தலைப்பு

வியாழன், 19 மார்ச், 2020

பிறருக்கு அநாமதேயன்; நமக்கு அநாத ரக்ஷகன்!

🇺🇸 USAவில் உள்ள சாண்டா பார்பராவைச் சேர்ந்த முரியல் ஏஞ்சல் அவர்களின் திக் திக் சாயி அனுபவம்.. 

முரியல் ஏஞ்சல் என்னும் பெண்,USA வில் சாண்டா பார்பரா என்னுமிடத்தை சேர்ந்தவள். ஒரு சினேகிதியைச் சந்தித்துவிட்டு மலைப்பாதை ஒன்றின் வழியாக இறங்கிக் கொண்டு இருந்தாள். சான்டா பார்பராவிற்கு கொஞ்சம் தூரம் தள்ளி இந்த இடம் இருந்தது. அவள் ஒரு பொது சேவை மையத்தைச் (மிஷன்) சேர்ந்தவள். இரவு இருட்டிவிட்டது, பாதை குறுகலாக இருந்தது.
மழை வேறு தூறிக்கொண்டிருந்தது. அதனால் பாதை வழுக்கலாக இருந்தது. இடதுபுறம் பெரிய பெரிய பாறைகள். வலதுபுறம் மலைக் கணவாய் ஓடிக்கொண்டிருந்தது. வேகமாக கார் ஓடிக் கொண்டிருப்பதை உணர்ந்து, வேகத்தை குறைக்க முயன்றாள். ஆனால் கார் இன்னும் வேகமாக ஓடி suicide curve என்று ஆங்கிலத்தில் கூறக்கூடிய, தற்கொலை வளைவருகே வழுக்கி ஓடிச் செல்ல ஆரம்பித்தது! அவள் பிரேக்கை அழுத்தினால்,கார் வழுக்கி கொண்டு, வழுக்கலாக இருக்கும் மலைப்பகுதிக்கு ஓடியது. மிகவும் அழுத்தி பிரேக்கைப் பிடித்ததில் சக்கரங்கள் இறுக்கமாகி விட்டன.(lock) கார் கட்டுப்பாட்டை முற்றிலும் இழந்து விட்டது. நோ, நோ, பாபா... என்று ஆங்கிலத்தில் அலறிவிட்டாள்.

 கார் வழுக்கி, மோதி, வளைந்து என்னென்னவோ ஆயிற்று. ஆனால் உருண்டோ தலைகீழாகவோ ஆகவில்லை. கார் ஒரு மரத்தின் பெரிய கிளையின் அடியில் வழுக்கிச் சென்றது. ஒரு மரத்தின் நடுப் பகுதிக்கும் ஒரு பாறைக்கும் இடையே ஒரு வழியாக நின்றது. கண்ணாடிகள் உடைந்து விழுந்தன. ஆனால் அவை வெளியே விழுந்தன. உள்ளே விழவில்லை. சிறு துகள்கள் முகத்தில் வந்து மோதின. அவ்வளவுதான். காரின் இன்ஜின் ஓடிக்கொண்டிருந்தது. பெட்ரோல் நிறைய இருந்தது. ஆயினும் கார் வெடிக்கவில்லை. இன்ஜினையும் விளக்குகளையும் அணைத்தாள். நிசப்தமாயிற்று. மிஷன் க்ரீக்கில் இருந்து கூட சப்தம் உரக்கக் கேட்டது. மிக ஜாக்கிரதையாக கைகால்களை, உடலை அசைத்துப் பார்த்தாள். ஓட்டுநர் இருக்கையின் வலதுபுறக் கதவு வெளிப்புறம் ஆடிக்கொண்டிருந்தது. ஆனால் காரை விட்டு இறங்க முடிந்தால் எந்த பக்கம் இறங்க முடியும் என்று கூட புரியவில்லை. கெஞ்சும் குரலில் 'பாபா என்னால் தனியே எதுவும் செய்ய முடியாது! நீ எனக்கு எப்படி உதவ போகிறாய்? என உரக்க கூவ ஆரம்பித்துவிட்டாள். டாஸ்போர்டில் உள்ள கடிகாரம் நள்ளிரவைத் தாண்டி ஒன்று அல்லது இரண்டு நிமிடம் எனக்கூறியது. தப்பிக்க வழியே தெரியவில்லை. அந்த கும்மிருட்டில், தனது பிரத்தியேகமான பொருட்களை வெளியே போட்டுவிட்டு செருப்பு உட்பட அனைத்து பொருட்களையும் வெளியே போட்டுவிட்டு, பொழுது விடியும் வரை காத்திருப்பது என முடிவு செய்தாள்.

 கடிகாரம் 12.20 am எனக் காட்டியது! அவளுக்கு 45 டிகிரி உயரத்தில், மிக பிரகாசமான விளக்கொளி கதிர்கள் பாய்ந்தன! மெதுவாக வலதுபுறக் கதவருகே நகர்ந்து சென்று, ஜன்னலை இறக்கி உதவிக்காக கூவினாள். டார்ச்லைட் வெளிச்சத்தோடு ஆண்கள் குரல்கள் கேட்டன. அவர்கள் காவல்துறை அதிகாரிகள். தீயணைப்பு படை பின்னால் வந்து கொண்டிருப்பதையும் கூறினார்கள். அவர்கள் வந்ததும் அரை மணி நேரம் முயன்று பாதுகாப்பு வளையத்தின் உதவியோடு 4 பேர் இவளை மேலே தூக்கி விட்டனர். அவளை தெருவில் அவள் பாதங்களை பதித்து நிற்க வைத்ததும், அவளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என ஒருவராலும் நம்ப முடியவில்லை, அவளுக்குமே கூட!


 வீட்டிற்குச் செல்லும் வழியில், அவளுக்கு பாதுகாப்பாக உடன் வந்த அதிகாரியிடம், எப்படி அவர்கள் இவளைக் கண்டுபிடித்து உதவினார் என கேட்டாள். 12.11am க்கு அவர்களுக்கு ஒரு அழைப்பு ஸ்டேஷனுக்கு வந்ததாகவும், அது ஒரு அனாமதேய அழைப்பானதால், அழைத்தவர் தன்னை இதில் ஈடுபடுத்திக் கொள்ள விரும்பவில்லை போலும் என்றார். அது ஆணா பெண்ணா என்று தெரியவில்லை என்றும் கூறினார். அந்த அதிகாரியுடன் தன் வீட்டின் முன் கதவு சமீபம் செல்லும்போது, அவளுக்கு தெளிவாக "நான்தான் ஈடுபட்டேன்" என்ற குரல் மட்டும் கேட்டது!

இறைவன் சத்ய சாயியே கண்காணிக்கிறார்.. கவனிக்கிறார்.. தன்னை மறைத்து தடுத்து ஆட்கொள்ளும் தாயினும் மிகும் தயை அவர்.. அனுப்பவிப்பருக்கும்.. அனுபவிக்க இயலாதவர்க்கும் சேர்த்து அருள் புரிவது சாயி பரம்பொருளே! 
                                                                                               
ஆதாரம்: A thrilling account by Muriel J Engle of Santa Barbara (from Sanathana Sarathi 1979)

தமிழாக்கம்: திருமதி. ஜெயா பாலசுப்பிரமணியம், போரூர் சமிதி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக