தலைப்பு

வியாழன், 12 மார்ச், 2020

'ஓம்' என்பதை சரியான முறையில் உச்சரிக்கும் வழி என்ன?


ஹிஸ்லாப்: இறைவனின் நாமத்தை ஜெபிக்க வேண்டி, ஸாயிபாபா, ஸாயிராம், ஸோஹம் இவற்றுக்கிடையிலான உறவு என்ன? ஒவ்வொன்றுக்கும் எந்த உருவை மனத்தில், இருத்திக்கொள்ள வேண்டும்?

பாபா: சாயிபாபா பௌதிக உருவமாகும். மேலும் சாயிபாபா தெய்வீக தந்தையும், தாயுமாவார்.'ஸா' என்ற அக்ஷரம் தெய்வீகத்தை குறிக்கும்.'ஆயி என்ற அக்ஷரம் தாய் என்ற பொருள் கொண்டது.தந்தையைக்குறிப்பது,பாபா என்ற சொல். ஆகையால் "சாயிபாபா" என்பதன் பொருள், தெய்வீக தாய் தந்தையர். சாயிராம் என்பதும் சாயிபாபாவின் உருவை குறிப்பதாகும்.'ஸோஹம்' என்பதற்கு ஒரு உரு இல்லை அதன் பொருள் "நான் இறைவன்" என்பதாகும். இது, ஒருவனுக்குப் பல பெயர்கள் இருந்தாலும், அவை ஒரு உருவத்தையே குறிப்பது போலாகும். உருவுடன் கூடிய நாமத்தை ஜெபிப்பது, ஆரம்பகட்டத்திலாகும். பிறகு, எங்கும் எப்பொழுதும் நிறைந்த, புலன்களுக்கப்பால் உள்ள தெய்வத்தை ஒருவன் பூஜிக்கிறான். ஒருவன் தான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதனையும், இறைவன் அம்சமாகக் கண்டு கொண்டால், அது சாயிராமை இடைவிடாமல் மனதினால் நேசிப்பதற்குச் சமமாகும். அப்போது வெவ்வேறு உருவங்கள் சாயிராமின் உருவில் கலக்கின்றன.

ஹிஸ்லாப்: 'ஓம்' என்பதை சரியான முறையில் உச்சரிக்கும் வழி என்ன?

பாபா: 'ஓம்' என்ற சப்தம் அ உ ம் (A U M) ஆகும்.'அ' தொண்டையிலிருந்து மென்மையாக எழுகிறது. அதுவே பூமியாகும். 'அ' வாயினின்றும் வருகிறது; அந்த சப்தம் மேல் ஸ்தாயியில் எழுகிறது; 'ம்' என்பது உதடுகளால் சப்திக்கப்படுகிறது; அப்பொழுது சப்தம் கீழ் ஸ்தாயிக்கு இறங்குகிறது. தூரத்தில் செல்லுமுன் விமானத்தின் சப்தம் சமீபத்தில் வரும்பொழுது அதிகரிப்பது போலவும், தூர விலகிச் செல்லும் பொழுது சப்தம் அடங்குவது போலும் ஆகும் இது. 'அ' என்பது பூவுலகம். 'உ' சுவர்க்கம்; 'ம்' என்பது தெய்வீகம், எல்லாப் புலன்களுக்கும் அப்பாற்பட்டது.

ஹிஸ்லாப்: இந்த சுத்தமான உச்சரிப்பை ஒருவன் அடைய முடியாவிட்டால்?

பாபா: அன்பு இருக்கும்பொழுது, ஓம்காரம் திருத்தமாக உச்சரிக்கப்படுவது அப்படி ஒன்றும் முக்கியம் வாய்ந்ததல்ல. தாய்க்கும், சேய்க்கும் இடையே புனிதமான தளையாக இருப்பது இந்த அன்பு; குழந்தை அழும்பொழுது, அந்த அழுகை உறுத்தலாக இருப்பினும், தாய் அதைப் பாராட்டுவதில்லை. அவள் குழந்தையிடம் ஓடிச்சென்று அதை கவனிக்கிறாள். தெய்வத்தாய் எங்கும் இருக்கிறாள்.ஸ்வாமி இங்கேயிருக்கிறார்; ஆனால் தெய்வத்தாய் எங்கும் இருக்கிறாள். ஆகையால் ஒவ்வொருவருக்கும் அருள் பெற வாய்ப்பு உண்டு. ஒருவன் கடவுளுக்காக ஏங்க ஆரம்பித்தவுடன், அருள்பாலிக்க, தெய்வத்தாய் அங்கே இருக்கிறாள். இந்த எல்லாவற்றிலும் அன்பே அதிமுக்கியமானது. இறைவனிடம் பக்தி செலுத்துதல் என்பது அன்பு செலுத்தலே. உண்மையான 'ஓம்காரம்' இயற்கையாக எழுவது. அது இரண்டு நாசித் துவாரங்களின் மூலம் நுழைந்து, சிரசின் முன்பகுதி மையம்வரை சென்று, இரண்டு செவிகள் மூலம் வெளியுலகுக்கு வருகிறது. ஒரு வானொலி நிலையத்தின் ஒலிபரப்பும் கோபுரத்திலிருந்து, ஒலிபரப்புவது போலாகும்.

ஹிஸ்லாப்: ஓம்கார சத்தம் உபயோகிக்க அபாயகரமானது அல்லவா? ஓம்கார சப்தம் இடைவிடாத ஒன்றென்றும், அது இடைவிடாது பிரபஞ்சத்தை நிலைநிறுத்தி வருவதாகவும் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் மனிதன் தான் சொல்லும்  ஓம்காரத்தை நடுவில் நிறுத்திவிடுவதன் மூலம், அவனுடைய வாழ்வும் நடுவில் முடிந்துவிடுகிறது. நான் அம்மாதிரி அனேக சம்பவங்களைப் பற்றி கேட்டிருக்கிறேன். ஓம்காரம், ஏற்கனவே உலக பந்தங்களைத் துறந்துவிட்ட சந்நியாசிகளுக்கே பொருத்தமானது என்றும் சொல்கிறார்களே...

பாபா: சன்யாசி என்பவன் யார்? மூன்றுவிதமானவர்கள் இருக்கிறார்கள். முதலில் துவராடை அணிவதன் மூலம் துறவு பூண்டுவிட்டதாகப் பாசாங்கு செய்யும் 'ஆடை சன்யாசிகள்'. அடுத்தது புலன் சன்யாசி. இவர்கள் புலன்களை வென்றவர்கள். இவர்கள் எக்காலத்திலும் உலகைவிட்டு தனிமையை நாடக்கூடாது. தாங்கள் உண்மையிலேயே புலன்களை வென்றவர்களா என்பதை அறிய இவர்கள் வாழ்வில் இயங்கி, தங்களுடைய புலன்களின் இயக்கத்தைக் கண்டறியவேண்டும். பிறகு இறைவனைச் சரணடைந்தும், தங்களுடைய ஒவ்வொரு செயலின் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்தும் வாழ்பவர்கள் இருக்கிறார்கள். இந்தச் சந்நியாசியிடம் அகங்காரம் என்பது இல்லை. அவருடைய இதயம் பரிசுத்தமானது. அவருடைய புலன்கள் அமைதியாகவும், எதிர்மறைகளால் பாதிக்கப்படாமலும்  இருக்கின்றன. இதயம் பரிசுத்தமாக இருப்பின் இடைவிடாத ஓம்காரம், பின்னப்படாது. தீங்கானது எதுவோ எழுவதுபோல் தோன்றினால், அது உண்மைநிலை ஆகாது; ஏனென்றால் ஓங்காரமே உண்மை.ஹிஸ்லாப்: ஒவ்வொரு மூச்சுடனும் ஸோஹம் என்று மக்கள் சொல்லாதது தவறு என்று ஸ்வாமி சொல்கிறார். ஒருவன் அதை எப்படி செய்வது?

பாபா: 'ஸா' என்பது 'அவன்' ஹம் என்பது நான். நீ குறிப்பிட்ட யோகி 'எக்ஸ்' என்பவர் 'ஸா,ஸா' என்று ஒரு நாளில் 24 மணி நேரமும் சொல்ல வேண்டும் என்று உபதேசிக்கிறார்.'ஹம்' என்று சொல்லாததால், நான் என்ற உருவகம் தேய்வதாக எண்ணப்படுகிறது. இதை 24 மணி நேரமும் செய்வது மிகவும் கடினம். அதுவும் உறக்கத்தில் அனேகமாக இயலாத காரியம். தான் இதை செய்வதாக யோகி 'எக்ஸ்' சொல்கிறார்; ஆனால் அவர் அப்படிச் செய்வதில்லை. சுலபமானதும் நல்ல பயன் தரக் கூடியதுமான வழி இருக்கும்பொழுது, இம்மாதிரி கஷ்டமான சாதனை ஒன்றுடன் போராடுவதில் என்ன பயன்?

ஹிஸ்லாப்: சுவாமி! நல்லது. யோகி 'எக்ஸை' விட்டுவிட்டு, நான் பாபா சொல்வது போல் ஒவ்வொரு மூச்சுடனும் 'ஸோஹம்' என்று சொல்ல விரும்புகிறேன். இதற்கான வழிமுறை என்ன? அது ஒவ்வொரு சுவாசத்துடனும் சொல்லப்படுகிறதா?

பாபா: சுவாசம் எப்போதும் 'ஸோஹம்' என்று சொல்கிறது. ஒவ்வொரு உள்சுவாசத்துடனும் 'ஸோ' என்றும், ஒவ்வொரு வெளிசுவாசத்துடனும் 'ஹம்' என்றும் சொல்வது வழக்கம். அதை எண்ணத்தில் சொல்லவும். அது மனதை நிலைநிறுத்தி, சலனமில்லாமல் வைத்துக் கொள்ள வேண்டி செய்யப்படுவதாகும். சிறிது காலத்திற்கு பிறகு இது தானாகவே தொடர்கிறது. பகல் நெடுக 'ஸோஹம்' என்று சொல்லவும். இரவில், உறக்கத்தில் இந்த சப்தம் இயற்கையாக 'ஓம்' என்று மாறுகிறது.

ஹிஸ்லாப்: 'அவன்' 'நான்'தான் என்று ஒருவன் நினைக்க வேண்டுமா?

பாபா: இல்லை. இந்த சப்தம் 'ஸோஹம்'. அது ஒரு இந்தியச் சொல்லோ அல்லது அமெரிக்க சொல்லோ அல்ல. அது சுவாசம் சொல்லும் சப்தமாகும். இந்த சப்தத்தின் பொருளை உணர்ந்து சொல்வது மிகவும் சிறந்ததாகும்; சரியானதாகும்.

ஹிஸ்லாப்: 'ஸோஹம்' என்பது சுவாசத்தின் இயற்கையான சப்தம் என்று ஸ்வாமி சொல்கிறார். என்னுடைய சுவாசத்தை கவனிக்கையில், சுவாசத்தின் சப்தத்தை அம்மாதிரி வழியில் நான் கேட்பதாக எனக்குத் தோன்றவில்லை.

பாபா: நாசி மற்றும் வாய் மூலம் வரும் சப்தம், மனது அல்லது எண்ணங்களுடன் கலக்கப்பட்டு, பலவிதமாக கேட்கப்படுகின்றன. உண்மை நிலை என்னவென்றால், மனது நிச்சலனமாகவும், சுவாசம் முற்றிலும் இயற்கையாகவும் இருக்கும் பொழுது, சுவாசத்தின் சப்தம் 'ஓம்' ஆகும். வாய் வழியாக செல்லும் மூச்சு வயிற்றுக்குள் செல்கிறது.

ஹிஸ்லாப்: கிருஷ்ணன், அர்ஜுனனிடம் ஓம்காரத்தை மனத்தில் சப்திக்கச் சொன்னார்.

பாபா: 'ஓம்காரம்' மனது, நாவு, இதயம் என எல்லா இடங்களிலும் இருக்கிறது. முதலில் ஓங்காரத்தை நாவினாலும், பிறகு மனத்தினாலும் சொல்லவும். 21 தடவைகள் ஓம்காரத்தை சொல்வது முக்கியமானது. ஐந்துவெளிப்புலன்கள், ஐந்து உட்புலன்கள், ஐந்து உயிர்கள் (பஞ்சபூதங்கள்) ஐந்து உடல்கள் (கோசங்கள்) மற்றும் ஜீவன்.

ஆதாரம்: பகவானுடன் உரையாடல் என்ற புத்தகத்திலிருந்து.. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக