தலைப்பு

வியாழன், 18 ஜூன், 2020

திரு. ராஜாரெட்டி அவர்களின் மெய்சிலிர்க்கும் அனுபவங்கள்!


திரு ராஜாரெட்டி அவர்கள், நமது சுவாமி அவர்களின் அவதாரத்தின் ஆரம்ப காலகட்டத்தில் சுவாமியிடம் வந்து சேர்ந்து அதிர்ஷ்டம் பெற்ற பக்தர்களில் தனித்தன்மை வாய்ந்தவராக, சுமார் 30 வருட காலங்களாக சுவாமியின் அருகாமையில் இருந்து தெய்வீக ஆனந்தத்தை அனுபவித்தவர் . 

திரு ராஜாரெட்டி அவர்களுடனான உரையாடல்:
பேட்டி கண்ட தேதி: 24- ஜூலை - 2007

குழந்தைப்பருவம் முதலில் இருந்தே சீரிய ஆன்மீக சாதகரான அவர் எங்கும் நிறை இறைவனிடம் பெற்ற அனுபவங்கள் மனதை மயங்கச் செய்துவிடும். ஒரு ஊக்கமுள்ள சாயி சேவகரான அவரது நேர்காணலுக்காக அவரது மும்பை இல்லத்திற்குச் சென்றிருந்தோம்.

நான் எந்தவொரு விசயத்திலும் விட்டுக்கொடுக்காதவனாக எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மறுப்பவனாக இருந்து வந்தேன், ஏனெனில் எனது எண்ணத்தில் ஶ்ரீ ராமகிருஷ்ணரின் அறிவுரையைப் பின்பற்றி வந்தேன் (சித்து வேலை செய்யும் நபர்களை நம்பக் கூடாது).

அத்தகைய ஒரு தருணத்தில் சுவாமி எனது நம்பிக்கையில்லாத் தன்மையை அறிந்து, தன்னை உணர்த்திக்காட்டினார். நாங்கள் ஊட்டியில் இருந்த சமயம், சுவாமி கட்டிலில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்க, நாங்கள் இருவர் மட்டுமே அறையில் இருந்தோம்.

பாபா "நீ ஒரு விஷ்ணு பக்தனாக இருந்தால், எனது ஹ்ருதயத்தில் இருந்து பரமஜோதி (உயர்ந்த நிலையிலான ஜோதி) வெளிப்படுவதைக் காண்பாய்; நீ ஒரு சிவபக்தனாக இருந்தால் அந்த ஒளியை மூன்றாவது கண் அல்லது 'ஞான நேத்ரா' (ஞானக் கண்) அமைந்துள்ள எனது நெற்றியிலிருந்து காண்பாய்" எனக் கூறினார். நான் சிறுவயது முதலாகவே பகவான் விஷ்ணுவின் பக்தன் என்பதால் அவரது ஹ்ருதயத்தில் இருந்து ஒரு ஜோதியை (தெய்வீக ஒளி) நிச்சயமாகக் கண்டேன்.

கேள்வி: நீங்கள் பர்த்திக்குச் சென்றுவரத் தொடங்கியபின் நீங்கள் முதன்முதலாகக் கண்ட சுவாமியின் அதிசயம் என்ன?

ராஜாரெட்டி: பாபா நிகழ்த்திய அதிசயங்கள் பொது இடத்தில் நிகழ்ந்ததால் அவை எனக்கு அதிசயங்களாகத் தோன்றவில்லை. பாபா விபூதி வரவழைப்பதாக நான் கேள்விப்பட்டிருந்ததாலும் எனது தாயார் பாபாவின் நீண்டநாள் பக்தை என்பதாலும் நான் பாபாவிடம் வந்தபின்னர் அவற்றை ஏற்றுக்கொள்ளத் தயாரானேன்.


 நான் அருமையான ஒருசில சுவாரஸ்யமான நிகழ்வுகளைக் கண்டிருக்கிறேன். சுவாமி 'ட்ரான்ஸ்'-ல் (உடலை விட்டு நீங்குதல்) செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அதாவது எந்தவொரு இடத்திலும் இருக்கும் ஒரு பக்தர் எந்த நேரத்திலும் ஆபத்தில் இருந்தால், சுவாமி தனது உடலை விட்டு வெளியேறிச் செல்வார் (பக்தரைக் காப்பதற்காக) என்று கூறலாம். அந்த நேரங்களில் அவரது உடல் விறைத்து ஜடமாக இறந்துவிட்டதைப் போல இருக்கும். மேலும் மரக்கட்டையைப் போல கீழே விழுந்துவிடுவார். அந்த சமயங்களில் சுவாமியின் உதவியாளர்களாகிய நாங்கள் சுவாமியின் உடல் கீழே விழாமலும், காயம் ஏதும் ஏற்படாமலும் கவனித்துக் கொண்டோம். அத்தகைய நிகழ்வுகளில் ஒன்று, சுவாமியின் ட்ரான்ஸ் செயல்பாடுகள் பற்றி நான் நன்கு அறிந்திராத சமயம், சுவாமி ட்ரான்ஸ்-ல் வெளிச் சென்றிருந்த நேரத்தில் அவர் தனது தலைமுடியினை தனது கையால் பிடுங்கியெடுத்து, கைக்கொள்ளும் அளவிலான முடியினை தனது கையில் வைத்துக்கொண்டார். பின்னர் சுவாமி தண்ணீர் கேட்டதும் நான் ஏற்கனவே தயாராக வைத்திருந்த தண்ணீரை அவரிடம் கொடுத்தேன். உடனே சுவாமி அந்த முடியினை தண்ணீர் குடித்து விழுங்கிவிட்டார்.

 பின்னர் சுவாமி சாதாரண நிலைக்கு வந்ததும் சுவாமி என்னிடம், "நான் ஏதாவது தலைமுடியை விழுங்கினேனா? "எனக் கேட்டார். நான், "ஆமாம் பாபா" என்று பதிலளித்தேன். எனக்கு இத்தகைய தெய்வீகச் செயல்களினால் ஒன்றும் புரியவில்லை. ஒரு தலைமுடியே ஜீரண மண்டலம் முழுவதையும் பாழாக்கிவிடுமே, இதென்ன ஒரு கொத்தாக?!
 அடுத்த கணம் சுவாமி தனது சட்டைப் பொத்தான் ஒன்றைத் திறந்து காட்டியதும் அடுத்து நடந்த நிகழ்வு கற்பனைக்கும் அப்பாற்பட்டது. சுவாமி விழுங்கிய அந்த நனைந்த தலைமுடி சுவாமியின் ஹ்ருதயத்தின் அடிப்பகுதியில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தது. அது தன்னை மறக்கச் செய்யும் நிகழ்வாக இருந்தது.

 துடிப்பான விழிப்புணர்வு / விளையாட்டுத்தனமான இறைவன்:



கேள்வி: சுவாமி யாராவது ஒருவரின் கடந்த காலம் மற்றும் எதிர் காலம் பற்றிக் கூறிய நிகழ்ச்சி ஏதேனும் தங்களுக்கு ஞாபகம் உள்ளதா?

ராஜாரெட்டி: நான் தங்களிடம் முதலில் கூறியபடி, நான் சுவாமி விவேகானந்தரை வழிபட்டு வந்தேன். பாபா என்னிடம், "நீ விவேகத்தை (விழிப்புணர்வு என்று பொருள்) கையிலெடுத்துக் கொண்டு என்னுடன் விளையாடலாம்" என்று கூறுவார். நான் விவேகானந்தரையே வழிபடுவதாலும், அவரது போதனைகளிலேயே இருந்து வந்ததாலும் ஆன்மீகத்தில் மேலான நிலைக்கு உயரப்போவதாக நினைத்திருந்தேன். ஆனால் உண்மையில் நடந்தது என்னவென்றால், எனக்கு திருமணமாகி, எனது மகனுக்கு சுவாமி 'விவேகா' என்று பெயர் சூட்டினார். இவ்வாறாக சுவாமி என்னிடம் தனது குறும்புத்தனத்தை வெளிக்காட்டினார். ஆனால் நினைத்துப்பார்க்கையில், சுவாமி கூறியதோ எனது திருமணத்திற்கு பல ஆண்டுகளுக்கு முன்னமேயே! எனது திருமணத்தில் சுவாமிக்கு சம்பந்தம் இல்லை.

கேள்வி: அது ஒரு நல்ல சுவாரஸ்யமான விசயம்.

ராஜாரெட்டி: ஆமாம், உண்மையே.

கேள்வி: சுவாமி நல்ல நகைச்சுவையுணர்வு மிக்கவர் அல்லவா.

ராஜாரெட்டி: பயங்கரமான நகைச்சுவையுணர்வு! சுவாமி யாரையாவது நடித்துக்காட்டினால் அந்த மிகச் சரியான நடிப்பால் நாங்கள் பெருத்த சிரிப்பால் வெடித்துச் சிதறிடுவோம்.

உடனுக்குடனான தெய்வீக சிகிச்சை:



கேள்வி: சுவாமியின் ஏதாவதொரு தெய்வீக சிகிச்சையினை நீங்கள் நேரில் கண்டுள்ளீர்களா?

ராஜாரெட்டி: ஒருமுறை நான் மூல நோயினால் அவதிப்பட்டபோது, எனக்கு தவறான ஹோமியோபதி மருந்தினைக் கொடுத்ததால் நான் அதிக ரத்தப்போக்கினால் பாதிக்கப்பட்டிருந்தேன். அந்த சமயம் திருவிழாவாக இருந்ததால் நான் பகவானை தரிசித்து திருவிழா ஊர்வலத்தில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. ஆகவே நான் பகவானிடம் சென்று எனது நிலைமையைப்பற்றிக் கூறியதும் அவர் உடனே எனக்கு ப்ரசாதம் வழங்கினார். நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ, நான் அந்த ப்ரசாதத்தை உட்கொண்ட அந்த கணமே அந்த தொந்தரவு நீங்கிவிட்டது. இது நகைச்சுவை அல்ல. நான் மூல நோயின் ரத்தக்கசிவினால் நீண்ட நாட்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன்.

நான் மற்றுமொரு நிகழ்ச்சி பற்றிக் கூறுகிறேன். இது என் மனைவியின் நெருங்கிய உறவினர் திரு. சுரேஷ் என்பவரைப் பற்றியது. அவரும் பகவான் மீது சிரத்தையுடனான பக்தர்தான். அந்த சமயம், அவர் தனது 30- 39 வயதுகளில் கெமிக்கல் என்ஜீனியரிங் (வேதியியல் பொறியியல்) பட்டமும் அஹமதாபாத்தில் MBA (முதுகலை தொழில் நிர்வாகம்) பட்டமும் பெற்று சிறந்த கல்வித் தகுதி பெற்றிருந்தார். அவர் தனது தொழிலிலும் உயர்ந்த நிலையில் இருந்தார்.

 அவர் திடீரென தனது தொடைப்பகுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். எனக்கு நன்கு ஞாபகம் உள்ளது, அப்போது அவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் என இரண்டு சிறு குழந்தைகள். அவர் பாபாவின் தரிசனம் பெறுவதற்காக 'தர்மக்ஷேத்ரா'வுக்கு (மும்பை) சென்றபோது, சுவாமி அவரைக் கண்டதும் "ஆம், உன் கேன்சர் கேன்சல்டு" என்றார். ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள், அது மிக ஆபத்தான வகையிலான புற்றுநோய். மேலும் மருத்துவர்கள் அவருக்கு அதிகபட்சம் 6 மாதம்தான் ஆயுட்காலம் என்பதையும் அறிவித்துவிட்டார்கள். அவர் கீமோதெரபி மற்றும் பிற அனைத்து வகையான சிகிச்சை முறைகளையும் மேற்கொண்டிருந்தார்.

கேள்வி: அவர் தற்போது செயலாற்றி வருகிறாரா?

ராஜாரெட்டி: ஆமாம். பற்பல ஆண்டுகளுக்கும் மேலாக நல்ல ஆரோக்கியத்துடனும் திடகாத்திரமாகவும் உள்ளார். இந்தியாவில் புனேயில் உள்ள ஒரு ஜெர்மன் நிறுவனத்தில் பணியில் இருந்து ஒரு மாதத்தில்15 முறை உலகம் சுற்றி வருகிறார். அவரது மகனும் மகளும் கூட நல்ல நிலையில் உள்ளார்கள்.

 ஆதலால், அவர் நம் ஒவ்வொருவருடைய கடந்தகாலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் இவை அனைத்தையும் பற்றி முழுமையும் அறிந்த உயிர்ப்புள்ளவராக விளங்குகிறார். விழிப்புநிலை, கனவுநிலை, ஆழ்ந்த உறக்கம் மற்றும் நிலையான ஆனந்தம் இவையனைத்தின் ஆழ்நிலை உணர்வுகளும் அவரது கட்டுப்பாட்டில் உள்ளன. அவர் ஒரு உதாரண புருஷர்.

மற்றுமொறு சாயி விழிப்புணர்வு:

எனது மனைவியின் குடும்பத்தினர் அனைவரும் ஷீர்டி சாயிபாபா மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட பக்தர்கள். குறிப்பாக எனது மனைவியின் தாத்தா, பாட்டி இருவரும் ஷீர்டி சாயிபாபா தனது பூதவுடலில் ஷீர்டியில் சஞ்சரித்த காலத்தில் ஷீர்டிக்குச் சென்று தரிசனம் பெற்று வந்துள்ளார்கள். அப்போது அவளது பாட்டி கர்ப்பிணியாக தனது தகப்பனாருடன் இருந்தார்.


எங்களது திருமணத்திற்கு முன்னர், எனது மனைவி புட்டபர்த்தியில் இருந்தபோது அவள் ஒரு கனவு கண்டாள். அதிகாலை வேளையில் அக்கனவில் ஷீர்டி சாயிபாபா வந்து அவளுக்கு ஒரு ஜெபமாலை வழங்குவதாக கனவு கண்டிருக்கிறாள். அக்கனவில் அவள் ஆனந்தித்தருக்கும் வேளையில் யாரோ ஒருவர், "வா, எழுந்திரு, பாபா நம்மை நேர்காணலுக்காக அழைத்திருக்கிறார்" எனக்கூறி எழுப்பியதும் அக்கனவு முழுமையடையாமல் தடைபட்டுவிட்டது.
 எனவே அவள் பாபாவின் தரிசனத்திற்காக உடனே கிளம்ப வேண்டியதாயிற்று. பின்னர் பாபா மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருந்துவிட்டு சிறிது நேரம் கழித்து அவள் உள்ளே அழைக்கப்பட்டாள். பாபா அவளைப் பார்த்ததும், "க்யா? கைசா ஹை? (என்ன? எப்படி இருக்கிறாய்?) எனக் கேட்டார். பின்னர் ஒரு ஜெபமாலையை வரவழைத்து அவளுக்குக் கொடுத்தார். பின்னர் அவர், "சப்னா சச் ஹுவா" (கனவு நிறைவேறியது) என்றார்.

மேற்கண்ட நிகழ்வில் பாபா கூறியுள்ள இரண்டு பரிமாணங்கள் நாம் நினைவிற்கொள்ளும் வகையில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
முதலாவது: "நான் ஜாக்ரத், சப்னா, சுப்தி (விழிப்புநிலை, கனவு நிலை மற்றும் ஆழ்ந்த உறக்கம்) இவற்றை எனது முழுக்கட்டுப்பாட்டில் வைத்துள்ளேன்."
இரண்டாவது: நானும் ஷீர்டி சாயியும் ஒருவரே; ஷீர்டி சாயியும் நானும் வேறு வேறானவர்கள் அல்ல."

அவளது கனவில் ஷீர்டி சாயிபாபா அவளுக்கு ஜெபமாலை வழங்கினார், அவளை யாரோ எழுப்பியதும் கனவு தடைபட்டு அவள் வருத்தம் கொண்டாள். இங்கே சத்ய சாயி பாபா கனவை நிறைவேற்றிவிட்டார். என்னவொரு ஆச்சர்யம்!

ஆதாரம்: ரேடியோ சாய்
தமிழாக்கம்: M.சொக்குசாமி பாலசுப்பிரமணியம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக