தலைப்பு

வியாழன், 18 ஜூன், 2020

இரு நதிக்கரையிலும் இரு சாயி நிகழ்த்திய பேரற்புதங்கள்!


இரு சாயியும் தாங்கள் அவதரித்த இரு நதிக்கரையிலும் புரிந்த பேரற்புதங்களின் ஆச்சர்யப் பதிவுகள் இதோ.... 

கோதாவரி நதிக்கரையில் அவதரித்தவர் இறைவன் ஷிர்டி சாயி.
சித்ராவதி நதிக்கரையில் அவதரித்தவர் இறைவன் சத்ய சாயி.

கோதாவரி நதி கங்கை ... சிந்து நதிக்கு அடுத்தபடியான‌ புனிதமான நதி.
இறைவன் கிருஷ்ணர் யமுனா நதியில் பாரிஜாதமாய் தவழ்ந்தவர்.

ஏன் நதிக்கரையில் இறைவன் அவதரிக்க வேண்டும்?
பஞ்சபூதங்களில் ஒன்றான நதி...
 நீர் வடிவம்.
நெருப்பு மேல் நோக்கி எழுவது.
நீர் கீழ் நோக்கி விழுவது.

அவதாரம் என்பதே கீழ் நோக்கி இறங்கி வருவதால்
இறைவன் நதியை தான் அவதரிக்கையில் தேர்ந்தெடுக்கிறார்.

அப்படி கோதாவரி நதியை தேர்ந்தெடுத்தார் இறைவன் ஷிர்டி சாயி.
சித்ராவதி நதியை தேர்ந்தெடுத்தார் மீண்டும் அவதரித்த சத்யசாயி.

கோவில் சென்றாலே அங்கு தீர்த்த குளம் இருக்கும்.. நம்மை சுத்தீகரிப்பதற்காக...

கோதாவரி நதி மஹாராஷ்ட்ரா மண்ணில் நாசிக் நகரில் திரிம்பாக் எனும் இடத்தில்
உற்பத்தியாகிறது.
திரியம்பகேஷ்வர் எனும் பெயர் சுறுக்கமே திரிம்பாக்.

சிவ அம்சத்தோடு உலகில் வந்திறங்கியதே இறைவன் ஷிர்டி சாயி.

சிவன்.. பிரம்மா.. விஷ்ணு போன்ற பல தெய்வங்கள் எல்லாமே பரிபூரண இறைவனின் ஒவ்வொரு அம்சங்களே.



சிவ குணம் நிரம்பி வழிந்தது இறைவன் ஷிர்டி சாயிக்கு...
தவத்தின் வெளிப்பாடே சிவ அம்சம்.
தியானப் பிரபாவமே சிவ ரூபம்..
இறைவன் ஷிர்டி சாயி சிவ ரூபம் ...
அந்த தபோனுபவமே (தவ அனுபவமே)
ஷிர்டி சாயி தான்.
ஆகவே தான் தவ பிரபாவத்தில் அவர் அன்றாடம் பக்தர்களின் கர்மங்களைக் களைகிறார்.

சிவசக்தி குணம் நிரம்பி வழிந்தது இறைவன் சத்யசாயிக்கு...
தவ வெளிப்பாடோடு கூடிய பேரன்பே சிவசக்தி அம்சம்.

தவ வெளிப்பாடு என்பதால் இரு சாயியும் தவம் செய்தார்கள் என்ற அர்த்தத்தில் புரிந்து கொள்ளக் கூடாது...

நாம் செய்கின்ற தவமும்.. தியானமும் அதனால் ஏற்படுகின்ற பேரநுபவமே கீழ் இறங்கி வடிவம் எடுத்துவந்த இரு சாயியும்...

இறைவனான இரு சாயியும் இரு நதிக்கரையில் புரிந்த லீலா விநோதமும் அநேகம்..


ஒரு நாள் கோதாவரி நதிக்கரையில் சிறுவனாக இறைவன் ஷிர்டி சாயி உலாவிக் கொண்டிருந்த போது நவாப் பல இடங்களில் தொலைந்து போன தன் குதிரையைத் தேடி அங்கே வருகிறார்.
தன் குதிரையை பார்த்தாயா என இறைவனிடம் கேட்க..
இறைவன் ஷிர்டி சாயியோ எங்கும் தேட வேண்டாம்.. அதுவே நம்மை நோக்கி வருவதாக சொன்ன அடுத்த நொடி அந்தக் குதிரை ஒய்யாரமாக நடந்து வந்தது..
சிலிர்த்துப் போனார் நவாப்.
காலடியில் விழுந்து அந்த கணமே சீடரானார்.

அதன் பிறகே இறைவன் ஷிர்டி சாயி ஷிர்டி கிராமத்தில் பாழடைந்த மண்டபத்தில் தங்க ஆரம்பிக்கிறார்.

(ஆதாரம் :- சத்யம் சிவம் சுந்தரம் -- பாகம் 1 -- ஆசிரியர் கஸ்தூரி)

இறைவன் ஷிர்டி சாயி  சத்ய சாயியாக இரண்டாவது முறை சித்ராவதி நதிக்கரையில் அவதரித்து அந்த அற்புத மணல் வெளியில் புரியாத லீலைகளே இல்லை...

கிருஷ்ண லீலைக்கு சற்றும் குறைவில்லாதது சத்ய சாயி லீலைகள்.
காரணம் கிருஷ்ணரே இரு சாயியும் என்பதால் கிருஷ்ண லீலா விநோதங்களாய் சத்ய சாயி லீலா விநோதங்கள் நிகழ்ந்தது எதுவும் ஆச்சர்யமே இல்லை..


இறைவன் சத்ய சாயியின் ஆரம்ப அவதார லீலா விநோதங்களுக்கும் ஆதாரமாக.. சர்வ சாட்சியாக விரிந்திருப்பது சித்ராவதியின் அந்த ஒவ்வொரு மணல் துகள்களும்...

சுவாமி அவதரிப்பதற்கு முன்பே கணவரை இழந்த ஒரு மூதாட்டி அந்த சித்ராவதி மணல் வெளியில் ஒரு நாள் சுவாமி பக்தர்களோடு அமர்ந்திருக்கிறாள்.
சுவாமி பலருக்கும் பல லீலைகள் புரிகிறார்.
என்ன வேண்டும்? எனக் கேட்கிறார்.
மைசூர் பா கேட்கிறார்கள் பால்ய பக்தர்கள்.
மணலில் தன் மகரந்த விரல்களை உள்ளே செலுத்துகிறார்..
சுடச் சுட நெய் சொட்டும் மைசூர் பா..
அதில் ஒரு பேராச்சர்யம்...
அந்த மைசூர் பாவில் ஒரு துளி மணல் துகளும் ஒட்டி இருக்கவில்லை.
அப்போது உனக்கென்ன வேண்டும்? என மூதாட்டியிடம் கேட்கிறார் சுவாமி...
அவர் அழுது கொண்டே தன் கணவரின் புகைப்படம் வேண்டும் சுவாமி எனக் கேட்கிறார்.
அது எப்படி சுவாமிக்கு தெரியும்.. அந்த மூதாட்டியின் கணவர் வாழ்ந்து மறைந்த போது சுவாமி அவதரிக்கவே இல்லையே என்பதாக சுற்றி இருப்போரின் முகத்தில் கேள்வி ரேகைகள்.
சுவாமி புன்னகைத்துக் கொண்டே விரல்களை மணலில் விடுகிறார்..
அசைக்கிறார்..
அந்தக் காலத்து ஃபோட்டோ ஸ்டூடியோ லேபில் நெகட்டிவை கழுவி எடுப்பதைப் போன்ற விரலசைவில் மணலிலிருந்து எடுக்கிறார்.
அந்த மூதாட்டியிடம் தருகிறார்.
அவர் அந்தப் புகைப்படத்தைக் கைகளில் வாங்கி மெய் சிலிர்த்துப் போய் அழுகிறார்.
ஆனந்தப்படுகிறார்.
அந்த நொடியே இறைவன் சத்ய சாயி பாதங்களில் சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குகிறார்.


இறைவன் சத்யசாயியே ஷிர்டி சாயி. இரு சாயியுமே கிருஷ்ண பரமாத்மா..
அவர்களுக்கு பிறப்பேது? இறப்பேது?

எல்லாம் அறிந்த .. எங்கும் நிறைந்த ஒரே பரபிரம்மம் என்பதை அன்றாடம் உணர்த்தும் பற்பல அற்புதங்களில் இதுவும் ஒன்று.

இதைக் கண்ணுற்றவர்கள் ஏராளம்.
புத்தகமாய் நம்மிடையே சாட்சியாகவும்..
நமக்கே நம் சொந்த வாழ்வின் வழி பல அனுபவங்களாகவும் திகழ்கின்றன ஏராளம்.

(ஆதாரம் :- அன்யதா சரணம் நாஸ்தி, சத்ய சாயி ஆனந்ததாயி, தபோவனம்) 

இரண்டு நதிக்கரைகளும் கொடுத்து வைத்திருக்கின்றன..
இறைவனின் பாத தூளி பெறவும்..
இறைவனின் சுவாசக் காற்றை அனுபவிக்கவும்..
இறைவனின் பாதச் சுவடுகளைத் தாங்கிப் புல்லரித்துப் போகவும்..

இரு சாயியும் ஒருவரே என்பதை குறித்து பஞ்சபூதங்கள் சந்தேகம் கொள்வதே இல்லை.
அந்தப் பஞ்சபூத கலவையான மனிதன் எதிலிருந்து பிறந்தானோ அதை உணர முற்படுகையில் சந்தேகங்கள் நீங்கி தன்னுள் தானாய் நிறைந்து
இரு சாயியின் பாதார விந்தங்களில் பரிபூரண சரணாகதி அடைகிறான்.

சத்தியம் தொடரும்

  பக்தியுடன்
வைரபாரதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக