தலைப்பு

வெள்ளி, 3 ஜூலை, 2020

SMS மூலமாக செய்தி அனுப்பிய சத்திய சாயி பகவான்!


பொதுவாக பகவான் ஸ்ரீ சத்திய சாயி பாபா தன்னுடைய பக்தர்களுக்கு கனவுகள் மூலமாக அல்லது கடிதங்கள் மூலமாக தான் செய்திகளைஅனுப்பி இருக்கின்றார். ஏன் சில பக்தர்கள் தங்களுடைய வீட்டின் பாபாவின் புகைப்படத்தில் இருந்து கூட அவருடைய செய்திகளை கடிதங்களாக பெற்றிருக்கிறார்கள். ஆனால் பாபா குறுஞ்செய்தி(SMS) மூலமாக செய்தி அனுப்பி இருக்கின்றார் என்றால் நம்ப முடிகின்றதா? ஆம் இதுபோன்ற அற்புதங்களையும் பாபா நிகழ்த்தி இருக்கின்றார்.

என்னுடைய பெயர் M.மகாதேவ் பிரசாத். நான் ஷீரடி சாய்பாபாவின் தீவிர பக்தன். வருடத்திற்கு குறைந்தது மூன்று முறையாவது ஷீரடி சென்று பாபாவை தரிசித்து வருவேன். எனக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. நான் என் குடும்பத்துடன் மகாராஷ்டிரா பண்டாரா மாவட்டத்தில் உள்ள லக்ஹனி என்ற ஊரில் வசித்து வந்தோம். அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் நான் அசிஸ்டன்ட் மேனேஜராக பணியாற்றி வந்தேன். எங்கள் குடும்பம் ஒரு நடுத்தர வர்க்கம்தான். எங்களுக்கு 7 சென்டில் ஒரு இடம் இருந்தது. அந்த இடத்தில் அப்போது நான் ஹவுசிங் லோன் பெற்று வீடும் கட்டிக் கொண்டிருந்தேன். நான் சொல்லுவது 2002ஆம் வருடம். அப்போது எனக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது அதனால் என்னால் தொடர்ந்து ஆறு மாதங்களாக வேலைக்குச் செல்ல முடியவில்லை. நான் சேமித்த பணம் அனைத்தும் ஆஸ்பத்திரி செலவில் கரைந்துவிட்டது. என் கம்பெனியில் இருந்து என் நண்பர் மூலம் தகவல் அனுப்பி உடனே வேலைக்கு வந்து சேர சொன்னார்கள். ஆனால் என்னுடைய உடல் அப்போது ஒத்துழைக்கவில்லை. அதனால் அவர்கள் வேறு வழியில்லாமல் என்னை நீக்கினார்கள். பின்பு நாங்கள் வணங்கும் ஷீரடி சாயின் கிருபையால் என்னுடைய உடல் நலம் நன்கு தேறியது. புதிய வேலையில் சேருவதற்காக பல கம்பெனி ஏறி இறங்கினேன். ஆனால் வேலை தான் கிடைக்க வில்லை. அன்றாட குடும்பத்தை நடத்துவதற்கே மிகவும் சிரமமாக இருந்த சமயம் அது. இப்போது மிகவு‌ம் இக்கட்டான சூழ்நிலையில் நாங்கள் வாழ்ந்து கொண்டிருந்தோம்.


2002ஆம் வருடத்தில் தான், அலைபேசிகள் மக்களிடம் வேகமாக சென்றடைய ஆரம்பித்த காலம் அது. நானும் அந்த வருடத்தில் தான் முதன்முதலாக நோக்கியா அறிமுகப்படுத்திய 3210 என்ற அலைபேசியை வாங்கியிருந்தேன். சரியாக நவம்பர் 4 2002ஆம் வருடத்தில் காலை ஏழரை மணிக்கு என்னுடைய அலைபேசிக்கு ஒரு குறுஞ்செய்தி(SMS) வந்தது. அந்த குறுஞ்செய்தியை ஓப்பன் செய்த பிறகு அதில் 'கவலைப்படாதே! கீழ் இருக்கும் முகவரியில் காலை 11 மணிக்கு மேனேஜர் வேலைக்கான நேர்காணல் நடக்கின்றது. கட்டாயம் போய் கலந்து கொள். நிச்சயம் உனக்கு வேலை கிடைக்கும்' என்று அதில் இருந்தது. சரி என்று நானும் அந்த குறுஞ்செய்தியில் இருந்த முகவரிக்கு சென்று நேர்காணலில் கலந்து கொண்டேன். அதிசயம் எனக்கு அந்த குறுஞ்செய்தியில் சொல்லியிருந்தபடி வேலையும் கிடைத்தது. நல்ல சம்பளம் என்னுடைய குடும்ப சூழ்நிலையும் அப்படியே தலைகீழாக மாறியது.

பின்பு தொடர்ந்து எனக்கு இதுபோன்ற குறுஞ்செய்திகள் வந்து கொண்டே இருந்தது. குறுஞ்செய்தியில் வரும் செய்தியும், அப்படியே என்னுடைய வாழ்விலும் நடந்தது. எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. அதேபோல் பயமாகவும் இருந்தது. யார் இதெல்லாம் அனுப்புகிறார்? நம்மை யாரோ கண்காணிக்கிறார் என்று நான் பயந்து குழம்பி கொண்டிருந்தேன். அப்படி நான் குழம்பி இருந்த சமயத்தில்தான் எனக்கு ஷீரடி சாய்பாபாவின் மறு அவதாரம்தான் சத்திய சாய்பாபா என்ற விஷயம் என் நண்பர் மூலமாக நாங்கள் தெரிந்துகொண்டோம். பின்னர் விரைவில் நாங்கள் பகவான் சத்ய சாய் பாபாவை தரிசிக்க முதன்முதலாக குடும்பத்துடன் புட்டப்பர்த்திக்கு சென்றோம்.


தரிசனம் செய்யப் போன எங்களுக்கு  சற்றும் எதிர்பார்க்காமல் சுவாமிஜி நேர்காணல் கொடுத்தார். அந்த தெய்வீக அறைக்கு உள்ளே சென்ற உடனே சுவாமிஜி 'என்ன மகாதேவ் எப்படி உன்னை இங்கு வரவைத்தேன் பார்த்தாயா' என்று சொல்லி புன்னகைத்தார். நான் சிறுவனாக இருந்தபோது நடந்த சில சம்பவங்களை எல்லாம் சுவாமிஜி தெளிவாக சொன்னார். எனக்கு ஒரே ஆச்சரியமாக இருந்தது. எங்களிடம் பேசிக்கொண்டிருந்த சுவாமிஜி திடீரென்று கையசைப்பில் என் மகளுக்கு அவருடைய உருவம் பதித்த ஒரு செயினை தன் திருக்கரத்தால் அணிவித்தார். நானும் அப்படியே கைகளை வணங்கிய படியே மெய்மறந்து சுவாமிஜியை பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் என் வாழ்வை மாற்றிய சில குறுஞ்செய்திகளை(SMS) பற்றி சுவாமிஜி பேச ஆரம்பித்தார். நான் என்னுடைய உள்மனதில் உடனே சுவாமிஜிதான் நமக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொண்டிருந்த தருவாயில், சுவாமிஜி உடனே 'மகாதேவ் நீ நினைத்தது சரிதான். ஆம் நான்தான் உனக்கு அனுப்பினேன், என் பக்தர்களுக்கு ஒரு செய்தியை சொல்ல வேண்டுமென்றால் நான் எதன் மூலமாக வேண்டுமானாலும் சொல்வேன். இது வெறும் கருவிகளே' என்று சொன்னார். அவர் இந்த ஏழைக்கு காட்டிய கருணையை நினைத்து என் கண்களில் நீர் கசிந்தது. என்னுடைய நன்றியை அவரது பாதங்களைத் தொட்டு வணங்கி என்னுடைய கண்ணீரால் வெளிப்படுத்தினேன். பின்னர் இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய குடும்பமே தீவிர சத்தியசாயி பக்தர்களாக மாறினோம். எனக்கு தொடர்ந்து ஒரு மூன்று வருடங்கள் சுவாமிஜியிடம் இருந்து அவ்வப்போது மெசேஜ்கள்  வந்துகொண்டிருந்தது. பின்னர் நின்றுவிட்டது. இன்றும் அவர் அனுப்பிய குறுஞ்செய்திகளை நான் என்னுடைய டைரியில் எழுதி வைத்து கொண்டு அதனை பொக்கிஷமாக போற்றிப் பாதுகாக்கிறேன்.

பொதுவாக சுவாமிஜியிடம் இருந்து வந்த மெசேஜ்கள் எல்லாம் வித்தியாசமான நம்பரில் இருந்து வரும். சில நேரங்களில் நாங்கள் அதனை படித்த உடனே தானாக அழிந்துவிடும். இப்படி சுவாமிஜி எங்களுடைய வாழ்வில் நிகழ்த்திய அற்புதங்கள் இன்றும் பசுமையான நினைவுகளாக எங்கள் மனதில் பதிந்திருக்கின்றது. எங்களை பொறுத்தவரை சுவாமிஜி உடல் தான் இல்லையே தவிர, எங்கள் குடும்பத்தை இன்றும் அவர்தான் பாதுகாத்து வழிநடத்தி வருகின்றார் என்பதை நான் மனதார நம்புகிறேன். எங்கள் இருண்ட வாழ்வை ஒளிரச் செய்த சுவாமிஜிக்கு நாங்கள் காலத்திற்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

ஆதாரம்: 2011ஆம் வருடம் வெளிவந்த 'சித்ரலேகா' என்ற மராத்தி வாராந்திர செய்தி இதழ்.

மொழிபெயர்ப்பு: திருமதி. J. மல்லிகா சாய்ராம், சேலம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக