தலைப்பு

ஞாயிறு, 1 மார்ச், 2020

சாயி அவதாரம் பற்றி மகான்கள் | ரமண மகரிஷி


பரம்பொருளின் பிரகடனம்:

"என் வருகையானது நல்ல, துறவற ஞானம் மிகுந்த சாதுக்கள், சாதகர்கள், குருமார்கள் மற்றும் உலக தெய்வங்களின் எனை நோக்கிய ஏக்க அழைப்பால் மட்டுமே நிகழ்ந்தது."
                                            - இறைவன் ஸத்ய ஸாயி

மகரிஷி ரமணர் (1879 –1950):

வெங்கட்ராமன் எனும் இயற்பெயரில் தமிழ்நாடு மதுரை திருச்சுழியில் பிறந்து அருணாச்சலம் என்ற ஒரே ஒரு பெயர் அதனால் இழுக்கப்பட்டு பாதாள லிங்க குகையில் பூச்சிகள் செல்லரித்த போதும் உடல் மறந்த தியானத்தில் ஆழ்ந்து அண்ணாமலை அடிவாரத்தில் ஆசிரமம் அமைத்த மோன வள்ளல்.. ஞான ஜோதி பகவான் ரமண மகரிஷி.

அதிகம் பேசாதவர். அவர் அசைவதே மெய்மை உணர்வை வெளிப்படுத்தியது. பகவான் என பக்தர்களால் அழைக்கப்பட்டவர். அவர் சந்நதிக்கு வந்துவிட்டால்... வராதவர்களுக்கும் தியானம் வரும்.
கொஞ்ச நேரம் அவர் உருவம் பார்த்துக் கொண்டே இருந்தால் அவர் ஆன்மா வெளிப்படுத்திய ஸ்திர உணர்வு நம்மையும் தொற்றிக் கொள்ளும்.
எதையும் வேண்டாத.. எதிர்பார்க்காத.. இந்த உலகத்தின் மீதான அலட்சிய பாவனை ஏற்படுத்தும். உணர்ச்சி வசப்படுபவர் எவரும் அவரின் கண்களை உற்று பார்க்கப் பார்க்க..
கல்லாய் உறைந்து போய்விடுவர்...
ஆணவம் மனதிற்குள்ளேயே தற்கொலை செய்து கொள்ளும்..
ஒரே ஒரு வார்த்தையிலேயே ஒரு புத்தகத்தை விளக்கிவிடுபவர்.

பகவான் உங்களுக்கு ஏன் நோய் வந்தது என்று கேட்ட ஒரு அடியவரிடம்..
இந்த உடம்பே ஒரு நோய்.. இதற்கு மேல் என்ன நோய் என்றவர்.


ஒரு இளைஞன் பகவானிடம் எனக்கு நீங்கள் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போல் கடவுளைக் காட்ட முடியுமா? எனக் கேட்டதற்கு
"கேட்பது விவாகானந்தர் தானோ?" என
எதிர்பதிலே கேட்க முடியாத படி அவர் சொன்ன பதில் ஆன்மாவரை  ஊடுருவக் கூடியது..

விளம்பரமே இல்லாமல் விழிப்புணர்வுச் சிகரத்தின் மீது நின்று பிறரை அந்த உச்சிக்கு அழைத்த மகாஞானி...

ரிபுகீதை.. திரிபுர ரகசியம் போன்ற நூல்களை வாசிக்கச் சொல்லி ஞான வேள்விக்குக் குடம் குடமாய் நெய் விட்டவர்..

இவ்வளவும் விளக்கக் காரணம் அந்த மௌனப் பூரணம் நம் சுவாமியைப் பற்றி என்ன சொல்லி இருக்கிறார் என்பதை உணர்த்தவே..

அவை வெறும் வார்த்தைகள் அல்ல..
மகான்களின் உரை மக்களின் பேச்சுபோல் இல்லை.. அதில் சத்தியமும் தர்மமும் சங்கமித்து வரும்...

முழுமுதலை உணர்ந்தவரின் பதிலை உள்வாங்க உள்வாங்க வேத ரகசியங்கள் புரிய ஆரம்பிக்கும்...

ஒருமுறை அருவ வழிபாடு பற்றி அவரின் ஆசிரம ஹாலில் பேச்சு வருகையில்...
ஒரு அன்பர்.. "பகவான்... சத்ய சாய்பாபா உயிரோடு இருக்கும்போதே அவரின் புகைப்படம் வைத்து வழிபாடு செய்கிறார்களே.. அது தவறல்லவா? என்ற அறியாமை கேள்வி எழுப்ப..
அதற்கு ரமண பகவான் “அது சரிதான்.. அந்த புகைப்படத்தில் அவரே இருக்கிறார்.. அவரின் சாந்நித்ய மகிமை அது” என்றிருக்கிறார்..

அதுதான் நம் பரம்பொருள் சத்ய சாயி.

இன்னொரு அரிய அனுபவம் ஒரு பழம்பெரும் சுவாமி பக்தைக்கு நிகழ்ந்திருக்கிறது. அவர் பாத மந்திர பக்தையான கருணாம்பா சாய்ராம்...

Mrs கருணாம்பா ராமமூர்த்தி

அதை அவர் தனது  "சத்ய சாயி ஆனந்ததாயி" எனும் புத்தகத்தில் மிகத் தெளிவாய் விளக்கி இருக்கிறார்...


என் கடவுளான சுவாமியைப் பற்றி என் ஞானத் தாத்தா ரமணர் என்னவாறு உணர்ந்து மொழிகளை மந்திரமாய்ப் பேசி இருக்கிறார் என்பதை அவர்களின் புத்தகம் வாயிலாக தமிழாக்கம் செய்து உங்களின் ஆன்மா வரை செல்ல ஒரு தமிழாக்கப் பாலம் அமைப்பதை விட என்ன பிறவிப்பயன் இருக்கப் போகிறது அடியேனுக்கு...

"1950களில்..என் தாயார் புட்டபர்த்தியில் தங்கி இருந்த சமயம்..
ரமண மகரிஷியின் அடியார்கள் சிலர் வந்திருந்தனர்.

அந்த காலத்தில் அநேக பக்தர்கள் ஆசிரமத்தில் தெலுங்கு மொழியே அறிந்திருந்தபடியால் ..
இந்த அடியவர்களோ தமிழில் மட்டுமே பேசியதால் யாருக்கும் எதுவும் புரியவில்லை..
 என் தாயாருக்கு தமிழ் தெரிந்திருந்த காரணத்தினால் அவர்களிடம் இவர்களை ஆற்றுப்படுத்தி இருக்கிறார்கள்.

இவர்களும் என் தாயாரிடம் வந்து பேச..
வந்த விஷயம் பற்றி கேட்டிருக்கிறார் என் தாயார்.
அப்போது அந்த அடியவர்கள் தங்களை ரமணரின் அடியார்கள் எனவும் .. தமிழ்நாட்டில் இருக்கும் திருவண்ணாமலையின் ரமணாசிரமத்தில் இருந்து வருவதாகவும் தகவல் தெரிவித்தனர். மேலும் ரமண மகரிஷியின் உடல்நலம் சரியில்லை. அவரை நாங்கள் தரிசிக்கச் சென்ற போது எங்களைப் பார்த்த ரமணர்  "இங்கே ஏன் வந்திருக்கிறீர்கள். கடவுள் ஆந்திரப் பிரதேசத்தின் ஒரு கிராமத்தில் அவதாரம் எடுத்திருக்கிறார். அவரை தரிசனம் செய்யுங்கள். செல்லுங்கள் அங்கே செல்லுங்கள்" என திருவாய் மலர்ந்திருக்கிறார் அந்த மௌன மூர்த்தி.
அதற்கு என் தாயாரோ இங்கே வந்து மகரிஷிகள் உங்களை என்ன சொல்லி இருக்கிறார் என்று கேட்டதற்கு ..
அவர்களோ இந்தக் கேள்வியையே எங்கள் குருவிடம் தாங்கள் கேட்டதாகவும் .. அதற்கு ரமண மகரிஷியோ "நீங்கள் அங்கே எதுவும் செய்யத் தேவையில்லை . பேசாமல் நீங்கள் அவரோடு அவர் சந்நிதி முன் பஜனையில் அமருங்கள்" என்று சொல்லி இருப்பதை கேள்விப்பட்ட என் தாய்க்கு ஆனந்தம் தாளவில்லை..
எப்பேர்ப்பட்ட பயன் சுவாமி முன் பஜனையில் அமர்வது"
எனப் பூரித்துப் போய் தனது புத்தக மாலையில் ஒரு அரிய சம்பவப் பூவாய் இந்த நிகழ்வையும் தெய்வீகமாய்த் தொடுத்திருக்கிறார்..

ஆதாரம்: சத்ய சாயி ஆனந்ததாயி - பக்கம் 80

இந்த அனுபவம் வாசித்து அடியேனுக்கும் பூரிப்பு ஏற்பட ரமண மகரிஷி திருவாய் மலர்ந்த அவரின் முதல் உபதேசத்தில் புரியாத ஒரே ஒரு சொல் தெளிவாய்ப் புரிந்தது.. புரிந்து இதயம் இறைவன் சுவாமியைச் சுமந்து விரிந்தது..

அந்த முதல் உபதேசம்

"அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன்
ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன்
நடவாதது எம்முயற்சியினும் நடவாது
நடப்பது என் தடை செய்யினும் நில்லாது
இதுவே திண்ணம்
ஆதலின் மௌனமாய் இருக்கை நன்று"

இது தன் தாயார் வீட்டிற்கு அழைத்தபோது ரமண மகரிஷிகள் சுவற்றில் ஒரு கரிக்கட்டையால் எழுதிய முதல் ரமண கீதோபதேசம்.

அந்த அனுபவ கீதையில்.. அடியேனுக்கு புரியாதது ஒரே ஒரு வார்த்தை
"அதற்கானவன் ஆங்காங்கிருந்து ஆட்டுவிப்பன்" என்பதில்
யார் அந்த "அதற்கானவன்" என்பதே...
பல ஆண்டாய் குடைந்த அந்தக் கேள்விக்கு என் ரமண தாத்தாவே எனக்கு மேலே பகிர்ந்த அனுபவம் மூலமாக விளக்கம் அளித்தார்

அந்த "அதற்கானவன்" வேறு யாருமில்லை..
அது சாக்ஷாத் என் சுவாமி "சத்ய சாயியே"

அதை உணர்ந்தபோது என் மனம் ஆன்மிக மணமாகி ரமணமானது.


ரமணரின் உடல் ஜோதியாய் ஆகாயத்தில் பிரிந்தது, அதை ஒரு வெளிநாட்டவர் ஆசிரமத்திலிருந்து பார்த்திருக்கிறார்.

அந்த ஜோதி வானத்தில் நட்சத்திரப் பாதையில் பயணித்து நட்சத்திரத்தோடு நட்சத்திரமாகக் கலந்தது..

அதே நேரம்.. அதே நொடி..
ஆசிரமத்தில் நடந்து கொண்டிருந்த நம் சுவாமியோ திடீரென வலது குதிகாலைத் தூக்கி இடறி விழப்போய் இரு சுவாமி பக்தர்கள் (ஸ்ரீ கிருஷ்ணா.. வரது) சுவாமியைத் தாங்கி இருக்கிறார்கள்..

எவ்வளவு பாக்கியம்..

அசையாத தேராய் சுவாமி உறைந்து போயிருக்கிறார்.

கூட இருந்த பக்தர்களுக்கு உயிர்க்கூடு அசையவில்லை...

பிறகு மெதுவாய் உணர்வு மேல் எழ சுவாமியே இதழ் அசைத்து

 "ரமணர் என் பாதத்தை அடைந்துவிட்டார்" எனச் சொல்கிறார்

அதற்குமுன் .
சுவாமியின் வலது பாதத்திலிருந்து மெல்லிய காகிதச் சுருளாய் இரண்டு கிலோ அளவில் விபூதி மழையாய்ப் பொழிந்திருக்கிறது..

முதலில் காலிலிருந்து விபூதி
பிறகு இதழிலிருந்து வாக்கிய அனுபூதி.

இதைக் கண்ட இரண்டு சுவாமி பக்தர்களும் ஆச்சர்யமும் புதிரும் அடைந்தனர்..

அந்தப் புதிருக்கு விடையளிப்பதாய் அடுத்த நாள் காலை செய்தித்தாளில் முக்கியச் செய்தியான ரமணரின்  முக்திச் செய்தி வாசித்தபின் புரிந்திருக்கிறது..

ரமண மகரிஷியின் உயிர் பிரிந்த நேரமும்.. சுவாமியின் கட்டை விரலில் விபூதி வழிந்த நேரமும் ஒன்றாக இருந்ததை எண்ணி மீண்டும் ஆச்சர்யப்பட்டனர்..

மேலிருக்கும் பதிவை விரிவாக படிக்க...


ஆதாரம்: Miracles are My Visiting Cards, Erlandur Haraldsson, Sai Towers, Prashanti Nilayam, 1987, pp. 167-168

ஆச்சர்யங்களால் நம்மீது பூச்சொரியும் இறைவன் அல்லவா நம் சுவாமி

 பக்தியுடன்
வைரபாரதி

2 கருத்துகள்:

  1. மாறாத பக்தியினால்...நாமும் அவர் மலர்ப்பாதங்களில் கலந்திட முடியும்!

    பதிலளிநீக்கு