நம் அனைத்து சாயி குடும்ப சகோதர சகோதரிகளுக்கு,
சாய்ராம். நாம் அனைவரும் தற்போது, கொரோனா தொற்று நோயின் கடுமையான தாக்குதலால் ஏற்பட்டுள்ள இக்கட்டான, மிகவும் கடினமான சூழலில் உள்ளோம்.
இந்த சமயத்தில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபா அவர்கள் எப்பொழுதும் அளிக்கும் 'யாமிருக்க, பயம் ஏன்' என்ற உறுதிமொழியை நினைவில் கொள்வோம்; இந்த துன்பத்திலிருந்து நம்மை பத்திரமாகக் காப்பற்ற பகவான் ஒருவரால் மட்டுமே முடியும். எனவே நாம் அனைவரும் சுவாமியிடம் ஒன்றாக மனமுருகிப் பிரார்த்தனை செய்வோம்.
இது ஒரு தனிப்பட்ட, குடும்ப சாதனையாகும். உங்களில் பலபேர், பல வழிகளில் செய்யக்கூடும். பகவானால் அளிக்கப்பட்ட அழகிய நிறுவனத்தில் ஒரு அங்கமாக இருக்க, அதை நாம் தொடர்ந்து செய்ய வேண்டும் .
ஒவ்வொரு வருடமும் சுவாமியின் ஆராதனை தினமான ஏப்ரல் 24ந்தேதியை நினைவு கூற ஒரு மாதம் பிரார்த்தனை செய்வோம். அந்த வகையில் இந்த வருடம் மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 வரை, நாம் அனைவரும் 'பகவான் நம் மனதில் இருக்கிறார்,' என்ற நம்பிக்கையுடன் பிரார்த்தனை
செய்து, அதை உணர்வோமாக.
முதலாவதாக, பகவானே நம்மை பாதுகாப்பவர் என்ற நம்பிக்கையில், அவரைச் சரணடைவோம்.
இரண்டாவதாக, சுவாமி எப்போதும் நம்முடனேயே இருக்கிறார் என்பதை பலவிதஙகளில் உணர்த்தும் விபூதியை நாமும் பூசி, பிறருக்கும் அளிப்போம். அது நம்மை கேடயம் போல் காக்கும்.
மூன்றாவதாக, நம்முடைய ஆழமான பிரார்த்தனையே இந்த சமயத்தில் தேவை. ஏனெனில் நாம் அவரை நோக்கி வைக்கும் ஒரு அடி, அவரை நம்மை நோக்கி நூறு அடிகள் எடுத்து வைக்க உதவும்.
நான்காவதாக, பகவானின் கருணை இந்த மனித குலத்திற்கு கிடைக்க, கூட்டு பிரார்த்தனை சிறந்த கருவியாகும். எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை (22 மார்ச்) முதல் நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு சாயி அன்பரும், அவரது குடும்பத்தினருடன் சேர்ந்து ஒவ்வொரு நாளும் இரவு 9 மணியிலிருந்து 9.15 வரை ஸ்ரீ சத்ய சாயி காயத்ரியை, சுவாமியின் ஆராதனா நாள்(அதாவது ஏப்ரல் 24 )வரை ஓத வேண்டும். இந்த கூட்டு பிரார்த்தனை, சுற்றுச் சூழலில் தாக்கத்தை ஏற்படுத்துவது, நம்முள்ளும் தெய்வீக பலத்தை உருவாக்கும். சாயி காயத்ரியைத் தொடங்குவதற்கு முன் மூன்று முறை ஓம் சொல்லிவிட்டு, ஆரம்பித்து, காயத்ரி சொல்லி முடித்தவுடன், 'சமஸ்த லோக சுகினோ பவந்து' என்ற உலக அமைதி மந்திரத்தைக் கூறி முடிக்கலாம். இது நமக்கு மட்டுமின்றி மனித குலத்திற்கே நன்மை பயக்கும் அரிய சேவையாகும்.
தினசரி பின்பற்ற வேண்டிய பிரார்த்தனை வழிமுறைகளைப் பற்றியும், (சுய மாற்றம் பெற பயிற்சி எடுத்துக் கொள்ளும் மாதம் ) ஏற்கனவே அந்தந்த மாநிலத் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களிம் ஒரு புத்தகம் வாயிலாகப் பகிர்ந்து உள்ளேன்.
நாம் பகவான் மீது வைத்திருக்கும் அபரிதமான பக்தியால், அவர் கூறியபடி, இந்த நாட்டின் சட்டத்தை மதித்து, சமூக ஒழுக்கத்தைப் பேண வேண்டும்.
ஸ்ரீ சத்ய சாயி நிறுவனத்தின் அனைத்து செயல்பாடுகளையும், அடுத்த அறிவிப்பு வரும்வரை நிறுத்தி வைத்துள்ளோம்.நாம் அனைவரும் தூய பழக்கங்களான கைகளைக் கழுவுதல், இருமல் அல்லது தும்மல் இருந்தால் முகக்கவசம் அணிதல், அடுத்தவரிடமிருந்து சிறிதுதூரம் தள்ளி இருத்தல்,
அவசியம் இருந்தாலொழிய வெளியில் செல்லாமல் வீட்டிலேயே இருத்தல் முதலியவற்றைக் கடைபிடிப்போம். நம் நண்பர்கள், உறவினர்களுக்கும்
மேற்கூறியவற்றை அறிவுறுத்தும். தக்க நேரத்தில் செய்யும் செயல், துன்பம் வருமுன் காக்கும் செயலாகும்.
இது தேசத்தை மட்டும் உத்தேசிக்காமல், நாம் பொறுப்புள்ள குடிமக்களாக ஆற்ற வேண்டிய கடமை ஆகும். இந்திய அரசாங்கத்தின் இந்த அறிவிப்பை அனைத்து குடிமக்களும் அவசியம் பின்பற்ற வேண்டும். மாண்புமிகு பிரதமர் அவர்கள், நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள பயனுள்ள யோசனைகளை, மனித குலத்தின் நன்மை கருதி, நாம் அனைவரும் பின்பற்றுவோம் .
அன்பு சகோதர சகோதரிகளே, நமது சிறந்த அடியெடுத்து வைத்து, ஆன்மீக மற்றும் சமூக பங்களிப்பைச் செய்வோம்.
நம் நம்பிக்கையையும், தன்னம்பிக்கையையும் தளர விடாமல், பகவான் மீது நமக்கு இருக்கும் நம்பிக்கையை உணர்த்துவோமாக. அனைவரும் மகிழ்ச்சியுடன், பத்திரமாக இருக்க வாழ்த்துக்கள்.
நிமிஷ் பாண்டியா,
அகில இந்திய தலைவர்.
தமிழாக்கம்: தி. கல்யாணி, சென்னை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக