தலைப்பு

வியாழன், 30 ஜூலை, 2020

கண் பார்வையை முற்றிலும் இழந்தவருக்கு பாபா செய்த விபூதி மருத்துவம்!


நம் பிறவி என்னும் பெரும்பிணியை  தீர்க்க அருமருந்தாக அவதரித்த பகவான் பாபா , ஆயிரம் ஆயிரம் மக்களின் பிணிகளை தம் கை அசைவில் ஒரு நொடிப் பொழுதில் தீர்த்த அற்புத நிகழ்வுகளை அறியாதார் யார்? தம்மை நாடி வராத நபர்களைக் கூட அவரே தேடிச் சென்று உடற்பிணி தீர்த்த நிகழ்வுகளும் ஏராளம்.

எண்ணற்ற தீனர்களின் 
ஏக்கம் போக்கி 
கண்ணற்ற மாந்தர்களின் 
கண்ணாய் வந்தாய் 
புண்பட்ட நெஞ்சத்தை 
வருடிவிட்டு அவர் 
கண்பட்ட கண்ணீரை 
துடைக்க வந்தாய்.

ஓம் ஸ்ரீ சாயி சர்வரோக நிவாரிணே   நமஹ:

R.S .கரே என்பவர் டேராடூனில் வசித்து வந்தவர். உத்தரப் பிரதேச அரசின் பொதுப்பணித் துறையில் , மின்சாரப் பிரிவில் மேலாளராக பதவி வகித்து வந்தார். சங்கடங்கள் ஏதுமின்றி சென்று கொண்டிருந்த அவர் வாழ்வில் திடீரென பேரிடி போன்ற ஒரு நிகழ்வு நடந்தது. அது அவரது வாழ்வின் திசையையே மாற்றியது . 1971 ம் வருடம் .ஒரு சனிக்கிழமை. இறைவனுக்கு சூட்ட ஒரு பூ மாலையை தயார் செய்ய, ஊசியில் நூல் கோர்க்க முயன்று கொண்டிருந்தார் திரு.கரே.  என்ன முயன்றும் நூலை ஊசியின் கண்ணில் நுழைக்க முடியவில்லை. தம் கண்ணில் ஏதோ கோளாறு ஏற்பட்டுவிட்டது என உணர்ந்த அவர் பிறகு பரிசோதனைக்காக டாக்டரிடம் சென்றார். 


பரிசோதனைக்குப்பின் டாக்டர் கூறிய செய்தி அவரை உலுக்கிவிட்டது. அவரது கண் பார்வை மிகவும் குறைந்து மேலும் நலிவடையும் நிலையில் இருந்தது. பின்னர் பரிசோதித்த கண் மருத்துவ மனையும் இதை உறுதி செய்தது , இதற்கிடையில் அவர் ஒரு வாரத்தில் தம் கண் பார்வையை முற்றிலுமாக இழந்தார். கடைசி முயற்சியாக சீதாப்பூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கண் மருத்துவ மனையில் உள் நோயாளியாக 74 நாட்கள் தங்கி சிகிச்சை மேற்கொண்டார் . ஆனால் அதில் மிக மிக சிறிய முன்னேற்றமே ஏற்பட்டது. பின்னர் அதுவும் பலனின்றி தம் கண் பார்வையை முற்றிலுமாக இழந்தார்.

திக்கற்றவருக்கு தெய்வமே துணை:

கரே அவர்கள் பகவான் பாபா பற்றியும் அவரது மகிமைகள் பற்றியும் கேள்விப்பட்டிருந்தார். ஆனால் அவருக்கு அதில் நம்பிக்கையோ அல்லது ஈடுபாடோ இல்லை. ஆனால் பாபா அவரை தம் அருள் வலையில் சிக்க வைக்க  முடிவு செய்தபின் அதை யார் தடுக்க இயலும்.

கோடைச் சாரலில்(Summer Course) ஒரு  கருணைப் பிரவாகம்:

1972 ஆம் ஆண்டு. வழக்கமான கோடை ஆன்மீக பயிற்சி முகாம் ( Summer course .. Brindavan Campus) இதில் கலந்துகொள்ள அகில இந்தியாவிலிருந்தும் பலர் விண்ணப்பித்திருந்தனர்  இதில் உத்தரப் பிரதேசத்திலிருந்து  ஒரே ஒரு மாணவி மட்டும் அழைக்கப்பட்டார். அவர் பெயர் மது. ஆம் . உங்கள் ஊகம் சரிதான். அவர் திரு. கரேவின் மகளாவார். பாபாவின் கருணத் திருவிளையாடல் துவங்கும் நேரம் வந்துவிட்டது. மது அந்த கோடை முகாமில் கலந்து கொள்ள பெங்களூர்  பிருந்தாவன் வந்தடைந்தார். முகாம் ஆரம்பித்து சொற்பொழிவுகளும் நடை பெற்றுக் கொண்டிருந்தன.


ஒருநாள்... மது தன் சக பங்கேற்பாளர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி அருந்தி கொண்டிருந்தாள். எதிர்பாராத விதமாக பகவான் பாபா அங்கு வருகை தந்தார். மது வின் அருகே வந்த பாபா அவளை நோக்கி "நீ உன் தகப்பனாரின் நிலை குறித்து கவலை கொண்டுள்ளாய். எல்லாம் சரியாகி விடும்." என்று கூறி கை அசைவில் பரம பவித்ரமான விபூதியை சிருஷ்டித்து , "இதை உன் தகப்பனாருக்கு தபாலில் அனுப்பிவிடு" என்றும் கூறினார். பாபாவின் இந்த கனிவான சொல்லும் செயலும் மதுவின் நெஞ்சத்தைத் தொட்டன. உடனே அவள் அந்த அற்புத நிகழ்ச்சியை விவரித்து ஒரு கடிதம் எழுதி, விபூதியையும்  இணைத்து தபாலில் அனுப்பினாள்.


பரமம் பவித்ரம் பாபா விபூதிம் பரமம் விசித்ரம் லீலா விபூதிம்:

இக்கடிதத்தை திரு.கரே அவர்களின் மனைவி படித்துக் காட்டி விபூதியை அவரிடம் கொடுத்தார். பரமேஸ்வரரின் விபூதி பரம ஐஸ்வர்யம் அல்லவா. அதை பக்தியுடன் வாங்கி , உடல் சுத்திக்குப்பின், கரே தமது கண்களின் இரப்பைகள் மீது , சாய்ராம் சாய்ராம் என்ற நாமஸ்மரணத்துடன் தடவினார். ஒரு மணி நேரம் கடந்தது. எந்த சிறப்பு மருத்துவ சேவையாலும் குணப்படுத்த இயலாத திரு. கரே அவர்களின் கண்கள் சிறிதளவு பார்வை பெற, ஒரு வார விபூதி சிகிச்சையில் அவர் பூரண குணமடைந்தார். கண்கள்  ஒளி பெற்று பார்வை பழைய நிலையை அடைந்தார். மனம் எல்லாம் பாபா நினைவு . தமக்கு கண் அளித்த கருணாமூர்த்தியைக் கண்ணாரக் காண பெங்களூர் சென்றார். அங்கு பாபாவைக் கண்டு தொழுதார். ஏழேழு ஜென்மங்கள் செய்த தவப்பயனோ என்னவோ..அவருக்கு பாபாவின் தர்ஷண்.. ஸ்பர்ஷண்.. சம்பாஷண். இம்மூன்றும் கிட்டின. புறக்கண் ஒளியோடு அகக்கண் ஒளியும் பெற்று ஊர் திரும்பினார்.

இதன் பின் அவரது  வாழ்வின்  மையப் புள்ளியே பாபா என்றாகிவிட்டது. பாபா பற்றிய நூல்ககளையும் , அவர் உபதேசங்ககளையும் படிப்பதில் தம் வாழ்நாளை செலவிட்டார். பாபாவின் தரிசனம் ஒன்றே போதும்.அவர் தந்த கண்களால் அவரைக் காணுவதே பேறு என்ற உணர்வுக்கு ஆட்பட்டார்.

பெரியவனை , மாயவனை, பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனை, கண்ணும், திருவடியும் , கையும், திருவாயும், செய்ய கரியவனைக்  காணாத கண் என்ன கண்ணே! கண் இமைத்துக் காண்பவர்தம் கண் என்ன கண்ணே.
(சிலப்பதிகாரம் - மதுரைக் காண்டம்-ஆச்சியர் குலவை)

ஆதாரம்: R. S. Khare, Personal Narration 
தமிழாக்கம் : திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர். 

🌻 இறைவன் சத்ய சாயி அறியாததோ ஆற்றாததோ இவ்வுலகில் ஏதும் இல்லை.. மகான்களே தவம் செய்து வருவித்த இறைவன் சத்ய சாயியை சிக்கனப்பிடித்து இக்கணம் முதல் பயமற்று.. அவர் விபூதி தரித்து வினை எல்லாம் லீலா விநோத சாயி இறைவனுக்கே அர்ப்பணித்து புவி வாழ்வை நவ வாழ்வாய் .. சத்ய சாயியை உணர முற்படும் தவ வாழ்வாய் கனிந்து ரசமாகி ரமிப்போமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக