தலைப்பு

திங்கள், 15 ஜூன், 2020

பெற்றோர் குழந்தைகளுக்கு செல்லம் கொடுத்தல் கூடாது!


நம்மை பெற்றவர்களுக்கும் பெற்றோராக விளங்குவது சத்ய சாயி பரம்பொருளே.. அவரின் ஒவ்வொரு வார்த்தையும் சத்திய வேதம்.. நம்மை செதுக்கும் சாயி உளி. இதோ பெற்றோர்க்கு சத்ய சாயி பெற்றோன் கூறும் ஆழ்ந்த அறிவுரை...

குழந்தைகள் மேல் பெற்றோர்கள் இன்றைய காலத்தில் அளவு கடந்த பாசத்தைப் பொழிகிறார்கள். ஆனால் அந்த பாசம் மட்டும் போதாது. குழந்தைகள் மீது கட்டுப்பாடும் வேண்டும். 'அன்பு' 'ஒழுக்கம்' இரண்டும் வேண்டும். அன்பும் கட்டுப்பாடும் ஒருங்கே இருந்தால் மட்டுமே அன்பு பயன் அளிக்கும்.

இயற்கையாகவே பொது அறிவும், சரி தவறும் உணராத குழந்தைகள் தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாவதற்கு பெற்றோர்களே முதல் பொறுப்பாளிகள். சரியான நடத்தையைக் கற்றுக் கொடுக்கத் தவறுகிறார்கள். அவர்கள் செல்லம் கொடுப்பதில் செல்வத்தையும் கொடுக்கிறார்கள். குழந்தைகள் மிகுந்த பொருளீட்டி நல்ல செழிப்பிலும் இன்பத்திலும் வாழ வேண்டும் என்று எண்ணுகிறார்கள். ஆனால் தங்கள் குழந்தைகளிடம் நற்பண்புகளை வளர்த்தல் பற்றி அவர்கள் சிறிதும் யோசிப்பதில்லை. குழந்தைகளிடம் நல்ல பண்புகளையும் நேர்மையான குணங்களையும் உருவாக்கும் பொறுப்பு பெற்றோருக்கு உண்டு. வெறுமனே வாழ்க்கை நடத்த கற்றுத் தருவது சரியான முறையல்ல. தமது குழந்தைகள் அப்பழுக்கற்ற நேர்மையான புகழுடன் வாழ்ந்தால் மட்டுமே பெற்றோர் பெருமைப்பட வேண்டும். குழந்தையை பெற்றெடுத்ததற்காக மட்டும் பெருமை கொள்வது மூடத்தனம்.

திருதராஷ்டிரனுக்கு நூறு புதல்வர்கள். கௌரவர்கள் என்று பெயர். அவர்கள் தவறான பாதைகளில் செல்வதும் கெட்டவராய் இருப்பதும் அவனுக்குத் தெரியும். தனது இளையவனான தம்பியின் மக்கள் பாண்டவர்கள் தருமத்தின் வழி செல்வதும், அவர்களுக்கு தனது மக்கள் பல்வேறு இன்னல்களையும் இடையூறுகளையும் இழைப்பதும் அவனுக்குத் தெரியும். அளவுக்கு மீறிய பாசத்தை பொழிவதன் மூலம் அவனது குழந்தைகள் பாண்டவர்களை துன்புறுத்த அனுமதிக்கலாகாது என்று எவ்வளவு முறை வியாசர் கூறியும் திருதராஷ்டிரனோ பொருட்படுத்தவில்லை. முடிவில் அதன் காரணமாக அவன் பல்வேறு பாவச்செயல்களுக்கு உடந்தையாகிவிட்டான்
.

🌹 குழந்தைகளுக்கு நன்நெறிகளை புகட்டவேண்டும்:

வியாசர், ''திருதராஷ்டிரா! உன் புதல்வர்கள் போல் பாசம் கொள்ள வேண்டாம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் எப்படிப்பட்ட புதல்வர்கள் மேல் பாசம் கொள்வது என்று தெரிய வேண்டும். இது தெரியாமல் நடந்து கொள்வது குருட்டுத்தனம். தீயகுணம் உள்ள மகன் மீது பாசத்தை பொழிவது நாட்டிற்கும்  வீட்டிற்கும் ஆபத்து'' என்று கூறினார்.
ஆனால் குருட்டுத்தனமான பிள்ளைப்பாசத்தால் அவன்  பெற்றது என்ன? இறுதியில் அவனது ஈமச்சடங்கு செய்யக்கூட ஆள் இல்லாது போனது. உண்மை வழிநின்ற பாண்டவர்தான் இதற்குக்கூட எஞ்சினார்கள்.


குழந்தைகள் மேல் பாசம் வைப்பதில் தவறில்லை . ஆனால் எப்படி என்று பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும். தெரிந்தோ, தெரியாமலோ பிள்ளைகள் தவறான பாதையில் செல்லும்போது, பெற்றோர் அவர்களை திருத்தி சரியான பாதைக்கு கொண்டுவர வேண்டும். உணவளிப்பதோடும் பள்ளிக்கு அனுப்புவதோடும் உலக விஷயங்களை சொல்லிக் கொடுப்பதோடும் பெற்றவர்கள் கடமை முடிந்து விடுவதில்லை. பிள்ளைகளுக்கு நன்னெறிகளையும் புகட்ட வேண்டும். சொத்து சேர்ப்பது மட்டுமே வாழ்வில் எல்லாம் என்று அவர்கள் நினைத்து விடக்கூடாது. ஒருவரது இறுதிப் பயணத்தில் சேர்த்த செல்வம் உடன் செல்வதில்லை. ஒருவரது அன்றாட வாழ்வை நடத்த மட்டுமே பொருட்செல்வம் தேவைப்படுகிறது. அளவுக்கதிகமான பொருட்செல்வம் முன் ஒருவரது கால்  அளவுக்கு அதிகமான காலணி போல சிக்கல் தரக்கூடியது. மிகக்குறைவானாலும் காலைக்கடிக்கும். இறுக்கமான காலணி போல் இன்னல் தரும். எனவே ஒருவரது அளவுக்கு ஏற்றாற்போல் வைத்துக்கொள்வதே சிறப்பு.
பொருள் சேர்க்கும் வேகத்தில் மனித குணங்கள் மறக்கப்படுவது வேதனைக்குரியது.

ஆதாரம்:  Sathya Sai Speaks Volume 17 

திருதராஷ்ட்ர மகாராஜாவுக்கு நூறு மகன்கள் பிறந்தும் அவரின் இறுதி யாத்திரைக்கு ஈமக் கிரியை செய்யக் கூட ஒரு மகனும் மிஞ்சவில்லை என்கிறார் இறைவன் சத்ய சாயி.. எத்தனை சத்தியமான வேத வாசகம்..
பெற்றோர்கள் செல்லம் கொடுப்பதை விட இறைவன் சத்ய சாயியின் உள்ளம் கொடுத்தால் மட்டுமே பிள்ளைகள் வாழ்வில் தனக்கும் பிறருக்கும் பயனுள்ளதாக வாழ்வர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக