தலைப்பு

புதன், 10 ஜூன், 2020

ஈஸியான கடவுளும்.. கிரேஸியான பக்தரும்


கிரேஸி மோகன் அவர்களின் சத்யசாயி அனுபவமும்.. அவர் இயற்றிய சத்ய சாயி வெண்பாக்களும் நவரசப் பதிவாக இதோ.. 

மோகன் அவர்கள் திரு மோகன் ராகவாச்சாரியாகவே வாழ்ந்து மறைந்திருந்தால் பனி போல் விலகிச் சென்றிருப்பார்.
ஆனால் கிரேஸி மோகனாக வாழ்ந்திருந்ததால் உடல் மறைந்த பின்னும்  இன்னமும் தனித்துவமாய்.. தத்துவமாய் வாழ்கிறார்.

பிரபலம் அடைந்ததால் அவர் பெற்றிருக்கும் முக்கியத்துவமா?
இல்லை..
தான் ஒரு பிரபலம் என்று என்றைக்குமே மனதில் கனம் சேர்க்காதவர்.
அவரின் நகைச்சுவைப் போலவே கள்ளம் கபடமற்றவர்.
தரை தொடாத மழை போல கலங்கமில்லாதவர்.
கடல் தொடும் மழை போல நம்மோடு கலந்துவிட்டவர்.

சாய்ராம் என்றேன். சாய்ராம் என்றார்.
அந்த ஆத்மார்த்த ஆன்மீகம் தான் கிரேஸி அண்ணா.
கடைசியாக அவரிடம் இருந்து விடைபெறும் போது எங்கள் இருவரையும் விடை பெறாமல் இணைத்துவிட்ட மந்திரம் இந்த "சாய்ராம்"பெரிய ஹாஸ்ய யோகி அவர்.
மழலை முகம்.. கனிந்த இதயம்.. முதிர்ந்த மனம்.. இதுவே கிரேஸி அண்ணா..
தன் கடமையை சரிவர செய்துவிட்டு அதன்பிறகு என்ன நடக்குமோ .. ஏது நடக்குமோ என்று கவலைப்படாதவர்.

சர்வம் கிருஷ்ணார்ப்பணம் என்று வாழ்ந்தவர்.
இறைவன் சத்ய சாயி பக்தர்.
பல மகான்களை சுவாசித்தவர்.
வெண்பா புனைவதில் வல்லவர்.
ஓவியம் வரைவதிலோ உயிரோட்டமானவர்.

மண்டை கனம் தான் பல புலவர்களை படுகுழியில் தள்ளிவிடுகிறது..
வயிற்றெரிச்சல் தான் பல கலைஞர்களை வாழவிடாமல் செய்துவிடுகிறது.
இந்த இரண்டு தொற்றுமே இல்லாதவர்.

எனக்கு ஒருவர் பிரபலமா என்பதைவிட அவர் நல்லவரா என்றே பார்ப்பேன்.
திறமை சாயி இறைவன் தருவது.
ஆனால் நல்ல இதயமே சாயி இறைவன் விரும்புவது.

அவரிடம் கற்க வேண்டியவை நிறைய..

சிரிக்கும் போது எண்ணம் நின்றுவிடுகிறது.
ஆக மனம் விட்டுச் சிரிப்பது.
வாழ்தலை எளிதாக எடுத்துக் கொள்வது.
எவரையும் குறை கூறாமல் வாழ்வது.
எல்லாவற்றிலும் நன்மையை மட்டுமே பார்ப்பது.
நேர்மறை சிந்தனை..
பல ஜென்மம் பழகியது போல் முதல் சந்திப்பிலேயே பழகுவது.
எந்தவித சுவர்களையும் இதயத்தில் கட்டிக்
கொள்ளாமல் இருப்பது.
அவரிடமிருந்து கற்க வேண்டியது இப்படி ஏராளம்.


தனது சாயி அனுபவம் பற்றி முகநூலில் அவரே ஒருமுறை பதிந்தவை.. இதோ உங்கள் வாசிப்புக்கு...

வழக்கமாக (ஸெண்டிமெண்டாக) புட்டபர்த்தி சாயி பாபா பிறந்த நாளில்தான் கிரேசி கிரியேஷன்ஸ் புது நாடக அரங்கேற்றம் செய்வோம்.... ஒருமுறை “மதில் மேல் மாது” நாடகம் எழுதத் துவங்குகையில் அடியேனுக்கு “அக்கி” வந்து
விட்டது. டாக்டர் அரங்கேற்றத்தைத் தள்ளி வைக்குமாறு கூறினார் (உன்னால் எழுதமுடியாது வலியில் என்று ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்தார்). பாபாவின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு எழுதினேன். வலி தெரியவில்லை. நாடகமும் வெற்றி அடைந்தது. அந்த நாடகம் 300 முறை கிட்டத்தட்ட நடக்கும் போதெல்லாம், வழக்கமாக அறிவிக்கும் “கதைவசனம் கிரேசி மோகன்” போன்ற தம்பட்டங்களைத் தவிர்த்து, ‘பாபா’ எழுதி போடுவதாக சங்கல்பம் செய்து கொண்டு போட்டோம். நாடகம் எழுதியதும் அடியேனும், காப்பி பண்ண வத்ஸல் என்பவரும் கால்வலி (அடியேனுக்கு) என்பதை மறந்து ‘நகர் சங்கீர்த்தன்’ போனோம். Wordsworth சொன்னமாதிரி ஆன்மீக Emotions Recollected In Tranquility....

பாபா சித்தி அடைந்த போது எழுதியது....

   கெட்டபுத்தி நீக்கி, கலியில் அடியார்க்கு
   இட்டபூர்த்தி செய்து இகபரத்தை - புட்டபர்த்தி
   சாயி பகவான், சகஜமாய்த் தந்தவர்
   போயி வருவார் புவிக்கு....(1)

   சத்திய சாந்த சிவசுந் தரமாக
   இத்தரை தோன்றும் இதுவுறுதி - அத்தினம்
   நோயிநொடி இல்லா நிலையிங்(கு) உருவாக
   சாயி பகவான் சரண்....(2)

   நகரசங் கீர்த்தனையாய் நாமெல்லாம் சேர்ந்து
   அகர உகர மகர - சிகரத்தை
   சாயிராம் என்றுரத்துச் சொல்லிக் குரல்கொடுப்போம்
   பாயுவார் மீண்டும் புவிக்கு....(3)

   கரசே வகர்கள் கடைசியாய்க் காண
   வருசமயம் தாராய் வரங்கள் - அரசியல்
   வ்யாபா ரிகள்வந்தால் வீறுகொண்டு வானிருந்து
   பாபா அரிமாவாய்ப் பாய்....(4)

   அல்லாவும் ஏசுவும் கல்லாலின் ஈசனும்
   பல்லா யிரக்கணக்கில் பக்தரும் - எல்லோரும்
   சாயி பகவான் சமாதி அடைந்திடும்
   கோயில் புகுந்தார் குனிந்து....(5)....

   - கிரேசி மோகன்
(ஆதாரம்: கிரேசி மோகன் அவர்களின்  ஃபேஸ்புக் பதிவிலிருந்து) 


கிரேசி மோகன் சாய்ராம் வரைந்த சுவாமியின் வாட்டர் கலர்  பெயிண்டிங். 

கிரேஸி மோகன் அண்ணாவின் நகைச்சுவையோடு வாழ பழகிக் கொண்டால் மனசு லேசாகி விடும்..
மனசு லேசானால் சுத்தப்படுத்துவதை பாதி அதுவே செய்துவிடுகிறது.
மனசு சுத்தமாக அதாவது சுத்தமாக இல்லாமல் இதயத்தோடு வாழ்வது ஆரம்பிக்கிறது..


கிரேஸி அண்ணா நமக்கு விட்டுச் சென்ற வாழ்க்கையை ஒரே வரியில் அடக்கிவிடலாம்.
"Life Is Crazy..  Take Is Easy"
வாழ்க்கை என்பது புரிந்து கொள்வதற்கானது அல்ல.. அது வாழ்வதற்கானது மட்டுமே ..என்பதான அற்புதமான ஆங்கில வாசகம் அது.

சுமையோடு வாழாமல்.. சுமையாக வாழாமல்.. இமையாக வாழ வேண்டும்.. 
அப்போது தான் ஆன்மா எனும் கண்ணை இமையாக இருந்து நம்மால் பாதுகாக்க முடியும்.

இந்த சாக்லேட் 🍫 கிருஷ்ணாவை சத்ய சாயி கிருஷ்ணர் தன் பாதத்தில் சேர்த்துக் கொண்டு.. அவர் விட்டுச் சென்ற கலைப் பொக்கிஷங்களை நமக்கு கொடையாக வழங்கியிருக்கிறார்..
அந்தக் கொடை குடையாக வெய்யில் வருத்தங்களில் இருந்து நம்மைக் காப்பாற்றும்.

கிரேஸி அண்ணாவுக்கு எல்லாமே கிருஷ்ணார்ப்பணம்..
கவலைகள் எல்லாமே அவர் பாணியில் நாமும் அளித்துவிட வேண்டும்..
கிரேஸியார்ப்பணம்..

பக்தியுடன்
வைரபாரதி

2 கருத்துகள்:

  1. CraSai Mohan's out pourings are from heart.Very glad to note that crazy Mohan is nammavar. உமது நண்பர் நம்மவர் கமலின் சாயி
    அனுபவம் பற்றி அறிய அவா

    பதிலளிநீக்கு