தலைப்பு

ஞாயிறு, 22 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | கவியோகி சுத்தானந்த பாரதி

ஷிர்டி சாயி / சத்ய சாயியை தரிசித்து இருவரும் ஒன்றே என உணர்ந்த மகா(ன்) கவி

பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

கவியோகி சுத்தானந்த பாரதி (1897-1990):

பாரதி என்று பெயர் வைத்தவர்கள் யாரும் எழுதாமல்  வாழ்ந்ததில்லை.

ஒருசில பாரதிகள் எழுத்தில் மட்டுமில்லாமல் ஆன்மிகத்திலும் ஜொலித்தார்கள்.

சுப்ரமண்ய பாரதி
சுத்தானந்த பாரதி
கோபால கிருஷ்ண பாரதி

இந்த மூன்று பாரதிகளில் சுத்தானந்த பாரதியே சுப்ரமண்ய பாரதியை விடவும் கொடுத்து வைத்தவர்.

காரணம் அவர் கடவுளின் இரண்டு அவதாரங்களையும் தரிசனம் செய்தது தான்..

தேசப் போராட்டத்தை விட்டு ஆன்மிக நாட்டம் இன்னும் அதிகம் கொண்டிருந்தால் மகாகவி சுப்ரமணிய பாரதிக்கு உள்ளே ஆன்ம கதவு இன்னும் அகலமாய்த் திறந்திருக்கும்...

எல்லாம் கடவுளின் சங்கல்பம் என்ற சர்வ சத்தியம்  உணர்ந்தால் எதற்கும் போராடத் தோன்றாது.

சுத்தானந்த பாரதி உணர்ச்சிகளை வென்ற சுத்தமான பாரதி..


பரம்பொருளின் இரண்டு வடிவங்களையும் தரிசனம் செய்த பரிசுத்தமான பாரதி.

கர்மாவை உணர்ந்தவர் எதற்கும் கவலைப்படப் போவதில்லை.
கடவுளை உணர்ந்தவர் எதற்கும் சலனப்படுவதில்லை...

அந்த நிலை அரிது.
அந்த நிலை வரம்.
அந்த நிலை அருள்.
அந்த நிலை சுவாமி கருணை.
அது சுத்தானந்தருக்கு சத்ய சாயி இறைவனால் வாய்த்தது.

வீட்டைப் பட்டினி போட்டுத் தன் பாட்டை எடுத்து நாட்டை சுத்தீகரிக்கிறேன் என்றாலும் அது ஒருவகை அறக்குறைவு தான்.

சம்சார வாழ்வு சரியாக அமையாதவர்கள் சன்யாச வாழ்வை ஏற்பதே சனாதன தர்மம்.

மனைவி இறந்தாலும் அல்லது கணவனைப் பிரிந்தாலும் பந்த பாச மாயையோ பேரப் பிள்ளைகளின் ரூபத்தில் பிடித்தாட்டுவது பரிதாபமே!

சுத்தானந்த பாரதி இந்த விஷயத்தில் பெரிய விதிவிலக்கு.

சிறு வயதிலேயே தன் பாதையில் தெளிவோடிருந்தார்.

பெரிய கொடுப்பினை அது.

சம்சார வாழ்வு அரசியல் சூழ்ச்சி நிறைந்தது. அதில் இவர் சிக்கிக் கொள்ளவே இல்லை.

தேசிய அரசியலில் சிக்கி இருந்த இவரை ஷிர்டி சுவாமியே விடுவித்து காவி ஆடை தந்து துறவியாக்குகிறார்.

சாயி கடவுளிடமே நேரடியாக துறவுக்கான தீட்சை பெறுவது எத்தனை பாக்கியம்.


துறந்தாலே பெற முடியும்.
தியாகமே முக்தியின் முதல்படி.

ஏதோ ஒரு யோகியின் வாழ்க்கை வரலாறை படித்தோம். ஆஹா அபாரம் என்றோம். பிறரிடம் பிரசங்கம் செய்து நம்மை ஆன்மிகவாதியாய்க் காட்டிக் கொண்டோம் என்பதல்ல ஆன்மிக ஞானம்.

அவர்களின் வாழ்வு நமக்கு சொல்ல வரும் ரகசியம் என்ன?
நாம் எப்படி நம்மை சுத்தப்படுத்தப் போகிறோம் என்பதை உணர்வதற்கே அவர்களின் வாழ்வு வழி சில ஆழ்ந்த விளக்கங்கள்...

யோகிகள் கங்கைகள்.. அவர்களை சுவாமி அனுப்பியதே நம்மை அவர்கள் சுத்தப்படுத்துவதற்கே!

அவர்களிடமும் போய் உலகாயத ரீதியில் அதைக் கொடு இதைக் கொடு என்று கேட்பதெல்லாம் அறியாமையின் சிகர உச்சி.

அவர்களே முற்றும் துறந்தவர்கள். நாம் நம் பற்றைத் துறப்பதற்கே நம்மைப் பற்றி இழுப்பவர்கள். பற்றி இருப்பவர்கள்.

குழந்தையாய் இருந்தபோது சுத்தானந்த பாரதிக்கு சத்யார்க்கா எனும் நாமமே இடப்பட்டது.

சிவகங்கையில் பிறந்த சாயி கங்கை கவியோகி அவர்கள்.

அன்னை பெயர் காமாட்சி.
மகா பெரியவர் பலரிடம் சொன்னது போல் "அந்த காமாட்சியே புட்டபர்த்தியில் இருக்கா"
என்ற சத்திய வாக்கிற்கு ஏற்ப

சுவாமி பெயரில் தாய் பெற்ற சுவாமியின் குழந்தை சுத்தானந்தர்.

இவரது குடும்பத் துறவி பூர்ணானந்தர் இவரை ஆரத்தழுவி நீ சுத்த ஆத்மா என்பதால் சுத்தானந்தன் எனப் பெயர் மாற்றி இருக்கிறார்.

இதற்கு ஒரு காரணம் இருக்கிறது...


சுத்தானந்தரின் தாய் இந்தத் திருவை கருவுற்றிருந்த போது ஒரு கனவு வந்திருக்கிறது..

கனவில் சுவாமி சத்ய சாயி தனது பல ரூபங்களில் ஒரு ரூபமான வெங்கடேச பெருமான் வடிவெடுத்து
"உனக்குப் பிறக்கப் போகும் குழந்தை என் மணிக் குழந்தை" என்கிறார்

சுவாமி பிறந்ததே 1926 தானே அவர் எப்படி கனவில் வரமுடியும் என அறியாமைக் கேள்விகளைக் கடந்து..
சுவாமி கடவுள்.. பிறப்பு இறப்பு என்ற ஒன்றும் அவருக்கு இல்லை..

சுவாமிக்கு என்றும் இருப்பது ஒன்றே ஒன்று தான் .. அது தான் "இருப்பு"( Presence) 

சுவாமியின் குழந்தை தான் சுத்தானந்த பாரதி என்பதில் அவர் வாழ்க்கை அனுபவித்த அற்புதங்களே காரணம்.

ஐந்து வயதில் கவிபாடி இருக்கிறார்...

"அம்மா பரதேவி தயாபரியே
சும்மா உலகில் சுமையாகிறேன்
எம்மாத்திரம் உன்பணி இங்குளதோ
அம்மாத்திரம் வைத்தடி சேர்த்தருள்வாய்" 

எப்பேர்ப்பட்ட மகா வாக்கிய வரிகள்.. வரிகள் அல்ல திருவிளக்கு சுடர்ப் பொறிகள்..

ராமேஸ்வர யாத்திரை சாதுக்கள் சிவகங்கை சத்திரத்தில் தங்கியேச் செல்வர்.

அவர்களை அடிக்கடி சந்தித்து ஆத்ம பலம் பெற்றார் பாரதி.

அப்போது சத்திரம் இருந்தது. சத்தியம் இருந்தது. திண்ணை இருந்தது.
வசுதேவ குடும்பமாகவே உலகை நம் முன்னோர் உணர்ந்தனர்.

இப்போது விருந்தினர் வந்தாலே மனிதர்கள் அவர்களை வேற்றுகிரக வாசியாய்ப் பார்ப்பதாலேயே
அறம் மீட்க நம் சுவாமியே பேரன்பின் பெயரில் மீண்டும் வரவேண்டி இருக்கிறது


தன்னலமோ .. குடும்ப நலமோ அல்ல ஆன்மிகம்..
பொதுநலமே ஆன்மிகத்தின் முதல் நிலை...

சுயத்தின் நலத்தைப் பெருக்க சுயநலத்தை தியாகம் செய்ய வேண்டும்.

தியாகிகளே யோகிகளாக முடியும்.

பெற்றோர் வற்புறுத்த MA படித்தார்..

MAHAN ஆவதற்கான முதல் இரு எழுத்தை சிறுவயதிலிருந்தே சாதுக்களின் சத்சங்கத்தால் இந்த MAவும் பெற்றார்...

14 மொழிகளில் பாண்டித்வம் பெற்றார்..
பண்டிதரானார்.

ஒரு மொழி கற்க ஒரு மாத காலம் போதும். அதில் கவிதையே எழுத வல்லவர் கவியோகி..

அந்த வல்லமை சுவாமி வழங்கியது என்பதை அவர் பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்.

அப்போது இந்தியா விடுதலைக்காக ஏங்கிக் கொண்டிருந்தது.. சுதந்திரமோ தூங்கிக் கொண்டிருந்தது ...

சுத்தானந்தரும் சுதந்திர வேள்வியில் நெய் ஊற்ற எழுந்தார். காந்தியின் போராட்டங்களில் கலந்தார்.

ஆன்மிக விதை ஊன்றி இருந்ததால் அதையும் மீறி அவ் விதையே முளைக்க முயற்சித்துக் கொண்டிருந்தது...

1916ல் காங்கிரஸ் மகாநாட்டுக்கு லக்னோ சென்றார் பாரதி.

Lucknow அவரின் Luck Now என அறிவித்தது..

மகாநாட்டில் குரல் உயர்த்தி பேசிக் கொண்டிருந்த தலைவர்களின் முன் எழுந்து..

சுத்தானந்தரை அப்போது உள்ளிருந்து இயக்கிப் பேச வைக்கிறார் சுவாமி

"இப்படி சத்தம் போட்டா சுதந்திரம் வரும்?" இது பாரதி.
"பிறகு எப்படி வரும்?"
இது திலகர்.
"மகான்களின் அருளால் "
"அத்தகைய மகான்கள் உண்டா?"

"ஆம் ஷிர்டி சாயிபாபா" என்கிறார் யோகி..


பலரைப் போல் சுவாமியை மகான் என்ற அளவிற்கே புரிந்து வைத்திருந்தார் ஆதிகாலத்து சுத்தானந்த பாரதி.

சுவாமியை சந்தித்த அந்த திவ்ய சந்திப்பே புரட்டிப் போட்டது பாரதியை..

"ஆவோபாயி" என இறைவன் சாயி அழைத்து மாநாட்டில் நடந்ததைக் குறித்து பாரதியை பாராட்டி இருக்கிறார்.

"மௌனமாக இருங்கள் .. கடவுளிடம் சரணாகதி அடையுங்கள். அவரே உங்களைப் பார்த்துக் கொள்வார்.. அவரே எல்லோருக்கும் மகான்"
என்றும்...

"அமைதியாக இருங்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் விரைவில் வரப் போகிறது" என்றும் அபய மொழி அளிக்கிறார்..

கடவுளின் தீர்க்க தரிசன திருமொழிகள் அவை.

"நீங்கள் எல்லோரும் என்ன நினைக்கிறீர்கள்.. இந்த உடம்பும் சதையும் தான் நான் என் நினைக்கிறீர்கள்.. எல்லோரும் என்னை சாயி என அழைக்கிறார்கள்.. உண்மையில் எனக்கு உருவமும் இல்லை.. பெயரும் இல்லை...நானே கடவுள்.. வானமே என் கர்ப்ப கிரகம்" என சத்தியப் பிரகடனமும் மிக மிக தீர்க்கமாய் அளிக்கிறார்.

சுதந்திரம் பற்றிய சுவாமியின் அசரீரி மொழிகள் திலகர் போன்ற நேர்மையான தலைவர்களுக்கு நிரம்ப ஆறுதல் அளித்தது..

"அவர் புத்தகம் படித்து எதையும் பேசவில்லை.. தன் ஆத்மாவையே பேச வைக்கிறார். அவர் கடவுளே" என்று பரமாத்ம சுவாமியை உணர்ந்து அந்த கடவுட் சந்திப்பைக் குறித்து திலகர் மொழிகிறார்.

நேர்மையே சத்தியத்தை வெகு விரைவில் உணர்ந்து கொள்ள முடியும்.

எல்லாவற்றையும் விடு என காவி வஸ்திரம் அளிக்கிறார் பாரதிக்கு.

ஷிர்டி சுவாமியே துறவற தீட்சை அளித்தது சுத்தானந்தர் சுத்தமான ஆன்மா தான் என்பதை உணர முடிகிறது.

அது முதல் அரவிந்தர் .. மெஹர் பாபா .. பகவான் ரமணர்.. ஸ்ரீ ஞானானநந்த கிரி போன்ற மகான்களின் சந்நதியில் தவமியற்றுகிறார்.

மெஹர் பாபா பெரிய அவதூதர். மௌன மகான்.. தியான வள்ளல். கருணை விருட்சம்... இப்படிப்பட்ட மகான்களாலேயே இன்னமும் இந்தியா தர்மத்தில் செழுமையோடிருக்கிறது.

அரசியல்  ரணப்படுத்தியும் .. அந்த இந்திய ரணத்தை ஆன்மிகம் குணப்படுத்தியும் வருகிறது.

காவி ஏற்ற பாரதி
"உன் அற்புதத்தின் முன் என் எண்ணம் அழிகிறது...
உன் ஆச்சர்யத்தின் முன் எனக்குள் ஆனந்தம் வழிகிறது

உன் முக தேஜஸ் என் இதயத்தை ஒளிர்விக்கிறது.. நீ எனைத் தொடுகையில் பெரு மாற்றத்தை உன் ஸ்பரிசம் குளிர்விக்கிறது

காவி பாரதி காவிய பாரதியாகிறார்.

மொழிகளில் விளையாடும் பாரதி

"படிப்பறிவால் ஞானம் வாய்ப்பதில்லை .. யோகத்தில் உள்ளிருந்து மலரும் சுத்தமான ஞானமே கம்பர்.. காளிதாசர்.. வால்மீகி போன்றோரின் காவியங்களுக்கு காரணம்" என்கிறார்.

அறிவு வெறும் புயல் காற்றையே கிளப்பிவிடுகிறது.
தவமே உள்ளிருந்து ஊற்றைத் திறந்துவிடுகிறது.

இப்படிப்பட்ட மொழி வல்லவர் இருபது ஆண்டுகாலம் மௌன தவம் இருக்கிறார்.

அது முடித்து.. பள்ளியில் ஆசிரியப் பணி.

45 ஆண்டுகாலம் இலை.. கனி.. வேர்க்கடலையையே ஆகாரமாய் .. ஆன்மிக ஆதாரமாய் எடுத்துக் கொள்கிறார்.


பல்வேறு ஆன்மிக நூல்கள் படைக்கிறார்.
அரவிந்த ஆசிரமத்தில் தங்கியபோது எழுத்து  வேள்வியும் சேர்ந்தே நடக்கிறது.

ஸ்ரீ ரமண விஜயம் பகவான் ரமணரின் வாழ்வு காவியம். இவர் இயற்றியதே.

ஸ்ரீ ரமண அணுக்கமும் வாய்க்கப் பெறுகிறார்.

ஸ்ரீ ஞானானநந்த கிரி மகானின் வாழ்வு காவியத்தையும் வரைந்திருக்கிறார்.

பல மகான்களைப் பற்றி பல நூல்கள் இந்த மகான் எழுதுகிறார்.

பல மகான்களும் சுத்தானந்த பாரதியை தங்களின் எழுதுகோலாகவேப் பயன்படுத்துகிறார்கள்.

நம் சுவாமி ஷிர்டியில் ஆரம்பித்து வைத்த துறவு வாழ்வு நம் சுவாமி மீண்டும் பர்த்தி வந்தே பூர்த்தி செய்கிறார் முக்தி எனும் முடிவுரை எழுதி..

ஆம் பாரதி மகான்களின் அணுக்கத்தில் பெற்ற பேறு நம் சுவாமியை மீண்டும் தரிசனம் செய்ய வைக்கிறது.

ஷிர்டி சுவாமியே சத்ய சாயி என உணர்கிறார்.


எப்பேர்ப்பட்ட கொடுப்பினை...

எத்தனைப் பேருக்கு வாய்க்கும்!

ஜீவாத்மாவின் அதிர்வலைகளை தவத்தால் பெருக்குபவர்கள் தான் பரமாத்மாவின் அதிர்வலைகளை எளிதாய் உணர முடியும்.

உணர்கிறார்.

உணர முடியாதவர்கள் மோலோட்டமானவர்கள். தியான ஆழம் காணாதவர்கள் என்று அர்த்தம். அவ்வளவே.

சுவாமி எனும் பேரருட் மழை பொழிந்து கொண்டே இருக்கிறது..
நாம் நிரம்புகிறோமா என்பது நம் பாத்திரம் கவிழ்ந்திருக்கிறதா.. நிமிர்ந்திருக்கிறதா என்பதை வைத்தே...

கடவுளின் கலியுக ரூபங்களை தரிசித்த திவ்ய பாரதி இந்த சுத்தானந்த பாரதி.

சுவாமியை தரிசிக்கிறார். சுவாமியோ  தன்னோடு அழைத்துச் செல்கிறார். பாட வைக்கிறார்.
தான் சிருஷ்டி செய்த வைர லிங்கத்தை பாரதியின் புருவ மத்தியில் வைத்து

"எல்லா அறிவும் கிடைக்கும்.. உலகம் எங்கும் பக்திப் பிரசங்கம் செய்" என்கிறார்.

உலகம் சுற்றுகிறது இந்த ஞானப் பல்கலைக் கழகம்.

1000 க்கும் மேற்பட்ட பிரசங்கங்கள்.
சென்னை அடையாற்றில் யோக சமாஜம் துவக்கம் என சமயப் பணியாற்றுகிறார்.

மீண்டும் ஒரு நவராத்ரி வைபவத்தில் சுவாமியை சரணடைகிறார் சுத்தானந்த பாரதி..

"நான் சுவாமியின் அவதார மகிமையை உலகமெங்கும் பறந்து சென்று ஒரு கிளியைப் போல பரப்ப விரும்புகிறேன்" என்கிறார் கடல் கடந்து வந்த பாரதி..

அதற்கு சுவாமியோ " கிளி பறந்தாகிவிட்டது இனி முக்திக் கூட்டில் அமர்ந்து தவம் செய்ய வேண்டும்" என வழிகாட்டுகிறார்.

இதை அந்த சமயத்தில் அருகிருந்து கேட்டவர் சுவாமி பக்தர் மதுரபாரதியின் தந்தையார் எம்.ஜி.சுப்ரமணியம்.

கடவுள் சத்ய சாயியே முக்திக்கான வழி காட்டி மட்டுமல்ல.. அந்த முக்தி நிலையே கடவுள் சத்ய சாயி தான்.

"உன் தவப் பயனால் நீ ஈஷ்வரனையே கண்டுவிட்டாய்.. இனி பயிற்றுவிப்பதையும் நிறுத்தி.. யோகத்தில் ஆழ்ந்துவிடுஎன
இறைவன் சத்ய சாயி திருவாக்கு தர ...
 தியானத்தில் உறைந்து மூழ்குகிறார்..

பாரதி இதை ஏப்ரல் 12,13 -1959ல் சுவாமி தலைமை ஏற்று நிகழ்த்திய அத்யாத்மிக மாநாட்டில் மகான்களின் இதயம் என்ற தலைப்பில் "சுவாமி என்பவர்  கடவுளரின் கடவுள் என்றும் சனாதன சாரதி என்றும் அதே கிருஷ்ணர் தான் இதோ மீண்டும் வந்திருக்கிறார் என்றும்.. மீண்டும் திரும்ப வந்த ஷிர்டி சாயியே சத்ய சாயி என்பதை சாயியின் கருணையால் மட்டுமே தன்னால் உணர முடிகிறது எனவும்" பக்தியால் கரைந்து நிறைந்து  மொழிகிறார்.


மேலும்..."50 ஆண்டுகால யோக சாதனையும்.. 20 ஆண்டு கால மௌன தவமும்.. மகான்களின் அணுக்கமும் தான் காரணம்.. அந்த தவப் பயனே இதோ இறைவன் முன் நேருக்கு நேராய் நிற்க வைத்திருக்கிறது
என நெகிழ்கிறது சிவகங்கை குளத்தாமரை சுத்தானந்த பாரதம்.

"பிரம்மிக்கும் செயலாலும்.. இனிமையான பேச்சாலும்... சாந்தமும் ஏராளமான பிரேமையும்  சூழ .. மிகப் பெரிய கூட்டம் நிசப்தமாய் அவரை கவனிக்கிறது.. அவரின் பெயரே தாரக மந்திரமாகிறது"

என கடவுள் சத்ய சாயியின் கல்யாண குணங்களை வியக்கிறார்.
அதை விவரிக்கிறார்.


யோகிகள் ஆவதற்கு தியாகிகள் ஆக வேண்டும்.
தியாகிகள் ஆவதற்கு போகிகளாய் இருக்கும் வாழும் முறைமையை மாற்ற வேண்டும்.

மனித கண்கள் எதிர்பார்ப்புகள் எனும் லென்ஸ் அணிந்திருக்கிறது.
மகான்களின் கண்கள் ஞான லென்ஸ் அணிந்திருக்கிறது. அதற்கு தவப் பவர் அதிகம் .

அதனால் தான் மனிதக் கண்களுக்கு நம் சுவாமி சத்ய சாயி வெறும் மகானாகவும்..
மகான்களின் கண்களுக்கு சாக்ஷாத் கடவுளாகவும் காட்சி அளிக்கிறார்.

சுவாமியே மகான்கள் அடைந்த முக்தி நிலை..
மகான்கள் வாழும் தவ வாழ்வு...

இதை மகான்களே உணர்ந்து மொழிந்திருக்கிறார்கள்.

பக்குவம் பக்தியை அனுபவிக்கிறது.
பக்தியே முக்தியை அனுபவிக்கிறது.

பாரதி எனில் கலைமகள். ஞானம் இயங்க இயங்க பாரதிகள் சுவாமி எனும் சனாதன சாரதி வழிகாட்டியே பயணப்படுவார்கள்.

சாயி முழுமுதலை உணரும் பாரதிகள் முடிந்துபோவதே இல்லை...

 பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக