பேரிறைவன் ஸ்ரீ சத்யசாயியின் சிறு அசைவே அத்தியாயம் அத்தியாயமாய் நமக்கு பகவத்கீதை சொல்லித் தருகிறது. அதை சுருக்கமாய் ... தெய்வீக நெருக்கமாய் சுவாமியின் உபதேசங்களை உணர்த்தும் மகிமையாய் / அற்புதமாய் / லீலையாய்/ சம்பாஷணையாய் ஸ்ரீ சத்யசாயி கதம்ப மாலையாக உங்கள் இதயத்தை அரவணைக்கிறது இதோ..
📝 நிகழ்வு 151:
ஸ்ரீ கண்டிகோட சுப்ரமண்ய சாஸ்திரி அவர்கள், “ஸ்வாமி சொல்பவை அனைத்தும் வேதங்களில் உள்ளன” என்று கூறியதற்குத் தன் இளம் வயதில் தந்தையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அதனை நிரூபிக்கும்படி ஸ்ரீ ஜி.வி.சுப்பா ராவ் சவால் விட்டார். ஒருசில நாட்களில் ஸனாதன ஸாரதி இதழ், தபாலில் வீட்டை வந்தடைந்தது. அதில் அச்சிடப்பட்டிருந்த ஸ்வாமியின் உரை, வேதங்களில் எங்காவது சொல்லப்பட்டிருக்கிறதா என்று திரும்பவும் தன் தந்தையிடம் கேட்டார். மகன் ஆச்சரியப்படும் விதமாக, தந்தை ஸ்ரீ கண்டிகோட சுப்ரமண்ய சாஸ்திரி வேதத்திலிருந்து அதே பொருள் படைத்த செய்யுள்களை உடனே எடுத்துக் கூறினார். இதனைக் கேட்ட மகன் ஜி.வி.சுப்பா ராவ் வாயடைத்து நின்றார். ஸ்வாமியின் அளவு கடந்த வேத ஞானத்தை நினைத்து வியந்துபோனார்.
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து
.
📝 நிகழ்வு 152:
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகளான
டாக்டர். கார்லோ ஓஸிஸ் என்பவரும், ஐஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த
டாக்டர். எர்லாந்துர் ஹரால்ஸன் என்பவரும் திறந்த மனம் படைத்த, இயல்பு-கடந்த-உளவியல் நிபுணர்கள் ஆவர். இவர்கள் இருவரும் ஸ்வாமியின் அற்புத லீலைகளை ஆராய விரும்பினர். அவர்கள் பர்த்தியில் வெகுநாட்கள் தங்கினர்; ஸ்வாமி அவர்களுக்கு அளித்த இன்டர்வியூக்களில் ஸ்வாமியிடம் அவரது அற்புதச் செயல்கள் குறித்த பல கருத்துக்களை விரிவாக விவாதித்தனர்.
தினசரி உலகியல் வாழ்க்கையும் ஆன்மீகமான வாழ்வும், ஒரு இரட்டை ருத்ராக்ஷத்தைப் போலப் பின்னிப் பிணைந்திருக்க வேண்டும் என்ற கருத்தினை ஸ்வாமி அவர்களுக்கு அளித்த முதல் இன்டர்வியூவிலேயே கூறினார். ஆனால் அவர்கள் ருத்ராக்ஷத்தைப் பார்த்ததில்லையாதலால், ஸ்வாமி சொன்னது அவர்களுக்கு விளங்கவில்லை.
உடனே ஸ்வாமி அத்தகைய ஒரு ருத்ராக்ஷத்தை வரவழைத்து அவர்களுக்குக் காண்பித்தார். அவர்கள் இதன் வாயிலாக ஸ்வாமி சொன்ன கருத்தைப் புரிந்து கொண்டனர்; அந்த இரட்டை ருத்ராக்ஷத்தை அவர்களே வைத்துக் கொண்டனர். பிறகு கொல்கத்தாவில் இந்திய தாவரவியல் கணக்கெடுப்பு மையத்தின் இயக்குனரான டாக்டர். ஸத்யநாராயண ராவ் அவர்களிடம் இந்த இரட்டை ருத்ராக்ஷத்தைக் காண்பித்தனர். அதைப் பார்த்த அவர் மிகவும் ஆச்சரியப்பட்டு,
“இது மிகவும் அரியதொன்றாகும். எங்கள் மையத்திற்காகப் பலவாறு தேடியும் இதுவரை எங்களுக்குக் கிட்டவில்லை. இப்போதாவது அதைப் பார்ப்பதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தது” என்று கூறி மகிழ்ந்தார்.
இரு நிபுணர்களும் அந்த ருத்ராக்ஷத்தைப் பல பரிசோதனைகளுக்கு உட்படுத்திய பின் அது ஒரு தாவர வகையைச் சார்ந்ததுதான் என்ற முடிவுக்கு வந்தனர்.
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 153:
ஜேக் ஹில்டன் என்னும் வசதிமிக்க அமெரிக்க விவசாயி , சுவாமி பற்றிய புத்தகங்களைப் படித்து பக்தரானவர். ஆனால் அவர் சுவாமியை நேராகப் பார்த்ததில்லை. ஆகஸ்ட் மாதம் 1970இல் ஒருநாள் மதியம் அவர் தன்னுடைய விவசாயப் பண்ணையிலிருந்து காரில் திரும்பி வந்துகொண்டிருந்தார். அவரது பாதை மிகக் குறுகலாகவும் குருட்டு வளைவுகள் நிறைந்ததாகவும் இருந்தது. அப்படிப்பட்ட
ஒரு வளைவில் பெரிய டிராக்டர் ஒன்று அவர் காரின் மீது நேருக்குநேர் மோதும் நிலை ஏற்பட்டது! ஒன்றும் செய்வதறியாமல் திகைத்தார். மிகுந்த பயத்தால் ஒன்றும் செய்யமுடியவில்லை. ஆனால்,
‘சாயிபாபா!’ என்று மட்டும் அவரால் கூறமுடிந்தது.
அடுத்தநொடியில் அந்த டிராக்டர், காரின் பின்புறம் இருந்தது! இரண்டு ஓட்டுனர்களாலும் தங்கள் கண்களை நம்பவே முடியவில்லை! ஒன்றுடன் ஒன்று பயங்கரமாக மோதவிருந்த இரு வாகனங்கள் எந்த ஒரு நிகழ்வுமின்றி அவரவர் வழியில் மேற்கொண்டு பயணித்துக் கொண்டிருந்தன!
காலம் மற்றும் இடைவெளி குறித்த இயற்கை விதிகள் மீறப்பட்டன! ஒரு நொடியைவிட மிகச்சிறிய கால இடைவெளியில் சுவாமி தன் பக்தரைக் காப்பாற்றிவிட்டார்! இந்த நிகழ்வுக்குப் பிறகு சுவாமியின் மீது அவரது பக்தி மேலும் அதிகரித்தது. ஜேக் ஹில்டன் 1980இல் புட்டப்பர்த்திக்கு வந்தார். தரிசன வரிசையில் அமர்ந்திருந்த அவரைப் பார்த்த ஸ்வாமி, “இங்கு வருவதற்கு நீ பத்து வருடம் எடுத்துக்கொண்டுள்ளாய்” என்று கூறினார்.
சரியாக பத்து வருடங்களுக்கு முன்னால்தான் அவர் அந்த விபத்திலிருந்து ஸ்வாமியால் காப்பாற்றப்பட்டார்!
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
பிரசாந்தி நிலயத்தில் பத்து மாதங்கள் தங்கிவிட்டு ஊருக்குத் திரும்பிய க்ரீன் எனும் பெண்மணி திரு. கஸ்தூரி அவர்களுக்குப் பின்வருமாறு கடிதம் எழுதினார்: “பாபா ஒரு தடவை, ‘இனிமேல் உனக்கு டாக்டர்களோ அல்லது மருந்துகளோ கிடையாது. நான் உன்னைப் பார்த்துக் கொள்வேன்’ என்று கூறினார். இந்த வாக்கியங்களின் முக்கியத்துவத்தை நான் இப்போதுதான் உணர்ந்துள்ளேன். நான் இருட்டில் கண் தெரியாமல் ஒரு குழிக்குள் திடீரென்று இறங்கிவிட்டதால், என் கணுக்கால் பிசகியது. ஆராய்ந்து பார்த்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரிய வந்தது. தாங்கமுடியாத வலியால் துடித்தேன். ஆனால் ஸ்வாமியின் வார்த்தைகளைக் கருத்தில் கொண்டு நான் அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை. என் நண்பர்கள் என்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். நான் படுத்துக் கொண்டவுடன் வலி நின்றது, கால்கள் மரத்துப் போயின. நண்பர்கள் என்னை ஸாயி பஜனைக்கு அழைத்துச் சென்றனர். பஜனையைக் கேட்டுக்கொண்டிருந்தபோது என் கால்களில் மீண்டும் உணர்ச்சி திரும்பியது. என் கால்கள் முற்றிலும் குணமாகி நான் இப்போது நலமாக உள்ளேன்.”
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 155:
சில நேரங்களில் நாம் இருக்கும் இடத்தில் ஸ்வாமி நம்மோடு இருக்கிறார் என்று உணர்த்தும் பொருட்டு சில நொடிகளுக்கு அங்கே மல்லிகை , செண்பகம் போன்ற மலர்களின் மணம் வீசும் என்பதை திருமதி. மேக்டலீன் ஹிஸ்லாப் அவர்கள் நினைவு கூர்ந்துள்ளார். ஹிஸ்லாப் அவர்கள் தான் ஒருமுறை ஹோனோலுலு சென்றிருந்தபோது இத்தகைய நறுமணத்தைப் பல நிமிடங்கள் அனுபவித்து விவரிக்க இயலாத ஆனந்தம் அடையப்பெற்றதாகக் கூறியுள்ளார். மும்பையிலுள்ள தர்மக்ஷேத்ராவில் திரு.கஸ்தூரி மற்றும் திரு.கோகாக் அவர்கள் முன்னிலையில் ஸ்வாமி, ஹிஸ்லாப்புடன் பேசிக்கொண்டிருந்தபோது, மூவரும் ஸ்வாமியின் தலையைச் சுற்றி ஒரு பிரகாசமான ஒளிவட்டத்தைத் கண்ணுற்றனர்! ஸ்வாமியிடம் இதனைப் பற்றி அவர்கள் கூறியபோது ஸ்வாமி சிரித்துக்கொண்டே, “ஓ! அப்படியா? நீங்கள் மிகவும் அதிருஷ்டசாலிகள்!” என்று கூறினார்.
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 156:
ஒருமுறை ஸ்வாமி, சுப்பா ராவிடம் பேசிக்கொண்டிருந்தார். அப்போது , அனைத்து விதமான சக்திகளின் மூலப்பொருள்களைப் பற்றிக் கேட்டார். ஏனென்றால் சுப்பா ராவ் அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் பதினைந்து வருடங்களாக சக்தி சம்பந்தப்பட்ட துறையில் உயர்பதவி வகித்திருப்பதை ஸ்வாமி அறிந்திருந்தார். பல நூற்றாண்டுகளாகப் பயன்பாட்டில் உள்ள பல சக்திகளின் மூலப் பொருள்களைப் பற்றியும் நவீன கண்டுபிடிப்புகள் பற்றியும் அவர் ஸ்வாமியிடம் விரிவாக எடுத்துரைத்தார். தனக்குத் தெரிந்த அனைத்தையும் அவர் சொல்லி முடித்தவுடன், புவி அழுத்த சக்தி என்ற ஒன்றினைப்பற்றி அவர் சொல்ல மறந்ததை ஸ்வாமி சுட்டிக்காட்டினார்! மேலும் அந்த சக்தியைப் பற்றிய பல கருத்துக்களை எடுத்துரைத்தார். பூமிக்கு அடியில் அடைந்து கிடக்கும் நீரியல் அழுத்தம், இயற்கை வாயு மற்றும் பூமியின் ஆழத்தில் உள்ள அதிகமான வெப்பம் – இவை மூன்றும் கலந்து உருவானது தான் புவி அழுத்த சக்தி என்று ஸ்வாமி விளக்கினார்.
ஆய்வுகளின் முன்னணியில் உள்ள ஒரு சில விஞ்ஞானிகளுக்கு மட்டுமே தெரிய வாய்ப்புள்ள இந்த விஷயத்தை ஸ்வாமி சொல்லியதைக் கேட்டு சுப்பா ராவ் மிகவும் வியப்புக்குள்ளானார். இதுவரை உலகம் அறிந்திராத ஒரு சக்தியின் மூலப்பொருள் குறித்து ஸ்வாமி கணித்திருப்பதாக அவர் உணர்ந்தார்.
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 157:
மடிகேரியில் சுமார் ஆயிரம் பேர் ஸ்வாமியின் சொற்பொழிவைக் கேட்பதற்காகக் குழுமியிருந்தனர். தன் சொற்பொழிவிற்கு முன்னால் ஒருசில நிமிடங்கள் ஸ்வாமி என்னைப் பேசுமாறு பணித்தார். நான் ‘மைக்’கின் முன்னால் சென்று நின்றவுடன், தூர வானத்தில் அடர்த்தியான கருமேகங்கள் இடி மின்னலுடன் நகர்ந்து வருவதைப் பார்த்தேன். கனமழை பெய்யுமோ என்ற அச்சம் அங்கே நிலவியதைப் போலத் தோன்றியது. ஆகையால், தன் அக்காவிடம் ஸ்வாமி, “வெங்கம்மா, இனி மழை பெய்யாது” என்று சொல்லி, தன் பதிமூன்றாவது வயதிலேயே மழையைத் தடுத்து நிறுத்திய நிகழ்வை எடுத்துரைத்தேன். மக்கள் கூட்டம் நான் பேசியதைக் கேட்டு ஆறுதல் அடைந்ததைப் போல உணர்ந்தேன். பின்னர் ஸ்வாமி உரை நிகழ்த்தத் தொடங்கினார். நான் மொழிபெயர்த்துக் கொண்டிருந்தேன். சில நிமிடங்களில் இடியுடன் கூடிய மேகக் கூட்டங்கள் மிக அருகில் வந்துவிட்டதைக் கவனித்தேன். மலைகள் மழையைப் பள்ளத்தாக்கின் மீது திருப்பி விட்டுக்கொண்டிருந்தன. உடனே என் இதயத் துடிப்பு அதிகமாயிற்று; என் எண்ணங்களும் வேறு விதமாக மாறத் தொடங்கின. என் மனத்தின் ஒரு பாதி மொழிபெயர்ப்பின் மீது இருந்தது; மற்றொரு பாதி, அந்த வெங்கம்மா-நிகழ்வைப் பற்றிப் பேசியதை நினைத்து நொந்துகொண்டது. ஆனால் ஸ்வாமியோ, வரப்போகும் மழையைப் பற்றி சிறிதும் சட்டை செய்யாமல் அமைதியான, இனிமையான குரலில் ஒரு ஆக்கிரமிப்புடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தார். உரையின் முடிவில் மூன்று பஜனைகள் பாடினார். ரவீந்த்ர பூஞ்சா அவர்கள் ஆரத்தி எடுப்பதற்கு வருகையில்,அவரை நிறுத்திவிட்டு, ‘மைக்’கில் ஸ்வாமி, என்னுடைய மனக் குழப்பத்தை அனைவருக்கும் அறிவித்தார்! அதையும் நான் மொழிபெயர்க்க வேண்டியதாயிற்று! ஸ்வாமி தன் வார்த்தைகளை நிதானமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்: “நான் என் சொற்பொழிவை ஆரம்பிப்பதற்கு முன்னால் , தன் வார்த்தைகளில் தனக்கே எவ்வித நம்பிக்கையுமின்றி, கஸ்தூரி உங்களிடம், ‘ஸ்வாமி கண்டிப்பாக மழையை நிறுத்துவார்’ என்று கூறினார். இப்போது மஹாதேவப்பேட்டையில் கனமான மழை பெய்துகொண்டிருக்கிறது. இங்கே அது வருவதற்கு இன்னும் இருபது நிமிடங்கள் ஆகும்” என்று கூறினார்.
பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளுக்குப் போய் சேர்ந்த பின்னர் தான் கனமழை பெய்யத்தொடங்கியது!
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 158:
ஒரு தடவை ஸிஸிலி நாட்டைச் சேர்ந்த தம்பதியருக்கு ஸ்வாமி இன்டர்வியூ அளித்தார். அமெரிக்காவைச் சேர்ந்த டயானா பாஸ்கின் என்ற பெண்மணிக்கு இந்த உரையாடலை மொழிபெயர்க்கும் அரியதொரு வாய்ப்பை அளித்தார். அந்த தம்பதியர் இத்தாலிய மொழியிலும் ஸ்வாமி ஆங்கிலத்திலும் பேசினர். இந்த உரையாடல் நடந்துகொண்டிருந்தபோது, ஒரு இடத்தில், மொழிபெயர்ப்பில் டயனா பாஸ்கின் செய்த தவறை ஸ்வாமி சுட்டிக் காட்டி, இத்தாலிய மொழியில் உகந்த சொல்லை எடுத்துக் கொடுத்தார்! மற்றொரு முறை டயனா பாஸ்கினின் அம்மா ஸ்வாமியின் வார்த்தைகளை ஜெர்மன் மொழியில் மொழிபெயர்ப்பு செய்து கொண்டிருந்தபோது இதேபோல நிகழ்ந்தது! ஸ்வாமி, இதயத்தின் மொழியில் பேசுவதால் அவரது சொற்கள் நேராக கேட்பவர்களின் இதயத்தைச் சென்றடைகின்றது. ஆதலால் உண்மையில் அவருக்கு மொழிபெயர்ப்பாளர் தேவை இல்லை. அவர் ஒரு மொழிபெயர்ப்பாளர் வைத்துக் கொள்வதே அவருக்கு ஒரு விளையாட்டு தான்!
ஆதாரம்: ‘ஸ்ரீ சத்ய ஸாயி - தி இன்ட்வெல்லர்’ என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 159:
ஸ்ரீமதி. நாகமணி பூர்ணைய்யா அவர்கள் பழைய மந்திரத்தில் ஸ்வாமி நிகழ்த்திய லீலைகள் குறித்து அவரது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
ஸ்வாமி அறுவை சிகிச்சைகளை செய்தார். ஒருநாள் ஸ்வாமி, வாழைப்பழத்தின் தோல் போன்ற ஏதோ ஒன்றை மதில் சுவருக்கு வெளியே தூக்கி எறிவதைப் பார்த்தேன். பின்னர் என்னிடம் வந்து கைகளைக் கழுவுவதற்கு தண்ணீர் கேட்டார். அப்போது அவர் கைகள் இரத்தத்தால் சிவந்து இருந்ததைப் பார்த்தேன்! “நீ அவரை குணப்படுத்தும்படி என்னிடம் கேட்டுக்கொண்டாய். அதனால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்துவிட்டேன்!” என்றார்! மயக்க மருந்து இல்லாமல் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாலும், தூக்க மாத்திரை கொடுக்காததாலும் அவருக்காக நான் மனம் வருந்தியதால் இரவில் என் தூக்கத்தை இழந்தேன். அடுத்த அறையில் வலியால் அவர் எவ்வளவு அவதிப்பட்டுக்கொண்டிருப்பார் என்று எண்ணிக்கொண்டு இருந்ததால், நான் விழித்துக் கொண்டே இருந்தேன். அதிகாலையில் ஸ்வாமி என்னை அழைத்து அவருக்கு அறுவை சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் பஞ்சை எடுத்துக் கொண்டு போய் அவரிடம் உடனே கொடுக்கும்படி கட்டளையிட்டார்! அவரது அறையின் கதவருகில் சிறிது நேரம் தயங்கி நின்றுவிட்டு உள்ளே சென்று பார்க்கையில், அந்த நோயாளி ஒரு தட்டு நிறைய இட்லியும் சட்னியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பதை பார்த்து அசந்துபோனேன்! அப்போது ஸ்வாமி எனக்குப் பின்னால் வந்து நின்றார்!
“இது ஒன்றும் மருத்துவரால் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை கிடையாது” என்று சொல்லி சிரித்தார். “நான் செய்திருக்கிறேன்! ஆகையால் வலி எதுவும் இருக்காது, பத்திய உணவும் தேவையில்லை. அவர் தனக்குப் பிடித்ததைச் சாப்பிடலாம்” என்றார்! அவரது வயிற்றில் நீண்ட அடையாளம் தென்பட்டதே தவிர, தையல்போட்ட மாதிரி எனக்குத் தெரியவில்லை! மேலும் ஸ்வாமி தொடர்ந்து, “அவரது இமைகளின் மேல், நான் வரவழைத்துத் தடவிய விபூதி, மயக்க மருந்தாக வேலை செய்தது. அறுவை சிகிச்சைக்காக நான் ஒரு திரிசூலத்தையும் கத்தியையும் ஸ்ருஷ்டித்துக் கொண்டேன்! முடித்தவுடன் விபூதியைத் தடவினேன்! சிகிச்சை முடிந்துவிட்டது!” என்றார்!
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 160:
மலேசியாவின் பொருளாதார நிபுணரும், ‘ஜர்னி டு காட் (Journey to God) என்ற புத்தகத்தை எழுதியவருமான ஸ்ரீ.ஜகதீசன் என்ற பக்தர் தனக்கு ஸ்வாமி அளித்த இன்டர்வியூவின் முடிவில், ஸ்வாமியிடம், “பகவான், நீங்கள் ஏன் என் கனவில் வருவதே இல்லை?” என்று கேட்டார். உடனே ஸ்வாமி அன்புடன் குனிந்து அவர் அருகில் வந்து , “சரி, இனிமேல் ஒவ்வொரு புதன்கிழமையும் உன் கனவில் நான் வருவேன்” என்று பதிலளித்தார்! அவர் மேலும் ஸ்ரீ.ஜகதீசன் அவரது நூலில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“என் வீட்டில் இருக்கும் ஸ்வாமியின் படத்தில் விபூதி வர ஆரம்பித்த நாள் ஒரு செவ்வாய்க்கிழமை ஆனதால், நான் அந்த கிழமையை புனிதநாளாகக் கருதுகிறேன் என்று ஸ்வாமி உணர்ந்ததைத் தெரிவிப்பதுபோல, சிறிது நொடிகளில், சிரித்துக் கொண்டே, “இல்லை, இல்லை! செவ்வாய்க்கிழமை வருவேன், சரியா?” என்று கூறினார்!”
அன்றிலிருந்து ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் அவரது கனவில் ஸ்வாமி தோன்றி அருள்புரியத் தவறியதே இல்லை!
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 161:
இந்திரா தேவி சொல்கிறார்...
நான் பகவானுடைய படத்தைப் பார்த்து வேண்டினேன்: ”உன்னுடைய பிறந்தநாள் வைபவத்தைக் காண எப்படியாவது என்னைப் புட்டப்பர்த்திக்கு அழைத்துச் செல்” என்று. இரண்டு நாட்கள் கழித்து டெகேட் ஸாயி மையத்திற்கு ஏற்கனவே வந்திருந்த இளைஞன் ஒருவன் என்னைத் தொலைபேசியில் அழைத்தான்... “மாதாஜி! வார்னர் ப்ரதர்ஸ் என்ற ப்ரபலமான நிறுவனம் உங்களது பயணச் செலவை மேற்கொண்டால், நீங்கள் நாளைக்கே இந்தியாவுக்குச் செல்லத்தயாரா? பாபாவின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் ஒரு திரைப்படத்தைத் தயாரிக்க அந்த நிறுவனத்தார் அவரது ஒப்புதலைப் பெற விழைகிறார்கள்” என்று கூறினான்! மறுநாள் அந்த நிறுவனத்தைச் சார்ந்த ஒருவர் இந்திரா தேவியை விமான நிலையத்தில் சந்தித்து ஆவன செய்தார். அவர் ப்ரசாந்தி நிலையம் வந்தடைந்து என்னிடம் அந்த முயற்சியைப் பற்றிக் கூறியபோது நான் உளம் பூரித்தேன்! பிறந்தநாள் உற்சவத்தில் கலந்துகொண்டு அவர் ஸ்வாமியின் பதிலைப் பெற்றுக்கொண்டுத் தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். தன் பயணத்தின் முழுச் செலவையும் ஏற்றுக்கொண்ட வார்னர் ப்ரதர்ஸ் நிறுவனத்திற்குச் சென்றபோது, அவரது அனுபவங்களைப் பின்வருமாறு குறிப்பிடுகிறார்:
“அங்கே என்னை யாருக்குமே தெரியவில்லை. என் பயணத்தைப் பற்றி எதுவும் யாருக்கும் தெரியவில்லை. பகவானைப் பற்றியோ திரைப்படத்தைப் பற்றியோ யாரும் அறியவில்லை, எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை! எனக்கு பதிலளிக்க முடியாத நிலையில் அங்கிருந்த அதிகாரி வெட்கத்துடன் என்னை நோக்கி, “நான் இதைப் பற்றி விசாரித்து உங்களுக்கு பதிலளிக்கிறேன்” என்றார்! ஆனால் வருடங்கள் கடந்துவிட்டன; எந்த ஒரு பதிலும் இன்னும் வரவில்லை.”
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 4.
📝 நிகழ்வு 162:
ஸ்ரீ ஹெச்.நாராயண ராவ் மும்பையில் கே.ஈ.எம். மருத்துவமனையில் இதய தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்தார். மறுநாள் அவருக்கு பேஸ் மேக்கர் கருவி பொருத்தப்படவிருந்தது. அன்று இரவு அவர் ஒரு கனவு கண்டார். அதில் பல பார்வையாளர்கள் அங்கே இருந்த நோயாளிகளைப் பார்ப்பதற்காக வார்டின் உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர். அவர்களில் ஒருவராக ஸ்வாமியும் வந்தார்; அவரது கட்டிலுக்கு அருகில் வந்து நின்றுகொண்டு, நம்பிக்கையும் உற்சாகமும் தரும்படியாக, மெல்லிய குரலில், “மகனே! பேஸ் மேக்கர் சிகிச்சை பற்றி நீ எந்த அளவுக்குக் கவலை கொண்டுள்ளாய் என்று எனக்குத் தெரியும். நீ சிறிதும் கவலைப்படாதே. இந்த நொடியிலிருந்து உன் நாடித் துடிப்பு சீராகத் தொடங்கி படிப்படியாக முன்னேற்றம் தோன்றும். இன்றுமுதல் நாட்களை எண்ணிக்கொள். பதினொன்றாவது நாள், சனிக்கிழமை, 17ஆம் தேதியன்று நீ வீட்டிற்குப் போகலாம்” என்று கூறினார்! ஆனால் மருத்துவர்கள் வேறுபல யோசனைகளை சிந்தித்துக் கொண்டிருந்தபோதும், சரியாக 17ஆம் தேதி அவர் நன்றாக இயங்கும் இதயத்துடன் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 163:
ஸ்ரீமதி. நாகமணி பூர்ணைய்யா அவரது நூலில் பின்வருமாறு எழுதியுள்ளார்:
ஒருநாள் ஸ்வாமியைப் பரிசோதிக்கும் எண்ணத்துடன் நான்கு மனிதர்கள் ப்ரசாந்தி நிலையத்திற்கு வந்தனர். அவர்கள் மூன்று மைல்களுக்கு அப்பால் உள்ள புக்கப்பட்டணம் வந்தவுடன், தாங்கள் அணிந்திருந்த கைக்கடிகாரங்களை ஒருவருக்கு ஒருவர் மாற்றி அணிந்துகொண்டனர். ஸ்வாமி அதனைக் கண்டுபிடிக்கிறாரா என்று பார்ப்பதுதான் அவர்களது எண்ணம். “அவர் உண்மையாகவே கடவுள் என்றால் இது அவருக்குத் தெரிந்திருக்கவேண்டும்” என்று நினைத்தனர். ஸ்வாமி அவர்களை அழைத்து அவர்களிடம், “நீங்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள், வரும் வழியில் என்ன பேசிக்கொண்டீர்கள் என்ற அனைத்தையும் நான் அறிவேன்! ஒருவர் மற்றொருவரின் கைக்கடிகாரத்தை அணிந்துகொண்டிருக்கிறீர்கள்! நீங்கள் என்னைப் பரிசோதித்துப் பார்ப்பதற்காக வந்துள்ளீர்கள். ஆனால் இது என் பக்தர்கள் வந்துபோகக் கூடிய இடம். நீங்கள் எங்கிருந்து வந்தீர்களோ அங்கேயே திரும்பிச் செல்லுங்கள்!” என்றார்!!
ஆதாரம்: The Divine Leelas of Bhagavan Sri Sathya Sai Baba by Nagamani Purnaiya (Author)
📝 நிகழ்வு 164:
உஷா ராமனாதன் என்ற பக்தர் நினைவு கூர்கிறார்:
2000-ம் ஆண்டு ஜூலை மாதம் 9ஆம் நாள் வியாழக்கிழமை எங்கள் வீட்டில் சமிதி பஜன் நடந்துகொண்டிருந்தது. அப்போது அண்ணன் வீட்டில் இருந்த என் மாமியர் கீழே தவறி விழுந்து தலையில் அடிபட்டு மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகத் தகவல் வந்தது. பஜன் முடிந்தவுடன் அவரைப்பார்க்கச் சென்றோம். நினைவிழந்தவராகப் படுக்கையில் இருந்த அவரது நிலைமை கவலைக்கிடமாக இருந்தது. பதினைந்து நாட்கள் ஆகியும் முன்னேற்றம் ஏதும் இல்லாமல் இருந்தது. டாக்டரும் கைவிரித்துவிட்டார். உறவினர்களுக்குத் தகவல் அளிக்கக் கூறிவிட்டார். அந்த நிலையில், எனக்கு ஏற்பட்ட ஏதோ ஒரு தீவிரமான மன உந்துதலின் காரணமாக, எங்கள் வீட்டில் இருந்த ஸ்வாமியால் ஆசீர்வதிக்கப்பட்ட பாதுகைகளுக்கு அபிஷேகம் செய்து அந்த நீரை அவருக்கு அளிக்கலாம் என்று தோன்றி அதன் படியே செய்தோம்.
அந்த நீரை என் மாமியாரின் நெற்றியில் தெளித்து, “ஸாயிராம், ஸாயிரம்!” என்று பலத்த குரலில் கூப்பிட்டோம். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் “ஸாயிராம்” என்று சொல்லிக்கொண்டு என் மாமியார் கண் விழித்தார்! டாக்டர் ஆச்சரியத்தில் மூழ்கினார்! இது உங்கள் தெய்வத்தின் செயல் தான் என்று கூறினார்! இரண்டு நாட்களில் வீட்டிற்கு அனுப்பிவிட்டார்.
ஆதாரம்: கவிஞர் பொன்மணி எழுதித் தொகுத்துள்ள “சாயி பிருந்தாவனம்” என்ற நூலிலிருந்து.
📝 நிகழ்வு 165:
ரமணாஸ்ரமத்தைச் சேர்ந்த ஸ்வாமி அபேதானந்தா தனக்கு ஒரு பேருண்மையைப் புலப்படுத்தும் வகையில் அமைந்த ஒரு அனுபவத்தைப் பெற்றார். ‘சத்யம் சிவம் சுந்தரம்’’ எனும் சுவாமியின் புத்தகத்தைப் படித்தபின் அவருக்குத் தெய்வத்தைக் காணவேண்டும் என்ற அவா அவரை ஆட்கொண்டது. “என்னால் அவரது தரிசனத்தைப் பெற முடியுமா? ஆம் என்றால் எப்பொழுது என்று சொல்ல முடியுமா? அவரது அனுக்கிரஹத்தைப் பெறவும், எனது சந்தேகங்கள் மற்றும் குறைகளை அறவே விலக்கி மீளமுடியாத சம்சாரத்திலிருந்து நான் விடுபடவும் உங்களால் எனக்கு உதவ முடியுமா? “ என்று அவர் எனக்குக் கடிதம் எழுதினார். எனது பதில் கடிதம் அவரை சென்றடைவதற்கு முன்னரே அவருக்கு ரமண மஹரிஷியும் நம் ஸ்வாமியும் காட்சி கொடுத்தனர்! பாபா அவரிடம் நல்ல தெலுங்கில் பேசினார். அவருக்கு ஒரு புதியதொரு தியான முறையைக் கற்றுக் கொடுத்தார். உடனே புறப்பட்டு பிரசாந்தி நிலையம் வந்தார். அவருக்கு ஸ்வாமி இன்டர்வியூ அளித்தார்...
✍🏻 ஊருக்குத் திரும்பிய சில நாட்களில் அவர் எனக்குக் கடிதம் எழுதினார்:
“பகவானுடைய கருணைக்கும் அதற்குக் காரணமாயிருந்த உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் எனது சந்தேகங்களைத் தீர்த்துக்கொண்டேன். ஸ்வாமியினுடைய ஒரு சிறிய தீண்டலால், வயது முதிர்வின் காரணமாக ஏற்பட்டிருந்த உடலின் சோர்வுகள் அனைத்தும் நீங்கி புத்துணர்வு பெற்றதாக உணர்ந்தேன். எனது கைகள் மற்றும் கால்கள் மீண்டும் ஒரு சக்தியோடு இயங்குவதைப் பார்த்து நான் ஆச்சரியம் அடைகிறேன். தெளிவான விளக்கங்களோடு கூடிய அவரது உரையாடல், எனது நீண்ட நாளைய சந்தேகங்களைத் தீர்த்ததோடு மட்டுமல்லாமல், அவரது முகத்தில் மகத்தான, நிலைத்த பேருண்மையை என்னால் காணமுடிந்தது. இத்துடன் நில்லாமல், இன்டர்வியூவின் முடிவில், நான் கிளம்பும்போது, என் கண்கள் கூசும்படியாக, ஒரு திவ்விய பிரகாசத்துடன் கூடிய ‘முரளீதர கிருஷ்ணனா’க ஸ்வாமி தன் உருவத்தை ஒரு க்ஷணத்தில் மாற்றி நான் என்றும் மறக்கமுடியாத படி எனக்குக் காட்சி அளித்தார்! அந்த முகம் எப்போதும் என் கண் முன்னே நிற்கின்றது!!”
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 166:
இரண்டு விஞ்ஞானிகள், அமெரிக்காவிலிருந்து வந்த இரண்டு தம்பதியர், ஒரு பிரிட்டிஷ் குடிமகன் ஆகியோரையும், மற்றும் என்னையும் ஸ்வாமி இன்டர்வியூவிற்கு அழைத்தார். கருணை, பணிவு, புலனடக்கம், நன்னடத்தை போன்ற குணங்களை இன்றைய விஞ்ஞானிகள் தம்மிடையே வளர்த்துக் கொள்ளவேண்டியதின் அவசியத்தைப் பற்றி ஸ்வாமி பேசிக்கொண்டிருந்தார். அவர் அணு ஆயுதங்களின் உற்பத்தி, மற்றும் அவற்றால் ஏற்பட்ட அழிவுகளைப் பற்றிக் கூறினார். “7000 ஆண்டுகளுக்கு முன்னால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த குருக்ஷேத்திரப் போர்க்களத்தில்….” என்று ஸ்வாமி சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு அமெரிக்கர் இடையே குறுக்கிட்டு, “7000 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த விஷயம் பாபாவுக்கு எப்படித் தெரியும்? புத்தகங்களிலிருந்தா அல்லது வேறு வழியிலா” என்று கேட்டார்!
உடனே பாபா சிரித்துக் கொண்டே, “ஏன்? 70,000 வருடங்களுக்கு முன்னால் நடந்தது கூட எனக்குத் தெரியும்! முதல் கியரில் வண்டியை ஓட்டினால் அது முன்னே செல்லும்; ஆனால், ரிவர்ஸ் (பின்புறம்)கியருக்கு மாற்றினால் பின்னோக்கி செல்வாய்; காலப் பிரமாணத்தில், நான் நினைத்தால் முன் நோக்கியோ அல்லது பின் நோக்கியோ சென்று எதையும் அறிந்துகொள்ள என்னால் முடியும்! காலம், வெளி ஆகியவற்றால் என்மீது எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் சுமத்த முடியாது!” என்று அறைகூவினார்!!
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 167:
தன் மனைவியால் போற்றி வணங்கப்பட்ட ஸ்வாமியின்பால் ‘ஜோயல் ரியார்டினு’க்கு எந்த மரியாதையும் இல்லாமல் இருந்தது. ஆதலால், தன் மனைவியுடன் “காடு போல முடியை வளர்த்து வைத்துள்ள ஒரு வினோத மனிதனைக்” காண விமானத்தில் செல்லப்போகிறேன் என்று அவர் தன் நண்பர்களுக்குக் கூறியபோது அவர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர்! அவர்கள் உடனே வேடிக்கையாக, நீ அவரிடம் என்ன கேட்கப் போகிறாய் என்று கேட்டதற்கு ரியார்டின், “நான் வானத்தில் ஒரு வான வில்லைக் கேட்கப் போகிறேன்” என்று கூறினார்! மேலும் “ எந்த ஒரு மேஜிக் நிபுணராலும் நிகழ்த்திக் காட்ட முடியாத ஒன்றாகும்!” என்று சொல்லி நகைத்தார்! இந்த நகைச்சுவை போதாதென்று மற்றொருவர், “அந்த வில்லின் கீழே தங்கக் காசுகள் நிறைந்த ஒரு பானையையும் தொங்கவிடும்படி கேட்கலாம்” என்றார்!
அவர் புட்டப்பர்த்திக்குச் சென்றார்; ஒரு நாள் அருகிலுள்ள குன்றில் ஏறி அமர்ந்துகொண்டு புகை பிடித்துக்கொண்டிருந்தார். அந்த சமயம் அவருக்கு ஏற்பட்ட நிகழ்வை அவரே எழுதுகிறார்: “அப்போது திடீரென்று ஒரு நேரான, வளையாத ஒரு வானவில் வானத்தில் வேகமாக எழுவதைப் பார்த்தேன்! ஒரு சில நொடிகளில் அது தன் உச்சியை அடைந்தது! எந்த வேகத்தில் தன் முழு உயரத்தையும் எட்டியதோ அதே வேகத்தில் அதன் அடிப்பாகத்திலிருந்து அது மறையத் தொடங்கியது!” மறுநாள் காலை ஸ்வாமி அவரை இன்டர்வியூவிற்கு அழைத்தார். அப்போது ஸ்வாமி அவரிடம் தன் முதல் கேள்வியாக, “என்ன, வினோத மனிதா! வானவில் எந்த அளவிற்கு உனக்குப் பிடித்திருந்தது?” என்று கேட்டார்! நம்புவதற்குக் கடினமான அதிசயம், ஆனால் உண்மை!!
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 168:
உஸ்மானியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த புரொபஸர் எஸ். பஷீருதீன் அவர்கள் ஒருமுறை ஸ்வாமியுடன் ஊட்டியிலிருந்து காரில் பயணித்துக் கொண்டிருக்கையில், “ஸ்வாமி! யாரோ ஒருவர் உங்களுக்கு ஒரு கடிதமோ அல்லது தந்தியோ உங்களது பெங்களூர் முகவரிக்கு அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஆனால் அது உங்களை வந்து அடைவதற்கு முன்னரே நீங்கள், ஊட்டி, மும்பை போன்ற ஊர்களுக்குக் கிளம்பிவிட்டீர்கள் என்றால், “விரைவுத் தபால்” என்று குறிப்பிட்டிருந்த பட்சத்தில் நீங்கள் செல்லும் ஊர்களுக்குத் திருப்பி அனுப்பப்படுமா?” என்று விரிவான ஒரு கேள்வியைக்கேட்டார். அதற்கு ஸ்வாமி, “கடிதங்களோ அல்லது தந்திகளோ , என்னைப் பொறுத்தவரை வெறும் கார்பன் நகல்களே! அவற்றில் கூறப்பட்டுள்ள எண்ணங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து தோன்றியவையாகவும், அவசரத் தேவையாகவும் இருப்பின், கடிதங்களும் தந்திகளும் முறையாக என்னை வந்து சேரவேண்டிய அவசியமில்லை. இந்த எண்ணம் பக்தரின் மனதில் எழத் தொடங்கும் அந்தக் கணமே அது என்னை வந்தடைந்து அதற்கான உதவியும் வழிகாட்டுதலும் அவரை சென்றடையும்!” என்றார்!.
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 4.
📝 நிகழ்வு 169:
✍🏻
டாக்டர் ஸேண்ட்வீஸ் எழுதுகிறார்:
லீலாவும் நானும் ஒருநாள் ஸ்வாமியைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். அது அவளது ஆர்வத்தைத் தூண்டியது. ஸ்வாமியைப் பற்றிய ஒரு புத்தகத்தைப் படித்தாள்; ஸ்வாமியைப் பார்க்கவேண்டும் என்ற அவா மனதில் மேலோங்கியது. அந்த நேரத்தில் அவள் அதிகக் கடன் சுமையால் தவித்ததால், இந்தியாவிற்குச் செல்லத்தேவையான பணத்தை சேகரிப்பது என்பது இயலாத செயலாகத் தோன்றியது. அவளது கணவர் ஹோமர் ஒரு கண்டுபிடிப்பாளர்; அவருக்கும் அப்போது சீரான வருமானம் இல்லாமல் இருந்தது. ஐந்து வருடங்களாக அவரது கண்டுபிடிப்பு விலைபோகாமல் இருந்தது. இக்காரணங்களால் அவளது இந்தியப் பயணம் முற்றிலும் சாத்தியம் இல்லாததாகத் தோன்றினாலும், அவள் பயணத்திற்குத் தேவையான மற்ற முயற்சிகளை தைரியமாக மேற்கொள்ள ஆரம்பித்தாள். தடுப்பூசி போட்டுக்கொண்டாள், பாஸ்போர்ட் தயார் செய்துகொண்டாள். அப்போது வினோதமான சம்பவங்கள் நிகழ ஆரம்பித்தன! புன்முறுவலுடன் சேர்ந்த குரும்புத்தனமான பார்வையோடு ஸ்வாமி அவளது கனவில் தோன்றினார்! சில நாட்களில் ஹோமர் புதியதாக ஒன்றைக் கண்டுபிடித்தார். ஒரு சிலர் அவரது கண்டுபிடிப்பின் மீது தங்களது விருப்பத்தைத் தெரிவித்தனர். இதனால் திடீரென்று பல வருடங்களில் முதன்முறையாக அவரது வருமானம் உயரத் தொடங்கியது! புறப்படுவதற்கு ஒருவாரம் முன்னர், லீலாவின் பயணத்திற்குத் தேவையான பணம் கிடைத்தது. ஏற்கனவே ஒரு முடிவுடன், ஏற்பாடுகள் அனைத்தையும் செய்துவைத்திருந்ததால், எங்களுடன் விமானத்தில் ஏறுவதற்கு மகிழ்ச்சியுடன் லீலா தயாராக இருந்தாள்!
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 4.
📝 நிகழ்வு 170:
இந்தியாவிற்கு சுற்றுலா வந்திருந்தபோது, பிருந்தாவனத்தில் பாபாவுடன் ஒரு சில நிமிடங்கள் இருந்த பின்பும் கூட ஆர்னால்ட் ஷூல்மன், ஸ்வாமி தத்துவத்தைப் பற்றி மிகவும் கீழ்த்தரமாகப் பேசினார். நம் ஸ்வாமியிடம் இருந்து யாரும் எதையும் மறைக்க முடியாது; அவருக்கு யாரும் தொலைவில் இல்லை. ஆகையால் ஸ்வாமி இவரது அவநம்பிக்கையைப் பற்றி அறிந்தார். ஸ்வாமியினுடைய சங்கல்பத்தின் பயனால், அவர் எவ்வளவுதான் முயன்றாலும், அவரது மனதை ஒரு வினோதமான முறையில் ஆக்கிரமித்த “ஸ்வாமியைப் பற்றி ஒரு புத்தகம் எழுத வேண்டும்” என்ற எண்ணத்திலிருந்து அவரால் விடுபட இயலவில்லை. மேலும் மேலும் அந்த எண்ணம் உதித்து அவரைத் தூண்டிக்கொண்டே இருந்தது. மூன்று மாதங்கள் கழித்து அவருக்கு மீண்டும் ஸ்வாமியுடன் இன்டர்வியூ கிடைத்தபோது, ஸ்வாமி அவரிடம், “நான் என்னைப்பற்றிய புத்தகம் எழுத வற்புறுத்தியதன் காரணம், எனக்கு உன் புத்தகம் தேவை என்பதால் அல்ல! புத்தகம் என்பது ஒரு விளம்பரம். எனக்கு விளம்பரம் தேவையில்லை! மாறாக, எனக்கு வேண்டியது நீ, நீ, நீயேதான் !” என்றார்!
ஆன்மீகத் தலைவர்கள், மகான்கள், சித்தர்கள், அவர்களின் சீடர்கள் போன்றவர்களின் மீது அவருக்கு இருந்த தவறான எண்ணங்கள் என்னும் அஞ்ஞானத் திரையை விலக்கி, ஆனந்தம், மற்றும் சரியான புரிதலுடன் கூடிய தெளிவான பார்வையை உடையவராக மாற்றி அவரை ஸ்வாமி அமெரிக்கவிற்கு அனுப்பிவைத்தார்.
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 4.
📝 நிகழ்வு 171:
நிஷிகாந்த் பரோடேகர் என்கிற எனக்கு, 1969ஆம் ஆண்டு என்னுடைய 12வது வயதில் ஒரு அறுவை சிகிச்சை நடந்தது. அறுவை சிகிச்சையில் ஒரு பாதி முடிந்திருந்தபோது, அதைச் செய்த டாக்டருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு அவரை அவசர சிகிச்சைக்கு அனுமதிக்க வேண்டியதாயிற்று! ஆகையால் எனக்கு மீதம் இருந்த அறுவை சிகிச்சையை மற்றொரு டாக்டர் தொடர்ந்தார். சிகிச்சை முடிந்து சில மணி நேரங்களுக்குப் பின்னர் நான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன். அன்று மாலை என்னுடைய பாட்டியான பிரபல பாடகர் ஹீராபாய் பரோடேகர், (அந்த சமயம் மும்பைக்கு வந்திருந்த) ஸ்வாமியின் முன்னால் தர்மக்ஷேத்ராவில் பாடும் நிகழ்ச்சி இருந்தது. மாலையில் என் பாட்டியுடன் நானும் தர்மக்ஷேத்ராவிற்குச் சென்றேன். அந்த நிகழ்ச்சியின் இறுதியில் ஸ்வாமி என் பாட்டியை மீரா பஜன் பாடும்படி கூறியபோது, அவருடன் தபேலா வாசிக்க பாட்டி எனக்கு அனுமதித்தார். அன்று ஸ்வாமியின் முன்னால் முதல் தடவையாக எனக்கு வாசிக்கக் கிடைத்த வாய்ப்பை எண்ணி நான் பெருமிதம் அடைந்தேன். பாட்டு முடிந்தவுடன் ஸ்வாமி என்னை அழைத்து பேடா என்ற இனிப்பை வரவழைத்து என் வாயில் போட்டுக்கொண்டிருக்கையில், அன்று காலை ஆபரேஷன் அறையில் எனக்கு நேர்ந்த அனுபவத்தை ஸ்வாமி எனக்கு விவரித்தார்! அப்போது மேலும் தொடர்ந்து, “வேறு ஒரு டாக்டர் வந்து சிகிச்சையைத் தொடர்வதற்கு அரைமணி நேரம் ஆனதால் உனது குரல் நாண்கள் சிதைந்துவிட்டன. ஆனால் இந்த பேடா அவற்றை சரிசெய்துவிடும்!” என்றார்! அப்போதுதான், “அந்தநேரம் வரை என்னால் பேசமுடியவில்லை” என்பதை நான் உணர்ந்தேன்! ஸ்வாமி, “நீ இனிமேல் உன் பாட்டியிடம் வாய்ப்பாட்டு கற்றுக் கொள்வதை நிறுத்திவிட்டு, தபேலா வாசிப்பதையே தொடர்ந்து மேற்கொள்!” என்று அறிவுறுத்தினார். நான் அதன்படி ஸ்வாமியின் ஆணையை சிரமேற்கொண்டேன். உலகப் புகழ் பெற்ற தபேலா வித்தகரான உஸ்தாத் அல்லா ரகா கான் அவர்களிடமே பயிற்சி எடுத்துக்கொள்ளும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது!
ஆதாரம்: திரு. பி. குருமூர்த்தி அவர்களால் தொகுக்கப் பெற்ற “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்”, (இரண்டாம் பாகம்) என்ற நூலில் இருந்து.
📝 நிகழ்வு 172:
1968இல் அகண்ட பஜனையைத் தொடங்கி வைப்பதற்காக ஸ்வாமி பெங்களூரு சென்றார். சரியாக மாலை 6 மணிக்கு ஸ்வாமியே பாடித் தொடங்கிவைத்தார். ஒருமணி நேரம் அங்கிருந்துவிட்டு டாக்டர் பத்மனாபன் வீட்டிற்குச் சென்றார். திடீரென்று, இரவு 11 மணிக்கு அடர்த்தியாக மழை பெய்துகொண்டிருந்த[போது, பஜனை நடக்கும் இடத்திற்குச் செல்வதற்காக காரை கொண்டுவரும்படி பணித்தார்! ஸ்வாமி பஜன் ஹாலில் நுழையும்போது ஒரு பக்தர். “தரிச திகாவோ மேரே ஸாயி நந்தலாலா” என்ற பஜனையைப் பாடிக்கொண்டிருந்தார். அவர் வெண் நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். அவர் தன் கண்களை மூடிக்கொண்டு பாடியதால், ஸ்வாமி ஹாலினுள் வந்து, தன் முன்னால் நின்றுகொண்டிருப்பதைக் கவனிக்கவில்லை. ஸ்வாமி தன் வலது கையைப் பாடுபவரின் தலைமீது வைத்தார். அந்த பக்தர் மெய்மறந்து பாடிக்கொண்டிருந்ததால் என்ன நடக்கிறது என்று அறியவில்லை! ஸ்வாமி மெதுவாகத் தன் கையை அவர் தலைமேலிருந்து எடுத்தார். என்ன ஆச்சரியம்! அந்த பக்தரின் உடல் தோலின் மீதிருந்த வெண்மைநிறத் திட்டுக்கள் மாயமாய் மறைந்தன!! ஸ்வாமி, வந்த சுவடு தெரியாமல் அங்கிருந்து கிளம்பிவிட்டார்! காரில் திரும்பி வரும்போது டாக்டர் பத்மனாபன் ஸ்வாமியிடம், “ ஸ்வாமி!, நீங்கள் அந்த பக்தருக்கு நாளை காலையில் அனுக்கிரகம் செய்திருக்கலாமே? மழை கொட்டித் தீர்க்கும் இந்த நடு இரவில் எதற்காக இந்த சிரமம் மேற்கொண்டீர்கள்?” என்று கேட்டார். அதற்கு ஸ்வாமியின் கருணை ததும்பும் பதில் இதோ! “அவரது பாட்டு என்னை வலிய அழைக்கும்போது என்னால் எப்படி தாமதிக்க முடியும்? தீவிரமான பக்தியுடன் ஒரு பக்தர் என்னை அழைக்கும்போது என்னால் எப்படிப் போகாமல் காலம் தாழ்த்த முடியும்?”
ஆதாரம்: திரு. பி. குருமூர்த்தி அவர்களால் தொகுக்கப் பெற்ற “மிரகிள்ஸ் ஆஃப் டிவைன் லவ்”, (இரண்டாம் பாகம்) என்ற நூலில் இருந்து.
📝 நிகழ்வு 173:
கோடை விடுமுறை கழிந்த பின்னர், தங்கள் ஊர்களுக்குச் சென்றிருந்த மாணவர்கள் மறுபடியும் ஹாஸ்டலுக்கு வந்து சேர்ந்தனர். இரயிலில் திரும்பிய ஒரு மாணவர், தான் பயணித்த அதே பெட்டியில், சக பிரயாணிகள் சிலருடன் ஸ்வாமியைப் பற்றிய கார சாரமான விவாதத்தில் ஈடுபட்டார். நாங்கள் எல்லோரும் பிருந்தாவனத்தில் ஒரு அறையில் ஸ்வாமியுடன் இருந்தபோது ஸ்வாமி அந்த மாணவரைப் பார்த்து இரயிலில் என்ன நடந்தது என்று கேட்டார்! அந்த மாணவர் சக பிரயாணிகள் சிலருடன் நடந்த உரையாடலைப் பற்றிக் கூறினார். நீ எங்கே படித்துக்கொண்டிருக்கிறாய் என்று முதலில் கேட்டதற்கு இந்த மாணவர் தான் ஸ்வாமியின் கல்லூரியில் படிப்பதாகக் கூறியுள்ளார். ஸ்வாமியின் பெயரைக் கேட்ட உடனே அவர்கள் ஸ்வாமியைப் பற்றி மிகவும் தவறாகப் பேசியுள்ளனர். உடனே இவர் ஸ்வாமிக்கு ஆதரவாகப் பல விஷயங்களை எடுத்துக்கூறியுள்ளார். “நீ என்ன பதில் கூறினாய்?” என்று ஸ்வாமி அவரிடம் கேட்டார். அதற்கு அவர், “ஸ்வாமி!, நீங்கள் விபூதி, மோதிரம் வரவழைத்தல், நோய்களைக் குணப்படுத்துதல் போன்றவைகளைச் செய்வதைப் பற்றிக் கூறினேன்” என்றார். இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு “இந்த மாணவர் கூறிய எதுவும் ஸ்வாமியின் உண்மைத் தன்மையை எடுத்துரைப்பவை அல்ல, ஸ்வாமி இந்தச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர்” என்று தோன்றியது. ஸ்வாமி உடனே அங்கிருந்த மேலும் பல மாணவர்களிடமும் தன்னப் பற்றிய அவர்களது புரிதலைப் பற்றிக் கேட்டார். அவர்களும் இதே விதமான ஸ்வாமியின் லீலைகளையும் வேறு பல அமானுஷ்ய செயல்களையுமே விவரித்தனர். எந்த ஒரு பதிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரியவில்லை. மாறாக, அவர்கள் விவரித்தவை யாவும், சூரிய ஒளியின் பிரகாசத்தை ஒரு மெழுகுவர்த்தியின் ஒளியோடு ஒப்பிடுவதைப்போலச் சிறுமைப் படுத்துவதாகவே இருந்தன. சிறிது நேரம், மிகச் சரியான பதிலுக்காகக் காத்திருந்த ஸ்வாமி, திடீரென்று, “என்னுடைய (எல்லாவற்றிலும்) மிகப்பெரிய அற்புதச் செயல் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் தான்! நீங்கள் அனைவருமே என்னுடைய அற்புதச் செயலாகும்!” என்றார்!
எங்களுடைய மனம், குணம் மற்றும் நடத்தையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள்தான் ஸ்வாமியின் உண்மையான அற்புதச் செயலாகும் என்று அப்போது நான் உணர்ந்தேன்.
ஆதாரம்: திரு. மனோஜ் நாக்ரா எழுதிய “ஸாயி பாகவதம், பாகம் 1.”
📝 நிகழ்வு 174:
ருத் என்பவர் மெக்சிகோவில் ஒரு ஆசிரியை. சுறுசுறுப்பாக அங்கும் இங்கும் சென்று கொண்டிருப்பார். வியாழக்கிழமைகளில் ஸான்டா பார்பாராவில் பஜனையில் கலந்துகொள்வார், ஆனால் அவ்வப்போது ஸ்வாமியைப் பற்றி சந்தேகப் படுவார். பல நாட்களாக உடலில் இருந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தார். தொடர்ந்து பல நாட்களாக மிகுந்த வலியால் துடித்துக் கொண்டிருந்தார். ஒருநாள் அவரது சிறிய அறையில் இருந்தபோது வலியை அவரால் தாங்கமுடியவில்லை. பொறுக்க முடியாமல், “எனக்கு உதவுவதற்கு யாரேனும் இருக்கிறீர்களா? நான் ஏன் இப்படி கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறேன்? நான் என்ன செய்வேன்? தயவு செய்து உதவுங்கள்!! யாரேனும் வாருங்கள்! யாரும் வர மாட்டீர்களா?” என்றெல்லாம் கூக்குரலிட்டார்! அப்போது திடீரென்று யாரோ ஒருவர் தன் கையைப் பற்றியதை உணர்ந்தார்! உடனே அரற்றுவதை நிறுத்தினார். திரும்பிப் பார்த்தால், அருகில் ஸ்வாமி நின்றுகொண்டிருந்தார்! அவர், “அப்படிக் கத்தாதே! நான் இங்கே இருக்கிறேன்!” என்றார். அவ்வாறு சொல்லிவிட்டு மறைந்துவிட்டார்! அவருடன் அந்த வலியும் சென்றுவிட்டது!! இது ஸ்வாமியின் எங்கும் நிறைந்த தன்மையின் மற்றொரு உதாரணமாகும்.
ஆதாரம்: சத்யம் சிவம் சுந்தரம், பாகம் 4.
📝 நிகழ்வு 175:
இந்த நிகழ்வு 1990 அல்லது 1991இல் நடந்தது. நான் ஸ்ரீ ஸத்ய ஸாயி இன்ஸ்டிடியூட்டில் கணினி மையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தேன். பரிட்சைகள் நெருங்கிக் கொண்டிருந்ததால் எல்லாக் கணினிகளும் மற்ற உபகரணங்களும் சரிவர இயங்குகின்றனவா என்பத உறுதிசெய்ய வேண்டிய முயற்சியில்இருந்தபோது, யு.பி.எஸ் சரிவர இயங்கவில்லை என்று கண்டுபிடித்தேன். ஆகையால் புதிய யு.பி.எஸ் வாங்குவதற்கு அவசரக் கோரிக்கை ஒன்றை மேலதிகாரிகளுக்கு அனுப்பினேன். சரியான நேரத்தில் அவை வந்துசேராததால் பரிட்சைகளின் போது மின்வசதி தடைப்பட்டபோது வேறு வழி இல்லாமல் நான் கம்ப்யூட்டர்களை நேரடியாக ஜெனெரேட்டருடன் இணைக்கவேண்டியதாயிற்று. ஆகையால் நான் மிகவும் மன வருத்தம் அடைந்தேன். மையத்தில் ஸ்வாமியின் ஒரு பெரிய படம் இருந்தது. அதன் முன் நின்றுகொண்டு என்னுடைய மன வருத்தத்தையும் கோபத்தையும் அதன் மேல் செலுத்தினேன்! பரிட்சை முடிந்தவுடன் நேராக நான் வீட்டிற்குச் சென்றேன்; உணவு அருந்தவில்லை; மாலையில் தரிசனத்திற்கும் பஜனைக்கும் செல்லவில்லை. நேராக உறங்கச் சென்றுவிட்டேன். திடீரென்று யாரோ என் கதவைத் தட்டுகிற ஒலி கேட்டது. சென்று பார்க்கையில் அவர் , துணை வேந்தருடன் பணிபுரியும் உதவியாளர் என்று தெரிய வந்தது. அவர், “துணைவேந்தர் உங்களை உடனே பார்க்க விரும்புகிறார்; உங்களை அழைத்துவரச் சொன்னார்” என்றார். நான் அவரிடம் சென்றபோது, மிகுந்த கவலையுடன் தோன்றிய அவர், “யு.பி.எஸ் தொடர்பாக ஸ்வாமியிடம் சென்று நேராக ஏன் புகார் அளித்தாய்?” என்று கேட்டார். இதைக்கேட்டு ஒரு வினாடி நான் அதிர்ந்துபோனேன்! உடனே நான் காலையில் நடந்தவற்றை விவரித்த பின், மனமுடைந்துபோனதால் நான் தரிசனத்திற்கே செல்லவில்லை என்பதையும் குறிப்பிட்டேன்! அதற்கு அவர், “யு.பி.எஸ். திடீரென்று வேலை செய்யாததால், மாணவர்கள் தங்களது பரிட்சையை திரும்பவும் செய்யும்படி நேர்ந்தது என்று சிவானந்தன் என்னிடத்தில் கூறினார்” என்று ஸ்வாமி தன்னிடம் சொன்னதாகக் கூறினார்!!
அப்போதுதான், நான் ஸ்வாமியின் படத்திற்கு முன் நின்று புலம்பிய அனைத்தையும் ஸ்வாமி கேட்டுள்ளார் என்று எங்கள் இருவருக்கும் புரியவந்தது! நம் அனைவரையும் பேணுபவர் அவரேதான், எங்கும் நிறைந்தவர், அனைத்தும் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் என்னும் உண்மைகளை இதன் மூலம் நான் அறிந்துகொள்ளும்படி செய்தார். இரண்டு நாட்களுக்குள் புதிய யு.பி.எஸ் வந்துசேர்ந்தது. மாலையில் நான் தரிசனத்திற்கு சென்றிருந்தபோது, ஸ்வாமி என்னருகில் வந்து, “இப்போது யு.பி.எஸ். நன்றாகப் பணி செய்கிறதா?” என்று கேட்டார். “ஆம், ஸ்வாமி!” என்று நான் பதிலளித்தவுடன் தனக்கே உரித்தான ஒரு அழகான புன்முறுவலுடன் நகர்ந்தார்!
ஆதாரம்: ஆகஸ்ட் 2018 ஸனாதன ஸாரதி இதழில் திரு.பி.எஸ். சிவானந்தன் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 176:
ஸ்வாமியின் பல பயணங்களின்போது நானும் கூடவே சென்றிருக்கிறேன். காரில் நான் முன் இருக்கையில் அமர்வேன். நான் அவ்வப்போது பின் சீட்டில் என்ன நிகழ்கிறது என்று பார்ப்பதற்காக என் தலையைத் திருப்பிக்கொண்டே இருப்பேன். ஸ்வாமி, சிரித்துக்கொண்டோ, நகைச்சுவையாகப் பேசிக்கொண்டோ அல்லது பஜன் பாடிக்கொண்டோ இருப்பார். சில நேரங்களில் மௌனமாக அமர்ந்திருப்பார். அவ்வாறு ஒரு தடவை நான் திரும்பிப் பார்த்தபோது நான் கண்ட காட்சி என்னை ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைய வைத்தது! அங்கே ஸ்வாமிக்கு பதிலாக, இதுவரை பார்த்திராத விவரிக்க முடியாத அழகுடன் கூடிய முகத்துடன் ஸ்ரீ க்ருஷ்ணரைப் பார்த்தேன்! நான் கண்ட அந்த உவமை இல்லாத ஒரு பேரழகினை யாராலும் கற்பனை செய்து கூடப் பார்க்கமுடியாது! எந்த ஒரு கலைஞனும் அந்த அழகை என்றும் வடித்ததே இல்லை!! நான் பார்த்தேன், பார்த்தேன், பார்த்துக்கொண்டே இருந்தேன், என்னையும் அறியாமலே!! திடீரென்று என் நினைவு திரும்பி , தலையை முன்பக்கம் திருப்பிக்கொண்டேன். அவ்வாறு வெறித்துப் பார்த்ததற்கு வெட்கப்பட்டேன். ஆனால் சில நொடிகளிலேயே என்னைக் கட்டுப்படுத்த முடியாமல் மீண்டும் திரும்பிப் பார்க்க ஆரம்பித்தேன்! இறுதியில், ஸ்வாமிக்கு அருகில் அமர்ந்திருந்த திரு ராஜா ரெட்டி, “ஹிஸ்லாப், நீங்கள் ஏன் ஸ்வாமியை அப்படி வெறித்துப் பார்த்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். உடனே நான் அவருக்கு பதில் அளிக்காமல், ஸ்வாமியிடம், “ஸ்வாமி! அது என்ன கருநீல நிறம்?” என்று கேட்டேன்; ஏனென்றால் நான் பார்த்த முகம் அந்த நிறத்தில் இருந்தது. அதற்கு ஸ்வாமி, “உள்ளே நுழைந்து ஊடுருவிப் பார்க்க முடியாத ஆழமுள்ள ஒரு வஸ்துவைப் பார்த்தால் – உதாரணத்திற்கு, சில நேரங்களில் வானத்தைப் பார்க்கும்போதும், கப்பலில் சென்றுகொண்டிருக்கும்போது கடலின் ஆழத்தைப் பார்க்கும்போதும் – அப்போது உனக்குத் தெரிவது அந்தக் கருநீல நிறம்” என்றார்! அவர் சொன்னது அவ்வளவுதான்! நான் மறுபடியும் திரும்பிப்பார்க்கும்போது நம் ஸ்வாமியாகத் தான் தெரிந்தார்! பின்சீட்டில் அமர்ந்திருந்தோர் இந்தக் காட்சியைக் காணவில்லை.
ஆதாரம்: ஆகஸ்ட் 2018 ஸனாதன ஸாரதி இதழில் திரு. ஜான் ஹிஸ்லாப் அவர்கள் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 177:
ஸிங் என்ற ஒரு பக்தர், ஸ்வாமிக்கு , மிகுந்த பணிவுடன் ஒரு கணிசமான தொகையை அளிக்க விரும்பினார். தனக்கு கிடைத்த ஒரு இன்டர்வியூவில் அதனை ஸ்வாமியிடம் அவரால் கொடுக்க இயலவில்லை. அந்த இன்டர்வியூவில் நிறைய பேர் இருந்ததால் அது தொடர்ந்து நடந்துகொண்டிருந்தது. அப்போது ஸ்வாமி திடீரென்று நரசிம்மன் அவர்களிடம், “சௌத்ரி என்ற ஒருவர் பக்தர்கள் மத்தியில் அமர்ந்திருப்பார். அவரை அழைத்துக் கொண்டு வா” என்றார். இவர் அங்கு சென்று பார்க்கையில், அவருக்கு ஒரு ஆச்சரியம் காத்திருந்தது! அதே சௌத்ரி தான் முந்தைய நாள் நரசிம்மனிடம் தன் மகளின் திருமணம் சம்பந்தமாக ஸ்வாமியிடம் ஒரு வார்த்தை சொல்ல முடியுமா என்று கேட்டிருந்தார். அவரை தனக்குத் தெரியாததால், நரசிம்மன் மரியாதையுடன் மறுத்துவிட்டார்! ஆனால் இப்போது ஸ்வாமியின் ஆக்ஞைப்படி அவரை ஸ்வாமியிடம் அழைத்துச் சென்றார். ஸ்வாமி சௌத்ரியிடம் சில நிமிடங்கள் தனியாகப் பேசிவிட்டு, ஸிங் அவர்களைப் பார்த்து, “உன் பாக்கெட்டில் இப்போது எவ்வளவு பணம் வைத்துள்ளாய்?” என்று கேட்டார்! உடனே ஆனந்தத்துடன் தான் கொண்டுவந்திருந்ததை ஸ்வாமியிடம் பணிவுடன் சமர்ப்பித்தார். அவரது பணப் பையில் பத்தாயிரம் ரூபாய்கள் கொண்ட பத்து கட்டுகள் இருந்தன. ஸ்வாமி சௌத்ரியை ஸிங்கிடம் அறிமுகப்படுத்திவிட்டு, “அவருக்கு இப்போது பணம் தேவைப்படுகிறது. நீ எனக்குக் கொடுக்கக் கொண்டுவந்ததை அவரிடம் கொடு” என்று ஸிங்கிடம் கூறினார். உடனே அவரும் சௌத்ரியிடம் ஆனந்தத்துடன் அதைக் கொடுத்தார்; சௌத்ரியும் மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டார்.
உடனே முகம் மலர்ந்த ஸ்வாமி, “இது உங்களுக்கு எல்லாம் ஒரு உதாரணம்; பணம் இன்று வரும், நாளை போகும்; பணம் ஒரே இடத்தில் தங்கவே கூடாது. அது கைகள் மாறி மாறிப் போய்க்கொண்டே இருக்க வேண்டும்” என்று அனைவரையும் நோக்கிக் கூறினார்.
ஆதாரம்: “ ஸ்ரீ ஸத்யசாயி - தி இன்ட்வெல்லர்” என்ற நூலிலிருந்து.
📝 நிகழ்வு 178:
1940 களின் இறுதிப் பகுதியில் ஸ்வாமி மைசூரில் இருந்த ராமமூர்த்தி-கண்ணம்மா தம்பதியினரின் வீட்டிற்குச் சென்றார். அப்போது அங்கே நிறைய பக்தர்கள் குழுமியிருந்தனர்.
எதிர் வீட்டில் இருந்த ஒரு அனாதைச் சிறுமி, ஸ்வாமியிடம் அனைவரின் எதிரிலும் தன் குறைகளைச் சொல்ல வெட்கப்பட்டு அமைதியாக இருந்தாள். “நாளைக்கு நீ ஸ்வாமியிடம் பேசலாம்” என்று கண்ணம்மா அவளுக்கு அறிவுரை கூறினார். ஆனால் அந்தப் பெண் மறுநாள் ஸ்வாமியைப் பார்க்க வரவில்லை. ஸ்வாமியும் மைசூரை விட்டுக் கிளம்பிவிட்டார். அவளை அழைத்து விசாரித்தபோது, அவள்.
“நான் வருவதற்கான அவசியம் ஏற்படவில்லை. ஸ்வாமி என் கனவில் தோன்றி என் குறைகள் அனைத்தையும் பொறுமையாகக் கேட்டார். நான் நல்ல குடும்பத்தில் மணம் முடித்து மகிழ்ச்சியுடன் கூடிய நல்வாழ்வு பெறுவேன் என்று சொல்லி என்னை ஆசீர்வதித்தார்!” என்று உரைத்தாள்! அவள் மிகுந்த மன நிறைவோடு காணப்பட்டாள். அவள் அப்போது தன் அண்ணனுடன் பணக் கஷ்டத்தில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அவளுக்கு வெண்மை நோய் வேறு இருந்தது.
ஸ்வாமியின் தரிசனம் மற்றும் ஆசீர்வாதங்களுக்குப் பிறகு அவள் உடலில் இருந்த வெண் திட்டுக்கள் மறைந்து போயின! அவள் திருமணம் செய்துகொண்டு இப்போது சுகமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
ஆதாரம்: “ ஸ்ரீ ஸத்யசாயி - தி இன்ட்வெல்லர்” என்ற நூலிலிருந்து.
📝 நிகழ்வு 179:
பருவ மழைக் காலத்தில் ஒரு மாலைப் பொழுதில் இந்த நிகழ்வு நடந்தது. வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்தன. அப்போது வெங்கம்மா அவர்கள் வீடு ஒன்றைக் கட்டிக் கொண்டிருந்தார். அருகில் ஈரமான செங்கற்கள் அடுக்கப்பட்டு, சூளையில் சூடேற்றப்படுவதற்குத் தயாராக இருந்தன. எரிப்பதற்குத் தேவையான மரக் கட்டைகளும் தயார் நிலையில் இருந்தன. அன்றைய நாள் அதற்கு உகந்ததாக இல்லாததால், மறுநாளுக்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அன்று மாலை மழை பெய்தால் கற்கள் கரைந்துபோய்விடும் அபாயம் தென்பட்டது. ஆகையால் அப்போது ஏதேனும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது. அதிருஷ்டவசமாக அடுத்த வீட்டில் வசிப்பவர் உதவிக்கு வந்தார். கரும்பின் காய்ந்த இலைகளை வைத்து சூளையை மூடிவிடலாம் என்று அவர் வெங்கம்மாவுக்கு அறிவுரை கூறினார். சித்ராவதியின் கிழக்குக் கரையில் வசிக்கும் தன் நண்பனிடம் இலைகளைக் கொடுத்து உதவும்படி கேட்கலாம் என்று கூறினார். உடனே அருகில் இருந்தவர்களிடம் சொன்னவுடன், ஆண்கள், பெண்கள், சிறுவர் சிறுமியர் என்று பலர் திரண்டனர்; அவர்கள் அவசரமாக சித்ராவதியின் மணல் பரப்பில் ஓடிச் சென்று வரிசையாக நின்றுகொண்டனர். அவர்களுடன் இறுதியில் ஸ்வாமியும் சேர்ந்துகொண்டார்!
அவர் ஆற்றுப்படுகையின் நடுவில் சென்றபின், திடீரென்று அனைவரையும் நிற்கச் சொல்லிவிட்டு, “வெங்கம்மா! வான ராது! (மழை வராது!)” என்று அறிவித்தார்! அடுத்த நொடியில் அந்த மேகங்கள் திடீரெனக் கலையத் தொடங்கின! வானத்தில் ஒளியின் அளவு ஓங்கியது! பயம் அவர்களைவிட்டு நீங்கியது! ஒருசில வார்த்தைகள், வானத்தில் கருமேகங்களை நோக்கிய ஒரு சிறு உள்ளங்கை -ஒரு கணப்பொழுது தங்கிய இந்தக் காட்சி – வெட்டவெளியின் வெகு உயரத்தில் இருந்த காற்று, மேகங்கள், மழை இவை அனைத்தும் ஸ்வாமியின் செய்கையைப் புரிந்துகொண்டு அடிபணிந்தன!! எந்த ஒரு இலையையும் எடுத்துக்கொள்ளாமல், அனைவரும் அவரவர்தம் வீடுகளை நோக்கித் திரும்பினர், ஐம்பூதங்களுக்கும் அதிபதியானவர் அவர்களுடனே இருந்ததாலே!!
ஆதாரம்: திரு.கஸ்தூரி அவர்கள் எழுதிய “ஈஸ்வரம்மா – தி சோஸன் மதர்” என்ற நூலில் இருந்து.
📝 நிகழ்வு 180:
மறுநாள் காலை சீக்கிரமாகவே உணவு எடுத்துக்கொண்டு நாங்கள் மீண்டும் பஸ்ஸில் ஏறினோம். ரிஷீகேஷில் இருந்து அந்தப் பாதை மிகவும் அதிகமான ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்ததால் எங்களுள் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. கொண்டை ஊசி வளைவுகளில் பஸ் அடிக்கடி திரும்பியதால் ஸ்வாமியின் தந்தை அடிக்கடி வாந்தி எடுக்கத் தொடங்கினார். அன்று இரவு ஸ்ரீநகரில் அவருக்கு ஜுரம் அதிகமாக வந்துவிட்டது. மறுநாள் காலை பஸ்ஸில் ஏறுவதற்காக நாங்கள் நூறு பேரும் வெளியில் நின்றுகொண்டிருக்கும்போது அவர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் உயிர் பிழைப்பது கடினம் என்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். ஆனால் ஸ்வாமியின் தாய் மிகவும் தைரியமாக இருந்தார்! அவர், “நிஜமான நாராயணனுடன் சேர்ந்தே நாம் அனைவரும் நாராயணனின் மூர்த்தி ஸ்வரூபத்தைத் தரிசிக்கப் போகிறோம் என்று ஸ்வாமியே நம்மிடம் ஹரித்வாரில் சொல்லவில்லையா? ஸ்வாமி இங்கே வந்தவுடன் அப்பா கண்விழித்து, எழுந்து நடந்துவிடுவார், பாருங்கள்!” என்றார்! தந்தையின் மோசமான உடல்நிலை குறித்த செய்தி ஸ்வாமியின் காதுகளுக்கு எட்டியபோது அவர் குளித்துக்கொண்டிருந்தார்! எதைப் பற்றியும் கவலைப் படாதவர் போல மிக அமைதியாக அங்கு வந்த ஸ்வாமி, தந்தையின் அருகில் அமர்ந்து நாடி பிடித்துப் பார்த்துவிட்டு “அவர் நன்றாகத்தான் இருக்கிறார். நீங்கள் தான் அநாவசியமாகக் கவலைப் படுகிறீர்கள்; உடனே சென்று பஸ்ஸில் ஏறுங்கள்!” என்று எங்களிடம் கூறினார்! நாங்கள் அனைவரும் ஸ்வாமியின் கட்டளைக்கு அடிபணிந்தோம். ஸ்வாமியின் தந்தை எப்போதும் போல என் வலதுபுறம் பஸ்ஸில் அமர்ந்துகொள்ள, ஸ்வாமியின் ஆசி கலந்த கையசைவுகளுடன் எங்கள் பயணம் எந்த இடையூறுமின்றித் தொடர்ந்தது. ஸ்வாமியே அந்த நாராயணன் என்ற தாயின் நம்பிக்கை எங்களுக்கெல்லாம் இவ்வாறு உறுதி செய்யப்பட்டது!
ஆதாரம்: திரு.கஸ்தூரி அவர்கள் எழுதிய “ஈஸ்வரம்மா – தி சோஸன் மதர்” என்ற நூலில் இருந்து.
📝 நிகழ்வு 181:
ஸ்வாமி 20வது வயதை எட்டியிருந்தார். அப்போது பெங்களூரில் இருந்த அவருக்கு ஈஸ்வரம்மா பயந்தபடியே திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவரை உபசரித்துக் கொண்டிருந்த ராஜா, செட்டி மற்றும் சாகம்மா அவர்கள் மருத்துவர்களை வரவழைத்தனர். ஆனால் அவர்களால் காரணத்தைக் கண்டறிய முடியவில்லை. “நானே வரவழைத்துக் கொண்டுள்ளேன்” என்று ஸ்வாமியே கூறிய பிறகு அவர்களால் என்ன கண்டுபிடிக்க முடியும்? ஸ்ரீ ராமர், ஷீர்டி பாபா அவர்களின் வாழ்வின் இருபதுகளில் கூட சிலநேரங்களில் உணவின் மீது ஒருவிதமான வெறுப்பும், எதிலும் விருப்பு இல்லாத நிலையும் இருந்ததாக ஸ்வாமி உதாரணங்கள் அளித்தார்! ஆகையால் இந்த உடல் நலக் குறைவு தவிர்க்கமுடியாததுதான், தானாகவே சீக்கிரம் சரியாகிவிடும் என்று கூறி அருகில் இருந்த பக்தர்களை சமாதானப் படுத்துவதில் காலத்தைக் கழித்தார். ஆனால் அவர்கள் துருவித் துருவிக் கேட்டதால், ஸ்வாமி வேறு வழியின்றி உண்மையான காரணத்தை வெளிப்படுத்தினார்! “நான் எந்த நோக்கத்திற்காக அவதாரம் எடுத்திருக்கிறேனோ அதற்கான செயல்களில் ஈடுபடும் நேரம் வந்துவிட்டதால் தேவைப்படும் தெய்வீக சக்தியின் அதிகரிப்பைத் தாங்கும் விதமாகத் தன்னுடைய உடல் கட்டமைப்பைத் திருத்தி அமைத்துக் கொண்டிருப்பதாகத் தெரிவித்தார்! எத்தகைய புரிபடாத வார்த்தைகள், நிகழ்வுகள் ? !! இத்தகைய அனுபவம் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கும்? ஆண்களும் பெண்களும் பேச்சற்று, (அவரது அப்போதைய உடல்நலக் குறைவைப் பார்த்து ) வருத்தத்துடன் அவரைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். தனது மகனின் இளம் உடல், அதனை வளர்த்துக் காக்கும் ‘மூலப்பொருளா’லேயே சித்திரவதை செய்யப்படுவதைப் பார்த்துக்கொண்டிருக்கும் தாய் ஈஸ்வரம்மாவின் இதயம் எவ்வாறு வருத்தத்தால் துடித்துக் கொண்டிருக்கும் என்று என்னால் உணரமுடிந்தது. ஆனால், எதிர்காலத்திலும் அவருக்கு இதுபோன்ற கவலை தரும் மேலும் பல தருணங்கள் ஈஸ்வரம்மாவிற்காகக் காத்திருந்தன! ஆனால் இந்த அனுபவங்கள் அனைத்துமே ‘ஸத்யா என்னும் ஒரு நபரின் தாய்’ என்ற சாதாரண எண்ணத்திலிருந்து, அவரை விடுபடச் செய்து, ‘ஈஸ்வரனுக்கே தாய்’ என்ற ஆசீர்வாதத்தை அவர் உணர்ந்தவராக உயர வேண்டும் என்பதற்காக அவருக்காகவே தோற்றுவிக்கப்பட்ட அனுபவங்கள் ஆகும் என்று தோன்றியது. ஏனெனில், கூடிய சீக்கிரத்திலேயே அவர் அனைத்து உயிரினங்களின் பால் தன் தாயன்பினைக் காட்டும் நிலையை அடைந்தார்.
ஆதாரம்: திரு.கஸ்தூரி அவர்கள் எழுதிய “ஈஸ்வரம்மா – தி சோஸன் மதர்” என்ற நூலில் இருந்து..
📝 நிகழ்வு 182:
மறுநாள் காலை நாங்கள் பத்ரிக்குப் பிரயாணம் செய்யவிருந்ததால், கவர்னரின் மாளிகைக்கு அருகில் இருந்த புல்தரையில் எங்கள் எல்லோரையும் அமரச் சொல்லி, நாங்கள் என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பவைகளை ஸ்வாமி விவரித்துக் கொண்டிருந்தார். “கங்கை நதி அருகில் ஓடிக்கொண்டிருக்கிறது. காலையில் அதிசீக்கிரம் எழுந்துவிடுங்கள். குளிருக்காக அஞ்ச வேண்டாம்; கங்கையில் மூழ்கிக் குளித்து உங்கள் பாவங்களை எல்லாம் அதில் விட்டுவிடுங்கள். உங்கள் தீய குணங்களையும் விட்டுவிடுங்கள்; தூயவர்களாக வெளியே வாருங்கள்.” என்று கட்டளையிட்டார். அவர் கூறியதைப் போல நாங்கள் சீக்கிரம் துயில் எழுந்தோம்; கங்கைக் கரையில் பொருத்தப்பட்டிருந்த கைப்பிடிகளைப் பற்றிக்கொண்டு எப்படியோ குளித்துவிட்டு வந்தோம். பிறகு நாங்கள் பஸ்களில் பயணித்தோம். செல்லும் வழியில், சாலையை ஒட்டியிருந்த பல அடிகள் ஆழத்தில் நீரில் அங்கே ஏற்கனவே விழுந்து கிடந்த பஸ்களையும் அவற்றின் சக்கரங்கள் மிதப்பதையும் பார்த்தோம்! பயந்துபோனோம்! ஆனால் ஸ்வாமி எங்களை மிக பத்திரமாக அழைத்துச் சென்றார். ஸ்வாமி எங்களுக்கு போதித்த ‘தூய்மை’ என்ற பாடத்தின் முக்கியத்துவத்தை நன்கு கற்றுக் கொண்டோம். “ஏதாவது வேண்டுமென்றால் கேளுங்கள்” என்று ஸ்வாமி கூறினார். அந்த இடத்தில் அவரிடம் எதைக் கேட்பது? ஸ்வாமியின் அருகில் இருந்தாலே போதும் என்று நினைத்தோம். அவர் ஒருவர் தான் எங்களுக்கு எல்லாமே. நாங்கள் செல்லும் வழித்தடத்தில் உயரமான மலைகள் இருந்தன. ஒரு மலையில் பசு ஒன்று மேய்ந்துகொண்டிருந்தது. ஸ்வாமி நடந்துகொண்டிருந்தார்; அவருடன் சேர்ந்து நாங்களும் நடந்துகொண்டிருந்தோம். அப்போது அந்தப் பசு திடீரென்று கீழே வழுக்கி விழுந்து சரிவின் உயரத்திலிருந்து உருண்டுவிட்டது! உடனே நான் “ஸ்வாமி! பசு கீழே விழுந்துவிட்டது!” என்று உரக்கக் கூறினேன்! அதன் கதை முடிந்துவிட்டது என நான் நினைத்தேன். சில நொடிகள் அது வலியால் துடித்ததுபோல இருந்தது. ஆனால் மேலும் சில நொடிகளில், அது ஒன்றும் நடக்காததைப் போல சாதாரணமாக எழுந்து சென்றுவிட்டது! ஸ்வாமி, “அது ஸ்வாமியின் பார்வையில் வந்துவிட்டது. அதற்கு வேறு என்ன நடக்கும் என்று நீ எதிர்பர்த்தாய்?” என்றார்! இவை அனைத்து நம் எல்லோருக்கும் தேவையான பாடமாகும்.
ஸ்வாமியின் பார்வை நம் மீது எப்போதும் இருக்கவேண்டும். நாம் ஸ்வாமியின் பார்வையில் இருந்தோமானால் நமக்கு என்ன இடர் நிகழ்ந்துவிட முடியும்?
ஆதாரம்: டாக்டர் கோடேடி ஸரஸ்வதி அவர்கள் பிப்ரவரி 2017 ஸனாதன ஸாரதி இதழில் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 183:
ஒருநாள் மதியம் அறுபது வயதான, கால்கள் இல்லாத நிர்வாண சன்யாசி ஒருவர் மந்திரத்தில் உள்ள ஹாலுக்குள் ஒரு ஸ்ட்ரெச்சரில் கொண்டுவரப்பட்டார். அவர் மௌன விரதம் மேற்கொண்டிருந்தார். ஆனால் அவரது சிஷ்யர்களோ , நம் ஸ்வாமி அவரது முடமான கால்களைத் தொட்டு ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும் (!!??) என்று அறிவித்தனர்!! அங்கு வந்த ஸ்வாமியின் முதல் செயல், அவர் மீது ஒரு துண்டை எறிந்து உடலை மூடியது தான்!! இதைப் பார்த்த ஈஸ்வரம்மா அதிர்ச்சி அடைந்தார். அவரது சீடர்கள் இப்போது என்ன செய்யத் துணிவார்களோ என்று பயந்தார். ஆனால் ஸ்வாமி இப்போது மெதுவாகவும் மிருதுவாகவும் பேச ஆரம்பித்தார். “மௌன விரதம் எப்போது மிகவும் தேவையோ அப்போது நீ பேச அனுமதி அளிக்கிறது. தலை, இதயம் மற்றும் மனதில் அமைதி நிலவ வேண்டுமே தவிர, நாக்கில் அல்ல. என்னதான் பக்தியுடன் உன்னை மக்கள் இவ்வாறு சுமந்து செல்லும் நிலை இருக்கும் பட்சத்தில், நீ எங்கும் செல்லாமல் ஓரிடத்திலேயே நிலையாக இருப்பதுதான் நீ செய்யவேண்டிய உகந்த செயலாகும். உன் சுமையை ஏன் நீ நான்கு பேருக்குக் கொடுக்கவேண்டும்? நான் உன் சுமையை ஏற்கிறேன்; உனக்கு, உணவு, உடை, எந்த இடமாக இருந்தாலும், இருக்க ஒரு கூரை ஆகியவற்றைத் தருகிறேன்! உனக்கு வழிகாட்டி உனது குறிக்கோளை அடையச் செய்வதற்கே நான் வந்திருக்கிறேன்!” என்று ஆணித்தரமாக ஸ்வாமி அறைகூவினார்! அனைவரின் நிம்மதிக்கு ஏற்றவாறு அவரது சீடர்கள் எதுவும் பேசாமல், இப்போது துண்டு போர்த்தப்பட்ட அவர்களது குருவைத் தூக்கிக் கொண்டு புக்கப்பட்டணம் நோக்கித் தங்கள் பயணத்தைத் தொடங்கினர். ஆனால் ஈஸ்வரம்மாவோ, அவர்கள் ஏதாவது தீய மந்திர சக்தியை ஸ்வாமி மீது ஏவி பழி தீர்த்துக் கொள்வார்களோ என்று பயந்தார்! ஆகையால், அங்கே சிவன் கோவிலில் இதற்கான பரிகாரம் செய்வதாக நேர்ந்துகொண்டார்!! அன்பினால் பதைக்கும் தாய் மனம் தானே!
ஆதாரம்: திரு.கஸ்தூரி அவர்கள் எழுதிய “ஈஸ்வரம்மா – தி சோஸன் மதர்” என்ற நூலில் இருந்து.
📝 நிகழ்வு 184:
சட்டை அணியாத ஒரு சாதாரண மனிதரிடம் ஸ்வாமி பேசியது என்னால் மறக்க முடியாத ஒரு நிகழ்வு ஆகும். அவர் வேறு பலருடன் சேர்ந்து அமர்ந்திருந்தார். ஸ்வாமி அவரது பெயர் சொல்லி அழைத்தவுடன் அந்த ஏழை மனிதர் ஆச்சரியம் அடைந்தார். ஸ்வாமி அவரிடம், “பரம ஏழையான நீ நான்கு நாட்களாக எனது இந்த ஆசிரமத்தில் மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டிருக்கிறாய். ஹர்நாத் பாபா , குஸும் குமாரி அவர்களுடைய பக்தன் நீ; அவர்களுக்கு ஒரு கோவில் கட்டுவதற்காக நீ பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறய். இது மிகவும் தவறு. நீ இருக்கும் இந்த சூழ்நிலையில் கோவில்கள் கட்டுவதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக அதை, நீ செய்யக் கூடாது. உனது வீட்டிற்குத் திரும்பிச் செல். ஹர்நாத் பாபாவின் சிலை ஒன்று உனக்குத் தருகிறேன். அதை உன் பூஜையில் வைத்து தினமும் வழிபடு“ என்றார்!
ஸ்வாமி தன் கையில் மணலை அள்ளியவுடன் அது வெள்ளியினாலான ஹர்நாத் பாபா, குஸும் குமாரி அவர்களது சிலையாக மாறியது! அதனை ஸ்வாமி முதலில் என் கையில் கொடுத்தார்! அந்த மனிதர், தான் அணிந்திருந்த பேட்ஜில் இருந்த இருவரின் படத்தின் அச்சு போல அந்த சிலை இருந்தது. அந்தப் படத்தில் எவ்வாறு குஸும் குமாரியின் நெற்றியில் ஒரு சிவப்புத் திலகம் இருந்ததோ அதே போல ஒரு திலகம் அந்தச் சிலையின் நெற்றியிலும் இருந்தது! அனைத்து விவரங்களையும் நான் நன்கு ஆராய்வேன் என்று ஸ்வாமி அறிந்திருந்தார். ஸ்வாமி என்னைப் பார்த்துப் புன்னகையுடன், “உனக்குத் திருப்தி தானே? உன் விஞ்ஞானத்தால் இதற்கு ஏதேனும் விளக்கம் அளிக்க முடியுமா?” என்றார்! பிறகு ஸ்வாமி அந்தச் சிலையை என்னிடம் இருந்து வாங்கி அந்த மனிதரிடம் அளித்தார்.
ஆதாரம்: “பாபா ஈஸ் காட் இன் ஹ்யூமன் ஃபார்ம்” என்ற ப்ரேம் லுத்ரா அவர்கள் தொகுத்த நூலில் டாக்டர். பகவந்தம் அவர்கள் எழுதியது...
📝 நிகழ்வு 185:
ஒரு தடவை அனந்தபூரிலிருந்து மாணவிகள் அனைவரும் ஸ்வாமி தரிசனத்திற்காக புட்டப்பர்த்திக்கு வந்திருந்தோம். அப்போதெல்லாம் எங்களது பிறந்த நாட்களில் தரிசனத்தின்போது சாக்கலேட்டுகள் நிறைந்த தட்டுகளை எடுத்துச் சென்று ஸ்வாமியிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொள்ள எங்களுக்கு அனுமதி வழங்கப் பட்டிருந்தது. அன்று பிறந்தநாள் கொண்டாடும் ஒரு பெண்ணின் பின்னால் நான் அமர்ந்திருந்தேன். ஸ்வாமி எங்கள் அருகில் வந்தார்; தட்டில் இருந்த சாக்கலேட்டுகளைக் கை நிறைய அள்ளி எங்களை நோக்கி மகிழ்ச்சியுடன் வீசிவிட்டு நகர்ந்துவிட்டார். ஸ்வாமி சிறிது தூரம் நடந்து சென்ற பின் என் அருகில் அமர்ந்திருந்த மற்றொரு சகோதரி திடீரென்று தேம்பி அழுவதைக் கவனித்தேன்! அவள் முழுமையான உடல் நலத்துடன் இல்லை என்பது மட்டும் எனக்கு முன்னரே தெரியும்.
அறுவை சிகிச்சை தேவைப்படும் அளவிற்கு அவளுக்கு கண்ணில் ஒரு குறைபாடு இருந்தது. அந்த கணம் தான் அவள் தனக்கு அப்போது நடந்ததை விவரித்தாள். அவள் காணும் காட்சிகளில் ஆங்காங்கே கருப்புப் புள்ளிகள் தெரிந்தன; அவற்றால் பார்வை பாதிக்கப்பட்டிருந்தது. தன் ஊரில் இருந்த ஒரு டாக்டர், சிறிய அறுவை சிகிச்சையை செய்துகொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார். ஆனால் அவள் அதை மேற்கொள்வதற்கு மிகவும் அச்சப்பட்டாள். ஸ்வாமி அன்று தரிசனத்திற்கு வந்தபோது, அந்தக் கருப்புப் புள்ளிகளினால், ஸ்வாமியை சரிவரப் பார்க்க அவளால் இயலவில்லை. அதனால், மிகவும் வருத்ததுடன் இருந்தபோது ஸ்வாமி எறிந்த சாக்கலேட்டுகளில் ஒன்று அவள் கண்ணில் வேகமாகப் பட்டு அவள் அணிந்திருந்த கண்ணாடியையும் கழற்றிவிட்டது! ஃஅப்போது அவள் கண்களில் நீர் வழிய ஆரம்பித்தது. சிலநொடிகள் கழித்து அவள் தன் கண்களைத் துடைத்துக் கொண்டபின், சாக்கலேட்டு அடித்த வேகத்தினால் சிறிது அதிர்வுடன் சேர்ந்த வலி இருந்தபோதிலும், தன் பார்வை, புள்ளிகள் ஏதும் இன்றி மிகத் தெளிவாக மாறியதை கவனித்த அவள் இன்ப அதிர்ச்சியுற்றாள்! ஸ்வாமியின் அன்பு என்னும் ஏவுகணை சாக்கலேட்டு வடிவில் வந்து தாக்கி அவள்தம் கண்ணில் தென்பட்ட கருப்புப் புள்ளிகளை அறவே நீக்கியது!!
ஆதாரம்: அனந்தபூர் கல்லூரியில் ஆசிரியையாகப் பணி புரிந்துகொண்டிருக்கும் லக்ஷ்மி மேனன் அவர்கள் ஸனாதன ஸாரதி - மார்ச் 2021 இதழில் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 186:
எனக்கு என்ற தனி வழியிலே சென்றுகொண்டிருந்த நான் ஒரு சந்தேகப் பிராணியாகவே இருந்தேன்; எதையும் எளிதில் நம்பிவிடமாட்டேன். ஏனென்றால் அந்த கால கட்டத்தில் என்னுடைய ஆழ்மனதில் ஸ்ரீ ராமக்ருஷ்ண பரமஹம்சரின் தாக்கம் ஒரு பெரிய அளவில் நிலை பெற்றிருந்தது; அதனால் அற்புதங்கள் செய்யும் மனிதர்களை நம்பியதில்லை. இதனை நன்கு அறிந்த ஸ்வாமி ஒரு நாள் தான் யார் என்பதை எனக்கு உணரச் செய்தார். ஊட்டியில் ஸ்வாமி கட்டிலில் இளைப்பாறிக் கொண்டிருந்தார்; அப்போது நானும் ஸ்வாமியும் மட்டுமே அந்த அறையில் இருந்தோம். ஸ்வாமி என்னிடம், “நீ விஷ்ணுவின் பக்தனாக இருப்பின் என் இதயத்திலிருந்து வெளிப்படும் பரஞ்சோதியைக் காண்பாய்;. நீ சிவபக்தனாக இருப்பின், என் நெற்றியில் புருவங்களுக்கு மத்தியில் மூன்றாம் கண் இருக்கும் இடத்தில் அந்த ஜோதியைக் காண்பாய்.” என்றார்! நான் முதலில் இருந்தே பகவான் ஸ்ரீக்ருஷ்ணரின் பக்தனாக இருந்ததால், அவரது இதயப் பகுதியில் அந்த ஜோதியைக் கண்டேன்! ஆயினும் சந்தேகங்கள் என்னை விட்டுப் போகவில்லை. பாபா சற்று நேரத்தில் அறையைவிட்டு வெளியே சென்றபோது அவரது போர்வையின் அடியில் அவர் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்தேன்! அந்த டார்ச் லைட்டினால் இத்தகைய ஒரு ஒளியைக் கொடுக்க முடியுமா என்று பரிசோதித்துப் பார்க்க எண்ணினேன். அதே நொடியில் ஸ்வாமி அறைக்குள் வந்து என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டார்! என்னை நோக்கி, “உன்னை நம்பச் செய்வதற்கு இன்னும் நான் என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டார்!
ஆதாரம்: ஸனாதன ஸாரதி – மார்ச் 2021 இதழில், ராஜா ரெட்டி அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 187:
நான் ஸ்வாமி விவேகானந்தாவை வணங்குபவனாக இருந்தேன்; ஸ்வாமி என்னிடம் சில சமயம்,
“நீ விவேகத்தைக் கையில் எடுத்து விளையாடுவாய்” என்று கூறுவார்! நான் விவேகானந்தர் மற்றும் அவரது தத்துவங்கள் மனம் முழுதும் நிரம்பிய ஒருவனாக இருந்ததால், நான் அவர் காட்டிய வழியில் சென்று ஆன்மீகத்தின் உச்சியை அடைவேன் என்று ஸ்வாமி குறிப்பிடுவதாக அப்போது எண்ணினேன்! ஆனால் உண்மையாக என்ன நடந்தது எனில்,
நான் திருமணம் செய்து கொண்ட பிறகு, எனக்குப் பிறந்த மகனுக்கு ஸ்வாமியே ‘விவேக்’ என்று பெயர் சூட்டினார்!! இவ்வாறாக அவர் என்னிடம் விளையாட்டுக் காட்டினார்!!ஆனால், எண்ணிப் பாருங்கள்! என் திருமணத்திற்குப் பல வருடங்களுக்கு முன்னால் ஸ்வாமி மேற்கூறியவாறு பகர்ந்திருக்கிறார்! என் திருமணத்தில் ஸ்வாமிக்கு வெளிப்படையாக எந்தவிதமான தொடர்பும் இருக்கவில்லை!
ஆதாரம்: ஸனாதன ஸாரதி – மார்ச் 2021 இதழில், ராஜா ரெட்டி அவர்களின் பதிவு.
📝 நிகழ்வு 188:
பர்த்தியிலிருந்து எங்களது ஊருக்குப் புறப்படுவதற்கு ஒருநாள் முன்னர், மேலும் பல மேற்கத்தியர்களுடன் நாங்கள் இன்டர்வியூவிற்கு அழைக்கப் பட்டோம். அப்போது நான் அவரது பாதங்களுக்கு மிக அருகில் அமர்ந்திருந்தேன். திடீரென ஸ்வாமி என்னை நோக்கி,
“திருமதி. க்ரிஸ்டல்! நீ மற்றுமொறு புத்தகத்தை எழுதுகிறாய்!” என்றார்! எப்போதும் போல, அவரது சில குறிப்பிட்ட அறிவுரைகளும் கேள்விகளும் நாம் எதிர்பார்க்காத நேரங்களில் நம் மீது அவரால் ஏவப்படும்! அதை அவர் மிகவும் ரசிப்பதுண்டு. திடீரென மற்றவர்களைக் கையும் களவுமாய்ப் பிடிப்பதிலும் இன்ப அதிர்ச்சி அளிப்பதிலும் அவர் சுவாரசியம் காட்டுவார்! வேறு ஒரு புத்தகம் எழுதுவதைப் பற்றி நான் எதுவும் நினைத்திராததால் எனக்கு அப்போது என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை! ‘நான் எழுதப் போகிறேனா’ என்று கேட்கிறாரா அல்லது என்னை எழுதும்படி பணிக்கிறாரா என்பதை அவரது குரலின் தன்மையிலிருந்து என்னால் உணர முடியவில்லை. இறுதியாக நான் சுதாரித்துக்கொண்டு, “ஆம், ஸ்வாமி” என்று ஒரு நடுநிலையான குரலில் பதிலளித்தேன். உடனே அவர்,
“அந்தப் புத்தகத்தின் தலைப்பு என்ன?” என்று கேட்டார்! “ எனக்குத் தெரியாது, ஸ்வாமி” என்றேன். ஆனந்தமான ஒரு புன்சிரிப்புடன் அவர், “ ஸ்வாமி கொடுப்பார்” என்றார்.
அவர் உடனே தன் வலது கையை நாம் எல்லோரும் அறிந்த வகையில் சுழற்றி, ஒரு அழகான, மெல்லியதான, மிளிரக்கூடிய, தங்கம் மற்றும் அடர்ந்த நீலம், பச்சை நிறங்களுடன் கூடிய எனாமல் பூசப்பட்ட வெள்ளியினாலான பேனாவை, “நீ எழுதும் புத்தகம் இந்தப் பேனாவினுள் உள்ளது” என்று சொல்லிக்கொண்டே ஸ்ருஷ்டி செய்தார்! அதில் மை உள்ளதா என்று சரிபார்ப்பதைப் போல ஒரு பேப்பரை எடுத்து, அதில் எழுதிப்பார்த்துவிட்டு, தான் திருப்தி அடைந்த பின்னர் என்னிடம் கொடுத்தார்! நான் “ ஸ்வாமி, மிக்க நன்றி” என்றேன். உடனே அவர் சிரித்துக் கொண்டே,
“நீ தயவு செய்து அவ்வாறு கூற வேண்டாம்” என்று ஆங்கிலத்தில் நான் பேசுவது போலவே அவர் என் குரலிலேயே கூறியதால் என்னையும் சேர்த்து அங்கிருந்த அனைவரும் உரக்கச் சிரித்தனர்!
ஆதாரம்: ஃபில்லிஸ் க்ரிஸ்டல் அவர்கள் அதே பேனாவால் எழுதிய “ டேமிங் தி மங்கீ மைண்ட்” என்ற புத்தகத்திலிருந்து.
📝 நிகழ்வு 189:
1978ஆம் வருடம், கோடையில் ஒரு இரவில் திடீரென எனக்கு மிகவும் குளிர ஆரம்பித்து உடல் நடுங்கியது. கூடவே ஜுரம் அதிகரித்து நான் உரத்த குரலில் பிதற்றத் தொடங்கினேன். சிறிது நேரத்தில் என் சுயநினைவை இழந்தேன். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிறந்த மருத்துவக் குழுவினால் கண்காணிக்கப்பட்டு வந்தேன். அவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் பலனில்லை. என் முதுகெலும்பில் இருந்து திரவத்தை எடுத்துப் பரிசோதித்தனர்; அதிலிருந்தும் உறுதியாக எந்த நோயும் கணிக்கப்படவில்லை. இந்த மோசமான நிலை மூன்று நாட்கள் தொடர்ந்தது. இந்த நேரத்தில் மருத்துவர்கள் என் தந்தையிடம், “நீங்கள் வணங்கும் கடவுள் உங்களுக்கு உதவ முன்வராவிட்டால், உங்கள் மகன் உயிர் பிழைப்பது இயலாத காரியம்” என்று சொல்லிவிட்டனர். நான்காம் நாள் காலையில் நான் அவதிப்படுவதைச் சகித்துக் கொள்ள முடியாத என் அம்மா , என்னை எடுத்துக்கொண்டு சென்றுவிடும்படி இறைவனிடம் வேண்டினார். மருத்துவர்கள் இறுதி ஊசியினை எனக்குள் செலுத்திவிட்டு, என்ன நிகழ்கிறது என்று பார்ப்பதற்கு என்னைச் சுற்றிக் கவலையுடன் நின்றுகொண்டிருந்தனர்.
ஆனால், அந்தோ ! ஆச்சரியம்!! கருணைக்கடலான நம் ஸ்வாமி, சிவப்பு நிற அங்கியில் இனிமையான புன்சிரிப்புடன் காட்சி அளித்தார்! உயிருள்ள உடலுடன் தோன்றிய ஸ்வாமி, “ அவன் அரை மணி நேரத்தில் சரியாகி விடுவான்; யாரும் கவலைப்படவேண்டாம்” என்று கூறினார்! அதேபோல, அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக, அரை மணி நேரத்தில் நான், முற்றிலும் குணமாகிவிட்டேன்!! என் உயிரை மீட்டுக் கொடுத்துவிட்டு அவர் மறைந்துவிட்டார்! எனக்கு மட்டும் தான் தரிசனம் கொடுத்திருக்கிறார் என்று பின்புதான் எனக்குத் தெரிந்தது!
இந்த நிகழ்வு மருத்துவமனையில் என்னை கவனித்துக் கொண்டிருந்த செவிலியர் போன்ற அனைவரிடத்திலும் ஒர் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. அப்போது அந்த மருத்துவமனையில் பணிபுரிந்த அனைவரும் ஸ்வாமியின் பக்தர்களாக மாறிவிட்டனர் என்று நான் பிறகு அறிந்துகொண்டேன்.
ஆதாரம்: ‘ஸாயி நந்தனா - 1985’ என்ற புத்தகத்தில் ஹர்ஷவர்தன் என்ற முன்னாள் மாணவர் எழுதிய பதிவு.
📝 நிகழ்வு 190:
பகவான், நாடகங்களில் கூட தனது மாணவர்கள் மோசமான கதாபாத்திரங்களில் நடிப்பதை விரும்பவில்லை. 1991இல் நடந்த பட்டமளிப்பு விழாவின்போது மாணவர்கள் நிகழ்த்திய நாடகத்தில், “நாகராஜ்” என்ற பெயருடன் ஒரு வில்லன் கதாபாத்திரம் இருந்தது. அந்தப் பாத்திரத்தில் நடித்தவர், ஒரு நல்ல மாணவரும் சிறந்த நடிகரும் ஆவார். ஸ்வாமியின் முன்னிலையில் நடைபெற்ற ஒத்திகைகளின்போது, மிகச் சிறப்பாக நடித்துக் காட்டினார். எப்பொழுதெல்லாம் நாகராஜ் மேடையில் தோன்றினாரோ அப்போதெல்லாம் ஸ்வாமி மிகவும் அசௌகரியமான நிலையில் காணப்பட்டார். ஒரு ஒத்திகையின்போது, நாகராஜ் மேடையில் தோன்றிய அடுத்த நொடியில் ஸ்வாமி ஒத்திகையை நிறுத்திவிட்டு மாணவர்களை அருகில் அழைத்தார். வில்லன் கதாபாத்திரத்தில் வெளிப்படுகின்ற, அளவுக்கு மீறிய தீய தன்மையை தான் விரும்பவில்லை என்று கூறினார்! “ இது நாடகத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் தானே என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அந்த மாணவன் அதில் மிகவும் தீவிரமாக நடிக்கின்றான். சிறப்பான நடிப்பில், நடிகன், செயல்கள் மற்றும் உணர்ச்சிகளிலும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து விடுகிறான். ஆனால் அந்த உணர்ச்சிகள் அவனே அறியாத வகையில் அவனது உள்மனதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் அவனுடைய நிஜ வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் அவனது பிற்கால வாழ்க்கையில் தீங்கினை விளைவிக்க நேரிடும். நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே மாறுவாய். நம் மாணவர்கள் அத்தகைய எண்ணங்களுக்கும் நோக்கங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது. ஆகையால், அந்த பாத்திரத்தில் உள்ள தீமையின் அளவைக் குறைத்து, கதையின் ஓட்டத்திற்குத் தேவையான குறைந்த அளவிலேயே வைத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார். அப்படியே நாங்களும் செய்தோம்; நாடகம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.
ஆதாரம்: “ஸத்யம் சிவம் ஸுந்தரம்”. பாகம் 7.
📝 நிகழ்வு 191:
“தர்மோ ரக்ஷதி ரக்ஷித:” என்ற சமூக நாடகத்தில் தற்போதைய காலகட்டத்தைச் சேர்ந்த ஐந்து கதா நாயகர்கள் ஒன்றாகக் கூடி தங்கள் வாழ்க்கையில் சந்தித்துவரும் இன்னல்களிலிருந்து விடுபடுவதற்காக, மஹாபாரதத்தின் பாத்திரங்களான பஞ்ச பாண்டவர்களிடமிருந்து அதற்கான வழிமுறைகளையும் ஊக்கத்தையும் எதிர்நோக்குகின்றனர். அந்த நாடகத்த்ல் அமைந்த மஹாபாரதக் காட்சிகள் அனைத்து விதத்திலும் முழுமை பெற்றிருக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஸ்வாமி இருந்தார். அவர் தர்மராஜனிடம், “எந்த ஒரு தீவிரமான உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக்கொள்ளாமல் எந்த ஒரு சூழ்நிலையிலும்அமைதியான முகத்துடன் அசைவற்று நீ இருத்தல் வேண்டும்” என்று சொல்லிவிட்டு, “என்னைப் போல” என்ற இரு வார்த்தைகளைச் சேர்த்தார்! இந்த இரு சொற்கள் அனைத்தையும் புலப்படுத்திவிட்டன!
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம் , பாகம் 7.
📝 நிகழ்வு 192:
“தர்மோ ரக்ஷதி ரக்ஷித:” என்ற சமூக நாடகத்தில் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், காட்டில் தாங்கள் அனுபவித்த துன்பங்களைப் பொறுக்க இயலாது உணர்ச்சிவசப்பட்டு தர்மராஜன் தான் இதற்கெல்லாம் காரணம் என்று அவர் மீது பழி சுமத்தும் காட்சி இடம் பெற்றிருந்தது. பீமனாக நடித்த நான் மிகுந்த மன வருத்தத்துடன் கூடிய கோபத்தை முகத்தில் காண்பித்து அவரை வெகுண்டு கொள்ள வேண்டியிருந்ததால் என் மனதில் அந்தக் காட்சியினை நன்கு உருவகம் செய்துகொண்டு அதன்படி நடித்துப் பழகிக் கொண்டிருந்தேன். பின்னர் ஒரு ஒத்திகையின்போது ஸ்வாமி, “ ஏய், பீ மசேனா!” என்று அழுத்தமான குரலில் என்னை அழைத்தார். “ நீ, ‘ரௌத்ரம்’ என்னும் உணர்ச்சியை வெளிப்படுத்தவேண்டுமே தவிர, ‘க்ரோத’த்தை அல்ல!” என்றார்! உடனே நான் அவர் அருகில் சென்று மண்டியிட்டு, “ ஸ்வாமி! இவ்விரண்டிற்கும் உள்ள வேற்றுமை என்ன?” என்று வினவினேன் . அதற்கு ஸ்வாமி மிகவும் மிருதுவாக, “ அறவழியில் செல்லும் ஒருவன், தர்மத்தை அதர்மம் வெல்லும் ஒரு காட்சியைக் கண்டானாகில் அவனது இதயத்தில் எழும் ஒரு கோப உணர்ச்சிதான் ‘ரௌத்ரம்’ ஆகும். ஆனால், ஒருவனது ஆணவம் சிதைக்கப்பட்டு அவமானப் படும்போது அவனுள் தோன்றும் கோபம் தான் ‘க்ரோதம்’ ஆகும். ‘க்ரோதம்’ உடல் சம்பந்தப்பட்டதாகும். ஆனால் ‘ரௌத்ரம்’ உடலுக்கு அப்பாற்பட்டது” என்றார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம் - பாகம் 7.
📝 நிகழ்வு 193:
'தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ' என்ற நாடகத்தில் மகாபாரத காட்சிகளில் நடிக்கும் மாணவர்களை நாடகம் நடைபெற இருந்த சில நாட்களுக்கு முன் சுவாமி இன்டர்வியூ அறைக்குள் அழைத்தார். கிருஷ்ணரின் வேடத்தில் நடிக்கவிருந்த சுசீந்திரன் என்ற மாணவரை அழைத்து,
"நீ எவ்வாறு ஓலையின் மீது தகவலை எழுத போகிறாய்" என்று கேட்டார். அவர் அதைப் பற்றி யோசிக்காமல் இருந்ததால் எந்த ஒரு பதிலையும் கூறமுடியவில்லை. அப்போது ஸ்வாமி என்னை பார்த்ததால், "சுவாமி! ஒரு தடிமனான இரும்பு ஊசியை எடுத்துக் கொள்ளலாம், அல்லது தெர்மோகோலினால் செய்யப்பட்ட ஒரு அழகான பேனாவை வடிவமைக்கலாம்" என்றேன். ஆனால் அவர் அந்த பதிலைக் கேட்டு திருப்தி அடையவில்லை.
அவர் தனது கையை சுற்ற ஆரம்பித்தார். நாங்கள் எப்போதும் கண்டிராத ஒரு புதிய படைப்பை கண்டோம்! அது தங்கத்தினால் ஆன 6 அங்குல நீளமுள்ள ஒரு திரிசூலம் ஆகும்! அதை சுதீந்திரனிடம் கொடுத்து "இங்கே பார்! கிருஷ்ணரின் கையில் இருக்கும் எந்த ஒரு பொருளும் தங்கத்தைவிட குறைந்த தரத்தில் இருக்கக்கூடாது. பனையோலையில் எழுதுவதற்கு இந்த திரிசூலத்தைப் பயன்படுத்து. நீ மேடையில் வரும்போது கையில் ஒன்றும் வைத்திருக்கக்கூடாது. கிருஷ்ணனது பாத்திரத்தில் இருப்பதால் உன் தலையில் ஒரு பொய்மையான முடி இருக்கும். அதனுள் இதனை மறைத்து வைத்துக் கொள். தேவைப்படும்போது அதனை உருவிக் கொள்" என்றார்! பிரபஞ்சம் என்னும் முடிவிலா நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கும் மாபெரும் இயக்குநர் நம் சுவாமி ஆயிற்றே!
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 194:தர்மோ ரக்ஷதி ரக்ஷித: என்ற தலைப்பிலான நாடகத்தின் கதாபாத்திரங்களுக்கு தேவையான உடைகள் தயாரான பிறகு சுவாமி அவற்றை அணிந்து பார்க்கும்படி எங்களிடம் கூறினார். அவற்றை அணிந்து கொண்டபின் சுவாமி, எங்களைப் பார்த்து விட்டு சில உடைகளை ஆமோதித்தார், மேலும் சிலவற்றில் சிறிய மாற்றங்கள் செய்யும்படி கூறினார். அதன்பிறகு நாங்கள் எங்களுடைய வழக்கமான வெள்ளை நிற உடைகளை அணிவதற்காக சென்றோம். அப்போது சுசீந்திரன் தனது கிருஷ்ணர் பாத்திரத்தின் உடைகளை அவசரமாக கீழே போட்டுவிட்டு இன்டர்வியூ அறைக்கு சென்றார். நமக்காக சுவாமி வெகு நேரம் காத்திருக்க கூடாது என்ற ஒரு நல்ல உணர்விலேயே இவ்வாறு செய்தார். சுதீந்திரனை பார்த்தவுடனேயே சுவாமி, "நதியைக் கடந்த உடனேயே படகின் துடுப்புகளை அழித்து விடக்கூடாது" என்று அன்புடன் கூறினார். ஆச்சரியத்துடன் கூடிய எங்கள் முகங்களை பார்த்த சுவாமி, சுதீந்திரனைப் பார்த்து, "உங்கள் உடைகளை நன்றாக மடித்து பத்திரமாக வைத்து விட்டு பிறகு இங்கே வர வேண்டும். ஆனால் நீயோ அவற்றை தரையில் வீசிவிட்டு மிக அவசரமாக இங்கே வந்திருக்கிறாய்!" என்றார். உடனே சுதீந்திரன் உள் அறைக்குச் சென்று தன் உடைகளை நன்றாக மடித்து வைத்து விட்டுத் திரும்பி வந்தார். நாங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், கற்றுக் கொள்வதற்கு ஏராளமான பாடங்கள் இருந்தன. மேலும் சுவாமி, "இதோ பாருங்கள்! நீங்கள் உங்கள் உடைகளை அணிவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொண்டீர்கள், ஆனால் மிகக் குறைந்த நேரத்தில் அவற்றைக் கழற்றி விட்டீர்கள்! இதுதான் பந்தத்திற்கும் வைராக்கியத்திற்கும் உள்ள வித்தியாசம்! உண்மையிலேயே பந்தத்தில் மாட்டிக் கொள்வது மிகக் கடினம் ஆனால் அதிலிருந்து விடுபடுவது மிக எளிதானது!!" என்று கூறி எங்களுக்கு ஒரு மாபெரும் உண்மையைப் புரியவைத்தார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 195:
கிராம சேவை திட்டம் செயல்பாட்டில் இருந்த சமயம் ஒரு நாள் ஒரு கிராமத்துக்கு சென்று விட்டு மந்திரம் நோக்கி திரும்பிக் கொண்டிருக்கையில் இந்த நிகழ்வு நடந்தது. கிராமங்களில் வாழ்ந்து வரும் ஏழை மக்களின் மீது சுவாமிக்கு இருந்த அபாரமான கருணை உணர்வை இது வெளிப்படுத்தியது. சாலையின் அருகே வயதான ஒருவர் நின்று கொண்டிருப்பதைப் பார்த்த சுவாமி தன் காரை நிறுத்தச் சொன்னார். கந்தலான ஆடையை அணிந்து இருந்த அவர் , தன் முகம் சுருங்கி இருந்தாலும் அதிலொரு பிரகாசத்துடன் காரின் அருகில் வந்தார். சுவாமி காரின் கண்ணாடியை கீழே இறக்கி விட்டு, "ஜுவாலா ரெட்டி! எப்படி இருக்கிறாய்? என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். ஆனந்தக் கண்ணீருடன் இருந்த அவர், பேசுவதற்கே சிரமப்பட்டார். அவர் இறைக்கும் மூச்சுடன், "சுவாமி! நீங்கள் இன்னும் என் பெயரை ஞாபகம் வைத்துக் கொண்டிருப்பது என்னுடைய பெரிய பாக்கியம் ஆகும்! இந்த வழியே உங்கள் கார் சென்றதைப் பார்த்த நான், உங்களது தரிசனத்திற்காக எனது வயலில் இருந்து ஓடோடி வந்தேன்!" என்றார். கருணாமூர்த்தியான நம் பகவான், "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு அவர்," சுவாமி உங்கள் கருணையினால் நான் சந்தோஷமாக இருக்கிறேன். உங்களது பாதங்களைத் தொட்டு வணங்குவதற்கு எனக்கு அனுமதி அளியுங்கள்" என்று கேட்டார். உடனே சுவாமி காரின் கதவை திறந்து தன் கால்களை வெளியே நீட்டினார். அந்த பாக்கியசாலி தன் தலையை சுவாமியின் பாதங்களில் மீது வைத்து ஆனந்தக் கண்ணீரால் அவற்றை நனைத்தார்!
கார் மெதுவாக நகர ஆரம்பித்தபோது சுவாமி என்னிடம், "நான் பள்ளியில் படிக்கும் சமயம் ஜுவாலா ரெட்டி என்னுடைய வகுப்பில் சக மாணவராக இருந்தார். பல வருடங்களுக்குப் பிறகு நான் அவரை சந்திக்கிறேன்!" என்றார். இவ்வாறு ஆசீர்வதிக்கப்பட்ட அந்த முதியவரை மேலும் ஒருமுறை பார்ப்பதற்காக நான் என் தலையைப் பின்புறம் திருப்பியபோது கண்ணீரால் என் பார்வை கலங்கியது!...
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 196:
ஜனவரி 1999 இல் ஆந்திரப் பிரதேசத்தில் மகபூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு குக்கிராமத்தை சேர்ந்த லம்பாடிகள் என்று அழைக்கப்படும் நாடோடி இனத்தவர்களை சுவாமி இன்டர்வியூவிற்கு அழைத்தார். அவர்கள் மிகவும் மோசமான உடைகளை அணிந்திருந்தனர்; அவர்கள் பார்ப்பதற்கு ஒரு பண்டைய நாகரீகத்தை சேர்ந்தவர்கள் போல இருந்தனர்.
அவர்கள் மந்திரத்துக்கு நடந்து வந்து கொண்டிருந்த போது சுவாமி அனில் குமாரிடம், "ஏன் அவ்வாறு ஒரு ஆச்சரியத்துடன் பார்க்கிறாய்?" என்று கேட்டார். அதற்கு அனில் குமார், "லம்பாடி களுக்கும் கூட ஒரு இன்டர்வியூ வா?" என்று சுவாமியிடம் கேட்டார். அதற்கு சுவாமி, "ஆமாம், ஏன்? அவர்களும் மனிதர்கள் தானே? அவர்களுக்கு அன்பும் பக்தியும் இருக்காதா? அவர்களுக்கும் இன்டர்வியூ கிடைப்பதற்கான உரிமை உண்டு!" என்றார்.
இன்டர்வியூ முடிந்தவுடன் ஒவ்வொருவரும் தன்கையில் புதிய துணிமணிகள் நிறைந்த பையினை சுமந்துகொண்டு புன்னகையுடன் கூடிய பிரகாசமான முகங்களுடன் வெளியே வந்தனர். அவரது வாழ்க்கையிலேயே முதல் தடவையாக, சிலர் புதிய கைக் கடிகாரங்களை அணிந்திருந்தனர், மேலும் சிலர் புதிய மோதிரங்களை அணிந்து இருந்தனர்! அவர்கள் ஆனந்தத்தில் மூழ்கி இருந்தனர். சுவாமி இன்டர்வியூ அறையை விட்டு வெளியே வந்து நேராக அனில்குமாரிடம் சென்றார்! அவரிடம், "அவர்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள், பார்த்தாயா? அவர்கள் மகபூப்நகர் மாவட்டத்தில் சிலகதண்டா என்னும் கிராமத்தில் இருந்து வந்துள்ளனர். அவர்கள் கிராமத்தில் நல்ல குடிநீர் கிடையாது. நீரைக் கொண்டு வருவதற்கு சில மைல்கள் தூரம் அவர்கள் நடந்து செல்ல வேண்டும். அவர்கள் கிராமத்தில் நல்ல ஒரு குடிநீர் திட்டம் அமல் படுத்துவதாக அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். அதைக் கேட்டவுடன் அவர்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தார்கள்" என்றார். இதனைக் கேட்டு அசந்துபோன அனில் குமார், "அற்புதம், சுவாமி!" என்றார். சுவாமி மேலும் தொடர்ந்து, "நீங்கள் எல்லோரும் பசி இல்லாதவர்களுக்கு உணவு அளிப்பீர்கள், தாகம் இல்லாதவர்களுக்கு குளிர்பானம் அளிப்பீர்கள்! ஆனால் நான் அவர்களுக்கு உண்மையாக என்ன தேவையோ அதை அளிப்பேன்! ஏழை மக்கள் அவர்களுக்கு செய்யப்பட்ட உதவிகளைத் தங்கள் வாழ்நாள் முழுவதும் நன்றி உணர்வோடு நினைவில் கொள்வர்" என்றார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 197:
பிருந்தாவனத்தில் உள்ள 'த்ரயீ'யில் ஒரு நாள் மாலையில் நடைபெற்ற அமர்வின்போது சுவாமி , உச்சநீதிமன்ற நீதிபதி திரு. பகவதி அவர்களை மாணவர்களிடம் பேசுவதற்காக அழைத்தார். இரண்டு வார காலத்திற்கு முன்னால் அவர் அமெரிக்கா சென்றிருந்தபோது அங்கிருந்த சாயிபக்தர்களிடம் அவருக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசி முடித்த பிறகு குவித்த கரங்களுடனும் குனிந்த தலையுடனும் சுவாமியை வணங்கினார். அப்போது அவர் கைகளைப் பார்த்த சுவாமி, "பகவதி! நான் உனக்கு கொடுத்த மோதிரம் என்ன ஆயிற்று?" என்று கேட்டார்.
அதற்கு அவர், "சுவாமி! அமெரிக்காவில் ஓட்டல் அறையில் இருந்த குளியலறையில் அதனைத் தொலைத்து விட்டேன்"என்று பதிலளித்தார். உடனே சுவாமி, "எனக்குத் தெரியும்" என்று சொல்லிக்கொண்டே தன் கையை சுழற்றி ஒரு மோதிரத்தை வரவழைத்து பகவதி அவர்களின் விரலில் அணிவித்தார்! பரவசத்தில் ஆழ்ந்த பகவதியிடம், "நான் முன்பு உனக்கு அளித்த அதே மோதிரம் தானா?" என்று கேட்டார். அதற்கு அவர், "ஆமாம், சுவாமி! தங்களுக்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்" என்று கூறினார். உணர்ச்சிவசப்பட்டு இருந்த பகவதியின் கண்களை உற்று நோக்கி, "என் கைகளும் கால்களும் எல்லா இடங்களிலும் இருக்கின்றன! கண்களும் காதுகளும் கூட! ' சர்வத: பாணி பாதம் ஸர்வதோக்ஷி சிரோர்முகம்' என்று பகவத்கீதையில் அறிவிக்கப்படவில்லையா?" என்று உரைத்தார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 198:
புகழ்பெற்ற மேண்டலின் சகோதரர்கள். ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜேஷ் இசைக்கச்சேரிகளுக்காக ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்குப் பயணம் சென்றிருந்தனர். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்த பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் கடவுள் நம்பிக்கை அற்றவராக இருந்தார். இவர்களுடன் சென்றிருந்த மிருதங்க வித்வான் அவரது விமான பயணச்சீட்டை எங்கோ தொலைத்து விட்டார். அதுவும் இந்தியாவுக்கு திரும்பும் வரையிலான தொடர் பயணச்சீட்டு ஆகும். மூன்று மணி நேரம் அனைவரும் தொடர்ந்து அதனை தேடிக் களைத்தனர். ஆனால் அவர்களுக்கு அது கிட்டவில்லை. விமான அதிகாரிகளோ அது கிடைக்காவிட்டால் புதிய டிக்கெட்டு தான் வாங்க வேண்டும் என்று கூறிவிட்டனர். அதன் விலையோ மிக அதிகமாக இருந்தது.
நிகழ்ச்சியின் அமைப்பாளரோ, அது தன் தவறில்லை ஆதலால் தான் வாங்கிக் கொடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார். இறுதியில் மேண்டலின் சகோதரர்கள் பயணச்சீட்டை வாங்கித்தரவேண்டிய நிலை ஏற்பட்டது. அமைப்பாளர் இவ்விருவரையும் நோக்கி , "ஏன் , உங்களது கடவுளான சாய்பாபா உங்களுக்கு உதவி புரியலாமே?" என்று கிண்டலாகக் கேட்டார். இதற்கு அவர்கள் மௌனம் சாதித்தாலும், தங்களது தெய்வத்தை நினைவூட்டியதால் அவருக்கு மனதில் நன்றி தெரிவித்தனர். அவர்களது விமானம் புறப்படுவதற்கு ஒரு சில மணி நேரங்களுக்கு முன்னால் ஒரு விமான நிலைய அதிகாரி இவர்களை அழைத்தார்; இவர்கள் கையில் தொலைந்து போன டிக்கெட்டை கொடுத்தார்; அதனை கண்டெடுத்த யாரோ ஒருவர் கவுண்டரில் திருப்பிக் கொடுத்ததாக கூறினார். இதனை பார்வையற்ற அமைப்பாளர் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். இதற்கு பதிலாக சீனிவாஸ் அவரிடம், "கடவுள் மிகவும் பெரியவர்!" என்றார். அதற்கு அந்த அமைப்பாளர், " ஆமாம், உண்மையிலேயே உங்கள் கடவுள் மிகப் பெரியவர் தான்" என்றார்.
ஒரு கச்சேரியின் இறுதியில்," பிரேமமுதித மனசே கஹோ" என்ற பஜனையை ஸ்ரீநிவாஸ் வாசித்தார். இதனைக்கேட்ட அமைப்பாளர் மிகவும் மனம் நெகிழ்ந்து, "உங்களது இறுதிப்பாடல் எனது இதயத்தை உலுக்கிவிட்டது. இதே பாடலை தயவுசெய்து ஒவ்வொரு நிகழ்ச்சியின் முடிவிலும் வாசியுங்கள்", என்று கேட்டுக்கொண்டார். இவர்களது பயணத்தின் முடிவில் அந்த அமைப்பாளர் முற்றிலும் சாய் பக்தராக மாறிவிட்டார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம், பாகம் 7.
📝 நிகழ்வு 199:
நவம்பர் 1998இல் பிரபல இசை வல்லுநர் பீம்சேன் ஜோஷி அவர்களுக்கு மூளையில் கட்டி உள்ளதாக கண்டறியப்பட்டு புனேவில் உள்ள ரூபி ஹாஸ்பிடலில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அறுவைசிகிச்சை அறைக்குள் அழைத்துச் செல்லப்படும் போது ஸ்வாமி அவருடன் அங்கே இருக்கிறார் என்பதைக் குறிக்கும் ஏதாவது ஒரு அடையாளத்தை அவர் காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார். அப்போது தான் மற்றொரு பிரபல இசை விற்பன்னரான ஹீராபாய் அவர்களின் பேரனான நிஷிகாந்த் பரோட்கர் அங்கே வந்து சேர்ந்தார். பாபாவின் கட்டளைப்படி அவரது விபூதிப் பிரசாதத்தை எடுத்துக்கொண்டு இங்கே விரைந்து வந்து இருக்கிறார்.
முந்தையநாள் பிரசாந்தி நிலையத்தில் பகவான் அவரது கையில் விபூதியைப் பொழிந்து கொண்டிருக்கும் சமயத்தில், "இது உனக்கு இல்லை, இது பீம்சேனு க்காக; உடனே புனேவுக்கு புறப்பட்டுச் சென்று இதை அவரிடம் கொடு" என்றார். புனேவை வந்து அடையும் வரை அவருக்கு அறுவை சிகிச்சை என்ற விஷயம் தெரியாது. விபூதிப் பிரசாதத்தை பெற்றுக் கொண்டபின் பீம்சேன் ஜோஷி கவலையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியான மன நிலையை அடைந்தார். ஆபரேஷன் தியேட்டரில் மருத்துவர்களிடம் நகைச்சுவையாக, "இனிமேல் உங்களால் என்னைக் கொல்ல முடியாது!" என்று கிண்டல் செய்தார்.
ஆதாரம்: ஸத்யம் சிவம் சுந்தரம் பாகம் 7.
📝 நிகழ்வு 200:
புட்டபர்த்தியில் பாபா ஒரு முறை என்னிடம், "தாவண்கரேயிலுள்ள உன் வீட்டில் வியாழக்கிழமை தோறும் நடைபெறும் பஜனை எனக்கு ஒரு மணி நேரம் காது வலியைக் கொடுக்கிறது" என்றார்! இதமான, இனிமையான குரல் எனக்கு கொடுக்கப்படவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். என்னுடைய குரல் விசில் போல கீச்சிடும் தன்மையுடையது. ஆகையால் நான் எப்போதும் பஜனையை எனக்குள்ளே பாடிக் கொள்வேன். மற்றவர்களுடன் சேர்ந்து நான் பாடுவதில்லை என்று சுவாமியிடம் கூறினேன். அதற்கு அவர், "உன்னை நான் சொல்லவில்லை! வியாழக்கிழமை தோறும் வரும் அடுத்த வீட்டுக்காரர், அவர் யார்? அவரிடம் உன் குரலை உயர்த்த வேண்டாம் என்று சொல். மிகவும் கர்ணகொடூரமாக இருக்கிறது." என்றார்.
நான் புத்தகம் எழுதும் முயற்சியில், இப்போது ஒரு புதிய தடை என்று நினைத்தேன்! எந்த ஒரு மகா தத்துவத்தை பற்றி நமது வேதங்கள் பேசும்போது, "எவரிடமிருந்து வார்த்தைகள் எதிரொலிக்கின்றனவோ, மனத்தால் எவரை அடைய முடியாதோ" என்கின்றனவோ, அவரைப்பற்றி என்னால் எப்படி வார்த்தைகளால் சரிவர சித்தரிக்க முடியும்? நானும் நீங்களும் எங்கு இருக்கின்றோமோ அங்கே அவர் இருக்கிறார்!!
ஆதாரம்: திரு. கஸ்தூரி அவர்கள் எழுதிய "லவிங் காட்" என்ற நூலில் இருந்து.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக