தலைப்பு

சனி, 13 ஜூன், 2020

இரு சாயியின் ஒற்றுமையான பதில்கள்!


இரு சாயியிடமும் கேட்கப்பட்ட ஒரே விதமான கேள்விக்கு.. ஒரேவிதமான பதில் அளித்த அற்புதமும் ... அந்தந்த காலத்திற்கு ஏற்றாற் போல பரிணாம பதில்களை அருளாய் ஆற்றலாய் வழங்கிய பதிவு இதோ.. 

ஷிர்டி கிராமத்தில் இறைவன் ஷிர்டி சாயியிடம் நிறைய கேள்விகள் கேட்கப்பட்டன..

நமது பாரத உபநிஷதங்கள் பெரும்பாலும் கேள்வி பதில்களாகவே அமைந்திருக்கின்றன..

கேனோ உபநிஷத் முதல் பல உபநிஷதங்கள் கேள்வி பதில்களே..
ஜனகர் கேட்க கேள்விக்கு அஷ்டவக்ரர் பதில் அளிப்பதே அஷ்டவக்ர கீதை...
பல ஞானங்கள் கேள்வி பதில் வடிவங்களே.
ஆதி சங்கரர் முதல் பல மகான்கள் பிறரின் கேள்விக்கு பதில் அளித்து அதில் தெளிவடைந்த மனிதர்களை சீடர்களாகவும் ஏற்று இருக்கிறார்கள்.

கட்டளைகள் இல்லாத கருணை பதில்களே சனாதன தர்மத்தின் சாராம்சம்...
அப்படிக் கேட்கப்பட்டக் கேள்விகள் இறைவன் கீழ் இறங்கிய பிறகும் தொடர்ந்தன..

கேள்விகள் சந்தேகத்திலிருந்து பிறக்கின்றன..
பதில்கள் ஞானத்திலிருந்து உதிக்கின்றன..
பூரண ஞானத்தின் சாராம்சம் என்பது சலனமே இல்லாத நீள் மௌனமே..
அதன் முத்திரையே தட்சிணாமூர்த்தி வடிவம்.

குரு பரம்பரை சனாதன தர்மத்தின் கிளைகள்.
இறைவனின் அவதாரங்கள் என்பதே வேர்.

இருளில் இருந்து ஒளிக்கு வழிகாட்டுபவரே குரு..
அந்த ஒளியே இறைவன் ஷிர்டி சாயியும் .. சத்ய சாயியும்.

தட்சிணாமூர்த்தியே குருமார்களுக்கு எல்லாம் ஆதி குரு...
தத்தாத்ரேயரே கலியுலகின் ஆதி குரு..
பிறகே ஆதி சங்கரர்...

தத்தாத்ரேயரோ இரு சாயியின் ஒரு அவதூத அம்சமே!

அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கிய பரிபூரண பரம்பொருளே இரு சாயியும்.



ஸ்ரீ தத்தரின் சீடர்களும்.. ஆதி சங்கர சீடர்களின் கிளைகளுமே வானளாவி விரிந்தன..
இவர்கள் அனைவரும் குருமார்கள்..
இறைவனை நோக்கி தனது சீடர்களை வழிகாட்டுபவர்கள்.

அந்த இறைவனே கலியில் இறங்கி.. ஒளியில் இறங்கிய ஷிர்டி சாயி -- சத்ய சாயி..
எத்தனை குருமார்களோ அத்தனை குருமார்களின் சத்குருவே இறைவன் ஷிர்டி சாயி -- சத்ய சாயியும்

சத் என்ற சத்திய நிலை தாமே என தன்னை அடைய நம்முள் இருந்து வழிகாட்டுவதே சத்குரு எனும் இறை நிலை... அதுவே.. அந்த பேருயர் நிலையே ரூபம் எடுத்து வந்த ராமர் -- கிருஷ்ணர் -- ஷிர்டி சாயி -- சத்ய சாயி.

இறைவன் தன் உபதேசங்களை வாழ்ந்து காண்பிக்கவே அவதாரம் எடுக்கிறார்.
எல்லா வேத உபநிஷத் சாரங்களை வாழ்ந்து காண்பித்த இறைவனே இரு சாயியும்.

வெறும் புத்தகமாய் கற்கும் போது ஏற்படும் உணர்வை விட.. அதே சதுர் வேதம் மனித சதையுடன் எலும்பு போர்த்தி தன்னைத் தானே தன்னிலை விளக்கமாய் வாழ்ந்து காண்பிக்கவே கீழ் இறங்கிய கடவுளர் ஷிர்டி சாயி -- சத்ய சாயி.

குரு தேவையா? ஏன் தேவை? ஒவ்வொரு தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.. சோம்பேறியாக இருப்பவனை குரு என்ன செய்து விடமுடியும்? என வினா எழுப்பப்படுகிறது..
என்ன நடக்கிறது என்பதை தெரியாதவாறு கேட்டு..
அடுத்த நாள் அதற்கான விடையை இன்னொருவருக்கு சொல்வது போல் அதை அற்புதமாய் விளக்கினார் இறைவன் ஷிர்டி சாயி.
அந்த இன்னொருவர் காகா சாஹேப் தீட்சித். கேள்வி எழுப்பியதோ ஹேமாட்பந்த்.
காகா சாஹேப் தான் ஷிர்டியை விட்டு போகவேண்டுமா? எனக் கேட்ட போது.. ஆம் என பதில் உரைத்து.. எங்கே போவது என மேலும் வினவ.. உயர மேலே என்கிறார் இறைவன் ஷிர்டி சாயி.
வழி எப்படிப்பட்டது? எனக் கேட்க..
ஒரு வழி உள்ளது.. பாதை கடினமானது.. புலிகளும்.. ஓநாய்களும்.. வழியிலுள்ள காடுகளில் உள்ளன..

அப்போது காகா சஹேப் ஜி "ஒரு வழிகாட்டியை அழைத்துச் சென்றால் என்ன? எனக் கேட்க..
நேற்று வினவிய குரு வினாவிற்கு விடை தருகிறார் இறைவன் ஷிர்டி சாயி...

"அப்போது கடினம் இல்லை...புலிகள்.. ஓநாய்கள்.. படுகுழிகள் முதலியவற்றிலிருந்து உன்னை விலக்காக, உன் குறிக்கோளை அடைய நேரடியாக அந்த வழிகாட்டி அழைத்துச் செல்வார். இல்லையென்றால் காடுகளில் நீ காணாமல் போகலாம் அல்லது படுகுழியில் விழும் அபாயம் இருக்கிறது " என்கிறார் குருவுக்கெல்லாம் குருவான சத்குரு இறைவன் ஷிர்டி சாயி..

(ஆதாரம் :- ஸ்ரீ சாயி சத் சரித்திரம் -- பக்கம் 11,12,13)

ஒன்றை இன்னொன்றின் மூலமாக விளக்கி உணர்த்துவது இரு சாயியின் தெய்வீக குணமே.
ஒரு வார்த்தையில் ஆழமான உள்ளர்த்தம் வைத்து உபதேசிப்பது இரு சாயிக்கும் கை வந்த கலை..


கற்பக விருட்சமே அருகில் இருக்க அதனிடம் நீ ஏன் காபி பொடி கேட்கிறாய் என்பதும்...
தரிசன வரிசையில் இறைவன் சத்ய சாயி வருகையில் தரையைத் துடைத்த பக்தரிடம் சொல்வதற்கு அவர் பக்கத்தில் அமர்ந்த பக்தரிடம் "இறைவன் வருகையில் மனதைத் துடைக்க வேண்டுமே தவிர தரையை அல்ல" என்பதும்..
இது பொறாமை உலகம்.. சுற்றி புலிகள் நிறைந்திருக்கின்றன என எச்சரிப்பதும் இறைவன் சத்ய சாயியின் ஒரே விதமான தெய்வீக பாணி.

அந்த பாணி மிகவும் மென்மையாக.. மனதைப் புண்படுத்தாமல்.. நாசூக்காக இருக்கும்..
இதைத் தான் இறைவன் சத்ய சாயி சொல்ல வருகிறார் என்பது கேட்பவர்க்கு தெள்ளத் தெளிவாகப் புரியும்.

ஒரு முறை குருவைப் பற்றி கேட்கையில் இறைவன் சத்ய சாயியோ ஷிர்டி சாயி சொன்னதைப் போல் சொல்லி.. இந்தக் காலகட்டத்திற்கான பரிணாம பதிலையும் சேர்த்தே விளக்கி நமக்குப் புரிய வைக்கிறார்.

பரமாத்மாவின் உண்மை தத்துவத்தை அறிந்து கொள்ளும் வரை நற்குணங்களைப் படைத்த பெரியவர்களின் கூட்டங்களில் கலந்து ஓர் குருவை அடைய வேண்டும் என்பது அவசியமா? இதுவே இறைவன் சத்ய சாயியிடம் கேட்கப்பட்ட கேள்வி.

பரமாத்மாவின் உண்மை தத்துவம் என்கிறார் கேள்வி கேட்டவர்.
பரமாத்மாவிடம் நாம் அடையப் போவது பேரனுபவமே தவிர தத்துவமல்ல என்பதை வாசிப்பவர்கள் உணர வேண்டும்.
நாம் அடையப் போகிற பேரனுபவமே இறைவன் சத்ய சாயி தான்.
தத்துவம் வரட்சியானவை. வெறும் வார்த்தைக்கு உட்பட்டவை.
பேரனுபவம் மலர்ச்சியானவை.. வார்த்தைக்கு அப்பாற்பட்டவை.
எந்தெந்த நிலையோ அந்தந்த நிலையில் கேள்விகள் எழுகின்றன என்பதற்காக அந்தக் கேள்வியை அடியேன் விளக்கினேன்.
ஆக இறைவன் என்பது கோட்பாடோ தத்துவமோ அல்ல இறைவன் ஒரு பேரநுபவம்.

அந்தக் கேள்விக்கு இறைவன் சத்ய சாயியோ..

"பெரியோர்களின் சங்கங்களில் கூடுதல் அவசியம். உண்மை நிலையை அடைய குருவும் அத்தியாவசியமே" என இறைவன் ஷிர்டி சாயி சொன்னதைப் போலவே சொல்லி..
அதற்குப் பிறகு தான் காலத்திற்கு ஏற்ற பரிணாம பதில் அளிக்கிறார் சத்ய சாயி பரம்பொருள்.

"ஆனால் இவ்விஷயத்தில் மிக்க கவனம் செலுத்த வேண்டும். இக் காலத்தில் உண்மையான குருமார்கள் கிடைப்பது மிக அரிது. வேஷதாரிகள் அதிகரிக்கவே உண்மையான குருமார்கள் மறைந்திருந்து சுய ஆத்ம சாட்சாத்காரத்தை அநுபவிக்கின்றனர். உலகில் அநேக உண்மையான குருமார்களும் இருக்கின்றனர்.. ஆனால் அவர்களை அடைவது எளிதல்ல... அப்படிக் கிடைத்தாலும் ஏதாவதொரு சத்விஷயத்தையே உபதேசிப்பர். வீண் கதைகளைப் பேசி பொழுது போக்க மாட்டார்கள்.ஆகையால் குருவைத் தேடுவதில் அவசரப்படக் கூடாது"
-- இறைவன் சத்ய சாயி
(ஆதாரம் :- சந்தேக நிவாரணி - பக்கம் - 8,9)



இறைவன் சத்ய சாயியும் .. ஷிர்டி சாயியும் குருவுக்கெல்லாம் மேலான சத்குருவாக நமக்கு இருக்கையில் வேறு எந்த குரு அவசியம்?
நீங்கள் தேடும் அல்லது நீங்கள் வழிபட்டு வரும் குருவே கடவுளை நோக்கித் தான் வழிகாட்டப் போகிறார்..

அந்தக் கடவுளே கலியில் ஷிர்டி சாயியும்.. சத்ய சாயியும் எனும் போது..
ஏன் தலையைச் சுற்றி மூக்கைத் தொட வேண்டும்?
ஏன் பிற குருமார்களை தேடித் தேடிப் போய் நேரத்தை விரயம் செய்ய வேண்டும்?
மனதைச் சிதறடிக்க வேண்டும்..

நாம் சத்ய சாயி ஆகாயத்தில் சிறகடிக்க வேண்டுமே தவிர
கவனத்தைச் சிதறடிக்கக் கூடாது..

மௌனத்தில் ஆழ்தல்.. இறைவன் சத்ய சாயி பாதத்தில் சரணாகதி அடைதல்.. தியானித்தல்.. அனைவரையும் பேதமின்றி நேசித்தல்.. எளிமையாக வாழ்தல்.. ஆணவமற்று இருத்தல்..    போன்ற ஆத்ம சாதனையை மேற் கொள்ள வேண்டும்..

அந்த ஆகாயத்திலிருந்து பூக்கள் விழுந்தாலும் இல்லை ஆகாயமே இடிந்து  தலைமேல் விழுந்தாலும்  யாவும் சாயி சங்கல்பம் என உணர்வதே ஆன்மீகத்தின் பழுத்த நிலை..

இருசாயியும் ஒருமனதாய் அதையே பக்தர்களிடம் விரும்புவது.
பக்தர்களை ஆத்ம சாதகர்களாக அகம் மாற்றுவதற்கே சாயி அவதாரங்கள் எல்லாம்.

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக