தலைப்பு

செவ்வாய், 31 மார்ச், 2020

மகான்களுக்கும்.. ஸ்ரீ சத்ய சாயி அவதாரத்திற்கும் உள்ள வித்தியாசம்!


கேள்வி: இந்த பாரத பூமியில் நிறைய மகான்களும், சித்தர்களும் பல அற்புதங்கள் புரிந்து இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது சத்ய சாய்பாபாவை மட்டும் நீங்கள் ஏன் இறைவன், அவதாரம், பரப்பிரம்மம் என்றெல்லாம் வர்ணிக்கிறீர்கள் ? அவரை நீங்கள் கிருஷ்ணரின் அவதாரமாகவும் சொல்கின்றீர்கள். அதே சமயத்தில் சிவனின் அவதாரமாகவும் பல இடங்களில் குறிப்பிடுகிறீர்கள். அதனால் ஒரே குழப்பமாக இருக்கின்றது. கொஞ்சம் தெளிவுபடுத்தினால் நன்றாக இருக்கும்.

பதில்: மிக நியாயமான கேள்வி. 
கடவுளுக்கு மூன்று அடிப்படை குணங்கள் இருக்கின்றன...
அனைத்தும் அறிந்திருப்பது. 
எங்கும் நிறைந்திருப்பது. 
சர்வ வல்லமையோடு பேதமின்றி... பாகுபாடின்றி அனைவரையும் ஈர்த்து அருகமர்த்தி பரம கருணையோடு அருள்வது.. இந்த மூன்று குணங்கள் கொண்ட இறைவன் சத்ய சாயி ஒருவரே.

சுவாமி அவதரிப்பதற்கு முன்பே அவர் வீட்டின் வாத்தியக் கருவிகள் தானே ஒலி எழுப்பி அவர் வரவைக் கொண்டாடி இருக்கின்றன..
இதை அக்கம் பக்கத்தினர் கேட்டு ஆச்சர்யம் அடைந்திருக்கின்றனர். கிணற்றடிக்கு சென்ற அன்னை ஈஸ்வரம்மா ஆகாயத்திலிருந்து  வெளிப்பட்டு பாய்ந்து வந்த  நீல ஒளி வயிற்றில் சென்ற பின்னரே இறைவன் சத்ய சாயியை கருவுற்றிருக்கிறார்கள்.

எந்த மகான்களும் தங்களை கடவுள்.. பரப்பிரம்மம் என சொல்லிக் கொண்டதே இல்லை.. ஆனால் இறைவன் சத்ய சாயி சரியான தெய்வீக சந்தர்ப்பத்தில் மக்களுக்கு தனது 14 வது வயதில் இதனை உரைத்தார்... மழலையாக சத்ய சாயி இறைவனை மடியில் வைத்து தாலாட்டும் போதே அன்னை ஈஸ்வரம்மா இறைவன் சத்ய சாயி திருமுக தேஜஸ் மற்றும் உடல் வழி வெளிப்படும் இறை அதிர்வலைகளைத் தாங்கமுடியாது கைகள் நடுங்கி இருக்கிறார். இதை அவரே பகிர்ந்திருக்கிறார்.

பல வெளி நாட்டிலிருந்து விஞ்ஞானிகள் சுவாமியின் மகிமைகளை ஆராய்ச்சி செய்ய வந்து பதிலற்று அவரின் பக்தர்களாகவே மாறிப் போயிருக்கிறார்கள். ஒரு முறை உலகப் புகழ் பெற்ற ஃபிராங் பாரனோஸ்கி எனும் ஒரு வெளிநாட்டு விஞ்ஞானி... மனித உடம்பிலிருந்து வெளிப்படும் ஆராவை கணக்கிடும் கிரிலியன் காமெரா எனும் காணொளிக் கருவியோடு பல மகான்களை வீடியோ எடுத்த பின் இறைவன் சத்ய சாயியை வீடியோ பதிவு செய்ய வருகிறார். சுவாமியின் "ஆரா" (ஒளிக் கவச கதிர்வீச்சு) ஊதா நிறத்தோடு பரந்து விரிந்ததை ஆச்சர்யப்பட்டு.. அதன் எல்லையை ஆராய முடியவில்லை என்றும்...
இதைப் போல் எந்த மகானுக்குமே இல்லை என்றும் பதிவு செய்திருக்கிறார்.. இன்றும் அந்த அற்புதக் காணொளியை சைதன்ய ஜோதியில் (மியூசியம் -- புட்டபர்த்தி) பக்தர்கள் பார்க்கலாம். (ஃபிராங் பாரனோஸ்கி அவர்களின் அனுபவத்தை விரிவாக படிக்க..

இறைவன் சத்ய சாயி பல பக்தர்களுக்கு நேரடியாக விஸ்வரூப தரிசனம் தந்திருக்கிறார்...
இறந்து போன பலரை  உயிர்ப்பித்திருக்கிறார். வெள்ளத்தில் அடித்துக் கொண்டு போன தவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு மகானை காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார். பல இமாலய மகான்களுக்கு ஆன்மிக தவ வழியை நேரடியாய் தோன்றியும்... உள்முகமாய்க் காட்டியும் இருக்கிறார். 
அந்த தவ தியான சமாதி அனுபவமே இறைவன் சத்ய சாயி தான்.


இமாலய குகையில் வாழும் மகான்களுக்கு அட்சய பாத்திரம் வழங்கி அவர்களின் பசி போக்கி இருக்கிறார். ஜாதிமத,மொழி இன தேச பேதமற்று பல மருத்துவர்களால் கை விடப்பட்ட நோயாளிகளின் உடல்/ மன வியாதிகளைத் தீர்த்திருக்கிறார். பல மகான்கள் இறைவன் சத்ய சாயியை இறைவன் என்று சுவாமியின் அனுமதியோடு ஒரு சில பக்தர்களிடம் மொழிந்திருக்கிறார்கள்.

இறைவன் சத்ய சாயி அவதரித்த நொடியையே... புதுவை ஸ்ரீ அரவிந்தர் எனும் பெரிய மகான் அந்த அற்புத வைபவ நிகழ்வை சூட்ச்சுமமாய் தரிசித்து அடுத்த நாள் கிருஷ்ண பேருணர்வு கீழ் இறங்கிவிட்டது எனச் சொல்லி தன் புத்தகத்திலும் பதிவு செய்திருக்கிறார். (இந்த பதிவை விரிவாக படிக்க..

மனிதர்கள் புரிந்து கொள்வதை விட மகான்கள் இறைவன் சத்ய சாயியை உணர்ந்து கொள்வதில் ஆழமும் சத்தியமும் நிதர்சனம். காரணம்....

ஒவ்வொரு மகான்களும் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு வகையான மனிதருக்காக வந்தவர்கள். பல மகான்களின் (பெயர் சொல்ல விரும்பவில்லை) ஆசிரமத்தில் அந்தந்த மனிதர்களுக்கான சடங்கு.. சம்பிரதாயங்கள் மட்டுமே இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அது தவறு என சொல்ல வரவில்லை. அது உலகளாவிய பார்வை இல்லை என உணர்த்த விரும்புகிறேன். இறைவன் சத்ய சாயி ஒருவரே உலகளாவிய மதங்கள் யாவும் ஒன்றென உரைக்க மட்டும் செய்யவில்லை.. அதைத் தன் ஆன்மிக குறியீடாக மட்டும் உருவாக்கவில்லை.. அதை அன்றாடம் நடைமுறை படுத்தினார். எல்லா மதப் பண்டிகைகளையும் கொண்டாடினார். இன்றும் அவை பிரசாந்தி நிலைய  ஆசிரமத்திலும்... சமிதிகளிலும் நிகழ்கின்றன... இவைகளை நடைமுறைப்படுத்தியே தன் பக்தர் பலருக்கு யாவும் ஒன்றென உணர்த்தினார். எல்லா மத சம்பிரதாயங்களும் ஒரே இலக்கை உடையவையே என்கிறார். இதுவே செயல்முறை ஆன்மிகம்.


உதாரணமாக : இந்து மதத்திலேயே இந்த ஜாதிப் பிரிவினர் தான் காயத்ரி மந்திரம் சொல்ல வேண்டும். அதிலும் அந்தப் பிரிவினரில் பெண்கள் சொல்லக் கூடாது என்ற பூரண ஞானத்திற்கு சம்பந்தமே இல்லாத மூட நம்பிக்கையை ... இறைவன் சத்ய சாயி ஒருவரே அந்த அறியாமை இருளை நீக்கினார். யாவரும் காயத்ரி மந்திரம் சொல்லலாம் என தாமே எப்படி சொல்ல வேண்டும் என உச்சரித்தும் காட்டினார்.. சுவாமி பக்தர்களில் பல பெண்மணிகள் காயத்ரி மந்திரம் சொல்லி பல மேன்மை நிலைதனை அடைந்திருக்கின்றனர்.

இந்த பேதமற்ற தெய்வீக உயர்ப்பண்பைத் தன் பூர்வ ஷிர்டி அவதாரத்திலேயே துவங்கிவிட்டார். இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலுவடைய அதற்காகவே பல நடைமுறை ஞான போதனைகளும்... மகிமைகளும் புரிந்தார்.

இருள் இருந்தால் ஒளி இல்லை. பேதமிருந்தால் ஞானமில்லை...

தானத்தில் சிறந்த தானம் நிதானம் .. அதிலும் சிறந்த தானம் சமாதானம். அதையே இறைவன் சத்ய சாயி செயல்முறை ஆன்மிகமாக்கினார்.

கேள்வி கேட்கும் நீங்களே மகனாக.. கணவனாக... தகப்பனாக... நண்பனாக... மேலதிகாரியாக... பக்தனாக எனப் பல்வேறு ரூபம் (பாத்திரங்கள்) எடுப்பது போல்... இறைவனிடமிருந்து பல்வேறு அம்சங்கள் வெளிப்படுகின்றன ... அவையே சிவன்.. விஷ்ணு.. பிரம்மா.. அம்பிகை முதலானோர்...

எப்படி மேற்சொன்ன பலவித பாத்திரங்கள் சேர்ந்தது தான் நீங்களோ அதைப் போல் இறை அம்சங்களின் ஒட்டு மொத்த வடிவமே இறைவன் சத்ய சாயி. பேதமற்ற இறைவன். தீட்டு பார்க்காத இறைவன். சடங்கு சம்பிரதாயத்திற்கு அப்பாற்பட்ட இறைவன். அனைத்து  மதங்களாகி... அந்த மதங்களைக் கடந்து... மதச் சாயங்களைப் பூசிக் கொள்ளாத ஒரே இறைவன்.

இறைவன் சத்ய சாயி.


அவர் காவி அணிந்ததே பற்று அற்று இருத்தலே தெய்வீகம் எனப் புரியவைக்கவே... மகிமை விபூதி தருபவர் விபூதியையோ ... திருநாமத்தையோ நெற்றியில் இட்டுப் பார்த்திருக்கிறோமா...? இறைத்தன்மை என்பதே அப்பாற்பட்டது...  அனைத்திற்கும் அப்பாற்பட்டவர் இறைவன் சத்ய சாயி...

மதங்கள் கடந்த உலகளாவிய பக்தர்கள் இறைவன் சத்ய சாயி ஒருவருக்குத் தான்... காரணம் அவர் இறைவனே என்பதால்...

இறையின் சுபாவமே பிரிவினை.. வரையறை யாவையும் கடந்ததே...

அவர் மனிதம் என்பதை புனிதம் என்றாக்க கீழ் இறங்கியவர் மட்டுமல்லர்.. சகல ஜீவராசிகளுக்குமான கடவுள் இறைவன் சத்ய சாயி... எல்லா மகான்களும் எந்த பேரானந்தத்தை ... எந்தப் பேரொளியை.. எந்தப் பேரனுபவத்தை உணர்ந்து இரண்டறக் கலந்தார்களோ அதுவே ... அந்த சாட்சாத்காரமே பரிபூரண வடிவம் எடுத்து சத்ய சாயி எனும் பெயர் கொண்டு வந்திருக்கிறது...

இன்னும் பிரேமமாய் வரப் போகிறது...

அந்தந்த யுகத்தில் இறை அம்சங்களே போதுமானதாக இருந்தது.. ஆனால் இந்த கலியுகத்தில் இறைவனே வரவேண்டி இருக்கிறது.. சாதாரண ஜலதோஷம் என்றால் மருந்துக் கடை மாத்திரையே போதும். காய்ச்சல் என்றால் ஊசி போட செவிலிகள் போதும்.. பலமான உடற்கோளாறு என்றால் பெரிய மருத்துவரே அறுவை சிகிச்சை செய்வார்... மெடிக்கல் ஷாப் பையன் அல்ல... அதைப் போலவே ... இந்தக் கலியில் இறைவனே கீழ் இறங்க வேண்டி இருந்தது...

ஒரு நல்ல குரு இறைவனை நோக்கி இறை அனுபவம் பெற நம்மை வழிகாட்டுவார்.. ஆனால் அவரிடம் வெறும் அல்பத்தனமான சிற்றின்ப சுகம் பெறவே நாம் வரம் வேண்டிக் கொண்டிருப்பதால் கடவுளை நோக்கி அவரின் பக்தர்களை ஆற்றுப்படுத்த அவர்கள் பக்குவத்திற்காகக் அந்த நல்ல குரு இன்னமும் காத்திருக்க வேண்டி இருக்கிறது.

சத்ய சாயி இறைவனே பல இறை அம்ச ரூபங்களில் பல பக்தர்களுக்குக் காட்சி அளித்திருக்கிறார். அந்த இறை அம்ச வடிவங்கள் எல்லாம் தம்முள் அடக்கமே என பக்தர்க்குத் தெளிவுபடுத்தவே...


மகான்கள் வணக்கத்திற்குரியவர்கள். 
நாமும் நாளைய மகானாவதற்காக இன்றே நம்மிடம் மகானாய் இருப்பவர்கள். தவத்தை உணர்த்தும் குறியீடுகள் அவர்கள்.

சிற்றின்பத்திலிருந்து விடுபட்டுப் பேரின்ப தாகத்தோடு  சத்ய சாயி இறைவனை பக்தர்கள் அணுக அணுக மேலே சொன்னவை எல்லாம் நிதர்சன அனுபவமாக உணரப்படும். 

இறைவன் சத்ய சாயி செய்யும் அற்புதங்கள் எல்லாம் அவருக்கு பெரிய விஷயமே இல்லை... இறைவனுக்கு எதுதான் சாத்தியமில்லை. அற்புதம் வைத்தல்ல அவரை இறைவன் என கொண்டாடுவது...
ஜாதிமத , இனமொழி.. ஏன் உலக பேதம் கூட அவரிடம் இல்லை...

இறந்த வீட்டில் பூஜை செய்வோமா..? ஆனால் சத்ய சாயி இறைவன் அந்த நேரத்திலும் சாய் பஜன் பாடி வழிபடலாம் என்றிருக்கிறார். பெண்களின் அந்த முக்கியமான மூன்று நாட்களுக்கு கோவில் செல்வார்களா? ஆனால் சத்ய சாயி இறைவனோ என் சமிதிக்கு வரலாம்... பஜனைகள் புரியலாம் என்றிருக்கிறார்..

சாப்பிட்டு கோவில் செல்வோமா...? 
சாப்பிட்டே எனை ஆராதனை செய் என்கிறார் இறைவன் சத்ய சாயி.. இறைவன் சத்ய சாயி பூஜை செய்து பார்த்திருக்கிறீர்களா? அவரை அவரே ஏன் பூஜை செய்ய வேண்டும்..? அத்வைதம் பேசியவர்கள் கூட இறுதிவரை பூஜை செய்து கொண்டுதான் இருந்தார்கள்... அவர்களில் சிலர் பக்தர்களைத் தொடக் கூட செய்யாதவர்கள்.


இறைவன் சத்ய சாயி ஒருவருக்கே எந்தவித தீட்டோ... பேதமோ... சம்பிரதாயமோ என எந்த அஞ்ஞானமும் இல்லை... எது பரமோ அதற்கு எந்த அஞ்ஞானமும் இல்லை... அத்வைதம் என்பது இரண்டற கலத்தல். இரண்டே இல்லாதவாறு உணர்தல்... அந்த அத்வைத அனுபவமே இறைவன் சத்ய சாயி தான்.

ஒரு சிலருக்கு மகான்கள் பாதைகளாக இருக்கலாம்.. ஆனால் அவர்கள் இன்றோ ... நாளையோ ... அடுத்த ஜென்மமோ வந்து சேரப் போகிற ஆன்ம இலக்கு இறைவன் சத்ய சாயியிடமே...

சுவாமி நம்முன் பஜன் பாடியதே .. நம்மைப் பாட வைக்கத்தான்... சுவாமி மட்டுமே ஆன்மிகத்தை எளிமைப்படுத்தினார்... வேத உபதேசங்களைச் சுருக்கி குழப்பமில்லாதவாறு தெளிவு படுத்தினார். அந்தக் கோவில் போ... இந்தக் கோவில் போ.. அந்தப் பரிகாரம் செய்... இந்தப் பரிகாரம் செய்... 
அந்த மந்திரம் சொல்...
இந்த மந்திரம் சொல் என எதையும் சொல்லவில்லை..
குழப்பவில்லை... திணிக்க வில்லை.. கட்டாயப்படுத்தவில்லை... அவர் குறிப்பிட்ட நவவித கோட்பாடுகள் கூட அனைத்து மதத்தினருக்கானது...

சாயி இலக்கியங்கள் கூட பேதமற்றவை... இறைவன் என்றால் இப்படித் தான் இருப்பார்... அதைத் தான் வேதங்கள் சொல்கின்றன... வேதங்களில் பேதங்களே இல்லை. சமஸ்த லோகா (எல்லா உலகமும்) சுகினோ பவந்து என்கிறார் இறைவன் சத்ய சாயி... அவருக்கு பூமிபேதம் கூட இல்லை... புரிகிறதா? இறைவன் சத்ய சாயி பார்ப்பது நம் உள்ளத்தூய்மையையும் ... பரிசுத்தமான சரணாகதி பக்தியையும் மட்டுமே... உணர்ந்து கொள்ளுங்கள்... 

சடங்குகளில் மாட்டிக் கொள்பவர்களுக்கு ஞானம் வர மிக மிகத் தாமதமாகும். இறைவன் சத்ய சாயிடம் சரணாகதி ஒன்றே ஞான தியான உச்சநிலையைத் தொடும். எந்த வகையிலும் ... எந்த சூழ்நிலையிலும் பேதம் பார்க்கிறவர் எவருமே இறைவன் சத்ய சாயி பக்தர் அல்லர்... புரிந்து கொள்ளுங்கள். ஆழமாய் உணர முற்படுங்கள்.

இறைவன் சத்ய சாயி ஒரே ஒரு சூரியன் (Sun) .. ஒவ்வொரு மகானும்  அந்த மகா சூரியன் வெளியிடும் ஒவ்வொரு கிரணமே (Sun Rays) ...


ஆழம் போக... ஆத்ம சாதனை புரிய... தியானத்தின் தரை தொட... இறைவன் சத்ய சாயியை அணு அணுவாய் அனுபவிக்கலாம்...

அனுபவிப்போமாக...

 
பக்தியுடன் 
வைரபாரதி 

ஜெய் சாய் ராம்!2 கருத்துகள்:

  1. தெளிவான விளக்கம்.பகவானின் காலத்தில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்பது நம் பாக்கியம்

    பதிலளிநீக்கு