தலைப்பு

செவ்வாய், 9 ஜூன், 2020

இரு சாயியும் கொண்டாடிய ராம நவமி!


ஷிர்டியிலும் புட்டபர்த்தியிலும்  ஆரம்ப நாட்களில் ஸ்ரீராம நவமியை எப்படிக் கொண்டாடினர் என்பதில் உள்ள இரு சாயியின் ஒற்றுமை இதோ.. 

இறைவன் மானுடராய் கீழ் இறங்கினான்.
ஏன்?
மனித உடல் என்ற ஒரு அரிய சாதனம் மேன்மை நிலை அடைவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளையும் தன்னகத்தே கொண்டிருக்கின்றன என்பதற்காக..

உச்சபட்ச விழிப்புணர்வை மனித உடம்பில் உள்ளுறைந்திருக்கும் ஆன்மாவால் மட்டுமே அடைவது சாத்தியம்‌ என்பதற்காக..

மனிதன் தெய்வீகமாய் உயர்வதற்கான கடைசி படியில் கால் வைத்திருக்கிறான்... அவனை  ஏற்றி விட வேண்டும் என்பதற்காக இறைவன் இறங்கி வருகிறான்.

அப்படி இறங்கி வந்தவர்களே திரேதா யுகத்தில் ராமரும்.. துவாபர யுகத்தில் கிருஷ்ணரும்.. கலியுகத்தில் ஷிர்டி சாயியும்.. சத்ய சாயியும்...

நம்மை கடைத்தேற்ற வேண்டும் என்ற அந்தக் கருணைக்காகவே நாம் இறைவனின் காலடித் தூசியாய் வாழ்நாள் எல்லாம் கிடந்து உய்யலாம்.

இறைவன் ஷிர்டி சாயி எப்படி எளிமையாய் வாழ வேண்டுமென வாழ்ந்து காட்டினார்.
இறைவன் சத்யசாயி எப்படி பேரன்பினால் தன்னலமற்ற நிலையில் சேவையாற்ற வேண்டும் என வாழ்ந்து காட்டினார்.

ஷிர்டி கிராமத்தில் இறைவன் ஷிர்டி சாயி ராம நவமியை கோலாகலமாகக் கொண்டாடி இருக்கிறார்.
இறைவன் கொண்டாடும் கொண்டாட்டம் எல்லாம் நாம் எவ்வாறு இறைவனைக் கொண்டாட வேண்டும் என்பதைக் கற்றுத் தரவே...

இறைவனே நமக்கு பாடம் எடுக்க வேண்டித் தானே பாதம் எடுத்து வருகிறான்.


ஷிர்டி சாயியின் அனுமதி வாங்கியே ஸ்ரீராம நவமி கொண்டாடப்படுகிறது ஷிர்டி கிராமத்தில்..
ராமரின் அனுமதி பெறாமல் எப்படி ராம நவமியை கொண்டாட முடியும்?

"பாபா தனது கழுத்திலிருந்து ஒரு மாலையை அணிவித்து மற்றொரு மாலையை பீஷ்மாவுக்கு (சாயி பக்தர்) அனுப்பினார். கீர்த்தனை துவங்கியது. அது முடிவடைந்ததும் "ஸ்ரீராமருக்கு ஜெயம் என்ற கோஷம் வானைப் பிளந்தது. "
(ஸ்ரீ சாய் சத்சரிதம் -- பக்கம் 50.)

ஷிர்டி சாயி மீண்டும் புட்டபர்த்தியில் பிறந்ததும்.. சத்யா எனும் திருப்பெயரில் வளர்கிறார்.
தெய்வக் குழந்தை என்போம் பொதுவாய்..
ஆனால் தெய்வமே குழந்தையாய் வளர்வதைப் பார்த்த திருக்கண்கள் நட்சத்திரங்களுக்கு சமம் அல்லவா...

புட்டபர்த்தியிலும் ஷிர்டியில் நடந்தது போல் ஸ்ரீராம நவமி உற்சவம்.
குழந்தைகள் ராமர் திருப்படத்தை ஊர்வலமாய் எடுத்து வருகின்றனர்.

ஊரார் சத்யா எங்கே என அந்தக் கூட்டத்தில் தேடுகின்றனர்.
இறைவன் என்ன கூட்டத்தில் ஒருவனா..
இல்லை..அந்தக் கூட்டத்தையே தோட்டமாகப் மலர்த்துவதற்கு வேண்டியே தரை இறங்கிய தயாபி ராமன் சத்ய சாயி.

அந்தக் கூட்டத்து சிறுவர்களில் ஒருவன் அங்கே பாருங்கள்.. என கையை உயர்த்துகிறான்.

இறைவன் உயர்வானவன்.
உயர்வான உள்ளங்களில் மட்டுமே உலா வரக் கூடியவன்.
அதோ அங்கே சத்யா அந்த ராமர் திருப்படத்திற்கு ரத்தமும் சதையும் உயிரும் கலந்து வந்ததைப் போல உட்கார்ந்து கொண்டிருக்கிறார்.

அருகே ராமர் படம். அதன் அருகே ராமர்.
இந்தத் திருக் கோலத்தைக் கண்ட புட்டபர்த்தி ஜனங்களில் சிலர் கண்ணீர் மலர்களைத் தூவினர்.

அந்த அற்புத ஊர்வலத்தை வானவர் காணாமலா இருந்திருப்பர்?
தேவாதி தேவர்களும் வானிலிருந்து நிச்சயம் அருவ மலர்களை அருவி மலர்களாய்ப் பொழிந்திருப்பர்.

அந்தத் திருக்காட்சியைக் கண்ட அனைத்து கண்களும் அந்த நேரம் துளசியாகி இருக்கும்.

அதைப் பார்த்த சிலர் ஏன் சத்யா மட்டும்  அங்கே அமர்ந்திருக்கிறான் என வினா வீச..
அவன் எங்கள் "பிட்ல குரு" என்று பதில் வெளிச்சம் வீசியிருக்கிறார்கள் சப்பரத்தை தூக்கிச் சுமந்த புட்டபர்த்தி சிறுவர்கள்..

அவர்கள் என்ன சிறுவர்களா? சாட்சாத் சிரஞ்சீவி அனுமார்கள் அல்லவா..

இந்த விசித்திர வைபவம் நிகழ்ந்தது எல்லாம் இறைவன் சத்ய சாயி தன்னை அவதாரம் என அறிவிப்பதற்கு முன்பே என்பதைப் புரிந்துணர வேண்டும்.

இறைவனிடம் இருந்து வெளிப்படும் ஆகர்ஷனம் சாதாரணமானதல்ல...
அது மனிதப் புரிதலுக்கும் அப்பாற்பட்டது.
அதை பக்தியால் அனுபவிக்கலாமே தவிர அளப்பதற்கு இதுவரை மானுடம் எந்தக் கருவியையும் கண்டுபிடிக்கவில்லை.

இறைவன் ஷிர்டி சாயியின் பால ரூபம் தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இறைவன் சத்ய சாயியின் பால ரூபத்தை தரிசித்துக் கொள்ளலாம்.

இருவரும் ஒருவரே என உணர்ந்து கொள்பவர்கள் புண்ணியாத்மாக்கள்.
அவர்கள் ஒருமையை நோக்கிப் பயணப்படுபவர்கள்.
அத்வைதம் நோக்கி அடி எடுத்து வைப்பவர்கள்.
ஞானம் நோக்கி நகர்பவர்கள்.

இறைவனைப் புரிந்து கொள்ள முடியாது உணர்ந்து கொள்ளத்தான் முடியும் என்பதை உணர்ந்தவர்களுக்கு இன்னும் ஓரிரு அடியில் ஞான கங்கை இதயத்தினுள் பொங்க ஆரம்பித்துவிடும்.

சத்தியம் வளரும்

  பக்தியுடன்
வைரபாரதி ✍️ 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக