பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
ஸ்ரீ சிவானந்த சரஸ்வதி (1887 –1963):
பேரைக் கேட்டவுடனே அவரின் தோள் நிமிர்ந்த சிகர கம்பீரமே கண்களில் தொற்றிக் கொள்ளும்.
எப்பேர்ப்பட்ட துறவி அவர்!
ஆதிசங்கரருக்கு பிறகு அத்வைத ஞான வாழ்வை யோக வாழ்வோடு இணைத்து எத்தனை சாதுக்களை உருவாக்கியவர்.
தெய்வீக வாழ்வு எனும் தனது Divine Life Society யின் வழி வாழ்வின் சாரம் தவமும் .. தொண்டும் என வாழ்ந்து இன்றும் பலருக்கு உந்து சக்தியாக திகழும் ஒப்பற்ற மகான் அவர்.
தொண்டும் துறவுமே பாரதத்தின் இரண்டு கண்கள் என்றார் சுவாமி விவேகானந்தர்.
அந்தத் துறவை உணர்த்துவதற்குத் தான் நம் சாயி இறைவனும் தனது அங்கியை காவியில் அணிந்தார்..
நாம் துறவிகளை சுவாமி என்று அழைப்போம்..
நம் கடவுள் சத்ய சாயி துறவிகளின் தவ வாழ்வுக்காகவும்.. அவர்களின் ஆத்மார்த்தமான ஏக்க அழைப்பின் பேரிலே பூமியில் இறங்கி வந்தவர்.. எனவே தான் சாயி இறைவன் தன்னை சுவாமி என அழைப்பதை அனுமதித்து அகமும் மகிழ்ந்தார்..
சுவாமி சிவானந்தர் திருநெல்வேலி ஈன்ற யோக வயல்..
பத்தமடையில் பிறந்த ஞானப் பாய்.. தாமிரபரணி தாலாட்டிய சிகர விருட்சம்..
பெரிய தீட்சிதர் குடும்பத்தில் பிறந்து துறவியாய் விஷ்வானந்த சரஸ்வதியால் தீட்சை பெற்றவர்..
இயற்பெயர் குப்புசாமி..
மருத்துவம் படித்தது இந்த இளைய மகத்துவம்...
அப்போதே "Ambrosia" எனும் பெயரில் ஒரு பத்திரிகை நடத்தினார் டாக்டர் குப்புசாமி.
இளமையிலேயே ஆசையற்ற உள்ளமாய் இருந்தபடியால் இலவசமாக பலருக்கு சிகிச்சை அளித்தபடி வாழ்ந்திருந்தார்.
மலாயா நாட்டில் தான் முதன் முதலில் மருத்துவப் பணி மேற்கொண்டார்..
ஓய்வில்லாமல் மருத்துவமனையே வீடாக குடி இருப்பார்..
அதுவே அவரது பூஜையாக.. வேள்வியாக விளைந்தது..
சேவை மனம் என்பது சாயி இறைவனால் செதுக்கப்படும் மனம்..
அதுவும் சேவை செய்கிறோம் எனும் எண்ணமில்லாமல் சுவாமிக்கு அர்ப்பண உணர்வோடு செய்யப்படும் சேவை பரமானந்த நிலையை எய்தும்.
நோயாளிகளையும்.. நோய்களையும் தினம் தினம் பார்த்துப் பார்த்து
வாழ்வின் நிலையாமையை புத்தரைப் போல் டாக்டர் குப்புசாமிக்கும் விதை தூவ ஆரம்பித்திருக்கிறது.
அந்த விதையே வளர வளர ரிஷிகேசத்திற்கு அழைத்து வந்திருக்கிறது.
நோய் நாடி .. நோய் முதல் நாடி என்பதற்கு ஏற்ப.. நோயின் முதலை ஆழ்ந்து சிந்திக்கப் போய் அது
பிறவி எனும் நோய் எனப் புரிய வந்திருக்கிறது..
மலேரியா காய்ச்சல் ஒரு கொசுவால் வருவது போல் பிறவிகள் ஆசையால் வருகிறதென புரிந்து கொண்டார் டாக்டர் குப்புசாமி..
மருத்துவத் தொழிலும்.. கல்வித் தொழிலும் ஒரு மெல்லிய மனோபாவக் கோட்டில் தான் மாறுபடுகிறது ..
அந்தப் பக்கம் நின்றால் வியாபாரம்..
இந்தப் பக்கம் நின்றால் சேவை..
டாக்டர் குப்புசாமியோ இந்தப் பக்கம் நின்றார் ..
அதனால் தான் சாயி இறைவனே அவரைத் தேடி அவர் பக்கம் வந்தார்.
சன்யாசம் எடுத்த பிறகு இதே மருத்துவ சேவையை ரிஷிகேசத்தில் நடத்திவந்தார்.
ரிஷிகேசம் என்பது ரிஷிதேசம்.
அதன் எழிலே நம்மை தவத்தில் மூழ்கடித்துவிடும்.
ஒரு துறவிக்கு இருக்க வேண்டிய அகம் புறம் எனும் அனைத்து லட்சணங்களை வார்த்தபடி இருந்தார்.
அவர் தியான தவத்தோடு மட்டுமின்றி யோகாசனங்கள் .. பிராணாயாமத்திலும் தேர்ந்தவராய் இருந்தார்.
புத்தர் பிராணாயாமத்திலிருந்து தியான நிலை எய்தியவர்.
சிவானந்தர் யோகாசனத்திலிருந்து ஆரம்பித்தவர்.
பிரம்மச்சர்யத்தை உயிராய் உணர்ந்தார்.
சுக்கிலத்தால் வரும் அளப்பரிய சக்தியை வாழ்வாலும் அதை உரையாலும் எழுத்தாலும் போதித்தார்.
பெரிய ஆலமரம் அவர்.. இவரின் விழுதுகளே..
சுவாமி சாந்தானந்தர்.. சின்மயானந்தர்.. சதானந்தர்.. சதாசிவானந்தர் .. என அதன் கிளைகள் உலகம் முழுக்க விரிந்து நமக்கு சுகக் குடையாய் ஆன்மிக நிழல் தருகின்றன..
சதாசிவானந்தரை தரிசித்திருக்கிறேன்.
அடியேன் சிறுவயதில் வாழ்ந்த எதிர்வீடே அவரின் ஆசிரமம்.
அடியேன் மேல் மிகுந்த கனிவு வைத்திருந்தார்.
சிவானந்த ஆசிரமம் தரிசிக்கும் பாக்கியமும் பெற்றிருக்கிறேன்.. இது
சுவாமி நடமாடிய இடமல்லவா என சிலிர்த்திருக்கிறேன்..
என் தந்தை வயிற்றுப் பாட்டி (திருமதி சாரதா) சுவாமி சிவானந்தரை தரிசனம் செய்திருக்கிறார்.
தங்க மாம்பழமாய் ஜொலிப்பார் என அடியேனிடம் விவரித்திருக்கிறார்.
அவர் ஓம் என்று சொன்னால் அந்த இடமும்... கேட்கும் இதயமும் அதிருமாம்..
இப்படிப்பட்ட சாதுக்களை... மகான்களை சிருஷ்டி செய்து தான் நம் சுவாமி இந்த பாரதத்தை இன்னமும் பண்பாடோடு ஜீவிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.
மக்களோடு வாழும் இதைப் போன்ற மகான்கள் லட்டுவில் ஒட்டிக் கொண்டிருக்கும் முந்திரி போல் ஒட்டியும் ஒட்டாமலும் .. பூந்தியின் சுவையை தனக்குள் ஏற்காமலும் வாழ்பவர்கள்.
சேவை செய்த பழுத்தப் பழத்தை சாயி இறைவனே நேரில் தரிசனம் தர ரிஷிகேசம் செல்கிறார்.
அவர் தவ வாழ்வுக்கு கிடைத்த பெரும்பேறு.
ஒரு மாதம் வரை அந்த மா தவத்தோடு தங்குகிறார் சத்ய சாயி மாதவன்.
14 ஜுலை முதல் 14 ஆகஸ்ட் 1954 வரை ...
கொடுத்து வைத்த குண சிரேஷ்டர்கள் அவர்கள்.
சிவானந்தரின் சீடர் சதானந்தா வரவேற்கிறார்..
சிவானந்தரோ முட்டில் ஏற்பட்ட ஒரு வலியால் சக்கர நாற்காலியில் தவழ்ந்து கடவுளை வரவேற்க வருகிறார்.
சாயி இறைவனோடு சிவானந்தரின் சீடர்கள் பல கேள்வி எழுப்பி அருட் பதிலைப் பெறுகிறார்கள்.
ஒரு சந்தேக நிவாரணியே நடக்கிறது..
முதலில் சந்தேக நிவாரணி. பிறகு ரோக நிவாரணி ...
"நான் என் பக்தர்களின் முன் மகிமை புரிவது அவர்களை மகிழ்விக்கவே.. ஒரு தந்தை தனது பிள்ளைகளிடம் இனிப்பு பரிமாறி இன்புறச் செய்வதாகவே கொள்ள வேண்டும்" என விளக்கிவிட்டு..
கை அசைக்கிறார்..
அழகிய வேலைப்பாடுகள் கொண்ட தங்கத்தாலான பெரிய உத்திராட்ச மாலை எழுகிறது.. ஐந்துமுக ருத்ராட்ச மாலை..
அதை சிவானந்தருக்கு நம் சுவாமி அணிவிக்கிறார்.
ஆம் பக்தப் பிள்ளைகளை மகிழ்விக்கும் சாயி மகா கடவுள் அங்கே தன் முக்தப் பிள்ளைகளையும் மகிழ்வித்திருக்கிறார்..
விபூதி சிருஷ்டி செய்து சிவானந்தரின் நெற்றி எங்கும் பூசி.. நீரில் கரைத்து குடிக்கக் கொடுத்திருக்கிறார்.
எதையும் எதிர்பாராத வாழ்வு நடத்தும் சிவானந்த மகரிஷி இறைவன் சாயியை நேரில் தரிசித்த பேரனுபவத்தை அனுபவிக்கும் போதே இது கூடுதல் அனுபவமாக அமைய ..
பேரனுபூதியில் பேச்சு மூச்சற்று பூரிப்பாகிறார்.
மாலை தோறும் நம் சுவாமியோடு சிவானந்தர் உரையாற்றி மகிழ்வதும்.
அவரின் சீடர்களுக்கு நம் சுவாமி அருள்வதும் என தினங்கள் மணங்களாய்க் கமழ..
ஒரு நாள் கையில் கங்கையை ஏந்தி அதை சுவாமி அமிர்தமாய் மாற்றி சிவானந்தரை பருகச் சொல்லி இருக்கிறார்.
ஆம் அந்த Ambrosia (அமிர்தம்) தான்..
சிவானந்தர் குப்புசாமியாய் இருந்தபோது நடத்திய இயற்கை மருத்துவப் பத்திரிகையின் பெயர்.
நம் சுவாமி அறியாதது எதுவுமே இல்லை..
இதுவே தினந்தோறும் சிவானந்தருக்கு மருந்தாக வழங்கச் சொல்லியிருக்கிறார் சுவாமி.
ஆதாரம்: N. Kasturi, 'Sathyam, Shivam, Sundaram (The Life of Bhagavan Sri Sathya Sai Baba)', and N. Kasturi, 'Loving God'.
வாசிப்பவர்கள் கேட்கலாம் ஏன் மகான்களுக்கு உடல் உபாதை வர வேண்டும்? சுவாமி அதை ஒரே நொடியில் தீர்க்கலாமே என..
மகான்களும் கர்மாவுக்கு கட்டுப்பட்டவர்களே.
அதனால் தான் மகாபெரியவர் வழியாக நடக்கும் மகிமை எல்லாம் காமாட்சி அம்பாள் செய்ததாக அவர் சொல்வார்.
யோகி ராம்சுரத்குமார் வழியாக நடக்கும் மகிமை எல்லாம் தனது தந்தை செய்வதாக அவர் சொல்வார்..
நடக்கும் என்று சொல்லும் பதத்தை வைத்து இன்றும் சுவாமியால் அவர்களின் வழியாக மகிமைகள் நடக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
ரமண மகரிஷியிடம் அவர் வழியாக ஏதாவது மகிமை நடப்பதைப் பகிர்ந்தால்..
முகத்தை அண்ணாமலை பக்கம் திருப்பி "அது எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடந்தது" என்பார்
ராமகிருஷ்ணரோ எல்லாம் காளி லீலை என்பார்...
தியாகராஜ சுவாமியோ எல்லாம் ராம மகிமை என்பார்...
மீராவோ எல்லாம் என் கண்ணனின் கருணையே என்பார்..
தான்.. தனது.. தன்னால் என்ற பதத்தையே நம் சுவாமி பதத்தில் ஒப்படைத்தவர்கள் மகான்கள்.
"தான்" எழுந்தால் கர்மாவில் ஆட்பட்டுவிடுவார்கள் அவர்கள்.
தனக்கு வந்த வியாதிகளை அவர்கள் அனுபவித்துத் தீர்ப்பார்கள்.
அய்யய்யோ என அலற மாட்டார்கள். அமைதியாய் ஏற்பார்கள்.
ஏற்றலே துறவு..
துன்பத்தையும் இன்பத்தையும் சரிசமமாய்...
எல்லா மகான்களும் சுவாமி எனும் பேராற்றலின் கீற்றுகளே ...
இதை மகான்கள் நன்கு உணர்ந்தார்கள். இது மெய்மையில் உணரந்து.. தவத்தில் அனுபவிக்கும் ஒரே சத்தியம்.
மகான்களின் பக்தர்கள் சிலர் இதை ஏற்க யோசிக்கலாம்.
இது தவ அனுபவம் .. தத்துவமல்ல ஏற்பதற்கும் மறுப்பதற்கும்.
அவர்களும் தவம் செய்தால் அவர்களின் குருமார்கள் அனுபவித்த சத்ய(சாயி)த்தை அவர்களும் அனுபவிப்பார்கள்..
தினந்தோறும் கர மருந்தும்... கருணை மருந்தும் நம் சுவாமி சிவானந்த ரிஷிக்கு தர ... ஒரு மாதம் கடந்து சுவாமியை வழி அனுப்பும் போதோ சக்கர நாற்காலியை விட்டு எழுந்து.. சுவாமியை நன்றிவுணர்வால் ஆரத் தழுவி கார் வரை நடந்து சாயி காருண்யத்திற்கு பிரியா விடை தந்தார் சிவானந்த ரிஷி..
பிற்காலத்தில் சிவானந்த ரிஷி முக்தி அடைய அவரின் பிரதான சீடரான உலகப் புகழ் சுவாமி சிதானந்தா பர்த்தியில் சாயி இறைவனை தரிசித்து சிவானந்தரின் "Divine Life Society"யை சுவாமியே நடத்தும் படி வேண்ட .. அதை அன்போடு சுவாமி மறுத்து சிவானந்த ரிஷியின் சிஷ்யர்களை வைத்தே தொடரும்படி சொல்லி ஆசி வழங்கினார்.
ஆன்மிக ஆலமரத்தின் விழுதுகளே அந்த விருட்சத்தை தாங்க வேண்டும் என்பது நம் புட்டபர்த்தி வடவிருட்சத்தின் விருப்பமும்.. சங்கல்பமும்...
ஒரு முறை இந்தோர் (indore) சமிதியில் பக்தர்கள் நிரம்ப ஆரம்பித்தனர். ஆச்சர்யப்பட்டு காரணம் கேட்ட கன்வீனருக்கு இன்னொரு ஆச்சர்யம் ரயில் நிலையத்தில் காத்திருந்தது.
அங்கிருந்த யோகியே பலரை பஜனைக்கு அனுப்பிக் கொண்டிருப்பதாக அறிந்து.. அவரை கண்ணுக்குக் கண் உற்று நோக்கி.. பாதங்களில் விழப் போக..
நீங்கள் என் பாதங்களில் விழக் கூடாது.. நானே உங்கள் பாதங்களில் விழ வேண்டும் என்கிறார் யோகி.
அதற்கு கன்வீனரோ .. நீங்கள் யோகி.. நானோ எளியவன் என்கிறார்..
அதற்கு.. ரயில் பின் நோக்கி நகர்வது போல் தனது கடந்த கால வாழ்க்கை பேசுகிறார் அந்த ரயிலடி இந்தோர் யோகி..
1960'ல் யோகிக்கு ஏழு வயதிருந்த போது சுவாமி சிவானந்தர் ஆசிரமத்தில் தங்கி இருக்கிறார். சிவானந்தரே இவர் ஆன்மிக குரு. ஒரு முறை தனது குருவே தன்னைத் தேடி வந்த ஒரு ஆன்மிக பாலகனின் பாதங்களில் விழுகிறார்.
அந்த உருவமும்.. ஆச்சர்ய நிகழ்வும் ஏழு வயதுக் குழந்தை மனதில் கல்லெழுத்தாய் பதிகிறது..
காலம் கனிகிறது..
ஒரு முறை ரிஷிகேஷ் கடைத் தெருவுக்கு யோகி வர .. ஒரு கடையில் ஒருவரின் புகைப்படம் பார்க்கிறார்..
அன்று தன் குருவே கால்களில் விழுந்த அந்த உருவம் அல்லவா..
புல்லரிக்கிறது..
"யார் இவர்?" எனக் கேட்க .. எங்கள் கடவுள் என்றிருக்கிறார் கடைக்காரர்.
பிறகு இவரது குரு ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தா இவருக்கு சன்யாச தீட்சை தர.. இமயம் சென்று தியானித்திருக்கிறார்.
தியானித்திலும் அதே உருவம்.
தோன்றி இருக்கிறது.. தியான அனுபவம் ஆழமாகி இருக்கிறது...
முகவரி விசாரித்து இவரின் இடம் தேடி தர்மாவரம் வரை வந்திருக்கிறார்.. இரவு என்பதால் அசந்து கண்மூடி காலை எழுந்திருக்க மீண்டும் இமயத்திலேயே இருந்திருக்கிறார்..
பிறகு தியானிக்கையில்..
"பங்காரு பிரசாந்தி வர உனக்கு நேரம் வரவில்லை" .. என்று சொல்கிறார் அவர்..
இதைச் சொல்லி முடிக்க.. கடவுளே உங்களை வருடாவருடம் சேவையாற்ற பிரசாந்தி அழைக்கிறார்..
"எனது குருவே அன்று அவரின் கால்களில் விழுந்திருக்கிறார்..
அவரது சீடன் அந்தக் கடவுளுக்கு சேவையாற்றும் உங்களின் கால்களில் விழுந்தால் என்ன தவறு?" எனக் கேட்க...
அந்த கேள்வி ஆழமான கேள்வி.
சுவாமியை கடவுள் என உணர்ந்ததால் எழுந்த கேள்வி...
ஆதாரம் : ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் -- பக்கம்:204. ஆசிரியர்: ஆர். சரோஜினி சாய்ராம்
ரிஷிகேஷ் சுவாமி சிவானந்தரின் சீடர்கள் எத்தனை.. அத்தனை சீடரும் சுவாமியை கடவுள் என சத்திய முழுமை உணர்ந்திருப்பது சிவானந்த சரஸ்வதியின் வழிகாட்டல் அல்லவா!..
ரிஷிகேஷின் முதல் தரிசனத்தில் இந்தோர் யோகி ... 36 வயது நிரம்பிய சுவாமியை பாலகன் என்றார்.
இந்தப் புகைப்படம் பாருங்கள்.. 1960 என கையெழுத்திட்ட கடவுள் படம்.. பாலகன் போலவே காட்சியளிக்கிறார்.
வயதை வென்றவர் மட்டுமல்ல நம் சாயி பரம்பொருள் மனதை வென்றவர்
சுவாமியை பரப்பிரம்மம் என உணர்ந்தார்கள் மகான்கள்..
மகான்களுக்கும் தனித்தன்மையாய் அருள்பாலித்திருக்கிறார் சுவாமி.
இதே ரிஷிகேசத்தில் தவத்தில் ஆழ்ந்து கரையில் அமர்ந்த ஒரு யோகியை கங்கை அடித்துச் செல்ல .. சுவாமி உடல்விட்டு (மயங்கியபடி) அவரைக் காப்பாற்றி .. பிறகு தன் உடலுக்கு வந்ததை பார்த்து பிரம்மித்த பக்தரும்.. அதைப் பதிப்பித்த புத்தகமும் சாட்சியாகின்றன.
50களில் முன்பு ஒருமுறை சுவாமி மூன்று நாள் தரிசனம் தர வெளியே வரவில்லை ..
யாரின் பிணியையோ வாங்கிக் கொண்டார்.. பிறகு அத்யந்த பக்தர்கள் அழுதபடி மன்றாடிக் கேட்க நீரை தன் உடம்பில் தெளித்து ஒரு நொடியில் எழுந்தார்.
மனிதர்களின் சில கர்மாக்கள் அனுபவித்துத் தான் தீர்க்கப்பட வேண்டும். வேறு வழியே இல்லை..
சாயி இறைவனின் பெருங்கருணை அதைத் தானே வாங்கிக் கொண்டது...
யோகி ராம்சுரத்குமார் மகானுக்கு கேன்சர் வந்தது. அவர் அலட்டிக் கொள்ளவே இல்லை..
ஏன் என அடியவர்கள் விசாரிக்க..
தனது தந்தை பிரபஞ்சத்தின் குறைபாடுகளை இந்தப் பிச்சைக்காரன் வழி அனுபவித்து அதை சரி செய்கிறார் என்றார்..
அது தான் மகான்களின் தூய தெள்ளியத் தன்மை. அவர்களின் சரணாகதி மேன்மை.
பிற்காலத்தில் சுவாமி சிவானந்தரின் முதன்மை சீடர்களான சுவாமி சச்சிதானந்தா .. சின்மயானந்தா.. சிதானந்த சரஸ்வதி.. சதாசிவானந்தா.. போன்ற துறவிகள் புட்டபர்த்திக்கு வரவழைக்கப்பட்டும் சுவாமியின் அனுகிரகம் அதை நிரம்பப் பெற்றிருக்கிறார்கள்.
ஸ்ரீ சிதானந்தா சரஸ்வதி (24 செப்டம்பர் 1916 - 28 ஆகஸ்ட் 2008) ரிஷிகேஷ் சுவாமிஜி சிவானந்த சரஸ்வதியின் முதன்மை சீடர் ஆவார்.. ஸ்ரீ சிதானந்தா சரஸ்வதி ஒரு யோகி, ஞானி மற்றும் ஆன்மீகத் தலைவராக இந்தியாவில் நன்கு அறியப்பட்டவர். டிவைன் லைஃப் சொசைட்டி(தெய்வீக வாழ்க்கை சங்கம்) நிறுவிய அவரது முன்னோடி சுவாமிஜி ஸ்ரீ சிவானந்த சரஸ்வதியின் ஸித்திக்கு பிறகு, அவர் 1963இல் தெய்வீக வாழ்க்கை சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டு சங்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தினார். அவரின் ஆன்மீகப் புத்தகங்கள் மிகவும் புகழ்பெற்றவை..
வரவழைக்கப்பட்டு என்று தான் குறிப்பிட வேண்டும் .. காரணம்... ஒரு ஈ கூட சுவாமியின் அனுமதி இல்லாமல் புட்டபர்த்தியின் எல்லையில் கூட நுழையவே முடியாது.
ரிஷிகேசத்து அனுபவம் ரிஷிகளுக்கானவையாக சுவாமி சங்கல்பித்தார்.
உலக குஷியை கடந்து தவத்தில் கரைந்தால் உயரிய ரிஷியாவதற்கான எல்லா சாத்திய கதவுகளையும் சத்தியமாய் சுவாமி நமக்கு திறக்கிறார்.
பக்தியுடன்
வைரபாரதி
அற்புதமான பகிர்வு! ஞானத்தின் கதவுகள்.. எனக்காகவும் திறக்காதோ..என்ற ஏக்கத்துடன்..கதவருகே ...காக்கவைத்துள்ளது!!
பதிலளிநீக்கு