தலைப்பு

திங்கள், 8 ஜூன், 2020

வாழ்வின் இரு சீரிய குணங்கள்!


நேரடியாக உட்பொருளைச் சுட்டிக் காட்டிவிடுவார் இறைவன் ஸ்ரீ சத்ய சாயி. மனித அன்பின் வழியிலே தான் இறைவனின் பேரன்பை அடைய முடியும் என்பதையும் அதை தனக்கே உரிய தெய்வீக பாணியில் இதோ இறைவனே விளக்குகிறார். 

இன்று ஒரு சமய மறுமலர்ச்சி எங்கும் தெரிகிறது. உலகெங்கிலும் சமய அமைப்புகள் எழுகின்றன. ஆனால் இதில் மிகுதியான செயல்களும் சுய லாபத்தை மையமாய் கொண்டே எழுகின்றன. பக்தர்கள் தங்கள் தனிப்பட்ட வேண்டுதல்களின் பொருட்டே இறைவனை துதிக்கின்றனர். உண்மையான இறை அன்பு இதயத்தினின்றும் பொங்காதவரை வேத, புராண, இதிகாச திருமறைகளைப் பயில்வதெல்லாம் வீணே. உண்மை அன்பின் மூலமே இறையை உணர இயலும். அன்பும் தியாகமும் மட்டுமே வாழ்வின் இரு பெரிய குணங்களாகும்.
 நாடும், சமுதாயமும், தனிமனிதனும் தருமத்தின் வழி செல்ல நமது முன்னோர்கள் இந்த இரு குணங்களைக் கடைபிடித்துத்தான் இன்னல்களை கடந்தேறினர்.
உலகத்தில் தருமத்தின் வாரிசுகளும் அதர்மத்தின் வாரிசுகளும் தொடர்ந்து உருவாகி வளர்ந்துதான் வருகின்றனர்.
அதர்மம், பொய் தோற்றத்தை (மித்யா) மணந்தான். மித்யா என்ற பொய் தோற்றம் பொய்யும் அல்ல மெய்யும் அல்ல. இந்த ஜோடிக்கு இரு குழந்தைகள் பிறந்தன. அகங்காரம் என்னும் மகனும் மோகம் என்னும் மகளும். அகங்காரமும், மோகமும் அறிவின்மையின் விதைகளானதால் அவர்களிடையே உண்டான தவறான சேர்கையில் உண்டானதே லோபம் (பேராசை) என்ற மகனும், வஞ்சனை என்ற மகளும் இவர்கள் இரண்டும் தவறாய்க் கூடி பொறாமை, சினம் என்னும் இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தார்கள். அவர்களுக்குப் பிறந்தவையே அச்சமும், (பித்தி) மரணமும் (மிருத்தியா). இந்த பரம்பரையைத்தான் அதர்ம சந்ததி என்று கூறுகிறோம். இதில் ஒவ்வொரு சேர்க்கையும் தவறாய் நிகழ்ந்தவையே.

இனி தருமத்தின் சந்ததியைப் பார்ப்போம். தருமம், சத்தியம் (உண்மை) எனும் உயர்ந்த ஆன்மாவை மணந்தார். இவர்களுக்கு எட்டு குழந்தைகள் பிறந்தன. கவனம்(சிரத்தை), கருணை(தயா), அமைதி(சாந்தி), செழுமை(புஷ்ட்டி), நிறைவு(சத்துஷ்ட்டி), முன்னேற்றம்(விருத்தி), அடக்கம்(லஜ்ஜை), மரியாதை (கவுரவம்), இறையடி(முக்தி) என்பவையே. இனி இதில் எந்த மரபை சேர்ந்தவர்கள் நாம் என்பதை தீர்மானித்து கொள்ள வேண்டும். உலகில் தொண்ணூறு சதவிகிதம் மக்களும் மித்தியத்திற்கும் அதர்மத்திற்கும் பிறந்தவர்களாகவே தோன்றும்.

நாம் தருமத்தை கடைபிடிக்கையில் நம்முள் உள்ள இறைத் தன்மை சிறந்து தானாக ஒளிரும். தருமத்தை வெறும் வார்த்தையில் அடக்கிக் கொள்ளக்கூடாது. மனிதன் நேர்மையின் வடிவமாய் கொள்ளப்படுகிறான். ஆனால் தருமத்தின் வழி நில்லாதவரை அந்த மாண்பு மிக்க பெயர் பொருந்துவதில்லை. இறையுணர்வே வாழ்வின் இலக்கென்பதை அனைவரும் உணர வேண்டும். எனவே ஒவ்வொருவரும் இறை நம்பிக்கை கொள்வது என்பது அவசியம் ஆகிறது. நம்பிக்கை வளர்வதோடு ஒருவன் தருமம், சத்தியம், நீதி என்றவற்றிற்கு கட்டுப்பட்டு வாழ்ந்து வருவானாயின்  அவன் வாழ்வின் பயனை அடைவான். தருமத்தைக் கடைபிடிக்காதவன் இந்த பூமிக்கு பாரமாகிறான். அவனது செல்வம் அனைத்தும் அவனது இறுதிப் பயணத்தில் அவனுடன் போகாது. செல்வம் சேர்ப்பதிலும் இறையருள் பெறுவதென்பதே முதன்மையாகும்.
இறையன்பை பேணுங்கள். சொல்லவொண்ணா பேரானந்தத்தை உணருங்கள்.

-ஆபட்ஸ்பரி, சென்னை . 19-1-84


🌻 அந்த சொல்லொண்ணா பேரின்ப அனுபவமே இறைவன் ஸ்ரீ சத்யசாயி. அந்த விவரிக்க முடியா பேரானந்தத்தை அனைவரும் அடைவோமாக! 🌻

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக