தலைப்பு

செவ்வாய், 10 மார்ச், 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 9 | சர்வம் சாயி (மை)மயம் - சாயி வித்யா

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சாயி வித்யா அவர்களின் சாயி அனுபவங்கள்.

அபயந்தருகின்ற கரமும் அருளைத் தருகின்ற பதமும்
அபலை உயிர் இன்பம் எய்திட வழியைத் தருகின்ற விழியும்
சபையில் நிறை பக்தர்க்கன்பு பொழியும் நற்கனிமொழியும்
சபாபதியுன் மாட்சி மையை சாசுவதமாக மொழியும்!

ஆசீர்வதிக்கப்பட்ட தம்பதி:

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனிலிருக்கும் ஃபாரஸ்ட் லேக்(Forest Lake) அனேகமாக ஒரு மயிலாப்பூர் அடையாறு மாம்பலம் எல்லாம் கலந்த கலவை. அங்கிருக்கும் அத்தனை தமிழ்நாட்டுக் குடும்பங்களிலும் சத்யசாயி வழிபாடு பேரளவிற்கோ ஓரளவிற்கோ கலந்திருக்கிறது.
பேரளவிற்கு என்று எடுத்துக்கொண்டால் 'சாயிராம்' என்று வீட்டிற்குப் பெயர் வைத்திருக்கும் வித்யா ரகு தம்பதியை முதலில் குறிப்பிடலாம். போஷ்வானாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்து குடியேறிய தமிழ்நாட்டுக் குடும்பங்களில் இவர்கள் குடும்பமும் ஒன்று. இவர்களின் மகள் சுனைனா 12 வயதுச் சிறுமி. சுவாமியின் மேல் மிகுந்த அன்பு கொண்டவள். 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கு (போஷ்வானாவில்) ஒரு சென்ட்டர் அமைக்கவேண்டும் என்று அங்கிருந்த சாயிபக்தர்கள் தீவிரமாக நினைத்து சுவாமி சங்கல்பப்படி அற்புதமான ஒரு சாயி மையத்தை நிறுவியதையும் அங்கு விமரிசையாக நடைபெற்ற நடைபெற்றுவரும் சாயி வைபவங்களையும் சந்தோஷமாக நினைவு கூறுகிறார். அங்கு பலரும் செய்த செய்துவரும் சாயி பணிகளையும் அன்போடும் ஏக்கத்தோடும் கூறுகிறார்.பிரிஸ்பேன் வந்ததும் இந்த பெரிய அளவிற்கு சர்வீஸ் செய்ய வேண்டிய அவசியம் சூழ்நிலை இல்லை என்பதால் பெரும்பாலும் சுவாமிக்கு தொடர்ந்து பல வீடுகளிலும் ஒவ்வொரு விசேஷங்களின் போதும் பஜனைகளை நடத்தி வருகிறார்கள். திருமண நிச்சயம், திருமணம், வளைகாப்பு, குழந்தைக்குத் தொட்டிலிடுதல் என்பதான விசேஷங்களின் போதெல்லாம் சாயி பஜன் தான். சுவாமியும் பஜனைகளின் வழிபாடுகளின் போது அதை அங்கீகரித்து அவரவர்க்கேற்றபடி ஆசீர்வதிக்கிறார்.

சுவாமியின் தெய்வீக அதிர்வுகளில் புனிதப்பட்டிருக்கும் வீடு இது. சுவாமி இங்கு ஆனந்தமாக இருக்கிறார்.சுவாமிக்கான ஆயிரக்கணக்கான தமிழ் இந்தி பஜனைப் பாடல்களை ரகு அற்புதமாகப் பாடுகிறார். பொது நிகழ்ச்சிகள் விழாக்கள் என்று போவதும் வருவதும் இருந்தாலும் சுவாமிக்கான நிகழ்ச்சிகளிலேயே இவர்களுக்கு ஆத்மதிருப்தி.

கணவர் மற்றும் மகளுடன் திருமதி. சாயி வித்யா 

 சாயி மையம் உருவானது:

 போஷ்வானா சாயி மையத்தினை உருவாக்கியபோது ஏற்பட்ட அனுபவங்களும் அங்கு ஆனந்தமாய் பணிசெய்து கிடந்த பொழுதுகளும் இவர்களுக்குள் பசுமையாகப் படிந்திருக்கின்றன. தென்னாப்பிரிக்காவின் போஷ்வானாவில் எந்த நிமிடமும் எந்த கொள்ளைக் கும்பலும் கொலைகாரக் கும்பலும் புகுந்து குடும்பத்தைக் கலைக்கலாம் என்பதான ஒரு பீதி நிறைந்த வாழ்க்கைச் சூழலில் பிரசாந்தி வாசன் எப்படி அவர்களுக்கு சாந்தியையும் சந்தோஷத்தையும் காவலையும் தந்து அவர்களை ஆட்கொண்டான் என்பதைச் சொல்கிறார் வித்யா.

சுவாமி எங்களை ஆட்கொண்ட விதம் அதிசயமானது. 10 ஆண்டுகளுக்கு முன்பு ஹிண்டு ஹாலில் (கோயில்) ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் முதல் வியாழக்கிழமைகளில் பஜன் நடந்து கொண்டிருந்தது. 1996 ஆம் ஆண்டு தொடங்கி எங்கள் வீடுகளில் வியாழன்தோறும் சாயி பஜனைகளை நடத்தத் தொடங்கினோம். ஐந்து குடும்பங்கள் 50 குடும்பங்களானபோது கூட்டம் அதிகரித்த போது இடமில்லை. உட்கார நிகழ்ச்சிகள் நடத்த சுவாமி பணிகள்புரிய ஒரு மையம் தேவையென்பதை உணர்ந்தோம். சுவாமியிடம் பிரார்த்தித்தபடி ஒரு 'பில்டிங் கமிட்டி' அமைத்தோம்.

கட்டிட அமைப்பு நிர்வாகக்குழு 'டிரஸ்ட்' ஒன்றும் ஆரம்பித்து சாயிசென்ட்டர் தொடங்க முயன்றோம். அதற்கான திட்ட வரைபடத்திற்கு யோகேஷ் மோகன்ராஜு என்ற இந்திய வர்த்தகரை அணுகியபோது முதலில் அவர் பதில் சாதகமாக இல்லை. பிறகு தன் சாயி நண்பரோடு வேலை தொடர்பாக அவர் வெளியூர் சென்றபோது தன் நண்பர் மறந்து(!) காரில் வைத்து போன பாபா புத்தகத்தைப் படித்ததிலிருந்து அதன் பிறகு இந்த ராஜு பர்த்தி ராஜுவின் தீவிர பக்தரானார். இந்த சாயிமையத் திட்டத்திற்கு முதுகெலும்பானார்.

இடத்திற்காக விண்ணப்பித்த போது அது நகரத்தை விட்டு மிகவும் தூரத்தில் அமைந்திருந்தது. பிறகு இயல்பாக சில காரணங்களால் அரசாங்கம் இன்னோர் இடம் தந்தது. அது நகரத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலுக்கு எதிரே கிடைத்தது. அந்த இடம் முற்றிலும் முட்புதர்கள் நிறைந்துகிடந்தது. முட்புதர்களை அகற்றி சுத்தம் செய்ய ஒரு பஞ்சாபி வாலண்டியர் முன்வந்தார். முட் புதர்களுக்கு நடுவில் ஒரு இடத்தில் துளசிச் செடிகள் இருந்ததைப் பார்த்து ஆச்சரியமும் ஆனந்தமும் கொண்டோம். அது சுவாமியின் ஆசீர்வாதமாகப் பட்டது. இந்த இடத்தில் ஒரு துளசி மாடம் அமைக்க முடிவு செய்தோம்.

பூமி பூஜைக்கு நாள் குறித்து ஏற்பாடுகள் செய்ய ஆரம்பித்தோம். திட்டப்படி செலவு 105 மில்லியன் புலா(pula) வேலை தொடங்கியபோது சில ஆயிரங்களே இருந்தன. பூமிபூஜை தொடங்கியதிலிருந்து நன்கொடைகள் வந்து குவியத் தொடங்கின. அன்றே பிளாட்டுக்கான தொகை முழுவதுமாய் கொடுக்க ஒரு பெயர் சொல்ல விரும்பாத பக்தர் முன்வந்தார்.

போஷ்வானா பிரசாந்தி நிலையம்:

 கட்டிட வேலை தொடங்கிய போது முதலில் ஃபென்ஸ் (Fence) கட்டுவதற்குக் கூட பணமில்லை.திரு.ஐயர் என்ற இந்தியக் கட்டிட வரைபட வல்லுநர் ஒரு வரைபடம் தயாரித்தார். சாதாரணமாக ஹால் ஆல்டர்(alter) என்று தொடங்கி முற்றிலுமாக மாறி சுவாமி ஆல்டர், சுவாமிக்கு தனி அறை, நேர்காணல் அறை, பெரிய ஹால், சமையலறை, பாலவிகாஸ் வகுப்பறைகள், அலுவலக அறை என்று மந்திரம் போட்டதுபோல மாய விஸ்வரூபமெடுத்தது திட்டம். 2001 ல் தொடங்கி ஒன்றரை வருடத்திற்குள் இந்த போஷ்வானா பிரசாந்தி நிலையம் உருவானது. பெயர் சொல்லாமல் வந்த நன்கொடை கள் ஏராளம்.செங்கல்...மரச்சட்டங்கள், கண்ணாடி, கதவு, கூரை, தரைவிரிப்புகள், டைல்ஸ், சிமெண்ட், சமையலறைப் பொருட்கள், (குளியலறைக்கு) பாத்ரூமிற்குரிய பொருள்கள் எல்லாம் பொருத்தப்பட வேண்டிய பொழுதுகளில் அதற்கென காத்திருந்த ஒவ்வொரு பக்தர் மூலமாக நடந்தேறியது.

இந்த திட்டத்தின் சிறப்பு அம்சம் பிளாட் எண்ணின் கூட்டுத்தொகை, பிளாட் ஸ்கொயர் மீட்டரின் கூட்டுத்தொகை, பூமி பூஜை செய்த தேதி என்று எதைக் கூட்டினாலும் அது எண் 9ல் முடியும். Alterம் ஒன்பது கோணங்களில் கட்டப்பட்டது.

இந்த சாயி கோயில் சொந்த வீடு போல் எங்களனைவருக்கும் பிரியமாக ஆனது. அனைவரும் ஒரு குடும்பமாய் ஒவ்வொரு வாரமும் சுத்தம் செய்வோம். கோயிலில் முதலில் சத்யசாயி பாபாவின் படமும் சீரடி பாபாவின் படமும் வைத்தோம். ஒரு பக்தர் சீரடி பாபா விக்ரஹம், கணபதி விக்ரஹம் இந்தியாவிலிருந்து கொண்டு வந்தார். விக்ரஹ பிரதிஷ்டை செய்ததும் கோயிலின் சக்தி அளவிட முடியாததாக ஆனது. நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்குகொண்ட ஒவ்வொரு பஜனையிலும் வைப்ரேஷன் கூடியது. அங்கு ஒவ்வொருவரும் பாபாவின் பிரத்யட்சத்தை ஒவ்வொரு வகையில் உணர்ந்தோம். ஒரு பக்தைக்கு குழந்தை முருகன் வடிவிலும், ஒரு பக்தர்க்கு சுவரில் சுவாமி அமர்ந்திருக்கும் காட்சியும், இன்னொரு பக்தர்க்கு சுவாமி அமர்ந்திருக்கும் காட்சியும் தெரிந்து பரவசப்படுத்தின. பாலவிகாஸ், யூத் விங், மகிளாஸ் விங், நாராயண சேவைப் பிரிவு என்ற அனைத்து அமைப்புகளோடும் மையம் தொடங்கியது. அனாதை ஆசிரமங்கள், பார்வையற்றோர் பள்ளி மருத்துவமனைப் பணிகள், செஞ்சிலுவைச் சங்கம் என்று ஒவ்வொரு வாரமும் சேவைகள் தொடர்ந்தன. ஒவ்வொரு வருடமும் சிவராத்திரி குருபூர்ணிமா போன்ற நாட்களில் அகண்ட பஜன்கள் வெகு சிறப்பாக நடைபெறும். ஈஸ்வரம்மா தினம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படும்.

 சுவாமியின் பிறந்த நாளில் காலையில் 21 முறை ஓம்காரம், சாயி சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனத்துடன் பிறந்தநாள் விழாவைத் தொடங்குவோம். மாலையில் பஜன் மற்றும் குழந்தைகள் கலை நிகழ்ச்சி, பிறந்தநாள் கேக் வெட்டுதல், ஊஞ்சல் எனப் பல நிகழ்ச்சிகள். ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் வரும் பக்தர்களின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டேயிருக்கிறது.

 குமார் என்ற பக்தர் வீட்டில் பாபா பிரத்யட்சமாய் நடமாடுகிறார். சுவாமியின் அத்தனைப் படங்களிலும் விபூதி தேன் குங்குமம் என்று  அருள் பொழிகிறார். விபூதியில் பதிந்த பாபாவின் பாதங்கள் படச்சட்டத்திற்கு உள்ளே விபூதி படிந்து பரவும் அதிசயம் என்று சுவாமி பல லீலைகளை அங்கு புரிந்து வருகிறார். ராஜுமகாஜன் வீட்டில் பஜன் நடந்தபோது சுவாமியின் படமடிப்பில் 'ஓம்' வடிவம் தோன்றியது. ஒருமுறை பஜன் நடக்கும்போது பலத்த காற்று அடித்தபோது சுவாமி படத்தின் மேலிருந்து பூக்கள் சில கீழே விழுந்தன. காற்றினால்தான் விழுந்தன என்று அனைவரும் நினைத்தனர். அப்போது முன்பைவிட அதிவேகமாகக் காற்று அடித்தது. அப்போது ஒரு பூவும் விழவில்லை. சுவாமியின் பிரத்யட்சம் வருகையை அனைவரும் உணரமுடிகிறது.

போஷ்வானாவிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு வந்தபோது முதலில் நாங்கள் தேடியது சாயிசென்ட்டர் சாயி பஜன் நடக்கும் வீடுகளை.. இங்குள்ள சூழலில் எந்த அளவிற்கு முடிகிறதோ அந்த அளவிற்கு சுவாமிக்கான வழிபாட்டையும் பஜனைகளையும் தொடர்ந்து செய்யும் பாக்கியத்தை சுவாமியின் அருளால் பெற்றிருக்கிறோம் என்று சொல்லும் வித்யா..தன்னளவில் சுவாமி தந்த அனுபவங்களை நெகிழ்ச்சியோடு நினைவு கூர்கிறார்.

 என் சகோதரிக்கு பிரசவ நேரம். அவளுக்கு ஏற்கனவே ஒரு முறை அபார்ஷன் ஆனதால் மிகவும் கவலையும் பயமுமாயிருந்தேன். அப்போது நான் போஷ்வானாவிலிருந்தேன். பார்வையற்றோர் பள்ளிக்குப் போய் விட்டு வரும் வழியில் சுவாமியிடம் வேண்டிக் கொண்டேயிருந்தேன். அதே சமயம் அவளுக்கு பிரசவ வலி ஆரம்பித்து மருத்துவமனைக்குப் போக எழுந்தபோது பாபாவின் 'விபூதி மந்திரம்' எழுதிய விபூதிப் பொட்டலம் ஒன்று படுக்கையிலிருந்து கீழே விழுந்தது. அங்கு யாரும் பொட்டலத்தை வைக்கவில்லை. அரை மணி நேரத்தில் அவளுக்கு சுகப்பிரசவம் ஆனது.

 என்னுடைய மாமா பையனுக்கு kidney transplantation operation செய்ய இருந்தபோது போஷ்வானாவில் (BOTSWANA) ஒரு சிறப்பு பஜன் வைத்திருந்தோம். வீடு முழுவதும் விபூதி மணம் இரண்டு நிமிடத்திற்கு இருந்தது. அதுவே எனக்கு சுவாமி தந்த ஆசீர்வாதமாகப் பட்டது. அறுவைச் சிகிச்சையின் போது மருத்துவர்கள் நர்சுகள் அனைவரும் ஆரஞ்சு வண்ண அங்கி அணிந்திருந்தனர். அது பாபாவின் வருகையாக இருந்தது. அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்து இப்போது அவன் குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கிறான்.

 போஷ்வானாவில் சுவாமியின் 75வது பிறந்தநாள் சமயத்தில் 75 நாட்கள் 108 முறை சாயிகாயத்திரி படித்தோம். வியாழன் ஞாயிறு ஆகிய தினங்களில் சாயி காயத்ரி முடிந்ததும் ஒரு மணி நேரம் பஜன் இருந்தது. அப்போது சாயி சகோதரி ஒருவர் 'அருள் தர வருவாய் குருநாதா' என்ற பாடலை பாடினார். அதில் 'அன்னையும் நீயே தந்தையும் நீயே' என்ற வரிகள் வந்த போது என்னையும் அறியாமல் என் இறந்த தந்தையை நினைத்து அழுதேன். அன்று ஆரத்தியின் போது பகவானின் படத்தைப் பார்த்த போது என் தந்தையின் மூக்குக்கண்ணாடி போட்டிருப்பது மாதிரியான காட்சி தெரிந்தது. எந்தப் பக்கத்தில் இருந்து பார்த்தாலும் அந்த காட்சி மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்தது.

 2007 நவம்பர் 23ல் ஆஸ்திரேலியா ஃபாரஸ்ட் லேக்கிலுள்ள எங்கள் வீட்டில் பாபா பிறந்த நாளை விமரிசையாகக் கொண்டாடினோம். இம்முறை பின்னணியாக பிரசாந்தி மந்திர் மாடலைத் தயார் செய்து வைத்து பஜன் கலைநிகழ்ச்சிகள் நடந்தபோது பிரசாந்தி நிலையத்திலிருந்து கொண்டாடிய மகிழ்ச்சி ஏற்பட்டது. முதலில் இந்த மாடலை விட சுந்தரம் மாடல் பின்னணியைத் தயார் செய்வது என்று சொன்ன பதி ரேணு தம்பதியிடம், எல்லாம் செய்வது சுவாமி 'பிரசாந்தி மந்திர்' பிண்ணனி இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நாங்கள் கேட்டுக்கொண்டோம். அன்று இரவு தொடங்கி அவர்கள் தன்னியல்பாகவும் தூண்டுதலோடும் பிரசாந்தி மந்திர் மாடலை இரவு பகலாக உழைத்து அற்புதமாக உருவாக்கித் தந்தனர். பிறந்தநாளின் போது அந்தத் தம்பதியை சுவாமிக்கு முதல் ஆரத்தி எடுக்க வைத்தோம்.

 கண்ணெதிரில் மகள் இருந்து கொண்டிருக்கவேண்டும் ரகுவிற்கு. ஒரே மகளானதால் சுனைனா ரகுவின் செல்லக் குழந்தை. ஒருமுறை சுனைனா பள்ளியில் கேம்ப் போனபோது ஒரு வாரமாய் மகளைப் பிரிந்திருக்க நேர்ந்தது. தங்களைப் பிரிந்து அங்கே எப்படியிருக்கிறாளோ பத்திரமாக இருந்து விட்டு வர வேண்டுமே என்ற கவலையும் பரிவுணர்ச்சியும் அதிகமான நிலையில் காரோட்டிக் கொண்டிருந்த போது ரகுவிற்கு தெள்ளத் தெளிவான காட்சி தெரிந்தது. இப்போதிருக்கும் சுவாமியாய் மிக மெல்ல நடந்தபடி சுவாமி சுனைனாவின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தார். அப்படி ஒரு அமைதியும் ஆசுவாசமும் ஏற்பட்டது ரகுவிற்கு...சுனைனா என் மகள் அவளுடன் எப்போதும் நானிருக்கிறேன் கவலைப்படாதே என்று சுவாமி சொன்ன காட்சியல்லவா அது?!

 ஒருமுறை பெரிய ஷெல்ப் ஒன்று சுவாமிக்காகத் தயார் செய்து உள்ளே வைத்து படங்களை வைத்து விட்டு ஹாலில் சோபாவில் மதியம் உறங்கிக் கொண்டிருந்த ரகுவின் கனவில் சுவாமி வாசல் கதவைத் திறந்து கொண்டு பூஜையறையில் நுழைந்ததாய்க் கனவு வந்தது.

 இன்னொரு முறை ஒரு வீட்டில் தனியாக இருந்தபோது சுவாமி கையில் நிறைய புத்தகங்களை அடுக்கியபடி மிகக் கோபமான முகபாவத்தோடு பூஜையறையில் நுழையும் கனவு வந்தது. அது அந்த வீட்டில் நுழைய முயன்ற தீயசக்தி ஒன்றை விரட்டியபடி நுழைந்ததால் ஏற்பட்ட கோபம் என்பதையும் சுவாமி உணர்த்தினார். யாருக்காவது சுவாமியிடம் மனமுருகப் பிரார்த்திக்கும் பழக்கம் வித்யாவிற்கு உண்டு. ஒரு பெரிய வீடு வாங்கி ஒரு சென்ட்டர் வைத்து சுவாமியின் பணிகளை இன்னும் சற்று விரிவாக செய்ய வேண்டும் என்ற எண்ணம் ரகுவிற்குள் தீவிரமாக இருக்கிறது. சுவாமி எங்களுக்குப் போதுமான செல்வம் வசதியைக் கொடுத்திருக்கிறார். சுவாமிக்காக ஏதாவது இங்கு செய்ய வேண்டும். மகள் சுனைனா மருத்துவம் படித்துவிட்டு ஏழைகளுக்கு இலவச மருத்துவப் பணி செய்ய விரும்புகிறார். அவள் திருமணமானதும் நிரந்தரமாய்ப் புட்டபர்த்தியில் போய்த் தங்கி சுவாமிக்குப் பணி செய்து வாழ வேண்டும் என்ற ஆத்மார்த்தமான தவிப்பு இந்தத் தம்பதிக்குள் நிறைந்திருக்கிறது. சுவாமியின் கருணை அவர்கள் எண்ணப்படியே அவர்களை அழைத்துக் கொள்ளலாம்.

 ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 

(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்) 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக