச்சர்யப்படுகின்றனர்.
குறிப்பாக இணையதளத்தில் இவரே இன்றைய  சூப்பர் ஸ்டார்.


உண்மையில் நாம் கொரோனாவுக்கே நன்றி சொல்ல வேண்டும்..
அதுவே உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.
எவர் ஒருவர் கொரோனாவிலிருந்து மீண்டாலும் அது இறைவன் சத்ய சாயி செயல் என உணர முடிகிறது..
எவர் ஒருவர் கொரோனாவினால் மாண்டாலும் அடுத்தொரு பிறவி தந்து அவர் பயணத்தை தொடர வைப்பார் இறைவன் சத்ய சாயி எனும் பக்குவம் மெல்ல இதயத்தில் வர ஆரம்பித்திருக்கிறது.
ஜனன மரண சுழற்சியை சாயி செயலாக அதன் சத்தியத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
அதோடு சேர்ந்த இந்த கொரோனா காலகட்டத்தில் சக மனிதர்களுக்கு தானே முன் வந்து உதவும் இதய விரிவு மக்களிடையே வர ஆரம்பித்திருக்கிறது.
அந்த இதய விரிவில் மிக முக்கியமானவர் முதன்மையானவர் நடிகர் சோனு சூட்.

புலம் பெயரும் தொழிலாளர்களுக்கு தன் சொந்த செலவில்  அவர்களை பத்திரமாக சொந்த ஊருக்கு சேர்ப்பிப்பது முதல்
காய்கறி விற்கும் வேலை போன ஐடி ஊழியப் பெண்மணிக்கு வேலை வாங்கி தருவது வரை இவரின் சேவையை தனிப் புத்தகமாகவே எழுதலாம் ...

புலம் பெயரும் தொழிலாளர்கள் இவரை கடவுளாகவே பார்க்கின்றனர். இதுவரை 20000 தொழிலாளர்களுக்கும் மேலாக இவர் செய்த உதவி இமயத்தில் எழுதப்பட வேண்டியவை.
கடைசி தொழிலாளி பத்திரமாக ஊர் போய்
சேரும் வரை ஓயப்போவதில்லை என்று இவர் சொல்லி இருப்பது அந்த சேவையில் இவர் எடுத்துக் கொண்ட அர்ப்பணிப்பு.


அன்பளிப்பு வாங்கியே பழக்கப்பட்ட நடிகர்களுக்கு மத்தியில் இப்படி சேவைப் புறாவாக இவர் வலம் வருவதை கலை உலகம் மட்டுமல்ல பாரதமே பெருமிதப்பட வேண்டிய .. இவரை பின்பற்ற வேண்டிய
சமயம் இது.

உதவி செய்வதில் இரண்டு வகை..
கேட்டால் உதவி செய்வது..
கேட்காமல் தானே முன் வந்து உதவி செய்வது.

இரண்டாவதாக செய்யும் உதவியில் இறைவன் சத்ய சாயியே உள்ளிருந்து இயக்குகிறார். காரணம் இறைவன் சத்ய சாயியின் மங்கள குணமே இது தான்.
அவரை வசைபாடினால் கூட விரைந்து வந்து வசைபாடியவர்களுக்கு உதவி செய்து அவர்களை இசை பாட வைக்கும் ஒரே நித்திய சத்திய பரம் பொருள் அவர்.


நடிகர் சோனு சூட் 25000 முகக் கவசத்தை மகாராஷ்ட்ரா காவல் துறையினருக்கு வழங்கி இருப்பதும்..
திறமையாய் கம்பு சுற்றிய முதிர் வயது பெண்மணி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆனது..
அவருக்கு அந்தக் கலையை கற்றுத் தரும் பயிலகம் வைக்க தயார் என சொல்லியதும்.. என
எந்த துயரை கண்டாலும் களைய ஓடுவது .. எந்த திறமையை எங்கே கண்டாலும் அதை ஊக்கப்படுத்தி உதவி செய்து கொண்டிருக்கும் கர்ண மனிதர் இந்த சோனு சூட்.

இப்படி விழுந்தடித்து மனுஷன் உதவுகிறாரே .. நிச்சயம் இவர் இறைவன் சத்ய சாயி பக்தராகத் தான் இருக்கும் என எங்களுக்கு தோன்றியது..
அவரின் முற்கால பேட்டியில் கிடைத்த ஒரு பரவசத் தகவல் மகிழ்ச்சி அடைய வைத்தது எங்களை.

ஆம் ! நடிகர் சோனு சூட் இறைவன் சத்ய சாயி பக்தர்..
சத்ய சாயி மகாசமாதி முன்னிட்டு அவரிடம் ஒரு பத்திரிகை நிருபர் கேட்ட போது அவர் அளித்த பதில்..
அன்று அந்த பதில் ஒரு விதையே .. இன்று அவர் உடனுக்குடன் செய்யும் சேவைக்கான விருட்சங்களாய் பூத்துக் குலுங்கி .. காய்த்துக் கனிந்து தர்மத்தின் பசியாற்றுகிறது...

பஞ்சாப் மோகாவில் பிறந்த நடிகர் சோனு சூட் இறைவன் சத்ய சாயியை முதன் முதலாக தரிசித்தது சிறு குழந்தையாக இருக்கையில்.. அவரது இல்லத்து பூஜையறையில்..
கல்லூரிப் பேராசிரியரான இவரின் தாய் சரோஜ் தீவிரமான சத்ய சாயி பக்தை.
குழந்தையாக இருந்த சோனு சூட் "அம்மா இவர் யார்? எனக் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த தாய் அளித்த பதிலில் கோடி பக்தி கூடி அவரின் இதயத்தில் சங்கமித்திருக்கிறது..

முதலில் "இவர் தான் சத்ய சாயி பாபா" என்கிறார்.

அதற்கு குழந்தையான சோனு "அவர் யார்? அவர் படத்தை ஏன் இங்கே வைத்திருக்கிறீர்கள்? " என்று குழந்தைக்கே உரிய கேள்வி மேல் கேள்வி கேட்கும் ஆர்வ குணத்தால் மேலும் கேட்கிறார்‌..


அதற்கு அந்த தாய் அளித்த சத்திய பதில்.. சந்தேகமற்ற பதில்.. ஆழமான பதில்.. பசுமரத்தாணியாய் பதியக் கூடிய பதில்.. பிரபஞ்ச பதில்.. அந்த பதிலுக்கு எதிர் பதிலே பூமியில் இல்லை எனும்படி

"இவர் தான் கடவுள்" என்றிருக்கிறார் தாயார் சரோஜ்.

எத்தனை ஆழமான அனுபவ பக்தி.
இப்படி ஒரு தாய் கிடைக்க அவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்!

அவரது தாய் இறைவன் சத்ய சாயியின் சத்ய வாசகமான
அனைவரையும் நேசி.. அனைவருக்கும் உதவி செய் என்பதை கணந்தோறும் கடைபிடித்து வந்தவர்...

இறைவனின் மகிமையைப் பார்த்து வியப்பதையும் கடந்து இறைவனின் சொற்கள் படி நடப்பதையே இறைவன் சத்ய சாயி விரும்புகிறார். அப்படி நடப்பவரைப் பார்த்தே திரும்புகிறார்.


நடிகர் சோனு சூட் தந்தையான சக்தி சாகர் அக்கம்பக்கத்து எளிய குடும்பத்தினருக்கு நாராயண சேவையாற்றும் நல்ல மனிதர்.
ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர். சொந்தமாக ஜவுளி கடை வைத்திருந்தவர்.
சேவை எனும் இதய நெசவும் கொண்டவர்.

இதைப் பார்த்து.. இறைவனைப் பார்த்து வளர்ந்த பிள்ளை என்பதால் இவர் செய்து வரும் சேவைகளைக் குறித்து வியப்பதற்கொன்றுமில்லை எனத் தோன்றியது.
காரணம் .. கடவுள் சத்ய சாயியின் கருணைபட்டால் கருமியும் கர்ணன் ஆகும் போது சத்ய சாயி சொல்லிய நல்ல பண்பூட்டி வளர்த்த தாயின் மகன் என்பதால் இரக்கம் இதயத்தில் இருகால்களை மடித்து அமர்ந்திருக்கிறது..


இவரின் சகோதரிகளான மோனிகா .. மாளவிகாவும் இறைவன் சத்ய சாயி பக்தர்களாம்.

குறிப்பாக இவர் 180 தொழிலாளர்களை விமானம் மூலமும் அஸாமில் பத்திரமாக சேர்த்திருப்பது... விமானச் செலவுகளை தாமே ஏற்றுக் கொண்டிருப்பது எல்லாம் சாத்தியமே இல்லாதது.

மேலும் ஆந்திர மாநிலத்தில் நாகேஸ்வர ராவ் என்ற ஏழை விவசாயி தன் மகள்களையே ஏர்பூட்டி விவாசயம் செய்வதை இணையதள புகைப்படத்தில் கண்ட நடிகர் சோனு சூட் மாடுகள் வாங்கித் தருவதாக புகைப்படத்தில் கண்ட நடிகர் சோனு சூட் மாடுகள் வாங்கித் தருவதாக சொல்லியதற்கு மாடு வாங்கி கொடுத்தாலும் அதை பராமரிக்க போதிய செலவு செய்யும் இயலாமையை அவர் எடுத்துக் கூற.. புதிதாக ஒரு டிராக்டர் பரிசளித்து ஆனந்தக் கண்ணீர் விடவைத்திருக்கிறார் அந்த எளிய விவசாயியை..
இனி அவரின் ஆனந்தக் கண்ணீரும் கலந்து அவரின் விளை நிலம் மகசூல் அதிகம் கொடுக்கும்.


இவரிடம் அந்தப் பேட்டிக்கான நிருபர் "நீங்கள் சத்ய சாயியை நேரில் தரிசித்திருக்கிறீர்களா? " எனக் கேட்ட போது இவர் அளித்த பதிலை பகவத் கீதை நூலோடு இலவச இணைப்பாக சேர்க்கலாம் ...

"சத்ய சாயி... கடவுள்.. எல்லா இடத்திலும் இருப்பவர். அவரை தனியாக தரிசிக்க வேண்டிய அவசியமே இல்லை.‌ அவர் இந்த உலகத்தையே வழி நடத்துபவர் ... அவருக்கு தெரியாதது .. அவர் அறியாதது எதுவுமில்லை" என்று சொல்லி..
"மும்பை தர்ம ஷேத்திரம் மற்றும் சிம்லாவுக்கு அவர் விஜயம் செய்திருந்த போது எனக்கு வாய்ப்பு கிடைத்தது ஆனால்  சென்று பார்க்க வேண்டும் என எனக்கு தோன்றவில்லை.."


பவ்யமாக இறைவன் சத்ய சாயி முன் சென்று.‌... கூன கும்பிடு போட்டு .. கையை வாயில் வைத்து.. என எல்லாவிதமான செயல்முறைக்கும் அப்பாற்பட்டது உள்ளம் பணிந்து.. பக்குவத்தில் கனிந்து ஆத்ம சாதனையோடு கூடிய  தன்னிகரில்லா மற்றும் தன்னலமில்லா சேவையாற்றுவதே இறைவனோடு நம்மை சேர்க்க வைக்கும் அத்வைதம் என உணர்ந்த பதிலாய் நடிகர் சோனு சூட் பேசியிருப்பது பக்தியின் பழுத்த நிலை.

இறைவன் சத்யசாயியின் எப்போதும் உதவி செய் என்ற சத்ய வாசகமே அவரின் சுவாசமாக இயங்கி வருகிறதாம்.

தனது குடும்பத்தினர் மற்றும் குழந்தைகளுக்கும் இறைவன் சத்ய சாயியின் போதனைகளையே பின்பற்றச் செய்யும் படி வளர்க்கிறார்.


எப்படி அவர் வளர்ந்தாரோ
அப்படியே அவர் வளர்க்கிறார்.

இறைவன் சத்ய சாயி பக்தர் தாம் என்பதற்கு பாக்கியப் பெருமை அடைகிறார்.

ஆக... இப்பிரபஞ்சத்தை இயக்குவது ஒரே ஒரு சக்தி தான்..
அதற்கு கலியுகத்தில் பெயர் சத்ய சாயி.
தேடிப் போய் உதவி செய்யும் அனைவருமே இறைவன் சத்யசாயியின் வலது கரமாக இருக்கிறார்கள்.
அந்த கரங்களிலிடையே நடிகர் சோனு சூட் வரமாக இருக்கிறார்.

பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக