தலைப்பு

வெள்ளி, 26 ஜூன், 2020

சட்டைப் பையில் பணம் வைத்த சாயிபாபா!

பிரபல இலக்கியப் பட்டிமன்றப் பேச்சாளர் இலங்கை ஜெயராஜ் அவர்களின் சாயி அனுபவப் பதிவு... 

இறைவன் ஸ்ரீ சத்யசாயியை வழிபட அந்த இறைவனே வாய்ப்பு தருகிறார்.. பூஜை செய்ய பூக்களை பூமியில் மலர்த்துகிறார். பிரசாதங்கள் தயாரிக்க உணவு வகைகளை மட்டுமல்ல அதற்கான பொருளையும் உவந்து அளிக்கிறார் என்பதற்கான கடவுள் சாயியின் கருணை சார்ந்த பதிவு இதோ..

உலகில் வாழ் அனைத்து தமிழர்களின் உள்ளத்தைக் கவர்ந்த சிறந்த இலக்கியப் பேச்சாளர். இலங்கை கம்பர் கழகத்தின் ஸ்தாபகர். இலங்கை மட்டுமல்ல தென்னிந்திய, அத்துடன் அவர் ஒரு சத்ய சாயி பக்தர். சிறுவயதில் பகவான் ஸ்ரீ சத்ய சாயி பாபாவின் பஜனைகளில் கலந்துகொண்டு, சாயி மார்க்கத்தில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்  இலங்கை ஜெயராஜ் அவர்கள். அவருக்கு நேர்ந்த அனுபவம் இது.
ஆன்மிகம் என்றால் வெறும் நம்பிக்கை அல்ல.. அசைக்கமுடியாத நம்பிக்கை. இறைவனே அசைத்துப் பார்த்தாலும் விட்டு விலகாத திட நம்பிக்கை.. அதன் வழியாக அடைகின்ற பேரனுபவமே ஆன்மீகம். நம்புகிறவனுக்கு கல்லும் கடவுள். நம்பாதவனுக்கு கடவுளும் கல்லு தான். உண்மையான மன ஒருமைப்பாட்டோடு வணங்கினால், அவ் இறைவன் அழைத்தவர் குரலுக்கு வருவான். பார்த்தவர் கண்ணுக்கு தெரிவான் என்று தனது ஆன்மீக சொற்பொழிவுகளில் கூறுவதுண்டு.
 இலங்கை யாழ்ப்பாணத்தில் 1960களில் சத்ய சாயிபாபா வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்த காலம். இவர் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். ஒரு வியாழக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள வீடொன்றில், சத்யசாயி பாபாவின் பஜனையில் கலந்து கொண்டார். பஜனையின் போது, பாபாவின் படத்திலிருந்து விபூதி பொங்கி வழிவதைகண்டு ஆச்சரியப்பட்டார். பாபாவின் மீது பக்தி அதிகமாகியது. தொடர்ந்து பஜனைகளில் கலந்து கொண்டார்.

அந்த காலத்தில், பாபாவை பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவரது வீட்டில் பாபாவுக்கு எதிர்ப்பு. அவரது தந்தை பாபாவை எப்போதும் கிண்டல் செய்வார். இருந்தாலும் தனது சொந்த சேமிப்பில், பாபாவின் படமொன்றை வாங்கிக் கொண்டார். ஆனால் அதனை வைத்து வழிபட வீட்டில் அனுமதியில்லை. அதனால் வீட்டின் ஒரு ஓரத்தில் அப்படத்தை வைத்து தனியே பாபாவை வழிபட்டு வந்தார்.

 அந்த சிறுவயதில், அப்போது தான் அந்த சம்பவம் நிகழ்ந்தது. சத்யசாயி பாபாவின் ஒரு பிறந்த தினம். பாபாவின் பக்தர்கள், பாபாவின் பிறந்த நாள் தினத்தில், பிரசாதங்கள் செய்து வைத்து வழிபாடு செய்வதுண்டு. அவருக்கும் இப்படியொரு ஆசை. ஏதாவது செய்யலாம் என்றால், கையில் பணமில்லை. கேட்பதற்கு ஆளில்லை. வீட்டில் தயக்கம். மனம் வருந்தியது. கண் கலங்கியது. கவலையோடு பாடசாலைக்குச் சென்று விட்டார்.


 பாடசாலையில் மதிய நேரம், கொண்டு வந்த மதிய போசனத்தை சாப்பிட்டுவிட்டு, சிறிது ஓய்வெடுத்து விட்டு மீண்டும் வகுப்புக்குச் செல்ல வேண்டிய நேரம். மனம் சோர்ந்து போயிருந்தது. எந்த வேலையும் செய்வதற்கு மனம் இடம் கொடுக்கவில்லை. முழுக்க முழுக்க பாபாவக்கு பிரசாதம் செய்து வைக்க முடியவில்லையே என்ற கவலை! அந்தக்கவலையில் இருந்த  அவர் தற்செயலாக தன் கால்சட்டை பையினுள் கையைவிட, அங்கு ஆச்சரியம் காத்திருந்தது. கையில் ஐந்து ரூபாய் தட்டுப்பட்டது. அந்த காலத்தில் ஐந்து ரூபாய் இக்காலத்து 500 ரூபாய்க்கு சமம். அன்று அவரது ஆசையும் நிறைவேறியது. அவரது சாயி பக்தியும் ஆழமாக வேரூன்றியது. இந்த பணம் எப்படி வந்தது? எங்கிருந்து வந்தது? அதுதான் பாபா!பகவானும் அழைத்தவர் குரலுக்கு வருவார். பார்த்தவர் கண்ணுக்குத் தெரிவார்.

-எஸ்.என்.உதயநாயகன், ஸ்ரீ சத்ய சாயி பாபா ட்ரஸ்ட், ஸ்ரீலங்கா. 

🌻 இறைவன் ஸ்ரீ சத்ய சாயி இல்லாத இடமே இல்லை. காற்று புகாத இடத்திலும் கடவுள் சாயி புகுவார். இது வெறும் வாய் வார்த்தை அல்ல.. லட்சக்கணக்கான பக்தர்களின் அனுபவம். அவரே எந்தந்த பக்தர்க்கு எது எது எப்போது அவசியத் தேவையோ அதை அதை அப்போதே தரும் தனிப்பெரும் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி ஒருவரே! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக