தலைப்பு

புதன், 18 மார்ச், 2020

ரங்கனுக்கு தரிசனம் தந்த அந்தரங்கன்!

திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரங்கன் அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவம்!

அன்று புத்தாண்டு 1995 ஜனவரி  1, வழக்கமாய்ப் புத்தாண்டில் சுவாமி தரிசனத்திற்கு புட்டபர்த்தி போய்விடும் ரங்கன் இம்முறை போகவில்லை. குடும்பத்தினர், அன்று அனுமத் ஜெயந்தியாயிருந்ததால் காக்களூர் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் புறப்பட்டுப் போயிருந்தனர். அப்போது காலை 9 மணியிருக்கும். தான் மட்டும் வீட்டிலிருந்த ரங்கன் நண்பர்களுக்கெல்லாம் ஃபோன் செய்து புத்தாண்டு வாழ்த்து சொல்லிக்கொண்டிருந்தார்.

குதூகலத்தோடு வரிசையாய்ப் பேசிக்கொண்டேயிருந்தார். அப்போது 'காலிங் பெல்' அடித்தது. போனை வைத்துவிட்டு நிதானமாய் வந்தவர் 'யாராச்சும்' நண்பர்கள்தான் வந்திருப்பார்கள் என்று நினைத்தபடி கதவைத் திறந்தார். வாசலில் சுவாமி சிரித்தபடி நின்று கொண்டிருந்தார்! எப்படியிருக்கும் ரங்கனுக்கு?! ரத்தம் முழுதுமாய் தலைக்கேறி விட்டது போல் படபடப்பு வந்து விட்டது. ஒன்றும் புரியவில்லை.'வாங்கோ சுவாமி' என்று அழைத்ததும், 'சுவாமி' சகஜமாய் உள்ளே ஹாலுக்கு வந்து நின்றார். அவர் முன்னால் வந்து நின்ற ரங்கனுக்கு கைகால்கள் உதற ஆரம்பித்தன. என்ன பேசுவது சொல்வது உறைந்துவிட்டது எல்லாம். தகதகவென்ற ஆரஞ்சு வஸ்திரத்தில் ஜொலித்த சுவாமி ரங்கனைப் பார்த்து சிரித்தபடி, 'பாத நமஸ்காரம் எடுத்துக்கொள்' என்று சொன்னதும் மிருதுவான அந்தப் பாதங்களைப் பற்றிக்கொண்டு நமஸ்காரம் செய்தார் தவிப்போடு. 'பால் ஏதாவது சாப்பிடறேளா சுவாமி' என்று கேட்க நிமிர்ந்து பார்த்தால் சுவாமியைக் காணோம்.அந்தர்யாமி வந்ததுபோல் மறைந்துவிட்டார்.ரங்கன் சொன்னார்... 'நான் ஒரு பைத்தியக்காரன் படியில் வேகமாய் இறங்கி கீழே ஓடிப் போய் பார்க்கிறேன் சுவாமி வந்த கார் ஏதாவது நின்னுண்டிருக்கான்னுட்டு... திரும்ப வந்தேன் வீட்ல என்னால இருக்க முடியலே  ஒரே படபடப்பா வந்தது. கதவை மூடி பக்கத்து போர்ஷன்ல சாவிய குடுத்துட்டு மயிலாப்பூர் சீரடி பாபா கோவிலுக்குப் போய்விட்டேன். அங்கு கதவை மூடியிருந்தார்கள். கிரில்கேட்டுக்கு வெளியிலேயே 4 மணி நேரமாக உட்கார்ந்துவிட்டு மனதின் படபடப்பு அடங்கியதும் வீடு திரும்பினால் வீட்டில் ஒரே கூட்டம்.

என்ன என்று கேட்டேன் மனைவி சாவித்திரியிடம். இங்கே பாருங்கோ 'சுவாமி வந்து நின்னிருக்கார்' ஒரு இஞ்சுக்கு மேல் விபூதியோடு சுவாமியின் பாதங்கள் சித்திரமாய்ப் பதிந்திருந்தன. 'நீங்க சுவாமியோட விபூதிப் பாதங்களைத் தான் பார்த்தீங்க, நான் சுவாமியையே காலையிலே பார்த்தேன்' என்று நடந்ததை ரங்கன் விவரித்ததும் அங்கு ஒரே ஆனந்த வெள்ளம்! புத்தாண்டுக்கு வழக்கமாய் வரும் பக்தன் வராததால் பக்தனைத் தேடி தானே வந்து விட்டார் பக்தவச்சலன்! சுவாமியின் அந்த விபூதிப் பாதங்களை பக்தர்கள் அள்ளிக் கொண்டு போக ஆரம்பிக்கவும் புகைப்படம் எடுத்துக் கொண்டேன் என்று சொல்லி பூஜையறையில் இருந்த படத்தைக் காட்டினார் அந்த பக்தர்.அது சுவாமியின் ஸ்ரீபாத லீலை!

ஆரம்பத்தில் சுவாமியைத் திட்டிக்கொண்டிருந்தவர் இந்த பக்தர். 1960 லிருந்து சுவாமியின் பரமபக்தராகிவிட்ட ரங்கனுக்கு, சுவாமி 8 இன்டர்வியூக்கள் தந்திருக்கிறார். மனைவி சாவித்திரியின் வயிற்று வலியைத் தீர்த்திருக்கிறார்.ஆண் குழந்தை வேண்டிய பிரார்த்தனையைப் பலிக்க வைத்திருக்கிறார்.மகள் சாயி பானுவிற்கு லிங்கம் தந்திருக்கிறார். பேத்தி அனுஷாவிற்கு பென்டன்ட்! 2001 காலையில் இவர் பூஜையறையில் சுவாமியின் எட்டு இஞ்ச் அளவிலான பாதங்கள் சுடச்சுட தட்டில் வந்து விழுந்திருக்கின்றன. அதிசயங் கேட்டு ஓடி வந்த பக்தை டாக்டர் மிருணாளினி தட்டைத் தூக்கியதும் பொட்டென்று வைத்துவிட்டாராம். தட்டு அப்படிக் கொதித்ததாம்!

இப்போது 80 வயதாகும் ரங்கன் சாயிக்கு சுவாமி தான் எல்லாம். இவர் வீட்டில் நடக்கும் பௌர்ணமி பூஜைகளில் சுவாமி விக்ரகங்களைத் தருகிறார். இன்னார்க்கு இன்ன விக்ரகம் டாலர் என்று சொல்லியே தருகிறார். சுவாமி இங்கு நடத்துவது நித்யானந்த லீலை!

சாயியின் பாதங்களைப் பற்றியான பிறகு, பக்தியும் சேவையும் அந்த தெய்வீகப் பாதையில் நடப்பதுமே பக்தர்களின் வாழ்க்கையாகிவிடுகிறது.
ஜெய் சாய்ராம்!
         
ஆதாரம்: சாயி பிருந்தாவனம்(சாயி பக்தர்களின் அனுபவங்கள்) - கவிஞர். பொன்மணி
வெளியீடு: ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக