தலைப்பு

வெள்ளி, 20 மார்ச், 2020

என் பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு பேச்சையும் கேட்கிறேன்!


எவர் மனிதருக்கான தகுதியை பெறுபவர் என்பதை சுவாமி சுதந்திரப்போராட்ட தியாகியின் வாழ்க்கை மூலமாக உணர்த்துகிறார்... புற சுதந்திரம் மட்டுமல்ல அக சுதந்திரத்தையும் தரக்கூடிய சுவாமியின் மனித ஒழுக்கத்தைப் பற்றிய கீதை இதோ...

சிலர் நல்லதைப் பேசுகிறார்கள். ஆனால் நல்லதைப் பின்பற்றுவதில்லை. விலங்குகள் கூட நினைப்பதொன்றும், செய்வதொன்றுமாக இருப்பதில்லை. அன்பார்ந்த மாணவர்களே, விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்ற பண்டித் மதன் மோகன் மாளவியாவைப் பற்றி உங்களுக்குத் தெரியும்.

அவர் மீசையை பெரியதாக வளர்ப்பதுண்டு. காபி அருந்தும்போது கூட ஒரு ஸ்பூனால் மீசையைத் தூக்கி, பின் காபி அருந்துவார். விடுதலைப் போராட்டத்தின்போது வெள்ளையர்கள் இந்தியர்களைக் கடுமையாக அடித்தனர். தலைவர்களைச் சிறையிலிட்டனர். பண்டித மதன் மோகன் மாளவியா, மற்ற தலைவர்களுடன் சேர்ந்து கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். பிரிட்டிஷ் போலீசாரால் நம் நாட்டு மக்கள் அடிக்கப்பட்டதால் அவர் மிக மனத்துன்பம் அடைந்தார்.


மறுநாளே அவர் மீசையைக் களைந்துவிட்டார். மீசையில்லாமல் இருந்த அவரைக் கண்ட சிறையிலிருந்த நண்பர்கள் மீசையெடுத்ததன் காரணமென்ன என்று வினவினர். அவர் அதற்கு, "ஏன்? பூனைகளுக்கும் எலிகளுக்கும் கூடத்தான் மீசையிருக்கிறது. நமது மக்களுக்கு என்னால் உதவி செய்ய முடியாத போது எனக்கு மீசை இருந்தாலென்ன? இல்லாவிட்டால் என்ன?" என்று மறுமொழி கூறினார். மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியாத நீ மனிதனல்ல" என்பதே அவர் கூறியதின் உட்கருத்து.

 ஒழுக்கத்தில் பயிற்சி கொடுப்பதே கல்வியாகும். சரியான காலம் எது,சரியான செயல் எது எனபதை நீ அறிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் சமூகத்தின் சந்தர்ப்ப சூழ்நிலைகளை அனுசரிக்க வேண்டும். ஒரு வேலையாள் உன் வீட்டினுள் வர விரும்பினால், "உள்ளே வா" என்று அதிகார தோரணையுடன கூறுகிறாய். ஒரு முதியவர் வரும் போது "வாருங்கள்" என்று உபசரிக்கிறாய்.சுவாமி வீட்டுக்கு வர விரும்பினால்,நீ எழுந்திருந்து, "சுவாமி தயவுசெய்து உள்ளே வாருங்கள்" என்று உபசரிக்கிறாய். மூன்று செயல்களும் ஒன்றேயாயினும், வருகை தருபவர்களுக்குத் தகுந்தவாறு, உனது குரல் தொனி வேறுபடுகிறது. இதுவே ஒழுக்கக்கட்டுப்பாடு. நீ கூட்டத்தில் இருக்கும் போது, நீ நகர்ந்து செல்ல வழிவிடும்படி கூட்டத்தினரிடம் கேட்டுக்கொள்கிறோம். உன் வீட்டினுள் நுழையும் போது, காலணிகளைக் கழற்றிவிட்டு, வீட்டுக்குள் நுழைந்து, பெற்றோரை வணங்குகிறாய்.இதுவும் ஒழுக்கத்தின்பாற் பட்டதேயாகும்.


நீங்கள் ஹாஸ்டலில் தங்குகிறீர்கள். 'சுவாமி எனக்கு வேண்டும் எனக்குக் கல்வி வேண்டும்; ஆகவே நான் சுவாமி காலேஜுக்கு வந்திருக்கிறேன்" என்பதை நினைத்துப் பாருங்கள். இது உண்மையானால், நண்பர்களைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். யாராவது பேசிக்கொண்டே இருந்தால் அவரிடம், "சுவாமி அதிகமாகப் பேசுவதை விரும்புவதில்லை" என்று கூறுங்கள். அவனும் சுவாமியை நேசிப்பதால், தன்னைத் திருத்திக் கொள்வான். நீ தனியாக இருக்கும் போது, அறையில் பேசாமலிருக்கிறாய். யாராவது உன் அறைக்குள் நுழைந்து விட்டால் போதும், அவனிடம் கண்டதைப் பேசிக் கொண்டே இருக்கிறாய். நண்பர்களுடன் இருக்கும்போது அளவுடன் பேசு. சிலர், சுவாமி அவர்களை சுற்றி நடந்துவரும் போது அமைதியாக இருக்கிறார்கள். சுவாமி பக்தர்களிடமிருந்து திரும்பி விலகிச் சென்றதும், அவர்கள் பேசத் தொடங்கி விடுகிறார்கள். ஏனெனில் சுவாமி தன் அறைக்குச் சென்று விட்டதால் அவர்களுடன் இல்லை என்று நினைக்கிறார்கள். 


அந்த சமயத்தில் அவர்கள் "சுவாமி சர்வ வல்லமையுள்ளவர், எங்கும் நிறைந்தவர்" என்பதை மறந்து விடுகிறார்கள். இந்தப் பிரபஞ்சத்தில் நடப்பது அனைத்தையும் நான் அறிவேன். என் பக்தர்கள் எங்கிருந்தாலும், அவர்களது ஒவ்வொரு பேச்சையும் கேட்கிறேன். எப்போதும் அவர்களைப் பற்றியே நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர்களைப் பற்றிய எண்ணந்தவிர வேறொரு எண்ணமும் என்னிடமில்லை. அவர்களைத் தவிர வேறொருவரை பற்றியும் நினைக்க எனக்கு விருப்பமில்லை. அப்படிப்பட்ட பக்தர்கள் என்னை மறப்பதற்குக் காரணம், அவர்களிடம் ஒழுக்கக்கட்டுப்பாடில்லாததால்தான்.

ஒழுக்கம் வளரும்போது, உனது சீலமும் வளர்கிறது. அதன்பின் கடவுள்  அருளைப் பெறுகிறாய். ஆகவே உனது செயல்களனைத்தும் இப்போதிருந்து தெய்வீகமாக வேண்டும்.

ஆதாரம்: சாயி அருளமுதம் - கொடை 1994 (தொகுக்கப்பட்ட அருளுரைகள்)


🌻சுவாமியே சதா காவல் காத்து கருணை புரிபவர் என்பதை இதயம் உணர உணர அவரிடம் மனம் சரிந்து... வாழ்க்கை சரணாகதி அடைந்து... புரிகின்ற செயல்கள் எல்லாம் சுவாமிக்கே படைக்கப்படும் அர்ப்பணமாகிவிடுகிறது... சுவாமிக்கும் நமக்கும் ஒரு சென்டிமீட்டர் தூரம் கூட இல்லை என்பதை சுவாமியே உணர்த்தும் போது பக்தி இன்னொரு சென்டிமீட்டர் அதிகரிக்கவே செய்கிறது! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக