பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
யோகி ராம்சுரத்குமார் (1918 –2001):
காசியில் பிறந்த இந்த கங்கா யோகி பாய்ந்து ஓடி அண்ணாமலை அடிவாரத்தில் ஊற்றானவர்.
சிறுவயதில் தான் தவறுதலாக கொன்ற குருவியே தனக்கு முதல் போதி மரமாய் அமைய .. காசி கபாடியா பாபாவின் வழிகாட்டுதல்களால் ரமணர், அரவிந்தர், பப்பா ராமதாஸ் என தன் குருமார்களின் அருகாமையில் ஞானம் அடைந்தவர்.
அடைந்து அண்ணாமலையில் அருளியவர்.
யோகிகளையும் ஞானிகளையும் ரிஷிகளையும் மகான்களையும் தன் சங்கல்பமே சிருஷ்டி செய்ததாக நம் சுவாமி தெள்ளத் தெளிவாய் அறிவித்திருக்கிறார்.
அவர்களின் உள்ளே முக்தி நிலையாய் சுவாமியே வியாபிக்கிறார் என்றாலும் தான் அவர்களை விட தனித்துவ சுதந்திரமானவன் என்கிறார் சுவாமி.
பிரபஞ்சத்திலிருந்து பூமி வந்திருக்கிறது..
பிரபஞ்ச வியாபகத்தில் பூமி சுற்றுகிறது .. பிரபஞ்ச பேராற்றலின் கீற்று பூமிக்கும் இருக்கிறது என்றாலும்
பிரபஞ்சமும் பூமியும் ஒன்றல்ல...
இதை யோகி ராம்சுரத்குமார் போன்ற மகான்கள் நன்றாகவே உணர்ந்து வைத்திருக்கிறார்கள்.
அவர் வாழ்வை ஆழ்ந்து கற்றவன் அடியேன்.
அவ்வழி தான் அவரைப் பற்றிய முதல் புதுக்கவிதை காவியம் (காவிய ஜோதி) சுவாமி சங்கல்பத்தால் இயற்ற முடிந்தது.
அவரைப் போன்ற ஒரு பணிவான .. பக்குவமான ... பக்திமானை .. குருமீது நொடிப்போதும் நன்றி உணர்வோடு இருப்பவரை யாருமே பார்ப்பது அரிது.
சதா ராம நாம ஜபத்திலே தோய்ந்திருப்பார்...
கட்டை விரலை ஆள்காட்டி விரலோடு ஜபமாலை உருட்டுவதாய் அசைத்துக் கொண்டே இருப்பார்.
எவரைப் பற்றியும் குறை கூறாதவர். புறம் பேசாதவர். எளிமையோ எளிமை.
பல அற்புதங்கள் அவர் வழியாக நடந்திருக்கிறது.. அதை எல்லாம் தன் தந்தை நடத்துவதாகச் சொன்னவர்.
கடவுளை தந்தை என்றே உறவாடிக் கொண்டாடுவார்.
அந்த தந்தை யார்?
அவரே ஒரு சம்பவத்தில் அதை விளக்கி இருக்கிறார்..
இதை எல்லாம் இங்கே விளக்கக் காரணம் அவர்களைப் பார்த்து நாம் எப்படி ஆன்மீக வாழ்க்கை நடத்த வேண்டும் எனக் கற்பதற்கே சுவாமி இதைப் போன்ற மகான்களை சிருஷ்டி செய்திருக்கிறார்.
புன்னை மரத்தடியில் அவர் புல்லாங்குழலாய் புகைபாடிக் கொண்டிருந்த சமயம்.
கடவுள் வெளியை அந்த ஆன்மா உணர்ந்த அவரின் முக்திப் பொழுதில்...
நம் சுவாமி பக்தர்கள் சிலர் அவரை தரிசிக்க வந்திருக்கிறார்கள்..
விசாரித்திருக்கிறார். அதற்கு அவர்கள் புட்டபர்த்தியிலிருந்து சத்ய சாயியை தரிசித்துவிட்டு வருவதாகச் சொல்லியிருக்கின்றனர்.
ஓ என்று சிங்கம் கர்ஜிப்பதாய் சிரித்திருக்கிறார்.
அவர் சிரித்தால் குழந்தை போல் அவரின் உடல் அவயங்கள் ஒவ்வொன்றும் அசையும்.
காணவே கண்கோடி வேண்டும்.
வந்திருக்கும் சுவாமி பக்தர்களுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
இதைப் போன்ற அவதூதர்களின் செய்கையை தெளிவுற புரிந்து கொள்ள அதே அவதூத நிலையில் இருப்பவர்களால் மட்டுமே முடியும்.
சிரித்து விட்டு அவரே ... "ஏன் நீங்கள் கடவுளை விட்டு இந்தப் பிச்சைக்காரனை தேடி வந்தீர்கள்?" என ஆங்கிலத்தில் கேட்டிருக்கிறார்.
தன் சக மற்றும் .. தனக்கு முன்னும் இருந்த மகான்களை யோகி மகிமையாய்க் கொண்டாடி இருக்கிறாரே தவிர யாரையும் அவர் குறிப்பாக கடவுள் என்று சொன்னதில்லை...
யோகிகளின் வாக்கு நாம் பேசுவது போல் விழிப்பற்ற நிலையில் பேசி... பிறகு "அப்படியா சொன்னேன் ?" என்று கேட்கும் வாக்கல்ல..
அது வேதப் பிரகடனம் .
மகான்களால் மட்டுமே கடவுளை உணர்ந்து கொள்ளவும் .. யார் கடவுள் என புலனுக்கு அப்பால் உள்ளதை அறிந்து கொள்ளவும் முடியும்..
யோகியை விசிறி சாமி என அழைப்பார்கள்.
அடிக்கடி யோக அனுபவத்தில் உடலை மறந்து விடுவார் .. அதனால் புகைப்பார்.
இந்த அவதூத நிலை என்பதை சிருஷ்டி செய்ததே சுவாமி தான்.
எல்லா யோக நிலையையும் கடந்தவர் சுவாமி.
எல்லா மகான்களும் கர்மாவுக்கு உட்பட்டே அற்புதம் புரிய முடியும்.
அப்படிப் பட்டவர்களையே அவர்கள் அருகில் அழைப்பார்கள். எல்லோரையும் அல்ல.
அதனால் தான் யோகியைப் போன்றவர்கள் உடலோடு இருக்கின்ற வரை குறிப்பிட்ட பக்தர்களுக்கே அருளும் ஞானமும் அளித்திருக்கிறார்கள்.
அவர்களுக்கு நடக்கப் போவது தெரியும்.. அதையே வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
ஆனால் நடக்கப் போவதை எந்த மகானுக்கும் மாற்றும் அதிகாரம் சுவாமி வழங்கவில்லை...
கர்மாவை மாற்றி அமைப்பது சுவாமியால் மட்டுமே முடியும்.
காரணம் சுவாமியே இந்தியா தாண்டி பற்பல நாட்டவரை இழுத்து அருளியவர்.
சுவாமி பிறரின் கர்மாவை மாற்றிய பல நிகழ்வுகள் பற்பல நாட்டினர்க்கு நிகழ்ந்திருக்கிறது.
மகான்கள் ஆன்மீக ஞானத்தை ஊட்டவே ஞான நிலையில் மகானாய் மாறியவர்கள்.
அவர்கள் உலகியல் வாழ்க்கைக்கு அருள்வது என்பது "வாய்க்கால் வழியோடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்" போலத் தான்.
கேரளத்தில் காஞ்சன்காட் ஸ்ரீ பப்பா ராமதாஸ் மந்திரம் கொடுத்த ஒரு வார தீவிர இரவு பகலான ஆன்மீக சாதனைக்கு பிறகு தான் வான் வெளி அனுபவம் நிகழ்ந்தது யோகிக்கு.
ஸ்ரீ பப்பா ராமதாஸ்
வேடுவ வால்மீகி பிறகு ஞானம் அடைந்தது போல் தான்...
ஒரு முறை சுவாமி பக்தர்கள் யோகியிடம் வர.. சாய் பஜன் பாடச் சொல்லி இருக்கிறார்..
ஒரே பஜனையையே பல முறை பாடச் சொல்லி ஆனந்தப்பட்டிருக்கிறார்
கண்ணில் நீர் தேங்கி ஏகானுபவத்தில் மூழ்கி இருக்கிறார் யோகி.
ஒரே பஜனை திரும்ப திரும்ப பாடியவர்களுக்கு புதிய அனுபவமாக இருந்திருக்கிறது.
சுவாமியின் பிருந்தாவன் சம்மர் கோர்ஸ் உரையாடலை கேசட்டில் கேட்டு
"Voice of God" (கடவுளின் குரல்) என்று மெய் மறந்து யோகி மொழிந்திருக்கிறார்.
வாசிப்பவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்..
மகான்கள் மாற்றிப் பேசுவதே இல்லை.
அவர்களுக்கு அதனால் எந்த ஆதாயமும் இல்லை..
மனிதர்களின் தயவு மகான்களுக்கு தேவையே இல்லை..
சூரிய கிரணங்கள் சூரியனால் வெளிப்படுத்தப்படுகின்றன..
அதற்கும் மனிதனுக்கும் என்ன சம்பந்தம்?
சுவாமி என்பவர் சூரியன்.. மகான்களோ சுவாமி வெளிப்படுத்திடும் ஞானக் கீற்றுகள் (கிரணங்கள்).
கடவுளை விட்டு விட்டு ஏன் இந்தப் பிச்சைக்காரனிடம் வந்தீர்கள் என யோகி சொன்னதும்..
Voice of God என அவரே பிறகு சொன்னதும் ஒன்று தான்..
ஆதாரம்: பகவான் பாபாவைப் பற்றி யோகிராம் சுவாமி தெரிவித்த அனைத்து கருத்துக்களும் அவர்களுடைய இணையதளமான http://www.yogiramsuratkumar.co.in/ என்ற தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது..
தவத்தினால் கடவுள் அனுபவம் பெற்று மகானானவர்கள் வேறு
அந்த கடவுள் அனுபவமே இறங்கி சுவாமியாய் வந்தது வேறு..
வேறு Phenomenon...
மகான்கள் தவம் செய்து இறை அனுபவம் அடைந்தவர்கள்.
சுவாமி என்பவர் ரமணர்.. யோகிராம்.. மகா பெரியவர் போல் தவம் செய்ததே இல்லை...
தவமே ஏன் தவம் செய்ய வேண்டும்?
அவர்கள் அடைந்த அந்த இறை அனுபவமே சுவாமியாய் உருவம் எடுத்து இறங்கி வந்திருக்கிறது..
தியான நிலையும் அந்த தியான நிலையில் எழும் நிர்விகல்ப மற்றும் சகஜ சமாதி நிலையும் சுவாமியே சுவாமியே சுவாமியே.
வெறும் வார்த்தை அல்ல...
தியானிக்க தியானிக்க அந்த தியான நிலையே சுவாமி என உணர ஆரம்பிப்போம்
புரிகிறதா..
இதனை வாசிப்பவர்கள் ஆழ்ந்து உணர சுவாமி அருள்வாராக..
யோகி ராம்சுரத்குமார் தந்தை தந்தை தந்தை என ஒவ்வொரு முறையும் அழைத்தது சுவாமி சத்ய சாயியையே...
ஒரு முறை யோகி புன்னை மரத்தடியில் புகைத்திருந்த போது.. சுவாமி பக்தர்கள் வந்தார்கள் .. பேசினார்கள் என்று குறிப்பிட்டிருந்தோம்..
அப்போது யோகி..
"பாபா நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கிறார்" என்று யோகி சொன்னது தான் தாமதம் ..
வேகமாக ஒரு நாய் அவரை நோக்கி ஓடி வருகிறது..
யோகிக்கு புரிந்துவிட்டது அது குக்கல் அல்ல கடவுள் என்று..
சுவாமி எந்த ரூபத்திலும்.. எப்படியும் வருவார்..
எந்த மீடியம் வழியாகவும் தொடர்பு கொள்வார் என்பதற்கு இதுவும் ஒரு சான்று..
அது பைரவ சாயி என்று உணர்ந்த யோகி "இதோ சாயிபாபாவே நாம் அவரைப் பற்றி பேசுவதைக் கேட்டு வந்துவிட்டார்" என யோகி சொல்ல...
பக்தர்கள் .. "இதைப் போய் சாய்பாபா என்கிறீர்களே?" என பக்தர்கள் குறைபட...
"பாபா எதில் இல்லை?' என்று ஞானக் கேள்வி கேட்டிருக்கிறார் யோகி.
கடவுள் அனுபவம் என்பது எல்லாம் கடவுளாய் உணர்ந்து கரைந்து காணாமல் போவது.
தியான லட்சணம் அது.
"இதில் கூட பாபாவை பார்க்க முடியாதவர்கள்.. பாபாவில் எப்படி பாபாவை பார்ப்பீர்கள்?" எனக் கேட்டிருக்கிறார்..
பதிலே அளிக்க முடியாத முக்திக் கேள்வி அது.
அன்றிலிருந்து 1985 வரை சுவாமியே இவரின் காவலாய் இருந்திருக்கிறார்.
நமக்கே இறங்கி வந்து இரங்கி அருளும் சுவாமி மகான்களுக்கு அருளமாட்டாரா என்ன ?
அவரை உடம்போடு பாதுகாத்ததே சுவாமி தான்..
பிற குக்கலைப் போல் அன்றி வித்யாசமான குக்கலாய் இருந்தது என பதிவு செய்கிறார் யோகியைப் பற்றி ஆங்கிலத்தில் புத்தகம் எழுதிய திரு பார்த்தசாரதி (அமர காவியம் பக்கம் -- 112)
அது யோகி வைத்தால் மட்டுமே சாப்பிடும். யாரையும் தொந்தரவு செய்யாது... யோகியின் சிரட்டைத் திருவோட்டிலிருந்து எதையும் எடுக்காது என ஆச்சர்யப் பட்டு பதிவு செய்திருக்கிறார்.
கடவுளுக்கு என்ன தேவை.. சுவாமி மகான்களிடமிருந்தும் கூட எதையும் எதிர்பார்ப்பதில்லை...
Amarakavyam: Biography of Yogi Ramsuratkumar written by Parthasarathy
மனிதர்கள் பெரும்பாலும் மகான்களிடம் அணுகிப் போவதே அர்ப்ப உலகியல் விஷயத்திற்காகத் தான்..
பக்குவம் வர வர மகான்களே கடவுளை நோக்கி வழிகாட்டுவார்கள்.
அப்படிப்பட்ட
மகான்களின் உடம்பிலிருந்து வெளிப்படும் சுவாமி அதிர்வலைகள் அவர்களின் உடல் விட்ட
பிறகும் வெளிப்படுகின்றன..
சுவாமியை உணர்ந்த பின்னர் சுவாமியினுள்ளே தான் மகான்கள் ஜீவிக்கிறார்கள்..
அதனால் தான் ..
அந்த அனுபவ நிலையோடு தான்
சாய்ராம்... யோகிராம் வேறு வேறு அல்ல என யோகி சொல்லி இருக்கிறார்..
கடலோடு நதி கலந்துவிட்ட பின் கடல் வேறு நதி வேறு அல்ல என்பது போல் தான்..
சுவாமி பக்தர்களைப் பார்த்து நீங்களும் நானும் ஒன்று தான் என்கிறார்...
சுவாமி எனும் பேரனுபவம் நிகழும் வரை நமக்கு குரு அவசியமாக இருக்கலாம்..
பேரனுபவம் நிகழ்ந்த பிறகு குரு தேவையில்லை..
குரு தோணி போலத் தான்.
காரணம் ரமணர் மற்றும் ஞான சம்பந்தருக்கு குருவே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மின்சாரமில்லை .. ஒரு பொருளை வீட்டின் அறையில் எடுக்க வேண்டும் என்றால் மெழுகுவர்த்தி ஏற்றி வெளிச்சம் பாய்ச்சி அந்தப் பொருளை எடுப்பது போல் குருவின் வழிகாட்டுதல்கள்..
நாம் எடுக்கப் போகின்ற பொருள் வெறும் பொருளா .. பரம் பொருளா என்பது மட்டும் ஆழ்ந்துணர வேண்டும்..
அந்தப் பரம் பொருளே சாக்ஷாத் சுவாமி சத்ய சாயி..
இன்னமும் இதில் மனிதர்களுக்கு சந்தேகம் இருக்கலாம்.. ஆனால் அதில் இம்மி அளவு கூட மகான்களுக்கு சந்தேகமே இல்லை...
பக்தியுடன்
வைரபாரதி
சத்தியம்
பதிலளிநீக்கு