தலைப்பு

வியாழன், 5 மார்ச், 2020

கவிதா வாஹினி! (பக்கம் -4) -கவிஞர் வைரபாரதி

101) தசாவதார சாயி நிஜாவதார சாயி:


சுவாமி நீ 
வெறும் அவதாரமில்லை
பெரும் அவதாரம் 

உன் சங்கல்பம்
அவதாரம் இறங்கியது
உன் சங்கல்பம் 
நீயே
அவதாரமாய் இறங்கியது

ஆயினும் நீ
தாயினும் சிறந்த 
தயாபரன் 

ராவணனையும்
ராமனாக்கவே
கம்சனையும்
அர்ஜுனனாக்கவே 

இறைவா
இந்த முறை நீ
இறங்கி வந்தாய்

நீயே
சுத்தாவதாரம் 

உன் 
பரிசுத்தம் 
நீ 
பரம சுத்தம்

அசுத்தங்களில்
அ எனும் அழுக்கை
நீக்குகிறது 

அவதாரங்கள் உன்
காவலாளிகள் நீயே
ஏவலாளிகளாய் அவர்களை
பூமிக்கு அனுப்பினாய்

ஏகபோக சக்கரவர்த்தி
நீ
காவலாளியாய் 
இறங்கி வருதல்
உனக்கொன்றும் கடினமில்லை 

பத்து அவதாரத்தில் 
நீ எங்கே எனக் கேட்கிறார்கள்

பத்து சுவையில் 
பூமிக்குப்
பந்தி வைத்தவனே 
நீ தானே சுவாமி 

சமைப்பவன் நீ
உன் சமையலே
ராமனும்
கிருஷ்ணனும் 

உன்
உணவை ருசிக்கையில்
பரிமாறும் கைகளை
பந்த மயக்கத்தில்
மறந்து போகிறார்கள் 

ரிஷிகள் 
உனைப் பற்றி
உரை எழுதவில்லையாம்

ரிஷிகளுக்கு என்ன தெரியும்

ரிஷிகள் கிளிகள்
நீ சொல்வதையே
திரும்பச் சொல்பவர்கள்

பிரபஞ்சமே 
உன் ரகசியம்
உனக்கே முழுதாய் தெரியும்

உனை 
அளப்பதென்பது
உடல் 
ஆன்மாவை அளப்பதாய்
சாத்தியமில்லாதது

தன்னை உணர்ந்தவர்கள்
நீயே
தெய்வம் என 
உணர்வார்கள் 

வான முதுகு
வானம்பாடிகளுக்கே
தெரியாத போது
மரங்கள் ஏனோ
விசும்பைப் பற்றி
குசும்பாய்ப் பேசுகிறது?

மேலிருந்து
இறங்கி வந்தவர்கள்
அவதாரங்கள்

விரிந்த நீ  உடம்பாய்
சுறுங்கி வந்த
சூட்சுமன் 

பரம்பொருள் நீ
உன் 
அரும்பொருளை
ஆராதிப்பதை விட்டு 
புராண
புத்தகம் வைத்து
வாதிப்பதில் என்ன 
வாத்ஸல்யம் வரப்போகிறது

புத்தரை நீயே
அவதாரங்களில் சேர்த்தது...
தியானமாய் ஆன்மாவை நீயே
வார்த்தது... 

மீன் முதல் 
மனித 
நான் வரை 

நீயே 
பரிணாமமாய் 
பூமிக்குக்
கொண்டு வந்தது

பிரபஞ்சமாய் நீ அதைக்
கண்டு வந்தது

பிறகு நீ
பார்வை இடவே
ஷிர்டி பர்த்தியாய்
இடம் பெயர்ந்தும்
தடம் பெயராமல் வந்தது 

வந்து வந்து நீ
வானானுபவம் தந்தது

உயிர் உணர அதை
உன்னதம் புணரும்

சுவருக்கு ஓவியம் 
புரிய வேண்டியதில்லை
பார்வைக்குப் 
புரிந்தால் போதும் 

நீ 
பரப்பிரம்மம் என்பதை
மகான்கள் உணர்ந்தனர்

உணர்ந்து 
உணர்ந்து
உன் பாதம் புணர்ந்தனர் 

ஆன்ம ஜோதி நீயே
உடம்பெடுத்து வந்தாய்
வந்து வந்து
சைதன்ய ஜோதியாய்
பிரசாந்தி அமர்ந்தாய் 

அண்ட சராசரம் உன்
பேராற்றலின் அனுமதியோடே
பரந்திருக்கிறது

உனை தியானிப்பவர்க்கே
நீ 
அண்ட சராசர ஆண்டவன் எனப்
புரிந்திருக்கிறது

பிரபஞ்ச எல்லையை 
நீயே
பராமரிக்கிறாய்

அங்கே தான்
ஆன்மாக்கள்
உடம்புக்கும்
எல்லைக்குமாய்ப் 
போய்க் கொண்டு வருகிறது

அண்டமே உனக்கு ஓர்
அணு தான்

உலகத்தை 
உணர்வது என்பது 
அனுபவம்!
உன்னை 
உணர்வது என்பது
அணு'பவம்!

தினசரி நீ 
தரிசனமானாய் 
ஒரே நேரத்தில்
பல உலகமுனை
தரிசித்தது 

இப்போதும் 
தரிசனமாகிறாய் 
இதயம் தோறும் 
கரிசனமாகிறாய் 

பிரபஞ்சமே நீ
புறப்படும் அவசரத்தில்
கருவெளியையும் 
தலையில் கட்டியே
தரையில் வந்தாய் 

உன்
வாய் மொழியில் 
இல்லாதது 
வேதங்களில் 
இல்லை

வேதங்களில் 
இல்லாதது உன்
வாய்மொழியில் இருந்தால்

வேதம் தன்னைப்
புதுப்பிக்கும் 
பேரன்பே பேரிறைமை
என
பூமியில் இனிப்
பதிப்பிக்கும் 

அறிவு பேசுகிறது
அன்பே கேட்கிறது

அறிவே யாசிக்கிறது
அறிவே யோசிக்கிறது

அறிவே உன்னிடம்
ஆயிரம் கேள்வி கேட்கிறது

கேள்விக்கான பதில்
அறிவிடமில்லை
அன்பிடமே 

அறிவு பூட்டு வைத்திருக்கிறது
அன்பே சாவி வைத்திருக்கிறது

பக்தி விரல் திறக்கையில்
நீயே
தரிசனம் தருகிறாய்
சுவாமி

நரி சனமும் உன்
தரிசனம் பெற்று 
நெறிசனமாய் 
நடக்கிறது

அறியா சனமும் 
உன்னன்பால்
அரியாசனம் ஏறுகிறது

அது
அரியாசனம் ஏற
புரியாசனமும் 
பூரித்துப் போய் உன்
பூரணத்தைப் 
புரிந்து கொள்கிறது

நிஜாவதாரன் நீ
நித்திய சுவாமி
உன் 
சத்தியங்கள்
சூட்சுமங்கள் 

உன்
அரவணைப்பே
அதிர்வலைகள் 

தோட்டக்காரன் 
விடுமுறை நாளில்
தோட்டம் பராமரிக்க வந்த
வீட்டுக்காரன் நீ
சுவாமி

அவதாரங்கள் 
விடுமுறையில் 
பரப்பிரம்மமே நீயே
புறப்பட்டு வந்திருக்கிறாய்

மனதுப் பசிக்கு
அவதாரம் பரிமாறுகிறது

பிறவிப் பசிக்கு
சுவாமி நீயே
பரிமாறுகிறாய் 

அழிக்க வந்த 
அவதாரங்கள் விட
அணைக்க வந்த
அணைத்தலை
அளிக்க வந்த
அணைத்தலில்
அளிக்க வந்த 

பரிபூரணப்
பரம்பொருள் நீ

உனது பாதம் 
உயிர்க்கு போதும் 
உயிர்க்கப் போதும்

102) பரவச சாயி பிரவேச சாயி:

சுவாமி 
யார் பாட 
யாருக்குள்ளிருந்து
பரவசப் படுகிறாய்?

நியாயமாக
நீயே பாடி
நீயே பரவசப்படுகிறாய்

சுவாமி
யார் வாழ 
யாருக்குள்ளிருந்து வழிகாட்டுகிறாய்?

நியாயமாக
நீயே வாழ
நீயே வழிகாட்டுகிறாய்

சுவாமி
யார் வாசிக்க
யாருக்குள்ளிருந்து
எழுதுகிறாய்?

நியாயமாக
நீயே வாசிக்க
நீயே எழுதுகிறாய்

சுவாமி 
யார் கண்மூட
யாருக்குள்ளிருந்து
தியானிக்கிறாய் 

நியாயமாக 
நீயே கண்மூடி
நீயே தியானிக்கிறாய் 

செயல் நீ
செயலற்ற செயலும் நீ

செயலை சேவையாக்கியும்
செயலற்றதில்
வாழ்வை 
முக்கியும் எடுத்து
முக்தி தருகிறாய் 

சுவாமி உன் கைகள்
இப்படி விரியும் போது
எங்கோ ஓர் உலகில்
பூ 
பிறவி எடுக்கிறது 

சுவாமி உன்
நாற்காலி ஏற்கனவே 
தியானத்தில் அமர்ந்திருக்கிறது

நீயோ
அமர்ந்ததன் மேல்
அமர்ந்து கொள்கிறாய்

தியானிக்காத நாற்காலியில்
நீ எப்படி அமர முடியும்

அதில் தான் 
உனக்கு இடம் வைக்காமல்
ஆசைகள் அமர்ந்திருக்குமே

ஆசை இருக்கை முழுக்க
முட்கள்

முட்களில் தூங்கி
மூச்சு விடும் மனிதர்க்கு

பூவில் நீ 
துயிலச் சொல்லும் போது
புல்லரித்துப் போகிறது

செல்பவை 
வெல்பவையாய் உன்
வாசலுக்கு வருகிறது

செல்லாதவை எல்லாம்
செல்லரித்துப் போகிறது

கோபத்தில் 
சொல்லறுத்துப் போவதில்

மௌன சுவாமி நீயே
ரணமாகிறாய்

நிசப்த நிமிடங்களிலேயே
நீ
மணமாகிறாய் 

வனத்தை நீ
தபோ வனமாக்கியும் 
வரத்தை நீ
சுயம்வரமாக்கியும்

பக்தியின் கழுத்தில்
மாலை அணிவிக்கிறாய்

ஆனந்தமாய்
அணிவகுக்கிறாய்  

ஒரு ஆமையே நகர ஆண்டுகள் ஆகையில்
பொறாமை எப்படி
நகர்ந்து உன்னிடம்
விரைவில் வர முடியும்

திருப்பதியில்
கூட்டம் வழிகிறது
திருப்தியோ
ஆளற்று காற்று வாங்குகிறது

வெளியே
ஈக்கள் பறக்கின்றன
உள்ளே தான்
பூக்கள் சிரிக்கின்றன

சுவாமி நீ
உள்ளே தான் பூப்பவன் 

வெளியே 
வர்ணம் தெரிகிறது
உள்ளே
வெளிச்சம் தெரிகிறது

சுவாமி நீ
உள்ளே தான் பார்ப்பவன்

உள்ளே 
பார்ப்பவன் எவனோ
அவனே பார்ப்பனன் 

பேராசை விடும் 
பெருமூச்சில்
வாழ்வுப் பொரி
பறவையாகிறது

கூட்டில் நீ காத்திருக்கிறாய் 

கர்மா எனும் 
மறதி நோய் பறவைக்கு

சுவாமி நீயே
முற்பிறவி நினைவூட்ட வேண்டும்

இப்பிறவி 
இறைவா உன்
இரண்டடியில் தோய

நீயே சுவாமி
ஜீவன்களை 
உன் வசமாக்க வேண்டும்

சக்கைகள் போதும் 
சுவாமி நீயே வாழ்வை
ரசமாக்க வேண்டும்
சுவாரஸ்யமாக்க வேண்டும்

நீ ஆனந்தப்பட 
என்ன செய்ய வேண்டும்?

ஒன்றும் செய்யாமல்
உன்னிடம் அனைத்தும்
ஒப்படைத்திட வேண்டும்

முடிவையும் 
விடிவையும் 
நீ எடு 

நீ எடுத்த 
அம்புகள் எவை 
இலக்கை அடையாமல் போயிருக்கின்றன?

103) பால கான லீலா சாயி:


சுவாமி நீ
குழந்தைகள் பாடும் போது
குரலில் சென்று 
கிரகப்ரவேசம் நடத்துகிறாய் 

மழலைகள் உன்
மதுரத்தைப் பாடும்போது
அவர்களின் 
அதரத்தில் நீயே உன்
ஆன்மாவை அனுப்புகிறாய்

பாடுகையில் வேறு 
சிந்தனை இல்லை
படுகையில் வேறு 
சிற்றோடை இல்லை

துயர்
படுகையில் நீயே 
துணை எனும்
கணையே காப்பாற்றுகிறது

பாடல் கேட்கையில் நீயே
பாடலாகிவிடுவதில் 

பாடல் எது ?
பாடுபொருள் எது?

எதிர்பார்ப்பின்றி உன்
பஜனை 
கதவுகளற்ற காற்றிலும்
கதவுகளற்ற காதுகளிலும்
நுழைகிறது

அது நுழைய நுழைய
காதில் குடமுழுக்காய்
அருவ விபூதி வழிகிறது

நன்றாக வருமோ எனும்
தவிப்பே
நன்றைக் கெடுக்கிறது

நானே பாடுகிறேனெனில்
அகத்தேன் எழாமல்
அகந்தைத் தடுக்கிறது

உன்னிடம் 
அர்ப்பணித்த பின்
தேறா குரலும்
மீரா குரலாய்
மாறிவிடுகிறது

அது
ஏறா இதயத்தில்
ஏணி வைத்து 
ஏறுகிறது

ஏழு படிகள் உள்ள
ஏணி
பஜனை ஏற்றி விடுகிறது

ஸா
நி
ரி


ஒவ்வொரு படியும் 
ஒவ்வெரு சக்கரம் 

மூலாதாரம் முதல்
ஸஹஸ்ரஹாரம் வரை
சுவாமி உன்னால் தான்
சுத்தமாகிறது

சுத்தமாகாத மனம் பாட
பாடல் வெறும்
சத்தமாகிறது

உன்
கேசக் காடுகளில் தொலைந்த உன்
செவிகளுக்கு சென்று
சேர வேண்டுமானால்

உன் பாதக் கிண்ணங்களில்
எண்ணங்கள் தன்னை
ஊற்ற வேண்டும்

அகந்தை பாடினால்
இரைச்சல்
ஆசை பாடினால்
எரிச்சல்
பக்தியோடு பாடினால் என்ன குறைச்சல்?

சுவாமி நீ 
இதோ 
இதயத்தில் அமர்ந்திருக்கிறாய்

துடிப்புகளே
தாளம் போடுகின்றன
தூய பக்தியே
உனக்கும்
உள்ளத்திற்கும் 
பாலம் போடுகின்றன

புன்னகையே 
நீ அகம் புக
கோலம் போடுகின்றன

சுவாமி உன் 
தேகம் ராகம்
வார்த்தை ஸ்வரம்
செயல் லயம்

உன் 
செயல் லயத்திலே
எங்களின்
ஆன்ம லயம்
ஆலயமாகிறது

உன் பஜனை கேட்பதே
கேட்பினும் பெரிது கேள்
அதை கேட்கக் கேட்க
கேட்பினும் சிறிது கோள்

உன் 
பஜனை கேட்பதே
பக்தி கேட்பது
உன்
பஜனை இசைப்பதே
முக்தியில் இசைவது
உன் 
தாளம் அசைப்பதே
காலம் அசைப்பது 

உன் மடியில்
ஓர் கொடியாய்ப்
படரும் போதே
பரிமளமாகிறது
இதயம்

கண்ட மரத்தில் படர்ந்தால்
ஆடுகள் எனை
மேய்ந்துவிடுகின்றன

உன் மேலான
எண்ணமே
உலகின் மேலான
எண்ணத்தை
தள்ளிவிடுகிறது 

உன் மேலான காதலே
உலகின் மேலான ஆவலைக்
கொள்ளி இடுகிறது

உன் பஜனை என்பது
கர்மா சாவதற்கான 
ஒப்பாரி தான்
பிறவி முடிக்க இசைக்கும்
முகாரி தான் 

சுவாமி நீ
இதய வாசகன் மட்டுமல்ல
பிறவி நாசகனும்

குழந்தைகளை நீ 
சிருஷ்டியால் தாலாட்டவே 
தாயாகிறாய்

இதோ இதோ 
குழந்தைகளே உனைத்
தாலாட்ட
குழந்தை சுவாமி நீயோ
சேயாகிறாய் 
சாயாகிறாய்

104) லிகித சாயி அபய சகித சாயி:

சுவாமி 
உன் கையெழுத்து
மொழிக்கு ஆசியாகிறது

நீ கையெழுத்து இட்டதாலே
அது ஆசியா ஆகிறது 

உன் அபயம் 
வழிக்கு 
ராசியாகிறது

உன் புன்னகை
இதயம் ஓடுவதில்
உடல்
காசியாகிறது 

சுவாமி நீ 
எங்கே திரும்பி 
ஆசிர்வதித்தாலும்
எல்லா இடத்திலும் 
உன் அருள் சென்று
அமர்ந்து கொள்கிறது

சுவாமி நீ
எங்கே திரும்பி சிரித்தாலும்
பூமிக்கடியிலும்
பூக்கள் பூக்கின்றன

சுவாமி 
இந்த உன் கேசம் எது
இரவு எது எனத் தெரியவில்லை?

இரவைத் தாங்கிய
உன்
ஒளி நடமாட்டம் எல்லாம்
உயிரை ஊடுறுவத்தான் என
உயிர்களுக்குப் புரியவில்லை

மின்சாரமில்லா 
இரவையும் அணைத்து
நீ தான் அதை
மின்னலாய் நிலைக்க 
திருமுடி ஆக்கினாய்

சுவாமி திருக்கோவிலில்
உனக்கு முடி காணிக்கை

பொழுதோ தந்தது
நள்ளிரவை உனக்கு
முடியாய் காணிக்கை 

நட்சத்திர சம்சாரமில்லா
தசரத நிலாவை
நீயே சுவாமி உன்
முகத்தில் அணிய
முகமூடியாக்கினாய்

உறவோடு இருப்பவர் முன்
ஒரு அடி தள்ளி நிற்கிறாய்

உறவின்
பிரிவோடு இருப்பவர்க்கு நீயே
பரிவோடு இருக்கிறாய் 

உன்னையே உறவென்பது
உண்மையாய் 
உறவென்பது

நீயே சுவாமி
சுவாசக் கயிறு வைத்திருக்கிறாய்
இவர்களின் இதயமோ
பாசக் கயிற்றில் 
ஊஞ்சலாடுகிறது

உண்மையில் அது
ஊஞ்சலாடவில்லை
ஊசலாடுகிறது 

இவர்கள் மகனாம்
இவர்கள் மனைவியாம்
இவர்கள் தாயாம்
இவர்கள் கணவனாம்

இவர்களே இவர்களுடையவர்கள்
இல்லாத போது

இவர்களுடையவை 
எப்படி
இவர்களுடையதாகும்?

ரத்த பாசத்தில்
உன்
சுத்த பாசம் புரியவில்லை

ரத்தம்
உணர்ச்சிகளால் கலப்படமாகிறது

நீயே சுவாமி அதில்
ஆத்ம சாதனை வழி
அமுதம் பாய்ச்சுகிறாய் 

பந்தத்திற்கு ஒன்றென்றால் 
பதறுகிறார்கள்

பொறுமை இழந்து
சிதறுகிறார்கள் 

ஒரு நீர்க்குமிழி
இன்னொரு குமிழியைப்
பார்த்து
கவலைப்படுகிறது 

பலூன்கள்
 மயக்கத்தில் மிதக்கின்றன
சுவாமி நீயே குண்டூசி

நீ தொடும் போதே
வெடித்து உன்
வெண்தாமரைப் பதம் விழுகின்றன 

வெடிக்க வேண்டும்
வெடித்தால் தானே விழமுடியும்

வெடிக்க வைத்துத் தானே
விழவைத்தாய் 

அந்த வெடிப்பிலிருந்து
அடியேன் துடிப்பிலிருந்து
நீயே சுவாமி 
நிகழ்கிறாய்

நோய்கள் படுக்கையில்
நெளிகின்றன
சுவாமி நீயே தடுப்பூசி

எந்த வைரஸ் உன்
எந்த பக்தனை
என்ன செய்யும்?

அகந்தை வைரஸ் பிடியிலிருந்து
பக்தனை மீட்கும் 
கடவுள் வீனஸ் நீ 

திசை எனக்கு
முக்கியமே இல்லை
நீ எந்த திசைக்கு 
அபயமளித்தாலும்...
புன்னகைத்து
அணைத்தாலும்...
கையெழுத்திட்டு
கலந்தாலும்...

அந்த திசையிலும் 
அடியேனுக்கே 
அனுபவமாகிறாய்

சுவாமி
பிரபஞ்சம் நீ 
உன் காற்று நான்

105) ஹிருதய சாயி ஹிமகிரி சாயி:


விசாலமாய் 
நீயே இருக்கிறாய் சுவாமி
மனித மனம் 
குறுகியே இருக்கையில்
விஸ்வரூபன் 
நீ உன்னை
வாமனனாய் 
மாற்ற வேண்டியிருக்கிறது

மனம் உன்னை
சந்தேகத்தோடே 
போற்ற வேண்டியிருக்கிறது

இடியும் கேட்டு
இசையும் கேட்பதாய்
நீ மனதைக் கேட்கிறாய்

வெய்யிலும் அடித்து
மழையும் அடிப்பதாய்
நீ இதயங்களால்
காய்ந்தே நனைகிறாய்

ஒரு கடலே மூழ்கும் அளவு உன்னிடம்
சுவாமி இவர்கள்
ஒவ்வொரு துளியாய்
உன்னிடம் 
எடுத்துப் போகிறார்கள்

ஒரு வானமே கவிழும் அளவு
நீ கைக்குட்டை விரித்தால்...
அதுவே பறக்கும் பாயாகி
பக்தரைக் கரையேற்றுகிறது

சுவாமி இவர்கள்
கண்ணீரை மட்டுமே
துடைத்துப் போகிறார்கள்

தவறை நம்பியும்
சரியை சந்தேகித்தும்
ஏற்றமே இறக்கமெனவும்
சரிவே நிறைவெனவும்

கடைசியாய் உன்னை உணர்வதற்குள்
கதவருகே அந்தகன்
கைத்தட்டி அழைக்கிறான்

நேசிப்பவர்களை
சந்தேகப்பட்டு
யோசிக்கிறார்கள்
நடிப்பவர்களையே
நெஞ்சில்
துடிப்பாக்குகிறார்கள்

சுவாமி நீ தான்
உறக்கத்தை கலைக்க
இரக்கத்தை அருள வேண்டும்

நீ வைத்திருக்கும் கையளவே
அன்பு 
மனிதரிடம் சிக்கியிருக்கிறது

இவர்கள்
ஆசைக்கு வளர்க்கும்
அன்றிலாய்
அன்பை வளர்க்கிறார்கள்

அதற்கு 
ஆகாயமான உன்னையே
பிடித்திருக்கிறது

இவர்களோ
கூண்டில் பார்க்கும்
சுயநலத்தில்
சிறகுகளைப் பிய்த்துக்
காது குடைகிறார்கள்

நீ உத்தரவிட்டால்
ஒரு கணம் யோசியாது
இயற்கையே கேட்கிறது
இவர்கள் அல்ல

நீ கையசைத்தால் 
காற்று புறப்பட்டு உன்
காலடியில் விழுகிறது
மனிதர்களோ ஆமைகள்

முயல் ஆமைகள் அல்ல
முயலாத ஆமைகள்

நிறை உனக்கு குறையே இல்லை
குறைகள் உன்னை
சந்தேகித்தால்
குறைகள் 
குறைகளிடம் தான்
உன்னிடமில்லை

பதட்டத்தில்
வழி அனுப்ப வந்தவரை
வண்டியேற்றி 
விடுவது போல்

இவர்கள்
மகான்களை கடவுளாக்கியும்
சுவாமி உன்னை
மகானாக்கியும் விடுகிறார்கள்

நோய்விட்ட பின்னரும்
மருத்துவரிடமே போகிறார்கள்

மழை நீ அழைக்கிறாய்
ஆனால்
தீ முட்டிக் குளிக்கிறார்கள்

பிறவி நோய் அகற்ற 
நீயே நீயே இழுக்கிறாய்
இவர்கள்
உடல் நோய்க்கே 
உடைந்து போகிறார்கள்

ஆன்ம சாதனைக்கே
அழைப்பவன் நீ
இவர்கள் புலம்பித் தீர்ப்பதற்குள்
இரவுகள் விடிகின்றன

இவர்களின்...

மூளையில்
அறிவைத் தேடுகிறாய்
அறியாமையின்
மூலையில் அது
மறைந்திருக்கிறது

இதயத்தில் 
பக்தியைத் தேடுகிறாய்
பேராசை அதன் கழுத்தில்
கத்தி வைத்திருக்கிறது

வார்த்தையில் 
சத்தியம் தேடுகிறாய்
சந்தேகம் 
நாக்கின் ஈரத்தை
குடித்துக் கொண்டிருக்கிறது

தேளும் கொட்டுகிறது
தேனும் சொட்டுகிறது
எதற்கு 
விரல் தர வேண்டும் என
நீயே சொல்லித் தருகிறாய்

நீ பேசுகிறாய்
யாரோ காய்ச்சி ஊற்றிய ஈயம்
உன் கீதை
வாதைக் காதுகளில்
ஏறுவதில்லை

கருணை உன் கருணை
மீண்டும் மீண்டும்
இழுக்கிறாய்

கர்மப் பாதை 
வழுக்குகிறது
கடவுள் நீ 
கை தூக்கிவிடுகிறாய் 

போதாது என்கிறாய்
உனக்கோ பிரபஞ்சப் பசி
பொரி உருண்டை பக்தி
எப்படிப் பற்றும்? 

சந்தேகமே
கற்கண்டுகளை வீசி
கற்களை எடுக்கிறது

அகந்தை
வைரங்களை அணிந்து
கற்கண்டுகளை வீசுகிறது

சுவாமி 
இந்தக் கை விரிய வேண்டும்
அதற்கு நீ கடவுள் எனப்
புரிய வேண்டும் 

இதழ் விரியும் போது
இதயம் விரிகிறது
இதயம் விரியும் போது
இறைவனே நீ 
இரு கைகளையும் விரிக்கிறாய் 

அது விரிகிறது
அது விரிகையில்
அண்டமே தெரிகிறது

106) தூர தர்ஷன தேவ சாயி:

தீ மூட்டமா
பூந்தோட்டமா 
மலர் தோற்றமா 
மந்தைக் கூட்டமா 

என்ன தெரிகிறது சுவாமி?

குதிரை வருகிறதா?
கவிதை வருகிறதா?
கனவு வருகிறதா?
காற்று வருகிறதா?

என்ன தெரிகிறது சுவாமி?

தரிசனம் செய்யும் 
பக்த வெள்ளமா?
கண்ணீரில் மூழ்கி
கரை சேரும் உள்ளமா?
ஒருவர் பாக்கி இன்றி
காலி செய்த இல்லமா ?

உனை நோக்கி
யார் வருகிறார்கள் ?
என்ன தெரிகிறது சுவாமி?

வனவாச ராமன் வருகிறானா?
குருஷேத்ர கண்ணன் 
வருகிறானா?
தூணிலிருந்தவன்
வானிலிருந்து 
வருகிறானா?

என்ன தெரிகிறது சுவாமி?

முற்பிறவியா ?
ஆன்மாக்களின்
அடுத்த பிறவியா?
இனி ஜனிக்கப் போகும்
ஜனங்களா?
மரணித்துப் பயணிப்பவரா?
மானசரோவர் தேவதைகளா?
கந்தர்வ லோக
கின்னரர்களா?

என்ன தெரிகிறது சுவாமி?

உன் கண்களே
போன பிறவிகளுக்கான
பைனாக்குலர் என்கையில்..

உன் கண்களே
நாளைகளுக்கான
நாட்காட்டி என்கையில்

இதைப் பிடித்து
எதைப் பார்க்கிறாய் ?

நீ 
இதனால் பார்க்கிறாய்
என நினைக்கிறார்கள்
இது உனைப் பார்ப்பதற்கே
இதைப் பிடித்திருக்கிறாய்

இதிலிருந்து என்ன 
பார்க்கிறாய் எனும்
கேள்வி போய் 

பைனாக்குலர் உன்
பார்வைக்குள்ளிருந்து
என்ன பார்க்கிறது என்றே 
பார்க்க வேண்டும்

உன் கண்களும் 
இதன் கண்களும் 
உற்றுப் பார்க்க 
யசோதா உன் 
வாய் பார்த்ததாய்
இது உன் விழி பார்க்கிறது

வாய்க்குள் 
வித்தை காட்டியவன் நீ
விழிக்குள் 
எத்தைக் காட்டுகிறாய்?
எத்தனைக் காட்டுகிறாய்?

உனது விழி அசைவிலேயே
சங்கல்பம் நிகழ்கிறது

சுவாமி
உனக்கென மனம் இல்லை
உனக்கென நினைவில்லை

எல்லாம் 
உனக்குள்ளே தொடங்கி
உனக்குள்ளே அடங்க
நீ 
எதனோடும் இல்லை
ஆனால் நீயே
எல்லாவற்றினுள்ளும்
இருக்கிறாய் 

உனக்கு ஒட்டுதல் இல்லை
ஆனால் ஆழ்தல் இருக்கிறது

உனக்கு பற்றுதல் இல்லை
ஆனால் பற்றுதல் இருக்கிறது

அந்தப் பற்றுதலே
அக ஜோதியை 
எழுப்புகிறது

இருட்டை எல்லாம் 
ஒளிக்குத் திருப்புகிறது

உலகம் 
கூத்தடிக்கிறதா?
குழப்பம்
தலைப் பிய்க்கிறதா?
ஆணவம் 
கொக்கரிக்கிறதா?
சந்தேகம் 
கதவு சாற்றுகிறதா?
பொறாமை
புகைச்சல் கிளப்புகிறதா?

எதனை வேடிக்கைப் 
பார்த்து ரசிக்கிறாய்?

என்ன தெரிகிறது சுவாமி?

உன் பார்வை 
உலகம் பார்க்க
பைனாக்குலர் 
உன் பார்வையைப் பார்க்க

அதனிடமிருந்து நீ 
பாதையும்
உன்னிடமிருந்து அது
கீதையும் எனப்
பரிமாறப்படுகிறது

உன் கீதையே சாஸ்வதம் 

அந்த சாஸ்வதம் பெற
அகந்தை 
வதம் பெற வேண்டும்
அகம்
பதம் பெற வேண்டும்

சிலர் கற்பனை உடைந்து போக...
சிலர் 
செய்யும் தவறுகளுக்கு
நியாயம் கற்பிக்க...

நீ தூரமாகவேப் 
பார்க்கிறாய் 

சரணாகதி அடைந்து
தவறுகள் உணர்ந்தால்
பக்கத்தில் பார்க்கிறாய் 

நீயே வாழு
நான் நடமாட மட்டும் 
செய்கிறேன் என்றிருந்தால்...

சுவாமி 
நீயே பார்க்கப்படுபவனாய்
நானே 
பைனாக்குலராய் 
மாறிவிடுகிறோம்

உன்னையே நீ
எத்தனை நேரம் 
பார்த்துக் கொண்டிருப்பாய்?

காட்டுவதை விட்டுவிட்டு
காண்பதற்கு
தியானிக்கையில்
 பைனாக்குலர் தான்
நிலைக் கண்ணாடியாய்
ஆகிவிடுகிறதே

சுவாமி
என் விழி நீ
உன் பைனாக்குலர் நான்

பக்தியோ
கடவுளே உன்னை மட்டுமே
கண்டு கொண்டே இருக்கிறது

பார்த்துக் கொண்டே இரு
சுவாமி
பார்வைக்குள்
பார்வையாய்
பார்த்துக் கொண்டே இருப்போம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக