தலைப்பு

வெள்ளி, 6 மார்ச், 2020

கர்னல் ஜோகாராவ் அருகமர்ந்து உயிர்ப்பித்த பாபா!


கர்னல் ஜோகாராவ். முதல் பணி இந்திய விமான கட்டுமான நிறுவனத்தின் பிரதம பொறியாளர். பின்னர் இந்திய ராணுவ சேவை. கர்னலாக பதவி உயர்வு. அதன்பின் கட்டுமான நிறுவனம் நிறுவி தனிசேவை.. பாபாவின் பார்வை பட்டவர் மீள்வரோ?
எனக்கு தியானம் செய்ய தெரியாது பஜன் பாடல் இசைக்கத் தெரியாது தவம் இயற்றும் தகுதியும் இல்லை ஆனால் தன்னலமின்றி தொண்டு செய்ய தெரியும்...(ஜோகாராவ்)

அதனால்தான் அனைவரும் பாபா பாபா என்று உளம் உருகி என்னை அழைக்க நான் ஜோகாராவ் ஜோகாராவ் என உன்னை கூப்பிடுகிறேன். (பாபா)


கர்னல் ஜோகாராவ் முதலில் பாபாவின் மகத்துவத்தை ஒப்புக் கொள்ளாத மன நிலையில் நண்பர் வீட்டிற்கு பாபாவின் தரிசனத்திற்கு அரைகுறை மனத்துடன் சென்றார். அவரை அன்புடன் அழைத்த பாபாவின் கருணை மழையால் மனம் கசிந்து ஒயிட் பீல்டு சென்று பூரணமாக பரிபூரணரை சரண் அடைந்தார். பாபாவின் சேவையில் ஜோகாராவின் பங்கு. முதலில் அனந்தபூர் கல்லூரி கட்டுமான பணிகளை பாபா ஜோகாராவிடம் ஒப்படைத்தார். அவரும் அதனை திறம்பட செய்து முடித்தார்.

அது ஒரு அற்புதம், அதிசயம், விளங்க இயலா வியப்பு:


எத்தனை முறை கூறினாலும் அலுப்பு தட்டாத வியப்பு சத்யசாயி உயர் சிறப்பு மருத்துவ மனையின் வரலாறு. 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட கரடுமுரடான  புதர் மண்டியதுமான நிலப்பரப்பை சமன்படுத்தவே நீண்டகாலம் தேவைப்படும்போது ஓராண்டு காலத்தில் கட்டிடம் எழுப்பி.. கருவிகள் நிறுவி.. மருத்துவர்கள் அமர்த்தி ..எப்படி இயலும். பாபாவின் கட்டளையை எப்படி நிறைவேற்றுவது? ஜோகாராவ் மனச் சஞ்சலம் அடைந்தார். பாபா கூறினார். "கவலைப்பட வேண்டாம். நமது பாரதம் ஒரு யோக பூமி.. தியாகபூமி.. புண்ணிய பூமி.யார் ஓருவர் தன்னலமற்ற பொதுத் தொண்டு செய்ய முற்பட்டாலும் அது நிச்சயமாக நிறைவேறும்." பாபவின் வாக்கு சத்ய வாக்கு அல்லவா. உலகமே வியக்கும் வண்ணம் மருத்துவமனை ஓராண்டில் செயல்பாட்டுக்கு வந்ததல்லவா? 

தவித்த வாய்க்கு தண்ணீர்:


அனந்தபூர் மாவட்டத்தில் நீர் ஒரு அரும் பொருள். குடிநீரின்றி மக்கள் தவிப்பதை பகவான் பார்த்துக் கொண்டிருப்பாரா? சத்யசாயி குடிநீர் திட்டம் 1994 ம் ஆண்டு பகவானின் அருளால்  நிறைவேற்றப்பட்டது. இதன் செயல் பாட்டிலும் ஜோகாராவ் பங்கு மகத்தானது. ஆகவே அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் ஜோகாராவ் கூறினார்." நான் இறைவனிடமிருந்தே உயரிய விருதைப் பெற்றுவிட்டேன். மற்ற எந்தவிருதும் எனக்கு வேண்டாம்." 

தோற்றத்தில் ஒன்றாகி தோன்றுமிடம் பலவாகி ஆற்றல் அருள் தந்து எம்மை காத்து நிற்கும் சாயி தெய்வம்.

கர்னல் ஜோகாராவ் அருகமர்ந்து உயிர்ப்பித்த பாபா:
பிரசாந்தி நிலையம் to பெங்களூர் பயண நேரம் 5 நிமிடங்கள்

நேரமும் வயதும் பாராமல் தன்னலம் அற்று சேவை செய்த கர்னல் ஜோகாராவ் பாபாவின் இதயத்தில் இடம் பெற்று கர்மயோகி என பகவானால் புகழப் பட்டார். பகவானின் கோலாகலமான 65வது பிறந்த நாள். அலைகடலென திரண்ட பக்தர்கள்.பகவான் ஜோகாராவை அழைக்கிறார். அவரது கைகளுக்கு பொன் கங்கணமும் , மிளிர்கின்ற அங்க வஸ்திரமும் அணிவித்து ஆசீர்வதிக்கிறார். நீங்கள் கர்னல் ஜோகாராவ் என அழைக்கும் இவரை கர்மயோகி என நான் அழைக்கிறேன் என்கிறார். அத்தகைய பரம பக்தரை பாபா காப்பாற்றிய திவ்ய சரித்திரத்தை நாம் இனி காணலாம்.


அது 1992ம் ஆண்டு அக்டோபர் 13ம் நாள். பாபா மாணவர்களிடையே பேசும்போது கூறினார்.நான் நாளை பெங்களூர் செல்லவேண்டும் என்று. திடீரென்று பாபா இதைக்கூற காரணம் அறியாமல் தவித்த மாணவர்கள் பாபாவை பெங்களூர் செல்ல வேண்டாம் என வேண்டினர். பாபா கூறினார்."ஜோகா ராவ் மிக ஆபத்தான நிலையில் பெங்களூர் மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளார். அவரை நான் பார்க்கவேண்டும் என்று அழைப்பு வந்துள்ளது . இங்கிருந்த படியே அவரைக் காப்பாற்ற என்னால் முடியும். அவர் இந்த 86வது வயதிலும் சாயிசேவையை தன்னலமற்று செய்கிறார். அதற்கு நன்றிக்கடன் செலுத்த பகவான் இப்படி செய்கிறார் என்பதை மாணவர்கள் உணரவேண்டும். மறுநாள் காலை . அனைவரும் பாபா பெங்களுர் செல்வார் என எதிர்பார்க்க பகவான் சிரித்தவாறு கூறுகிறார். "நான் நேற்று  இரவே பெங்களூர் மருத்துவமனை சென்றேன். ஜோகாராவ் என்னைக்கண்டு ஆனந்தம் மேலிட்டு திகைத்தார். மற்றவர்கள் கண்களுக்கு நான் தெரியவில்லை. ஜோகாராவின் உடல்நிலை மோசமாகி நாடித் துடிப்பு அடங்கிக் கொண்டே வந்தது. அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் முடிவுக்கு வந்தனர்.பாவம் ஜோகாராவ்  தன் வாழ்நாள் அனைத்தையும் சாயி சேவையில் அர்ப்பணித்தவர். அதனால் பகவான் அவரைக் காப்பாற்றினேன். காலை 4மணி அளவில் அவர் பூரண குணம் அடைந்தார். உடனே என்னுடன் பர்த்தி வர விரும்பினார். நான் அவரை தடுத்து ஓரிருநாள் ஓய்வுக்குப்பின் வருமாறு கூறினேன் .இப்போது அவர் பூரண நலம் பெற்றுவிட்டார்.ஸ்வாமி அவரை காப்பாற்றிவிட்டேன் .

"உன்பணியே தன் பணியாய்... ஓய்வின்றி உழைப்பவர்கள் அவர் நலத்தை நீ பேணி காத்திடுவாய் சாயீசா".

இவ்வாறு பாபாவின் திருப்பணிகளில் பங்கு கொண்ட திரு.ஜோகாராவ் 2005ம் ஆண்டு பாபாவின் திருவடிகளில் அடைக்கலமானார். பாபா தனது 70வது பிறந்த நாளன்று ஜோகாராவ் பற்றி கூறியதைவிட வேறென்ன நம்மால் கூற இயலும். பாபா கூறினார். " நமது பாரத தேசத்தில் ஜோகாராவ் போன்ற பல கர்ம ஜீவிகளும் கர்ம யோகிகளும் தோன்றவேண்டும். அதுமட்டுமல்ல நாம் ஒவ்வொருவரும் கர்மயோகிகளாக மாறவேண்டும்.

ஆதாரம்: http://media.radiosai.org/journals/Vol_03/10OCT01/jogarao.htm

மொழிமாற்றம்: தமிழாக்கம்: திரு. குஞ்சிதபாதம், நங்கநல்லூர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக