இதற்கெல்லாம் காரணமென்ன? இன்று கல்வித்திட்டம் நேர்வழியில் அமையவில்லை. இதனால், தனி மனிதனிடம் நேரான நடத்தையில்லை. மனிதனிடம் நற்குணங்கள் இருந்தால், அவன் நடத்தை ஒழுங்காக இருக்கும். நற்பண்புகளும் நன்னடத்தையும் கூடி அவனது வாழ்க்கையைச் சீராக்க உதவும். மனிதனின் நடத்தையே அவனது அமைதியின்மைக்கு முக்கியக் காரணம். முற்காலத்தில் கல்வியாளர்கள், செல்வந்தர்கள், அறிஞர்கள் முதலானோர் இருந்தனர். ஆனால் அவர்களில் கல்வி யறிவையோ, செல்வத்தையோ உயர்வாக கருதவில்லை. வாழ்க்கையின் உண்மையான உயர்வு எது? சிலர் செல்வம் என்று கூறலாம். சிலர் அறிவுக்கூர்மையை சிறந்தது எனலாம். சிலர் ஞானத்தை உண்மையான செல்வம் என்று கூறலாம். ஆனால் உண்மையில், இவையெல்லாம் உண்மையான வலிமையல்ல. ஒருவரது சீலமும், நன்னடத்தையுமே அவரது உண்மையான வலிமையாகும்.
இயேசு படித்தவரல்ல, கல்வியறிஞர் என்று யாரும் அவரைப் பாராட்டவில்லை. அதே போல நபிகள் நாயகமும் உடல்நலம் குன்றியவரே. அவர்களது சகல நற்குணங்களும் கூடிய சீலமிகு நடத்தையால்தான் உலகமக்கள் அவர்களை கௌரவித்துப் போற்றுகின்றனர். வங்காளத்தில் கல்விப் பேரறிஞர் பலர் இருந்தனர். ஆயினும் அவர்களிடம் நல்லொழுக்க நன்னடத்தை இல்லாததினால், அவர்களது பெயர் மங்கி மறைந்தது. இராமகிருஷ்ண பரமஹம்சர் படிப்பறிவில்லாதவர் தான். கல்வியறிஞர் என்று பட்டம் பெற தகுதியில்லாதவர் தான். ஆயினும் முக்காலமும் எக்காலமும் அவர் பெயர் நிலைத்திருக்கும். ஏன்? அவரது சீலமும் நடத்தையும் அப்பழுக்கற்றவை. இன்றைய சமுதாயத்தில் இவை காணப்படுவதில்லை.பொருளீட்டலாம், நற்பேரும் பெறலாம், புகழும் அடையலாம், கடவுளருள் கிட்டாத போது இவற்றால் என்ன பயன்? கடவுளருள் கிட்டும் போது, மற்றவை தானாகவே வந்து சேரும்.
உங்கள் பெயர், மக்களின் இதயத்தில் விதைக்கப்பட வேண்டும். உங்களுக்கு நற்குணமும், நன்னடத்தையும் இருந்தாலே இவை சாத்தியமாகும். இவை கிடைக்கப் பெற வேண்டுமெனில், உங்களிடம் சீலம் இருக்கவேண்டும்.சீலம், நல்லெண்ணங்கள்.. நல்ல உணர்ச்சிகள்.. நற்செயல்கள்.. இவற்றைப் பொறுத்தது. மனிதன் என்ற தகுதியை இழக்காமலும், மற்றவர்களுக்கு தடங்கல்கள் விளைவிக்காமலும் வாழ்பவன் நல்லொழுக்க சீலன் என்று கருதப்படுவான். விலங்கு விலங்காக வாழ்ந்து,விலங்காகவே இறக்கும். மனிதன், மனிதனாக பிறந்து ஏனோ விலங்காக வாழ்கிறான். எந்த விலங்கும், மற்ற விலங்குகள் உணவுண்டால், நிராசையடைவதில்லை. அவற்றிற்குப் பொறாமையில்லை. அவை சண்டையிடுவது உண்மை, ஆனால் உடனே அதை மறந்து விடுகின்றன.
ஆனால் பொறாமை, வெறுப்பு. பழிவாங்குதல் இவை மனிதனிடம் தான் காணப்படுகின்றன. விலங்குகளிடம் காணப்படுவதில்லை.மற்றவர்கள் துன்பப்படும் போது மனிதன் பாதிக்கப்படுவதில்லை. உண்மை கூறின், மற்றவன் வளம் பெரும்போது, இவன் அவனை வெறுக்கிறான். மற்றவர் துன்பப்படும்போது, மனிதனுக்கு இரக்கமே இருப்பதில்லை. தன்னையும் தன் மனைவியையும் பற்றியே நினைக்கிறான். மற்றவர்களைப் பற்றி நினைப்பதே இல்லை.இதுதான் சுயநலம் எனப்படுவது. இதற்கு என்ன பொருள்? மனிதன் வாங்க ஆசைப்படுகிறான், கொடுக்க விரும்புவதில்லை. தேவையால் துன்புறும் மனிதனுக்கு உதவி செய்து, அதனால் நீ சுயநலத்தை இழக்கும்போது, நீ தூய்மைப் பெறுகிறாய்.ஆகவே சுயநலமும், சுயலாபச் செயலும் அழிக்கப்படவேண்டும். மனிதன் புஜபலம் (உடல் வலிமை) புத்தி பலம் (அறிவாற்றல்) இவற்றையே உயர்ந்தவை என்று நினைக்கிறான். அனைத்திலும் தெய்வீக ஆற்றலே மிகச் சிறந்தது என்பதை அவன் அறிவதில்லை.
சொந்த நலனுக்கு மட்டும் பொருளீட்டுவதற்காக கல்வி கற்கின்றானே தவிர, மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டுமென்று கல்வி கற்கவில்லை. பறவைகளும் தேனீக்களும் வாழ்வது சேமிப்பது எல்லாம் தனக்காகவே; அப்போது மனிதனும் அவற்றின் நிலைக்குக் கீழிறங்கி விடுகிறான். மனிதன் தனது செல்வ வளத்துடன் கூட, அதைக் கொண்டு மற்றவர்களுக்கும் உதவி செய்ய வேண்டும். அவன் மற்றவர்கள் தன்னை கௌரவிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறான்.இவன் மற்றவர்களை கௌரவித்து, அவர்களுக்கு உதவி செய்யவில்லை என்றால், எவ்வாறு சமுதாயம் அவனைக் கௌரவிக்கும்? மனிதன் தன் குற்றங்களைத் தேடி கண்டுபிடித்து, மறுபடி அக்குற்றத்தைச் செய்யாத அளவுக்குத் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும். இத்தகைய பண்பை அடைவதற்கு, தன் இதயகமலத்தை இறைவனுக்குத் திறந்து வைத்து, இறைத்தன்மையை தனக்குள் அனுபவித்து, அதன் இன்ப ஆனந்தத்தைச் சுவைத்து, மற்றவர்களுடன் அந்த இனிமையைப் பகிர்ந்துகொள்ளவேண்டும். மனிதனின் இதயம் மற்றவர்களிடம் கொண்ட அன்பால் நிரப்பப்பட வேண்டும்.ஆனால் அன்பு அனைத்தையும் சுயநலத்துக்காகவே, தனக்காகவே பயன்படுத்துகிறானே! சுயநலம் இருக்கும் வரை, மனிதனுக்கு குணநலன்கள் இரா. ஆகவே அவனிடம் உயர் சீலமும் இராது. நமது நன்னடத்தையே நமது உண்மையான வலிமை.
ஆதாரம்: சாயி அருளமுதம், கொடை-1994
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக