தலைப்பு

செவ்வாய், 24 மார்ச், 2020

முதலில் 'நற்குணங்கள்' என்னும் செல்வத்தை விருத்தி செய்து கொள்ளுங்கள்!


ஜகத் என்ற இந்த நிலையற்ற நாடகமாகிய உலகம், மாயையின் அடிப்படையில் நிகழ்வது. ஆகவேதான் இது பொய் எனப்படுகிறது. இவ்வுலகைப் பொய்யென்று அறிவது மட்டுமே, தன்னிடம் உள்ள குறைபாடுகள் என்ன என்று அறிவது மட்டுமே உயர்ந்த வழியில் இட்டுச் செல்ல போதுமானது என்றும், மிக உயர்ந்த உண்மைக்கு இட்டுச் செல்ல வல்லது என்றும் முடிவு செய்யாதீர்கள்.
சுடரும் பொன் போல ஒளிரும் உயர் குணங்கள் நிறைந்த நற்பண்பாட்டினை ஒருவர் பெற்றிருந்தாலேயல்லாமல் ஆன்மீகத் துறையில் முன்னேற்றம் அடைய ஒருபோதும் இயலாது. விளைச்சல் எவ்வாறு நிலத்தின் வளத்தைப் பொருத்ததோ, அது போல முன்னேற்றம் மனிதனின் குணத்தையும் தகுதியையும் பொருத்தது. தகுதியுள்ள நிலத்தில், பொன் போன்ற உயர்ந்த பண்புகளாகிய விதைகளை இட்டு, நல்லறிவின் ஆராய்ச்சியாகிய நீரைப் பாய்ச்சினால், அளவுமிகுந்த விளைச்சல் உரிய நேரத்தில் கிடைக்கும். நற்பண்புகளாகிய நாற்றுக்களை நடாமல்,போஷிக்காமல் இருக்கும் நிலங்களில் பயனற்ற காளான்கள் பன்மடங்காகப் பெருகும். நந்தவனம் உருவாக வேண்டிய இடத்தில் முட்புதர்கள் வளர்ந்து ஊடுருவ முடியாத சிக்கலான காட்டை உருவாக்குகின்றன.

இதுகாறும் ஒருவர் குதர்க்க புத்தியினாலோ, குருட்டு அகம்பாவத்தாலோ, நற்பண்புகளை வளர்த்துக் கொள்ளவில்லை என்றால் இனிமேலாவது அவர் சிறு முயற்சிசெய்யலாம். இதுவும் செய்யவில்லையானால், வாழ்க்கையின் சிறப்பை அவரால் அனுபவிக்க இயலாது. அவர் வாழ்க்கை வீணாகிவிடுகிறது; அவர் உலகில் தோன்றியதன் பலனில்லாமல் போகிறது. எதிரான சக்திகளின் மிக வலுவான தன்மை காரணமாக, மனம் பொய்யான மதிப்பீடுகளில் தன்னை இழந்து, நல்ல வழிகளில் செல்ல முடியாமல் தடுமாறுகிறது. நல்லவற்றிலிருந்து திருப்பப்பட்ட மனம்,அளவற்ற தீமைகளுக்குக் காரணமாகலாம். ஒரு நிமிட அஜாக்கிரதையால், நெருப்புப்பொறி பறந்து வெடிமருந்தில் வீழ்ந்து, அனைத்தும் அழிவது போல, சாதகன் பெற்ற முன்னேற்றம் அனைத்தும் மனக்கவனமில்லாத ஒரு கணத்தில் அழியக்கூடும்.

சிலர் உணர்வுகள் இல்லாத நிலையை அடைய முயற்சித்து, கடைசியில் உயிருள்ள பிணமாக ஆகிவிடுகிறார்கள். அவர்களது வெளிறிய முகங்கள் அபிலாஷையின்றி, ரசனையின்றி வாழ்வதையே காட்டுகின்றன. இது ஆன்மீக ஒழுக்கத்தைப் பயிலுவதில் தீர ஆலோசியாத அவசரத்தின் விளைவேயாகும்.குணங்கள் கடந்த நிலையை அடைவது முடிவில் அவசியம் என்றாலும், அந்த நிலைக்குச் செல்ல அவசரப்படலாகாது. அத்தகைய தீவிர ஆர்வத்தின் விளைவாக சிக்கலான பிரச்சினைகள் உருவாக, அவற்றிலிருந்து தப்பிக்க பலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.முதலில் ஒருவர் நற்குணங்கள் என்னும் செல்வத்தை விருத்தி செய்து கொள்ளவேண்டும்.இத்தகைய  தகுதியைப் பெறுவதில் சிரத்தை காட்டாததால், பல தீரமிகுந்த சாதகர்கள் வழிதவறி, பல ஆண்டுகள் முயற்சி செய்தும் நேர்வழிக்குத் திரும்ப  இயலாமல் திணறுகிறார்கள். மற்றவர் சேற்றின் வழியே நடந்து, அதனுள்ளேயே வழுக்கி வீழ்ந்து விடுகிறார்கள்.

 ஆகையால் குணங்களைக் கடந்த நிலையை அடையும் வழி அபாயங்கள் நிறைந்தது. கருமங்களில் ஈடுபடாமல் ஒருவர் இருக்க முடியாது. ஆகவே நற்குணங்களுடன் கூடிச் செயல்படுவது மிகவும் அவசியம். ஆசைகள் எல்லாவற்றையும் விடுத்து, சுயேச்சையாக இருக்க வேண்டும். நற்குணங்கள் நிறைந்த மனம் இதற்கு உதவி செய்யும்; ஏனெனில் அது மற்றவர்களின் வளமையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளும்; மற்றவர்களுக்கு தீங்கு செய்வதை விட்டுவிடும்; மற்றவர்களுக்கு உதவி செய்யவும், அவர்களைக் குணப்படுத்தவும்,போஷிக்கவும் உள்ள வாய்ப்புகளை நாடும். தான் பெரும் துன்பத்தை ஏற்றுக் கொள்வது மட்டுமல்ல, மற்றவரை மன்னிக்கவும் செய்யும். பொய்யானவற்றை சாராதிருக்கும். உண்மை பேச வேண்டுமென்று மிக எச்சரிக்கையாக இருக்கும்; காமம், பேராசை, சினம் ,அகந்தை இவற்றால் கலங்காது இருக்கும். உலகின் நலத்தையே எப்போதும் நாடும். இத்தகைய மனத்திலிருந்து, அன்பு தடையறாத ஊற்றாகப் பெருகி வருகிறது.

 இத்தகைய மனம் பக்குவப்பட்டு பலனை அடையும் போது, உணர்வுகளிலிருந்து விடுபட்டு, அசைவற்ற அமைதியான, தூய நிலையை அடைகிறது. ஒப்புவமையில்லாத பரமாத்மாவுடன் சுலபமாக ஒன்று சேருகிறது.
       
ஆதாரம்: தியான வாஹினி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக