மலையிலிருந்து துள்ளி வரும் நீர் பள்ளத்தாக்குகள் வழியாகப் பெருகியோடுகிறது. வழியில் பல உபநதிகள் சேருகின்றன. தண்ணீர் கலங்கலாக அசுத்தங்கள் நிறைந்ததாக மாறிவிடுகிறது. அதேபோல, வாழ்க்கையென்ற வெள்ளத்திலும் உத்வேகம் கூடலாம். குறையலாம். ஏற்றத்தாழ்வுகள் எந்நேரத்திலும் ஏற்படலாம். யாரும் அதிலிருந்து தப்ப முடியாது. இவை வாழ்க்கையின் முதலிலோ, நடுவிலோ, கடைசியிலோ வரலாம். ஆகவே வாழ்க்கை மேடு பள்ளங்கள் நிறைந்தது என்பதை உறுதியாக நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். இவற்றிற்கெல்லாம் பயப்படாமல், கவலைப்படாமல் இவையெல்லாம் வாழ்க்கையின் அனுபவங்களைச் சேர்ந்தவை என்று வரவேற்க வேண்டும். இத்துடன் கூட, எது நேரிட்டாலும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடனும் இருக்க வேண்டும். அப்போது எத்தகைய துன்பமாயினும் அனைத்தும் சுலபமாகவும், சீக்கிரமாகவும் விலகிவிடும். இதற்கு தகுந்த சுபாவத்தை மனம் கொண்டிருத்தல் அவசியம்.
ஒவ்வொரு நிமிடமும் பல விதமான உந்துதல்களும் தூண்டுதல்களும் மனிதன் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் உருவாகி சேர்ந்துகொண்டே இருக்கின்றன. எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் எந்த மனிதனாலும் செயல்படுத்த முடியாது. ஆகவே மிகவும் முக்கியமானவற்றில் மட்டுமே அவன் கவனத்தைச் செலுத்துகிறான். இதற்குத்தான் அவதானம் அல்லது ஒரு முனைப்பு (Concentration)என்று பெயர். எந்த விஷயத்தையும் நன்கு கிரகித்துக் கொள்ள, ஒரு முனைப்பு மிகவும் அவசியம். வேண்டுமென்று ஒரு விஷயத்தின் மேல் கவனத்தைச் செலுத்தி அதில் நிலைப்படுத்துதல் ஏகாக்கிரத்தை அல்லது கூர்முனைப்பு(One pointedness) இதுவும் மனத்தின் ஒரு நிலையே. ஒரு முனைப்பும் கூர்முனைப்பும் குறிப்பிட்ட வேலையில் மனதைச் செலுத்த உதவுகின்றன.
ஆதாரம்: தியான வாஹினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக