தலைப்பு

சனி, 14 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 11 | பர்த்திப்பதியை நோக்கி - சாயி முத்துக்குமார்

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் திரு. முத்துக்குமார் அவர்களின் அனுபவங்கள்!

விபூதியால் நோய் போகும்! துன்பம் போகும்!
விபூதியால் பயம் போகும்! சோதனை சூழ்ச்சி போகும்!
விபூதியால் ஜெயமுண்டாகும்! வெற்றியே தோன்றலாகும்!
விபூதியே எல்லாமாகும் !விபூதியே  சாயி யாகும் !

இளம் பக்தர்:

சத்ய சாயி பாபாவினால் சமீபத்தில் ஈர்க்கப்பட்டு சாயி சென்ட்டர்கள், சாயி கோயில், பஜனைகள் என்று அவ்வப்போது சென்று வரும் சாயி பக்தர் முத்துக்குமார். சிறு வயதிலிருந்தே தெய்வபக்தி அதிகம் கொண்டவர். விநாயகரின் மேல் தான் இவருக்கு அத்யந்த பக்தி ஆழ்ந்த ஈடுபாடு. 2004 ல் பிரிஸ்பேனுக்கு வருவதற்குள் அவருக்கு சுவாமி விநாயகராய் அருள் பாலித்ததையும் இந்தியாவில் வழிபட்ட அதே செல்வ விநாயகரை பிரிஸ்பேனில் வழிபட்டதையும் நினைவு கூர்கிறார். அதன்பிறகு வர்ஜீனியாவிலிருக்கும் சீரடி பாபா கோயில் தன்னை ஈர்த்த தையும் சத்ய சாயிபாபா தன்னை இழுத்துக் கொண்டதையும் நினைவு கூர்கிறார்.

திருநெல்வேலி ரயில் நிலைய செல்வவிநாயகர். அவர்தான் எனது முதற்கடவுள். ஆசான் ஆலோசகர். எனக்கு இப்போது யோசித்துப் பார்க்கையில் விந்தையாகத் தான் இருக்கிறது. தினமும் பள்ளிக்கூடம் செல்லும் வழியில் தவறாமல் அவரைச் சந்தித்து விட்டுச் செல்வேன். முதலில் கோயில் சுவாமி என்றிருந்த உணர்வு நாளடைவில் மாறி நான், தினமும் சந்திக்க எனக்குக் கிடைத்த ஆசானாகவே தோன்றினார் செல்வ விநாயகர்.

வறுமைக்கோட்டிற்கும் எனது வீட்டிற்கும் சிறிது இடைவெளியே இருந்ததாலோ என்னவோ, எனது எண்ணங்களை மேம்படுத்த உணர்வளவில் நல்ல சூழ்நிலை அமையவில்லை. கோயிலுக்குச் செல்வதும், அங்கு பல மணிநேரம் அமர்ந்து யோசிப்பதுமே அந்த வயதில் சந்தோஷமான சுகமாயிருந்தது.மெல்ல மெல்ல எனக்கே தெரியாமல் நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் செல்வவிநாயகர் கோயிலிலே எடுக்கப்பட்டது. அறிவியலில் அதீத ஆர்வமும் Rational thinking கொஞ்சம் வளர்ந்த போதும் கூட, 'கோயில் மணி மூன்று முறை நான் வலம் வரும்போது அடிக்கப்பட்டால்,' 'இன்று விநாயகர் வெள்ளை நிற ஆடை அணிந்து இருந்தால்,' 'சிகப்பு நிற பூ என் கைக்கு வந்தால்' போன்ற இறைவனைச் சார்ந்த எண்ணங்களே பெரும்பாலான தருணங்களில் எதையும் தீர்மானிப்பதாக அமைந்தன.Intution க்கும் இறை அன்பிற்கும்  ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவே எனது உள் மனம் எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

கேள்வியும் பதிலும்:

பத்தாம் வகுப்பில் வசதிக் குறைவு காரணமாகப் பள்ளிப்படிப்பு தடைபெற்றபோது ஒர் ஆசிரியரை அனுப்பி என்னை மீண்டும் பள்ளியில் சேர்த்தது தெய்வம்தான். எந்த பொறியியற் கல்லூரி நல்ல கல்லூரி என்று கூட அறிந்திராத சூழ்நிலையில் வளர்ந்த எனக்கு முன்பின் தெரியாத ஒரு பெரியவரை அனுப்பி விண்ணப்பப் படிவத்தில் தமிழகத்தின் தலைசிறந்த கல்லூரியின் பெயரை நிரப்பித்தர செய்தார். அன்று அந்தப் பெரியவர் வந்து எனது விண்ணப்பப் படிவத்தை நிரப்பா விட்டால் அதிக மதிப்பெண் பெற்றும் நல்லதோர் கல்வி எனக்குக் கிட்டாமல் போயிருக்கும். கல்லூரிப் படிப்பிற்காகக் கோவை சென்றபோது என்மனதில் பிரிவின் சுமையைப் புகுத்தியது கோயில் மட்டுமே. கல்லூரி அருகிலிருந்த பீளமேடு கணபதி கோயில் தாயை இழந்த குழந்தைக்கு மீண்டும் அன்னை கிடைத்த உணர்வைத் தந்தது. அன்றாடம் நான் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார் விநாயகர். நல்ல நண்பர்களையும், சிறந்த உறவுகளையும் எனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தார். இறைவனின் பாதுகாப்பிலேயே எல்லாச் செயல்களும் நடந்து கொண்டிருந்தன.

வர்ஜீனியா கோவில்:

ஆஸ்திரேலியாவிலும் நான் குடியிருந்த இருப்பிடத்திற்கு அருகே செல்வவிநாயகர் கோயில் கொண்டு என்னை ஆனந்தப் படுத்தி ஆசிகள் தந்தார். 2004ஆம் ஆண்டு பிரிஸ்பேன் வந்தபோது அங்கிருந்த கோயில்கள் பற்றித் தகவல் தேட ஆரம்பித்தேன். முதலில் சந்தித்த இந்திய நண்பர் என்னை வர்ஜீனியாவிலுள்ள ஷீரடி பாபா கோயிலுக்கு அழைத்துச் சென்றார். அந்த அமைதிச் சூழலும் அங்கு வீற்றிருந்த சீரடி பாபாவின் அன்பு கலந்த பார்வையும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. மிகப்பெரிய சத்ய சாயிபாபாவின் படங்களிலிருந்து பொங்கி வழிந்து கொண்டிருந்த விபூதி எனக்கு அருமருந்தானது. தாயின் மடியாய் இந்தக் கோயில் எனக்கு தந்து வரும் நிம்மதி அலாதியானது. இப்போது விநாயகர் சாயிபாபாவானார். மீண்டும் பள்ளிப்பருவத்தில் கடவுளோடு இருந்த ஒர் உணர்வு என்னை மெல்ல ஆக்கிரமிக்கத் தொடங்கியது. கடந்த வருடம் சொந்தமாக தொழில் செய்யத் தொடங்கியபோது (Managment consulting)  தோன்றிய மனக்குழப்பத்திற்கெல்லாம் பாபாவின் கோயிலே என் யோசனைக் கூடமாக அமைந்தது. சின்னச் சின்ன அனுபவங்கள் படிகள் போட்டு சாயிபாபாவிடம் என்னை அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. 

சாயிமாதா:

இந்த ஷீரடி கோயிலை பர்த்திபாபாவின் வழிகாட்டுதலின்படி அமைத்த ஃபிஜி இந்தியரான சைலேஷ்வர் புட்டபர்த்தியில் பல மாதங்கள் தங்கி வந்த அனுபவங்களைச் சொன்னபோதும் கோயிலுக்கு வந்து போகும் சாயி பக்தர்களுக்குக் கிடைத்த அனுபவங்களை கேட்டபோதும் பிரமிப்பும் பக்தியும் வெகுவாய் என்னை ஆட்கொண்டது. ரத்த அழுத்தமும் சர்க்கரையும் என் உடல் நிலையைப் பாதிக்க மருத்துவ சிகிச்சையை மேற்கொண்டிருந்த சமயத்தில் இந்தியாவிலிருந்து வந்த சாயி பக்தையான ஆன்ட்டியின் பிரார்த்தனைப் படி சுவாமி சத்யசாயி பாபாவின் விபூதியைத் தொடர்ந்து உட்கொண்டேன்.மருத்துவர் பாராட்டும்படியாய் என் உடல் நிலை வெகு சீக்கிரமே சரியானது. அனேகமாய் அங்கங்கே நடக்கும் சாயி பஜன்களுக்கெல்லாம் போய் வரத் தொடங்கினேன். என் தாய் சிறுபோதிலேயே மறைந்து விட்டதால் நான் வழிபடத் தொடங்கிய 'சாயி' எனக்குத் தாயானார்.சுவாமி சங்கல்பப்படி 2008ல் உனக்குத் திருமணமாகும் என்று அந்த ஆன்ட்டி சொன்னபடியே திருமணமானது. சென்னையில் திருமணமானதும் புட்டபர்த்திக்கு மனைவியோடு சென்று சுவாமி பாபாவைத் தரிசித்து மகிழ்ந்தேன். என் மனைவி பாபாவின் பக்தையாக இருந்தாள். பஜனைப் பாடல்களை நன்றாகப் பாடக்கூடியவளாக இருந்தாள்.


சாயிபாபா எனக்குத் தாயாயிருந்து நல்ல துணையைத் தந்து வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் எனக்கு வழிகாட்டியாயிருக்கிறார். சாயிபாபாவின் அன்பு எந்த ஒரு சோதனையையும் எதிர்கொண்டு வெற்றியடையும் மனோபலத்தை எனக்கு அளித்திருக்கிறது. வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவங்களை உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெளிவாக்கும் பாபாவின் புத்தகங்கள் எனக்கு அற்புதமான கலங்கரை விளக்கமாயிருக்கிறது.

ஜெய் சாய்ராம்!

பரம்பொருள் பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நல்லாசியுடன் இந்த 'சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை' புத்தகம் இனிதே நிறைவு பெறுகின்றது. இந்தப் புத்தகத்தை ப்ளாகில் பதிய ஒப்புதல் அளித்த இந்த புத்தகத்தின் ஆசிரியர்  கவிஞர் பொன்மணி அவர்களுக்கும், மேலும் இந்த புத்தகத்தை எழுத்தாக்கம் செய்து தந்த சாயி சகோதரி திருமதி. கலைச்செல்வி அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.  🙏 

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 
(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்) 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

1 கருத்து: