தலைப்பு

புதன், 11 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 10 | சாயியே எல்லாம் - சாயி பிரபு

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. பிரபு அவர்களின் அனுபவங்கள்!

அப்போதே செய்துவந்த ஆபரணம் ஜொலிப்பதைப் போல்
 எப்போதும் இறைவன் ஜொலிக்கின்றான் தரிசனத்தில் 
பொலிகின்றான் 
 முப்போதும் காவி அணிந்தாலும் மூவுலகும் ஈர்க்கின்றான்!
 எப்போதும் தன்னிடத்து வாழும் ஏக்கத்தைச் சேர்க்கின்றான்!

கோயம்புத்தூர் கோபிகை:

ஒரு கோபிகை ஆணாகப் பிறந்து சாயி பக்தனாய் நடமாடினால் எப்படியிருக்குமோ அப்படித்தான் பிரபு சத்யசாயி பாபாவின் மீது ஆழ்ந்த பக்தி ஆண்டாளின் பக்தி அதீதமான அன்பு சுவாமியைத் தவிர வேறு யாருக்கும் தன் அன்பைப் பங்கு போட்டுக் கொடுக்க முடியாது என்பதனால் திருமணம் செய்ய மறுத்துவிட்டார். 30 வயதுக்கு மேலாகும் பிரபுவிடம் சுவாமி உங்களை திருமணம் செய்து கொள்ளச் சொன்னால் என்று கேட்டபோது உடனே சொன்னார் 'அப்படியானால் வருகிற பெண் சுவாமியைப் பற்றியே சதா நினைப்பவளாக இருக்கவேண்டும்' சுவாமிக்காயிற்று பிரபுவிற்காயிற்று!

ஆஸ்திரேலியாவில் பணிபுரிந்து கொண்டிருக்கும் இந்த பக்தர் கோயம்புத்தூர்க்காரர். தந்தை பசுவலிங்கம் தாய் உமா கார்த்தியாயினி. தாய் மிகுந்த தெய்வ பக்தி உடைய பெண்மணி. குடும்பம் ஆன்மீகத்தில் ஊறிய குடும்பம் தந்தை நீண்ட நேரம் வழிபாடு செய்வார். தியானம் செய்வார். ஜோசியர். பொதுவான வழிபாடு தெய்வ நம்பிக்கை கொண்டவர்க்கு 1988லிருந்து சுவாமியின் மேல் பக்தியும் நம்பிக்கையும் அதிகமானது. பிரபு சொல்கிறார். முதன்முறையாக குடும்பத்தோடு புட்டபர்த்தி சென்றோம். சுவாமியின் பார்வையே மிகப் பெரிய மாறுதலை ஏற்படுத்தியது. அந்த தரிசனத்திலிருந்து எங்களுக்குள் உள்ளார்ந்த மாறுதல் ஏற்படத் தொடங்கியது.

இங்கு நான் வந்தது படித்தது வேலை செய்வது எல்லாம் சுவாமி சங்கல்பம். முதலில் மூன்று மாதங்களுக்கு தற்காலிக அரசு வேலையில்தான் சேர்ந்தேன்.சாயி இளைஞர் மாநாட்டிற்கு ஆஸ்திரேலியாவிலிருந்து புறப்பட்ட சாயி இளைஞர் குழுவோடு புட்டபர்த்திக்குச் சென்றேன். நிரந்தர பணிக்காக விண்ணப்பித்து விட்டுக் கிளம்பினேன். பர்த்தியிலிருக்கும்போதே கனவில் சுவாமி வந்தார். ஆரஞ்சு உடையில் வந்தார். நீ என்ன செய்கிறாய் என்று ஒவ்வொருவரையும் கேட்கிறார். ஒவ்வொருவருக்கும் விபூதி தருகிறார். 'நீ எதுக்கு வரணும் பர்த்திக்கு' என்று கேட்டார். சுவாமி இரண்டரை வருஷம் ஆச்சு சுவாமியைப் பார்த்து என்று ஏக்கத்தோடு சொன்னேன். 'ஹாஹா' என்று தலையாட்டினார். பர்த்தி வந்து சுவாமியின் ஆசியோடு திரும்பியதும் நிரந்தர வேலை உறுதியாகிவிட்டது. வெள்ளிக்கிழமை காலை ஆஸ்திரேலியாவில் இன்ட்டர்வியூ. அன்றே வேலையில் சேரவேண்டும் என்று வந்தது.சுவாமியின் ஆசீர்வாதம் அது. வேலையில் சேர்ந்தேன். தங்குவதற்கு இடம் தேடியபோது ஒரு இடம் கிடைத்தது.அறை எண் 261. கூட்டினால் 9. முதல் நாள் போய்ப் பார்த்தபோது அங்கு உட்காருவதற்கு ஒன்றுமில்லை. அடுத்த நாள் ஃபர்னிச்சர்ஸுடன் இருந்தது. அது சாயி இளைஞர் என்ற முறையில் இலவசமாகக் கிடைத்தது. பிரிஸ்பேன் வரும்போது 'Townshill' என்ற இடத்திலிருந்தேன். சுவாமியின் இலக்கியங்களை நிறையப் படித்தேன். மூன்றாவது கண் அனுபவம் தியானத்தின் போது ஏற்பட்டது.தியானத்தில் (குண்டலினி) சிக்கல் வந்தபோது சுவாமி உதவினார்.சுவாமியின் ரூபத்தை நெற்றியில் நினைந்தபடி தியானிப்பேன். 3 மணி வரை தியானம் செய்தபின் காலையில் 9. 1/4 வரை தூங்கினேன்.

அது கனவா விழிப்பா என்று புரியவில்லை. என் எதிரில் உண்மையிலிருந்தது சத்யசாயி பாபா படம். அதற்குப் பதில் அங்கு சீரடி பாபா இருந்தார். என் படுக்கையருகில் உட்கார்ந்தபடி பளீரிட்டுப் பிரகாசிக்கும் கண்களோடு என்னையே பார்க்கிறார். சீரடி சாயியைப் பார்த்தபடி பாடி அழ அவர் தனது வலது கால் பெருவிரலை என் நெற்றியின் நடுவில் வைத்து அழுத்துகிறார். தூக்கத்திலிருந்து விழித்து எழுந்தபோது நெற்றிக்கு நடுவில் பெருவிரல் அடையாளம் பதிந்திருந்தது.

 தியான தரிசனம்:

 நீண்ட நேரம் தியானம் செய்து தெய்வீக ஆனந்தத்தில் திளைப்பவர் இந்த பக்தர். வேலை வீடு வேலை வீடு என்று மட்டுமே இருந்த தினசரி வாழ்வில் தியானத்திற்கு அதிக நேரம் இருந்தது. எப்போதும் தியானம் செய்ய வேண்டும் என்ற urge எனக்குள் இருந்து கொண்டே இருக்கும் என்கிறார்.தியானத்தின்போது இளம் வயது சாயிதான் தரிசனத்தில் தெரிவார். 'பத்ரி யாத்திரை' புத்தகத்தில் இளம் சுவாமி ஷால்வ் போட்டு சிரித்தபடி கையில் தட்டு வைத்தபடி நிற்பார்.ஏறக்குறைய  அப்படியாகத்தான் சுவாமி தனக்கு தியானத்தின்போது காட்சியளிக்கிறார் என்றார் பிரபு.

 ஒருமுறை பர்த்தியில் தரிசன வரிசையில் நிற்க சுவாமி என்னிடம் வந்து கையில் விபூதி தந்தார். நெற்றியில் இட்டார். முகம் முழுதும் பூசி விட்டார். இதுபோல் சுவாமி யாருக்கும் செய்ததில்லை என்றார்கள் பக்கத்திலிருந்த பக்தர்கள்.

 என் பிறந்தநாள் சமயம் சுவாமியிடம் இளைஞர் குழுவோடு போயிருந்தேன். சுவாமி குழுவினருக்குப் பேட்டி தந்தாலும் தரலாம் என்று எதிர்பார்த்தபடியிருந்தேன். எனக்கு அப்பா அம்மா எல்லாம் நீதான் சுவாமி நீ அன்போடு ஆசீர்வதித்தாலே போதும் என்று சொன்னேன்.

கண்ணோடு கண்:

 முதல் ஒரு வாரம் சுவாமி எங்கள் பக்கம் வரவேயில்லை. அழுதுகொண்டேயிருந்தேன். சுவாமி கனவில் வந்தார். இனி அழ மாட்டேன் சுவாமி என்று சொல்கிறேன். தலையைத் தூக்கிப் பார்த்து பளீரென்று சிரித்தார். என் பிறந்தநாளன்று இரண்டாவது வரிசையிலிருந்தேன். முதல் வரிசையை நோக்கி வந்த சுவாமி eye to eye என்னைப் பார்த்தார். அபயஹஸ்தம் காட்டி விட்டுப் போனார். அதைவிட ஆனந்தமான திருநாள் எது?!

இன்னொருமுறை பர்த்தியிலிருக்கும் போது கண்ணாடியை எடுத்துச் செல்ல மறந்து விட்டேன். மிகவும் பின்னால் உட்கார்ந்திருந்ததால் சுவாமியை சரியாகப் பார்க்க முடியவில்லை. ஒரே அழுகை எதிரில் தூண் வேறு. அப்படியே முகத்தைக் கையில் தாங்கியபடி கண்களை மூடினேன்.காட்சியா கனவா அதே குல்வந்த் ஹாலில் சுவாமி வந்து அன்போடு என் முன் நின்று சிரிக்கிறார். வழக்கமாக சுவாமி முன் பாடும் 'குமார் பாயி'க்கு  அன்று தொண்டை சரியில்லை. சுவாமி விபூதி தந்து தொண்டையில் தடவி விடச் சொன்னார். அற்புதமாகப் பாடத் தொடங்கினார் அந்த பர்த்திமாணவர். அந்த முறை இன்டர்வியூ கிடைக்கும் என்று நினைத்தேன். இன்னர்வியூ தான் என்று சுவாமி சிரித்தபடி காட்சி தந்தார்.

 அப்பா ஒருவனை நம்பி 4 லட்ச ரூபாய் கொடுத்துவிட்டு அது திரும்பி வராமல் கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். சுவாமியைப் போய்ப் பார்க்கவும் முடியவில்லை. காலையில் 3 மணிக்கு கனவு வந்தது. அப்பாவிற்கு கனவில் சுவாமி வந்து வாடா போடா என்று பேசியிருக்கிறார்.புட்டபர்த்தி மந்திர் முழுவதும் அழைத்துப்போய் சுற்றிக் காட்டியிருக்கிறார்.

சாயி லீலை:

 பிரபுவின் சாயி சேவையில் ரத்ததானம்... அகதிகளாக ஆதரவற்றவர்களாக இருக்கக் கூடியவர்களுக்கு ஆங்கிலம், கம்ப்யூட்டர் போன்றவற்றைக் கற்பித்தல் (Alms) நர்சிங் ஹோம் முதியோர் இல்லம் போன்ற இடங்களில் சர்வீஸ் செய்தல் சுவாமி இலக்கியம் தொடர்ந்து படித்தல் வாசகர் வட்டம் நடத்துதல் என்று சாயி இளைஞர் அமைப்பிலிருந்தபடி எண்ணற்ற பணிகளைச் செய்து வருகிறார். இது சுவாமிக்காகச் செய்வது, சுவாமிக்காகச் செய்வது என்றே எந்த ஒரு செயலையும் செய்கிறேன்."Townshill"ல் இருக்கும் போது பகுதி நேர வேலை டாக்ஸி ஓட்டுதலாக இருந்தது. வாரக் கடைசியில்டாக்ஸி ஓட்டவேண்டும். சரியாகத் தூங்க முடியாமல் போகும்போது சாயிராம் சாயிராம் என்று உச்சரித்தபடியே படுப்பேன். எழுந்து வேலைக்குப் போகவேண்டும் சுவாமி இப்போது தூங்க வேண்டும் என்று சுவாமியிடம் சொல்லியபடி கண்களை மூடினால் Are you the Doer? என்று சுவாமி கேட்கிறார். 'நீ வேலைக்குப் போதல் நீ தூங்குதல் எல்லாம் நீ செய்யும் காரியமா?'

ஒருமுறை வீடு தேடிக் கொண்டிருந்தேன். இரண்டு வீடு கிடைத்தது. சுவாமி ஒரு வீட்டைக் குறித்து அந்த வீட்டிற்குப் போ நீ எங்கு போகிறாயோ அங்கு நான் வருகிறேன் என்றார். ஆஸ்திரேலியாவிற்கு வரும்போது வாராவாரம் சுவாமி பஜனுக்குப் போக வேண்டும் என்று பிரார்த்தித்தேன். "Townshill" ல் வீடு கிடைத்துத் தங்கிய போது அங்கிருந்துTownshill sai centre நடந்து செல்லும் தொலைவில் மிக அருகிலேயே இருந்தது. எத்தனை அதிசயம். பஜனுக்குப் போகும் வேட்கை அங்கு சுவாமி சங்கல்பத்தில் ஆனந்தமாகத் தொடர்ந்தது. நீண்ட நேரம் நாமஸ்மரணை செய்வது இவர் சாதகமாக இருக்கிறது.

ஆஸ்திரேலிய அழைப்பு:

பிபிஏ கம்ப்யூட்டர் படித்துவிட்டு இந்தியாவில் வேலை செய்து கொண்டிருந்தேன்.UK போவதற்கு முயற்சி செய்தேன். விசாவிற்கு விண்ணப்பித்தேன். நேர்முகத் தேர்விற்குப் போனேன். ஒவ்வொரு முறையும் நாமஸ்மரணை நாமஸ்மரணை சுவாமி தயவுசெய்து 'நகர்த்துங்க நகர்த்துங்க' என்று பிரார்த்தித்தபடியிருந்தேன். நேர்முகத்தேர்வு நடந்த 40 நிமிடங்களுக்கும் சுவாமியின் காட்சி கிடைத்த படியிருந்தது. ஆனால் 6 மாதமானது அந்த முயற்சி பலிக்கவில்லை. ஏமாற்றம்தான் UK போவது என்பது இல்லாமல் போனது. என் மாமா சொன்னார் சுவாமியின் நாமஸ்மரணையிலேயே சதா மூழ்கியிருந்தும் சுவாமியைப் பூரணமாக நம்பியும் கூட இந்த உன் முயற்சி தோற்றுப்போனது. ஆறு மாதமாய் உன் அப்பாவோடு அலைந்தாய். அலைச்சல் பணம் எல்லாம் வீணானது. ஏன் இந்த விளையாட்டு? ஏன் சுவாமி தரவில்லை. ஆனால் எதுவோ நல்லதற்குதான் என்று தோன்றுகிறது என்றார்.

 அதன்பிறகு IDP ஆஸ்திரேலியா போகும் முயற்சியை ஏதோ ஒரு தூண்டுதலில் தொடங்கினேன். முதலிலேயே தயாராயிருந்த பேப்பர்களைக் கொண்டு வேலையைத் தொடங்கினேன்.81/2 வாரங்களில் விசா வந்தது. ஆஸ்திரேலியாவிற்கு வரும்போது பதிவு செய்யாமலிருந்தும் விமானத்தில் சைவ உணவு கிடைத்தது. அங்கு வேறு இடமும் தெரியாது. யாரையும் தெரியாது. யுனிவர்சிடிக்கு நேராகப் போய் விட்டேன். அங்கு ஹாஸ்டலில் தங்குவதற்கான இடம் பற்றி விசாரித்தபோது ஒரு நாளைக்கு எழுபது டாலர்கள் என்றார்கள். மலைத்துப் போனேன். சமாளிக்கவே முடியாது. திடீரென்று சைக்கிளில் ஒருவர் வந்தார். உங்களைப் போன்ற மாணவர்கள் தங்குவதற்கு நல்ல இடமிருக்கிறது. வாரத்திற்கு 150 டாலர்கள் என்று சொல்லி வயிற்றில் பால் வார்த்தார். அந்த இடம் கண்டு அங்கே தங்கினேன். சுவாமி படத்தை வைத்துக்கொண்டு தூங்கினேன். படுக்கும் போது சுவாமிக்கு இடம்விட்டுப் படுப்பதுண்டு. ஒருமுறை விடியலில் படுக்கையிலிருந்து சுவாமி எழுந்து போவதைப் பார்த்தேன்.

 அமெரிக்காவிலிருந்து Sister Melody யோடு ஆன்லைனில் கூட்டுப் பிரார்த்தனை செய்தல் சுவாமியின் ஆசிகளையும் அனுப்பும் பணி Sai Grace World Wide என்று அதற்குப் பெயர் வைத்தோம்.

 சுவாமி சொல்லும் Love at Work என்ற நோக்கம் தன்னுடையது என்று சொல்லும் பிரபு சுவாமியின் சத்யம் தர்மம் சாந்தி பிரேமை அகிம்சையை ஐந்து தூண்களாக மதித்துச் செயல்படுகிறார். ஆஸ்திரேலியாவில் தங்குவதற்கு PR வாங்குவதற்கு பேப்பர்களைத் தயார் செய்யத் துவங்கினேன். 2005 ஜனவரி 23ஆம் தேதி விண்ணப்பித்தேன். விண்ணப்பித்த போது கவர்மேல் சாயிராம் என்று விபூதியில் எழுதி அனுப்பினேன். ஆறு வாரத்தில் PR கிடைத்துவிட்டது. இது நடக்க முடியாத அதிசயம் எல்லாம் சுவாமி லீலை என்கிறார் பிரபு. இது மிகப்பெரிய லீலை. இந்த PRக்காக முட்டி மோதுகின்றவர்களுக்கு இது தெரியும் என்கிறார். சுவாமி தான் எல்லாம் சுவாமியின் அருள் தான் என்கிறார். சுவாமி தன் மனதில் குடியேறியேறியதிலிருந்து அப்படி ஒரு உள்மாற்றம். இந்த இளைய பக்தரின் கோபம் ஆவேசம் படபடப்பு எல்லாம் போய் விட்டது. மனம் வெகுவாய் அடங்கி அமைதிப்பட்டுவிட்டது.

சாய் கண்ணனே எல்லாம்:

 எனக்கு சுவாமியைத் தவிர வேறு எதன் மேலும் பிடிமானமில்லை என்று சொல்லும் இந்த பக்தருக்கு சுவாமியின் நினைப்பே உணவாக இருக்கிறது. சுவாமியின் நாமஸ்மரணையே நீராக இருக்கிறது. உண்ணும் உணவும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் எல்லாம் கண்ணன் அன்பே என்பதால் எல்லாம் சாயி சாயி சாயி சாயி சாயிராம் தான் பிரபுவிற்கு. எப்போதும் தியானத்திலிருப்பது போன்ற சாந்தம் குடிகொண்ட இந்த இளம் பக்தர் சுவாமியின் அன்பை அடைந்திருக்கிறார். சுவாமியை அடைவதே தன் லட்சியம் என்கிறார்.

 வெளி நாட்டிலிருக்கக்கூடிய சாயி பக்தர்களின் பக்தியும் நம்பிக்கையும் அற்புதமானவை. சுவாமியிடமான அன்பில் திடம் தீவிரம் மலைபோன்ற சாசுவதமான நம்பிக்கை சுவாமியே உலகம் அவர்களுக்கு நிதானமான நிலையான மென்மையான மேன்மையான மன மாற்றங்களை இவர்கள் அடைந்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட இனிய வட்டத்தில் ஆனந்தமாய் வாழ்கிறார் இந்த இளைய சாயி பக்தர். இவருக்கு சர்வம் சாயிராம்.


 ஜெய் சாய்ராம்!


ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 

(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்) 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக