பல நூறு ஆண்டுகள் வாழ்ந்து... பல அற்புதங்கள் புரிந்து... ஞான சிகரத்தில் ஏறி ஆனந்த ஜோதி ஏற்றி அதில் சத்ய சாயி வெளிச்சத்தைக் கண்ட திருக்கோவிலூர் தபோவன மகான்.
பரம்பொருளின் பிரகடனம்:
"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
- இறைவன் ஸத்ய ஸாயி
காலம் கடந்த மகான் தபோவனம் ஸ்ரீ ஞானாநந்த கிரி மகா சுவாமிகள்:
சாயி பிரபஞ்சம் பற்றி ஞான மகா சமுத்திரம் பகர்ந்ததை ... அப்படிப் பகிர்ந்த அந்த ஞான சமுத்திரத்தின் ஆழத்தை இந்தக் குமிழி எந்த மொழி கொண்டு விவரிக்கும் ?
ஸ்ரீ ஞானானந்த சுவாமிகளின் பக்தி நிலையும்.. முக்தி நிலையும்.. அனைத்தும் அறியும் அவரின் சக்தி நிலையும் வார்த்தைகள் கடந்த மோன நிலையால் மட்டுமே நம்மால் அனுபவிக்க முடியும்.
தக்ஷிணா மூர்த்தி சமாரம்பாம்
சங்கராச்சார்ய மத்யமாம்
அஸ்மதாச்சார்ய பர்யந்தாம்
வந்தே குரு பரம்பராம்
தக்ஷிணா மூர்த்தி ஆரம்பித்து.. ஆதிசங்கரர் மத்யமாய் கிளை பரப்பிய ஹிந்து மகா தேசத்தின் வரையறைகள் இல்லா குரு பரம்பரைகள் நம்மைக் கரை சேர்க்கவே சாயி பரம்பொருளால் நிர்வகிக்கப்படுகின்றன...
சரஸ்வதி.. பாரதி.. புரி.. கிரி என முடியும் ரிஷிகளின் பெயர்கள் அனைத்துமே ஆதி சங்கராச்சார்யாரின் பரம்பரைகள்...
அதில் குரு ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகள் கிரி பரம்பரை ரிஷிகளைச் சார்ந்தவர்..
அத்வைதமே சர்வம்.
எல்லா ஞான மார்க்கமும் அத்வைதத்திலேயே வந்து சேர்கிறது...
கடல் இதுவே.. நதிகள் இங்கே தான் அடைக்கலமாகின்றன..
வாதங்கள் வேண்டுமானால் கிளை பரப்பலாம்.. ஆனால் அத்வதைமே ஆணிவேர்...
அத்வைதம் ஒரு பேரனுபவம்... வெறும் வார்த்தைகளோடு முடியக் கூடிய வாதமல்ல...
சுவாமிகளின் மகத்துவம் புரிந்தால் தான் சுவாமிகள் நம் சுவாமியைப் பற்றி மொழிந்த திருவாக்கின் வீரியம் உணரமுடியும்..
கடவுளே என்பான் .. காரியம் நடக்கவில்லை என்றால் சகட்டு போக்கில் திட்டுவான்..
மனிதன் அப்படித்தான்.. மனம் அப்படித்தான்..
விழிப்பு நிலை பெறாத வரை வார்த்தைகள் வீரியமற்று இருக்கும்...
ஆனால் ரிஷிகள் அப்படி இல்லை.. ரிஷிகள் அனுபவித்ததையே மொழிபவர்கள்.
அவர்களே சத்தியத் திருமேனிகள்.
நம் சுவாமியையே அடைந்த பிறகு மேலும் அடைவதற்கு ஒன்றுமற்ற போது ரிஷிகளுக்கு சுவாமியிடம் கூட எந்த ஒரு சராசரி எதிர்பார்ப்புகள் எதுவும் இருப்பதில்லை..
ஆகவே... அவர்களின் திருவாக்கே பிரமாணம்..
அவர்கள் நம் சுவாமியை உணர்ந்து சொன்னதே சாந்நித்ய சாசனம்... உன்னத உயில்...
பேரண்ட அனுபவமே சாயி பரம்பொருள்.. அந்த
பேரண்ட அனுபவத்தின் மாதிரி வடிவங்களே மகான்கள்...
நாம் அதை அனுபவிப்பதற்கே.. அதைத் தாங்கிய அப்புருஷர்கள் நம் சுவாமியால் அனுப்பப்பட்டவர்கள்..
சர்வ பூதமாய் விளங்கும் அதி உன்னத நிலையின் சாட்சிகள்..
கடவுளைப் பற்றி நமக்கிருக்கும் சந்தேகத்திற்கான நிவாரணிகள்..
மகான்கள் நெருப்புகள்.. சுவாமியோ அவர்களுள் எழும் தவ ஜ்வாலை...
மகான்கள் பாரத தேசத்து முதுகுத் தண்டுகள்...
சுவாமியே அவர்களுள் எழும் குண்டலினி சக்தி...
பத்து மணிநேரம் மேலாக ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகளின் திவ்ய சரிதம் திகைக்கத் திகைக்க சிரவணித்த (கேட்ட) பிறகே அடியேன் இதோ சாயி எழுதுகோலாகி இருக்கிறேன்.
வியப்பின் சிகரம் சுவாமிகள்..
பலநூறு வருடங்கள் மேலாக சுவாமிகளின் மனித உடல் வாசம் சாதாரண நிலையல்ல...
வாசிப்பவர்கள் இதைப் புரிந்துணர வேண்டும்.
ஐக்கியமானவர்கள் மகான்கள் என்றால் அந்த ஐக்கியம் நம் சாயி பரம்பொருள்.
இத்தனை மகான்களையும் நம்மகத்தே வைத்துக் கொண்டு இதயம் குறைபட்டுக் கொண்டால் அது நம் அறியாமை அல்லவா?
ஸ்ரீ போதேந்திர சுவாமிகளால் பஜனை சம்பிரதாயம் வேரூன்றியது... ஸ்ரீதர ஐயாவாள்.. சத்குரு சுவாமிகள் என விருட்சமாகி... நாம தேவர்.. துக்காராம்.. மீரா.. போன்றவர்களால் மலர் விட்ட பக்தி நெறி பஜனை முறை..
சத்குரு ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகளாலேயே மீண்டும் புத்துயிர் பெற்று கடல் கடந்தும் இன்றும் பயணிக்கிறது..
"சாயி பஜனாய்" நம் சுவாமியும் பஜனை பக்தி முறையையே அருளாக்கி அங்கீகரித்திருக்கிறார்.
பஜனை விதங்கள் வெவ்வேறு ஆனால் அதில் இழையோடி வரும்.. இசை பாடி வரும் பகவத் பக்தி ஒன்றே!
குரு ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகள் தைக் கிருத்திகையில் வேங்கோப கனபாடிகளுக்கும் ... சக்கு பாய் அவர்களுக்கும் பிறந்தார் என நினைப்பீர்கள்.. இல்லை .. உடுப்பி குக்கே சுப்ரமண்யா ஷேத்திரத்தில் கிடைத்தார்...
கண்டெடுத்த பக்தித் தம்பதிகள் குழந்தைக்கு சுப்ரமண்யம் என திருநாமம் சூட்டினர்..
ஞானக் குழந்தை கிடைப்பதற்கு முன்பே தம்பதிகளுக்கு ஒரு ஆண் வாரிசு இருந்தது.
ரிக் வேத பண்டிதரான வளர்ப்புத் தந்தை சுப்ரமண்யத்தை வேதபாட சாலையில் சேர்த்தார்.
பாடங்களை கவனிக்காமல் சுப்ரமண்யம் வாய் பார்த்தான்..
நடத்தியதைக் கேட்டால் கட கட என ஒப்புவிக்க ஆசிரியரோ அவன் வாய் பார்த்தார்..
தனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் இருந்தது அந்த ஞானக் குழந்தை..
இப்படி கம் என இருக்க வேண்டும் என்றால் பேசாது பிள்ளையார் கோவில் போ என ஆசிரியர் கோபித்து சொல்ல..
குரு உத்தரவென பிள்ளை பிள்ளையாரைப் பிடித்துக் கொண்டது..
வேத பாடசாலையில் காணாத ஞானத் தம்பியைத் தேடி அண்ணன் வர.. கோவிலைக் கண்டடைய .. தம்பியைத் திட்டியும் அடித்துமிருக்கிறார்..
வேத கல்வி கற்காதவனுக்கு வீட்டில் இடமில்லை எனக் குரல் உயர்த்த..
ஞானக் குழந்தையோ வளர்ப்பு தாய் தந்தை வசித்த மங்களாபுரி (manglore)யை விட்டு விடை பெற்றது..
ஞானம் ஏன் அறிவை சேகரிக்க வேண்டும்?
பூரணம் ஏன் குறைபட்டுக் கொள்ள வேண்டும்..?
கால் சொன்ன வழி சென்றது..
போகும் வழியில் ஒரு ஜோதி வழிகாட்டியது..
அது வானத்து சூரியனில்லை.. ஞானத்து ஜோதி..
ஆம் நம் சைதன்ய ஜோதி அன்றி வேறெது?
அந்த ஜோதி காட்டிய வழியில் ஞானச் சுடர் நடந்தது..
அது வந்து சேர்ந்த இடம் பண்டரிபுரம்..
பாண்டுரங்கன் ரகுமாயி பாதத்தில் சரணடைந்தது..
சந்திரபாகா நதிக்கரையில் அசந்து படுத்த சுப்ரமண்யத்தை ஒரு பாகவதர் எழுப்ப..
நீ வந்த நோக்கத்திற்கான குருவும்.. உன் தவ தாகம் தீர்க்கும் உருவும் கரையின் அந்தப் புறம் இருக்க.. குளித்து விட்டு வந்துவிடுகிறேன் என உரைத்த பெயர் சொல்லாத பாகவதர் நதியோடு காணாமல் போகிறார்...
அந்த பாகவதர் சாயி விட்டலன் அன்றி வேறு யார்?
அந்த நதியே விதியைக் கரைத்து கதியை உரைத்து வழி அனுப்ப..
கரை வருகிறார்..
குருவைப் பார்த்து கரைகிறார்..
ஸ்ரீ சிவரத்னகிரி சுவாமிகள் காஷ்மீர ஜோதிர் மடத்தின் ஆச்சார்யர்..
சற்று நோக்குகிறார்.. பிறகு
உற்று நோக்குகிறார்..
புரிகிறது..
குழந்தை சாதாரணமானதல்ல என...
12 வயதே நிரம்பி இருந்தது சுப்ரமண்யத்திற்கு.. 15 நாள் பிரயாணத்தில் பண்டரிபுரம் வந்து சேர்ந்து இருந்தது..
வரும் வழியில் ஓரிடத்தில் பசிக்க .. அங்கே குடிசை தென்பட .. ஒரு கிழவி தயிர்சாதம் தர .. அதை உண்டு அங்கேயே உறங்க .. எழுகையில் ஆச்சர்யம் .. அங்கே அப்படி ஒரு குடிசையே இல்லை..
சாயி மாதா ஞான அமுது ஊட்டிய பிறகே குருவை வந்தடைந்தது இந்த ஞானப் பிஞ்சு...
"கமண்டலத்த பள பளன்னு தேச்சு வை.." இதுவே குருவின் முதல் உபதேசம்..
அவர் எதை கமண்டலம் என்றார் என்பது ஞானக் குழந்தைக்குப் புரிந்தது.
இப்படி
குரு பக்தியில் ஆசிரமத்தில் பிரக்ஞான பிரம்மச்சாரி எனும் பெயரில் சேவை ஆற்றியது சுப்ரமண்யக் குழந்தை..
24 வருடம் குரு நிழலிலும்.. சேவையிலும் கழிந்தது..
கழிந்தது அல்ல.. கனிந்தது..
ஓதும் சாஸ்திரத்தின் உண்மை ஆய்ந்தே
உலக சுகம் துச்சம் என உதறித் தள்ளி
ஆதி பரம்பொருளதனில் இச்சை வைத்தே
அஷ்டாங்க யோக முறை எட்டும் கற்று
நீதி வழுவாத நிலையில் நின்று சாயுஜ்யம் அடைந்த மகான்
என அவரது சீடர் ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் வாக்கிற்கு இணங்க ..
யோகத்தில் உச்சம் தொட்டது..
குருசேவைக்கு உதாரணமானது இந்த ஞான சுப்ரமண்யக் குழந்தை.
சித்ரா பௌர்ணமியில் சிவரத்னகிரி சுவாமிகள் சமாதி அடைவதற்கு முன்
ஞானாநந்த கிரி என நாமகரணம் இட்டு அந்த ஜோதிர் மடத்தின் பீடாதிபதியாக சுவாமிகளை அமர்த்தி பின் சாயுஜ்யம் அடைகிறார்.
ஜோதி வெளியே ஒளிர்ந்தால் தான் திசைக்கு வெளிச்சம் என்றபடி பரிவ்ராஜக சன்யாசியாய்க் கிளம்புகிறார்..
பாரதத்தை இருமுறை தன் பாதத்தால் வலம் வந்திருக்கிறார் சுவாமிகள்..
ரிஷகேஷ்.. கேதார்நாத்.. பத்ரிநாத் போன்ற தவ தலங்களுக்குச் செல்கிறார்..
கைலாஷ் யாத்திரை மேற்கொள்கிறார்.
இமய மலையில் குளிர் மேனி மூட தவமியற்றுகிறார்.
"சுவாமிகளுக்கு பனி குளிரலையா" என பிற்கால பக்தர் ஒருவர் கேட்க..
"தபஸ் னா தாபத் தணல் னு அர்த்தம்... மூடிய பனிலாம் கரஞ்சு போய்டுத்து" என சுவாமிகள் மொழிந்திருக்கிறார்.
உடம்பெடுத்ததன் பயன் உடம்பினுள் உறைந்த உத்தமனை காணலே இது சுவாமிகள் திருவாய் மொழி..
சிக்கனமாக இரு ஆனால் கஞ்சனாய் இராதே...
தர்மம் செய்ய ஆனால் ஓட்டாண்டியாகி விடாதே...
திருமணம் செய் ஆனால் காமுகனாகிவிடாதே...
அன்பு செய் ஆனால் ஏமாளியாகிவிடாதே...
வீரானாக இரு ஆனால் போக்கிரியாகிவிடாதே...
இவை எல்லாம் சுவாமிகளின் எளிமை வாய்ந்த மகத்துவம் மிகுந்த மகிமை மொழிகள்....
25வருடம் கடுந்தவம்..
மானசரோவர் நதியின் அடியில் நெடுந்தவம் புரிகிறார்.
ஜல சமாதியில் மூழ்குகிறார்.
இதை மனக்கண்ணில் நினைத்தாலே மனசு உறையும்.
மானசரோவரில் தேவர்கள் ஜோதி ரூபங்களாய்க் குளித்துப் போவதை இன்றும் பலர் கண்டு அதிசயப்படுகிறார்கள்.
"எப்படி சுவாமி இருக்க முடிந்தது?" எனக் கேட்ட பிற்கால பக்தர் ஒருவர்க்கு...
அது ஒரு பரம சுகம்.. அதை அனுபவிச்சுட்டா.. கிடைக்கற நேரத்துலலாம் தியானம் பண்ணனும்னு தோணும் என்கிறார் சுவாமிகள்.
வேலையோடு இரு.. போதையோடு இரு.. என்கிறார் சுவாமிகள்.
வேலை என்பது பஜனை பாடுவது..
போதை என்பது தியானத்தில் உறைவது..
மற்ற கடமை என்பது கடமை அல்ல வெறும் மடமை என்கிறார் சுவாமிகள்.
சர்வ சத்தியம். ஞானத் திருவாசகம் அது.
பிறகு தென் தமிழகம் வருகிறார்..
வள்ளலார் சத்ய ஞான சபை கட்டுகின்ற போது சுவாமிகள் அருகில் இருந்திருக்கிறார்.
கட்டடப் பணிகளுக்கு மரங்கள் வாங்க வள்ளலார் வான்வெளியில் தான் பயணிப்பாராம்...
ஞானேஷ்வர்.. கபீர்தாசரின் ஆராதனையில் அருகிருந்திருக்கிறார்..
துக்காராம் புஷ்பக விமானத்தில் இறுதி யாத்திரை செய்வதை அருகிருந்து பார்த்திருக்கிறார்..
ராமகிருஷ்ணரோடு உரையாடியும்.. அவர் குரு ஸ்ரீ பிரம்மானந்த தோத்தாபுரி மகாராஜோடு உரையாடியும் இருக்கிறார்.
நம் ஷிர்டி சுவாமியோடு ஷிர்டியில் தங்கி இருக்கிறார்.
இலங்கை கதிர்காமம் சென்றும் .. அருகே அந்தோணி மலையிலும் தவமியற்றி வேல் நட்டிருக்கிறார்...
பகவான் ரமணரோடு இரவில் விருபாக்ஷி குகையில் தத்வமஸி போன்ற வேத சாரங்களைப் பேசிக் களித்திருக்கிறார்.
இதை எல்லாம் இங்கே பகிரக் காரணம்..
மகான்கள் வாழ்வில் நிகழ்ந்த மகிமைகள் (உதாரணமாக: புஷ்பக விமான அழைப்பு) எல்லாம் ஏதோ அம்புலி மாமா கதைகள் அல்ல..
அவை சர்வ சத்தியமாய் நிகழ்ந்திருப்பதை சுவாமிகள் வாயிலாக உணர்கிறோம்..
பிறகு
ஆட்டயாம்பட்டி வாசம்.. கல்லக்குடியில் மதமாற்றத்தைத் தடுத்து நல்புத்தி உணர்த்துதல்..
இவர் சொல்லியே டால்மியா சிமெண்ட் தொழிற்சாலைக்கு அந்த ஊர் வாசிகள் இடம் கொடுத்து டால்மியாபுரமானது கல்லக்குடி..
புதுவையில் (பாண்டிச்சேரியில்) ஜடாமுடி தவக் கோலத்துடன் சுவாமிகள் வசித்திருக்கிறார்..
சிலர் ஞானி என்றும் சில பைத்தியங்கள் சுவாமிகளை பைத்தியம் எனவும் நினைத்திருக்கிறது.
அந்த நேரம் அங்கிருந்த (தர்மராஜா தெருவில்) மகா கவி சுப்ரமண்ய பாரதி... தமிழில் எழுதப்பட்ட உபநிஷத்களை பிழை திருத்தம் காண வர.. சுவாமிகளைக் கேள்விப்பட்டு அவரைப் பின் தொடர.. சுவாமிகள் ஓட..
பாரதியார் மடக்க..
கிணற்றடி..
சுவாமிகள் மேலே விரல் காட்டுகிறார்.. சூரிய ஒளி தகிக்கிறது..
கிணற்றைக் காட்டுகிறார்.. சூரிய ஒளியின் பிரதிபிம்பம்..
சுப்ரமணிய பாரதியார்
இவர் யார் என்ற கேள்விக்கு பாரதியாருக்கு விடை கிடைத்தது..
மறுநாள்..குப்பைகளைச் சுமந்து வர.. "ஏன் இந்தக் கூத்து?" என பாரதியார் சுவாமிகளைப் பார்த்துக் கேட்க..
"நீ உள்ள சேர்த்து வெச்சிருக்கற குப்பைய விடவா இது கூத்து" என சிரித்து நகர்ந்திருக்கிறார்.
பாரதியார் கற்பூரம்.. உடனே பற்றிக் கொண்டார்.
ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகளைப் பற்றி பாரதியார்...
முப்பாலும் கடந்த பெருவெளியைக் கண்டான்
முத்தி எனும் பெருவெளியின் பரிதி ஆனான்
தப்பாத சித்த நிலை அளித்த கோமான்
தவம் நிறைந்த மாங்கொட்டைச் சாமித் தேவன்
குப்பாய இருள் நீக்கி எமை கரைத்தேற்றிய குமார தேவன்
தேசத்தார் இவன் பெயரை குள்ளச்சாமி தேவர் பிரான் என்றுரைப்பர்
தெளிந்த ஞானி...
பாசத்தை அறுத்து விட்டான்.. பயத்தைக் கொன்றான்... பாவனையால் பரவெளிக்கு மேலே தொட்டான்..
நாசத்தை அழித்துவிட்டான்
எமனைக் கொன்றான்..
ஞான கங்கையை தலைமுடி மீது ஏந்தி நின்றான் ........ சுடர் பாதம் தொழுகின்றேன்
இதில் பல ஆச்சர்யங்கள்.
இரண்டைச் சொல்லி நகர்கிறேன்..
பாரதி ஒரு தீர்க்கதரிசி என்பதற்கு இன்னொரு உதாரணம்..
கவிதையில் மாங்கொட்டைச் சாமி என்கிறார்..
சுவாமிகள் பிற்காலத்தில் மாமரத்தில் தான் காட்சி தந்திருக்கிறார்.. ஐந்துமா விருட்சம் அடங்கிய திருக்கோவிலூர் தபோவனம் அது.
சுவாமிகளுக்கு மாமரமே போதிமரம்...
சுவாமிகளின் இயற்பெயர் சுப்ரமண்யம் என எப்படி பாரதியாருக்கு தெரியும்..?
கவிதையில் சுவாமிகளை குமார தேவன் என்கிறார்..
சுடரும் பாரதியார் வாசகம்.. சாயி பரமன் எழுத வைத்த சத்ய பூசகம்...
பிறகு சுவாமிகள் சித்தலிங்கப்பட்டியில் வாசம்.. மழையற்ற ஊர்.. சுவாமிகளுக்கு கிணற்று நீரால் ஊரே அபிஷேகிக்க மழை வெள்ளமாய்ப் பொழிகிறது.
பிறகு ஒரு வக்கீல் குடும்பம் கொடுத்த பேய்கள் வசித்த நிலமே (Haunted place) சுவாமிகள் அதிஷ்டானம் இப்போது கொலுவீற்றிருக்கிற திருக்கோவிலூர் தபோவனம்..
ஞானம் வருகிறது.. இருள் பேய்கள் விடை பெறுகின்றன..
பஜனை அரங்கேறுகிற போது அகப்பேய்களோடு புறப் பேய்களும் விடைபெறுகின்றன...
சுவாமிகளின் மகிமைகள் சொல்லி மாளாது...
யோகி ராம்சுரத்குமார் அவர்கள் முற்பிறவியில் கபீர்தாசர் என ஞானாநந்த சுவாமிகளே முதன்முறையாக திருவாய் மொழிந்தது..
இவர் சொல்லியே கன்னியாகுமரி மாயம்மா எனும் ஸித்தரை உலகம் அறிந்து உணர்ந்தது..
ஒரு பக்த தம்பதிகள் திருஉளச் சீட்டு சுவாமிகளின் படத்தின் முன் எடுக்க .. அப்போதும் திருப்தியாக இல்லை.. வெறும் படம் தானே .. நேரில் சென்று கேட்டுவிடலாம் என சுவாமிகளைத் தேடி வருகின்றனர் ..
அவர்கள் சொல்வதற்கு முன்பே "படம் என்ன சொல்லிச்சு" எனக் கேட்டிருக்கிறது இந்த ஞானப் பழம்..
நாம் வீட்டில் சுவாமி படம் வைத்திருக்கிறோம் .. வெறும் படம் தானே என்று நினைத்தால் அஞ்ஞானம். அது படமே அல்ல.. அது சுவாமியே என்பதை உணர்த்தவே இந்த ஒரு சிறு லீலை..
இவரின் லீலை சொல்ல ஆரம்பித்தால் ஒரு நூறு மாலை தேவைப்படும்.
இரு மாலையில் இரு மாலையுமே சொல்கிறோம்.
இப்பேர்ப்பட்ட தவப் பழம் சாயி பரம்பொருளைப் பற்றி என்ன பேசியிருக்கிறது..
இதை முதலிலேயே ஆரம்பித்திருக்கலாம்.. ஆனால்
மகான்களின் மகிமை புரிந்தால் தான் .. அவர்களின் வாக்கு சாதாரண வாக்கல்ல.. அது சரஸ்வதி நாக்கு என வாசிப்பவர்களுக்கு புரியும் என்பதற்காக ...
சுவாமிகளின் சரிதத் துளியும்..மகிமைத் துளியும் பந்நீர் தெளித்தது இதுவரை...
மூத்த எழுத்தாளர்.. தெய்வத்தின் குரல் ஆசிரியர் திரு.ரா.கணபதி சாய்ராம் அவர்களே தனது சுவாமி எனும் சாயி இலக்கியத்தில் பகிர்ந்திருக்கிறார்..(பக்கம் - 10)
அவரின் எழுத்திலேயே பகிர்வோம்
இந்நூலாசிரியரின் நண்பர்களான ஒரு குடும்பத்தினரிடம் "புட்டபர்த்தி அனந்தப்பன் கேட்டதெல்லாம் கொடுப்பானே" என மனஸாரக் கூறினாராம்
அனந்தப்பன் என்பது சிறப்பு மிகுந்த பதம்..
அனந்தம் என்றால் முடிவில்லாதது எனப் பொருள்.. ஆக
முடிவில்லாத நிலையின் தந்தை என்பதே அனந்தப்பன் என்பதன் பொருள்..
அனந்தபூர் என்பது மட்டுமல்ல அது...
அதனால் தான்.. சுவாமிகளை சிறுவயதில் ஜோதி வழிகாட்டியது பண்டரிபுரத்திற்கு எனும் போது அது நம் சைதன்ய ஜோதியே
என்றோம்...
அனந்தம் என்றால் ஆதிசேஷன் என்ற பொருளும் உண்டு..
அதனால் தான் அனந்த சயனன்...
அந்த ஆதிசேஷனின் அப்பன் யார்?
நம் இறைவன் ஸத்ய ஸாயியைத் தவிர வேறு யார்?
இன்னொரு சம்பவமானது...
ஒருமுறை ஜெயலட்சுமி எனும் சுவாமி பக்தை ஞானாநந்த சுவாமிகளின் பக்தர்களோடு திருக்கோவிலூர் தபோவனம் சென்றிருக்கிறார்..
அங்கு சென்ற பக்தர்கள்
அனைவரும் சுவாமிகளை விழுந்து வணங்க...
ஜெயலட்சுமியோ சுவாமி எனும் சாயி இறைவனை வணங்கும் நாம் ஒரு துறவியை வணங்கலாமா எனத் தயங்கி இருக்கிறார்..
அதற்கு ஸ்ரீ ஞானாநந்த சுவாமிகளோ "புட்டபர்த்தி கிருஷ்ணன் உனக்கு அருளை அள்ளிக் கொடுக்கிறாரே .. எனக்குத் தெரியுமே" எனச் சொல்லி புன்னகை பூத்திருக்கிறார்...
இதை ஞானாநந்தக் கண்ணன் எனும் பத்தியில் மூத்த எழுத்தாளர் சரோஜினி சாய்ராம் தனது புத்தகமான ஞானியர் கண்ட ஞானக் கண்ணன் எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார்...(பக்கம் 216)
நீங்கள் எந்த குருவின் பாதம் விழுந்தாலும் இறைவன் ஸத்ய ஸாயி இடமே அந்த நமஸ்காரம் வந்து சேரும்..
நீங்கள் எந்த மகானிடம் வேண்டிக் கொண்டாலும் இறைவன் ஸத்ய ஸாயியே நிறைவேற்றுகிறார்..
பியூனிடம் கொடுக்கும் மனு கலக்டரிடமே வருகிறது என்பது போல்...
குருக்கள் பிரசாதமாய் கடவுளுக்கு சாற்றிய மாலைகளையே தருகிறார்கள்.. தான் அணிந்த மாலைகளை அல்ல..
இறைவன் ஸத்ய ஸாயியே குருவுக்கெல்லாம் குரு சத்குரு.. மற்ற மகான்கள் வெறும் குரு மட்டுமே...
ஒருமுறை ஞானாநந்தரின் பக்தர் தண்டபாணி அவர்கள் தான் பணியாற்றிய நண்பர்களோடு புட்டபர்த்தி வருமாறு அழைக்கப்படுகிறார்..
இவரது அலுவலக நண்பர்கள் அனைவரும் நம் சுவாமி பக்தர்கள்..
குருவிடம் தயங்கியபடியே உத்தரவு கேட்க... "குருவை நினைந்தபடி எங்கும் சொல்வோம்" என அத் துறவு உத்தரவு தர...
பர்த்தி வருகிறார் சுவாமிகளின் பக்தர்.
நம் சுவாமியோ அப்போது உரையாற்றிக் கொண்டிருக்கிறார்.
இவருக்கோ தயக்கம் விட்டபாடில்லை..
இங்கே வந்துவிட்டோமே என அந்த தயக்க எண்ணம்.. அந்த நொடி..
சுவாமி தண்டபாணியை ஒரு பார்வை பார்த்து புன்னகைத்தபடி ஞானாநந்த சுவாமிகளைப் பற்றிப் பேசுகிறார்... காலம் கடந்த மகான்.. மகான்களுக்குள் மகான்.. திருக்கோவிலூர் மகான் என்கிறார்..
அதிர்ச்சியிலும் .. ஆச்சர்யத்திலும் உறைகிறார் தண்டபாணி அவர்கள்...
பிறகு அருகழைத்து சுவாமி விபூதி தந்து ஆசிர்வதிக்கிறார்..
"என் குருவின் அருளால் பரம திருப்தியாய் இருக்கிறேன் சுவாமி" என்கிறார் திரு தண்டபாணி ..
உன் குரு யார் ? எனக் கேட்கிறார் சுவாமி.. சுவாமிக்கு தெரியாதா..!
இது தான் கிருஷ்ணக் குறும்பு...
தண்டபாணி அவர்கள் தன் குருவின் (சுவாமிகளின்) பெயரைச் சொல்ல.. ஓ.. என ஆனந்தப்படுகிறார் நம் சுவாமி..
புன்னகை பூக்கிறார்..
இதை ஞானானுபவம் எனும் புத்தகத்தில் நாமாஜி அவர்கள் எழுதி இருக்கிறார் . (பக்கம்: 146 to 147)
அந்த தண்டபாணி அவர்கள் தான் தண்டபாணி பாகவதராக பிற்காலத்தில் நாமானந்த கிரியாக (நாமாஜி) வாழ்ந்து முக்தியானவர்...
ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிகள்
ராமகிருஷ்ண பரமஹம்சருக்கு விவேகானந்தரைப் போல் ஸ்ரீ ஞானாநந்த கிரி சுவாமிகளுக்கு ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள்..
ஸ்ரீ ஞானாநந்த கிரி சுவாமிகளுடன் ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகள்
இவராலேயே பஜனை சம்பிரதாயம் கடல் கடந்தது...
இவரை என் தாயின் தாயார் (லட்சுமி) தரிசித்திருக்கிறார்.
பஜனையில் கரைந்திருக்கிறார்.
ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகளின் குரலில் ஆன்மா கரைந்தோடும்...
அடியேனுக்கு இவர் பஜனைப் பாடல்களில் தீராக் காதல் அதிகம்..
ராதே கிருஷ்ணா எனப் பாடுவார்... கிருஷ்ணாவில் "ணா"வை இழுப்பார்...
கேட்டுக் கேட்டு எத்தனையோ முறை கண்கலங்கி இருக்கிறேன்...
பிரபோ கணபதே எனும் பஜனைப் பாடல் அகத்தியர் இயற்றியது.. அதை ஹரிதாஸ் கிரி சுவாமிகளை பாட வைத்து உலகப் பிரஸித்தியாக உருவேற்றினார் ஞானாநந்த கிரி சுவாமிகள்.
அஷ்டபதியில் லயிக்கும் இஷ்டபதி ஸ்ரீ ஞானாநந்த கிரி சுவாமிகள்...
அவருக்கு திருக்குறள்.. திருப்புகழ் என்றால் அதிகப் பிரேமை..
வெறும் திருவள்ளுவர் இல்லை.. திருவள்ளுவ நாயனார் என்பார் சுவாமிகள்...
பல தேச பக்தர்களுக்கு சுதந்திரப் போராட்டக் காலத்தில் ஆசி வழங்கி..
"தேச பக்தியும் ... தெய்வ பக்தியும் புரிவோம்" என்றிருக்கிறார்..
பசும்பொன் முத்துராம லிங்க தேவரை புலித்தோலில் அமர்த்தி.. இவர் பெரிய அம்பாள் உபாசகர் எனும் பலர் அறியா ரகசியத்தை உடைத்திருக்கிறார்...
சுவாமிகள் "நான்.. எனது.. செய்கிறேன்.." என்ற பதங்களையேப் பயன்படுத்தாதவர்...
"நாம்.. நமது... செய்கிறோம்..." என்றே சொல்வார்..
அதையே அடியேனும் பயன்படுத்த முயற்சி செய்து வருகிறோம்...
சுவாமிகள் அடிக்கடி ஓம் என்றும் தேவா என்றும் சொல்லிக் கொண்டே இருப்பார்...
அந்த தேவன் சாயி தேவனைத் தவிர வேறு யார்?
கி.வ.ஜா சுவாமிகளின் வாழ்வு குறிப்பைப் கேட்கையில்..
"சுவாமி பிறக்கல.. உதிச்சது" என்று சுய பிரகடனம் புரிந்திருக்கிறார்...
அந்த ஞானப் பிழம்பை உதிக்க வைத்தது சத்ய சாயி பரம்பொருள் என்றால் அது மிகையே இல்லை...
நம் சுவாமிக்கு இரண்டு கரங்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கிறோம்..
இல்லை.. சத்ய சாயி பரம்பொருளுக்கு எண்ணற்ற கரங்கள்..
அந்த எண்ணற்ற கரங்களே மகான்கள்...
அந்தக் கரங்களில் காமதேனுக் கரம் ஸ்ரீ ஞானாநந்த கிரி சுவாமிகள்...
மந்தஸ்மித முகாம் போஜம்
மஹனீய குணார்னவம்
மதுரா பாஷினம் சாந்தம்
சர்வ பூத தயாபரம்
பக்த வாத்ஸல்ய ஜலதிம்
பரமானந்த விக்ரஹம்
ஸ்ரீ ஞானாநந்தம் பிரபந்நோஸ்மி
நிர்மல ஞான ஸித்தயே
ஞானாநந்தமாய் சத்ய சாயி இறைவனான நம் சுவாமியை நினைந்துருகி வாழ்வோம்!
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக