டி.எம்.எஸ் என்பது தமிழின் இசை வடிவ இனிஷியல்.
அந்தப் பேராச்சர்யப் பாடகர் திரை இசைப் பாடல்களுக்கு தன் நவரச உணர்ச்சிகளை ஊட்டி அதனை இறவாப் பாடல்களாகச் செய்தவர்.
குரல் மந்திரவாதி அவர்.
அவருக்கு ஒரு கண் செந்தூர் முருகன்..
இன்னொரு கண் சத்ய சாயி இறைவன்.
நல்ல தென்றலாய் பவனி வந்து கொண்டிருந்த அவர் வாழ்வில் புயல் வீசியது.
அது ஜூலை 1967.
நல்ல தெய்வ பக்தியும் ...நற்குணமும் கொண்ட அவரது மூத்த மகன் பாலசுப்ரமண்யனுக்கு மஞ்சள் காமாலை வந்தது. கோடை காலம் அது.. ஆனால் அய்யன் டி.எம்.எஸ் தலையிலோ இடி விழுந்தது.
காமாலைக்கு எண்ணெய் பதார்த்தங்கள் ஆகாதே.. எங்காவது சாப்பிட்டிருப்பானோ.. ? எனக்
கேள்விக் கணைகள் கர்ணன் திரைப்படத்து கிளைமேக்ஸ் காட்சியாய் துளைத்தெடுத்தன அந்தப் பாடல் கர்ணரை..
சைக்கிளில் கிளியாய்ச் சுற்றி வரும் பிள்ளைக்கு அடிப்பட்டு முழங்காலில் காயம் ஏற்பட்டது..
பக்கத்துத் தெரு கம்பவுண்டரிடம் கட்டு போடப்பட்டாலும்..
விதியின் கை பலவித விபரீதங்களை உருவாக்கிக் கொண்டிருந்தது...
அந்தக் கால் வீங்கியேப் போனது...
"விதியும் மதியும் வேறம்மா -- அதன்
விளக்கம் நான் தான் பாரம்மா"
என அய்யனே பாடிய வரி
இன்றோ பாரமா என்றபடி அவரிடமே எதிரொலித்தது.
ராமா ராவ் நர்சிங் ஹோமிற்கு விரைந்தார்கள்.
அய்யனின் மூத்த மகனை பரிசோதித்த டாக்டர்கள் மகனின் உடம்பு முழுவதும் கெட்டுவிட்டதாகத் தெரிவித்தார்கள்.
பால் மணம் மாறா பாலகன்.
அந்தப் பாலை காலம் ஏனோ திரிந்து போகும் படிச் செய்து கொண்டிருந்தது.
நல்ல ரத்தம் ஏற்றப்பட்டது.
ஆனால் புதிய ரத்தத்தை அவன் உடம்பு ஏற்கவில்லை.
உடல் எங்கும் கொப்புளங்கள்.
பாவம் ரணவலி அனுபவித்தான் அய்யனின் மகன்.
வேண்டுமென்றால் வீட்டிற்கு அழைத்துப் போய்விடுங்கள் என்றனர் மருத்துவர்கள்.
இந்த மருத்துவர்கள் இப்படித்தான்.
சிகிச்சை அளிப்பது மட்டுமே மருத்துவர்கள்.
குணமளிப்பது என்னவோ கடவுள் தான்.
ஃபீஸ் மட்டும் இவர்கள் கறாராக வாங்கிக் கொள்வார்கள்.
வீட்டிற்கு அழைத்து வந்துவிட்ட பின்
மாடி அறையில் இறைவன் சத்ய சாயி படத்திற்கு முன்பு மூத்த மகன் பாலசுப்ரமணியத்தைப் படுக்க வைக்கிறார் அய்யன் டி.எம்.எஸ்.
முருகன் பாடலில் அய்யன் குரலில் கேட்டுக் கொண்டிருக்கிறது அறை முழுதும்..
ஒவ்வொரு பாடலும் நிமிடங்களை ரம்மியமாக்கி... வலிகளுக்கு ஆறுதல் ஏற்படுத்தி வருகிறது மகனுக்கு..
"ஒரு தரம் முருகான்னு சொன்னா ஏழு ஜென்மம் செய்த பாவம் போகுமாமேப்பா .. அருமையான பாட்டுப்பா அது.. யாரு எழுதியதுப்பா" எனக் கேட்கிறான் படுத்துக் கொண்டே பாலசுப்ரமணியன்.
எப்பேர்ப்பட்ட பக்தி அந்தப் பிஞ்சு இதயத்திற்கு..
தேய்ந்து கொண்டு வரும் அந்த நேரத்திலும் பாடலோடு தோயமுடிகிறதே!
எப்பேர்ப்பட்ட உள்ளம் அந்த பாலகன் பெற்றது..
கண்களில் நீரோட.. கால்கள் தொலைபேசி அருகே ஓட..
டயல் செய்கிறார் இறைவன் சத்யசாயிக்கு.. புட்டபர்த்தி எண்ணை அழுத்துகிறார்.
எண்ணும் எண்ணமும் இணைந்து கொள்கிறது...
இரண்டு ரிங் ஆன உடனே இறைவனே தொலைபேசியின் மறுபுறம்..
"நான் சௌந்தரராஜன் பேசறேன் சாமி" என்கிறார் அய்யன்.
"என்ன சமாச்சாரம்?" எனக் கேட்கிறார்
மீண்டும் ஏதும் அறியாதது போல்..
தனக்கும் பாரதப் போருக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பது போல் தேர் ஓட்டிய கண்ணன் தானே இவர்..
அப்படித் தான் இருப்பார்..
இறைவனைப் புரிந்து கொள்வது மனிதரால் முடியாத காரியம்.
"என் பையன் சாகக் கிடக்கிறான் சாமி.. நீங்க தான் காப்பாத்தனும் சாமி" என்கிறார் அய்யன்..
திடீரென லைனில் டுர்ர்ர் என சத்தம் வர ஆரம்பிக்க ..
அய்யனின் தொலைபேசித் தொடர்பிலும் விதி விளையாடியது.
தேள் கொட்டிய இடத்திலேயே பாம்பும் கடித்தது போல் அய்யனின் உள்ளம் துடித்தது..
லைன் துண்டிக்கப்பட்டது..
மூச்சுக் குழாயில் ஆணி அடித்தது போல் இருந்தது டி.எம்.எஸ் அய்யனுக்கு..
இனி ஏதும் செய்வதற்கு இல்லை என அனைவரும் பார்க்கும்படி முன் ஹாலில் குழந்தை படுக்க வைக்கப்படுகிறான்.
நிமிடங்கள் தங்கள் முடிவை எண்ணிக் கொண்டிருக்கிறது.
பிரபலங்களுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவர் பாலகிருஷ்ணன் முயற்சித்துப் பார்க்கிறேன் என டிரிப்ஸ் ஏற்றுகிறார்.
"இதெல்லாம் எதுக்குப்பா.. நான் ஒடனே பாபாவ பார்க்கனும் பா.. புட்டபர்த்திக்குக் கூட்டிட்டு போப்பா" என்கிறான் அந்த பிரகலாத பக்தி கொண்ட பிள்ளை..
மரணம் நெருங்கி தனது இருள் காலடிகளை வைத்து வருகிற அந்த தருணத்திலும் இறைவன் சத்ய சாயியை நினைத்துக் கொண்டிருக்கிறானே..
எப்பேர்ப்பட்ட ஆத்மா அது..!
எத்தனை பக்தர்கள் இப்படி இருப்பார்கள்?.
பலர் சந்தேகத்திலும்.. சுவாமியின் சத்திய கூற்றில் பிடிமானம் இல்லாதும்... முதிர் பக்தி அடையாது எதற்கும் குறைபட்டுக் கொண்டிருக்க..
இந்த பாலகனோ எப்பேர்ப்பட்ட பக்தன் என உணரந்து கொள்ள முடிகிறது.
அவனின் "பாபாவை பார்க்கனும் பா.." எனும் சொல்லைக் கேட்டவுடன் இறைவன் சத்ய சாயியின் புகைப்படத்தைக் கழட்டி அவன் கைகளில் தருகிறார் அய்யன்.
இறைவனை மார்பில் சுமந்தபடி.. ஆம்!
வலியையும் ஒளியையும் சேர்த்தே சுமந்து "அப்பா.. நெஞ்சு வலிக்குதுப்பா" என்று அவன் சொல்லி.. இறைவன் சத்ய சாயியின் புகைப்படம் பார்த்து கண்ணீர் விட்ட படியே பூவுலகிலிருந்து விடைபெறுகிறான்.
அய்யனுக்கு தான் பாடியே எல்லா சோகப்பாடலும் அந்தத் தருணத்தில் ஒன்று சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தன..
"ஏன் பிறந்தாய் மகனே ஏன் பிறந்தாயோ?" எனும் பாடலை உனக்கே பாடும்படியாகிவிட்டதே எனக் குரல் உடைகிறது அய்யனுக்கு..
உலகத் தமிழர்களைக் கட்டிப் போட்டக் குரல் அன்று சில்லு சில்லாய் உடைந்து போகிறது..
இனி தான் எந்தப் படத்திலும் பாடப் போவதில்லை என முடிவு செய்கிறார் அய்யன்.
தெய்வ நம்பிக்கையும் போய்விடுகிறது.
சோகத்தில் உயர் ரக சோகமே புத்ர சோகம் தான். உருக்குலைத்துவிடும். உள்ளத்தைக் குடித்துவிடும்.
திரை உலகில் அய்யன் உச்சத்தில் இருந்த காலக்கட்டம் அது.. ஆனாலும் பாடப் போவதில்லை எனும் முடிவில் தீர்மானமாய் இருக்கிறார்.
இறைவன் காப்பாற்றவில்லை என்ற கோபமும்.. பிள்ளை போன வெறுமையும் மனதை பிசைகிறது.
தன்னம்பிக்கை டி.எம்.எஸ்
தாடி டி.எம்.எஸ் ஆக காட்சி அளிக்கிறார்.
இவரோ "போனால் போகட்டும் போடா" என்றவாறு நிமிடங்களை நகர்த்துகிறார்.
இருண்ட இவர் வாழ்வில் மீண்டும் பூபாளம் வர.. ஒளிமயமான எதிர்காலம் மீண்டும் உள்ளத்தில் எழ..
விடாப்பிடியாக புட்டபர்த்திக்கு அழைத்துப் போகிறார்கள் நண்பர்கள்.
குரல் அளவில் மகானாய் விஸ்வரூபம் எடுத்தாலும்.. மனம் அளவில் குழந்தை தான் டி.எம்.எஸ்.
புட்டபர்த்திக்கு அரை மனதோடு புறப்படுகிறார்.
இறைவன் சத்ய சாயி டி.எம்.எஸ் அய்யனுக்காகக் காத்திருப்பதைப் போல நிற்கிறார்..
"என்ன சௌந்தரம் (அய்யனை சௌந்தரம் என்றே இறைவன் எப்போதும் அழைப்பார்)
டெலிஃபோன் பண்ணியே .. டெலிஃபோன் மிஸ்டேக் ஆயிடுச்சே.. பேச முடியவில்லையே" எனச் சொல்கிறார்..
தரணியில் ஏதேனும் தெரியாததுண்டா தெய்வத்திற்கு..?
இருந்தும் ஏதும் அறியாதது போல் இறைவன் கூற..
"என்ன சாமி.. உங்களுக்கு தெரியாத விஷயமா.. இப்போ நடந்த மாதிரி சொல்றீங்களே" எனக் கேட்டார் அய்யன்.
அய்யனும் இறைவனும் அருகில் இருந்து பேசுவதைக் கேட்டவர்கள் சொல்வார்கள் ஒரு மகனும் தகப்பனும் பேசுவது போல் இருக்கும் என்று...
அதற்கு இறைவனோ "அவனது காலம் முடிஞ்சு போச்சு... நான் உன்னோடு பேசி இருந்தால் அவனை காப்பாத்தனும்.. அவன் பிரம்மச்சரியத்தோடு காலம் ஆகணும்னு விதி, அவனுக்கு மறுபிறவி கிடையாது..
அவனுடைய ஆயுளை உனக்குக் கொடுத்து விட்டுப் போகத் தான் உனக்கு வந்து அவன் பிறந்தான்" என அந்தப் பிள்ளையின்
பிறவி ரகசியத்தைப் போட்டு உடைக்கிறார் இறைவன் சத்ய சாயி...
இறைவனுக்கே யார் எதற்காகப் பிறக்கிறார்கள்.. முற்பிறவி அதற்கும் முற்பிறவி.. மறுபிறவி எனும் பிறவி ரகசியமான பிரபஞ்ச ரகசியம் தெரியும்.
எல்லா ஜீவன்களும் ஒரு காரணத்திற்காகவேப் பிறக்கின்றன... போகின்றன.. பல ஜீவன்கள் மீண்டும் பிறக்கின்றன..
புனரபி ஜனனம்.. புனரபி மரணம்..
மரணம் என்பது வேறொன்றுமல்ல.. எழுப்பும் போது எழ முடியாமல் தூங்கிக் கொண்டிருப்பதே..
மீண்டும் விழிக்கும் போது.. வேறொரு பிறவி. அவ்வளவே..
நான் .. எனது.. என்னுடையது என்ற மாய எண்ணமே வலிக்கச் செய்கிறது..
இதனை உணர்ந்தபின் ஆன்மிகமோ இதயத்தை ஜொலிக்கச் செய்கிறது.
மெல்ல மெல்லப் புரிந்து போகிறது டி.எம்.எஸ் அய்யனுக்கு..
பாத நமஸ்காரம் பெற்று உயர் சமாதானம் அடைகிறார்.
பட்டினத்தாராய் நடித்தவர் அல்லவா..!
அடிக் கரும்பாய் சிவந்து பக்குவம் அடைகிறார்.
மீண்டும் ஒலிப்பதிவுகள்.. கச்சேரிகள் என அவரின் ரதம் சுற்ற ஆரம்பிக்கிறது. அந்த ரதத்தின் அச்சாணியே இறைவன் சத்ய சாயி அல்லவா!
(ஆதாரம் :- டி.எம்.எஸ்... ஒரு பண்பாட்டுச் சரித்திரம். பக்கம் :- 392. ஆசிரியர் : வாமனன்)
ஆம்! இறைவன் சத்ய சாயி கூற்று எத்தனை சத்தியமானது...
அய்யன் டி.எம்.எஸ் பூரண வயது 91 வரை .. தனது மகன் பாலசுப்ரமணியன் ஆயுளையும் சேர்த்தே பெருவாழ்வு வாழ்ந்து 2013ல் நிறைந்தார்.
இறைவன் சத்ய சாயி வாக்கு என்றைக்குப் பொய்த்திருக்கிறது!
அவர் பெயரும்..பேச்சும்.. செயலும் மட்டுமல்ல ஒவ்வொரு அசைவும் சத்தியமே.
நாம் செய்ய வேண்டியதெல்லாம் அவரின் திருப்பாதங்களில் சரணாகதி மட்டுமே.
எதையும் எதிர்பாராமல் அவர் எதை அளித்தாலும் மனம் நோகாமல் ஏற்கும் பரிபக்குவத்தின் இன்னொரு பெயர் தான் பக்தி.
பக்தியுடன்
வைரபாரதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக