ஆறு எதிரிகளையும் எப்படி வீழ்த்துவது என்பதற்கு இறைவன் சத்ய சாயி தரும் கீதையும் அதன் பாதையும் இறைவன் சத்ய சாயியால் மட்டுமே இத்தகைய நிவாரணத்தை தர முடியும் என்பதை நிரூபிக்கும் பதிவு இதோ..
வழக்கமாக விஜயதசமியன்று கருவிகள், ஆயுதங்கள் ஆகியவை வழிபடப்படுவதுண்டு. இதனை ஆயுதபூஜை எனக்கூறுவர். பாபா கூறுகிறார் "மனிதனைச் சூழ்ந்து அவனை ஆன்மீகப் பாதையில் செல்ல விடாமல் தடுக்கும் 6 எதிரிகளான, காமம், க்ரோதம், லோபம், மோஹம், மதம், மாத்ஸரியம் ஆகியவையும் கூட இதைப் போல வழிபடப்படவேண்டும்.
ஆனால் இங்கே ஒரு சிறிய வேறுபாடு இருக்கிறது. அவற்றை வழிபடுவது என்பது, அவற்றை இறைவனை நோக்கித் திருப்பி விட்டால், அவை மனிதனின் ஆன்மீக முயற்சிக்குத் தடை செய்யாமல், அவனுக்கு உதவி செய்யும். ஆகையால் கெட்டதாகக் கருதப்படும் இக்குணங்கள் எல்லாம் நல்லவையாக மாற்றம் பெறும்". எப்படி?பாபா அதனைக் கீழே விளக்குகிறார்.
காமம்:
"காமம் அதிகமாக இருந்தால், அது மனிதனை முழுமையாக ஆக்ரமிக்கும். அதனை இறைவனை நோக்கி செலுத்துங்கள். அது உடனே அவர் தரிசனத்திற்கு ஏங்கும் ஏக்கமாகவும், அவரது கருணையைப் பெறும் முயற்சியாகவும் மாறிவிடும். அதனால் காமம் இறைவனை அடையத் துடிக்கும் ஆவலாக வடிவெடுக்கும்".
க்ரோதம்:
"க்ரோதம் என்றால் கோபம். அதனை இறைவன் பக்கம் திருப்பு. அவர் ஏன் என் பக்கம் வரவில்லை? எத்தனை நாள் அவருக்காகக் காத்திருப்பது? நான் என்ன தவறு செய்தேன்? இவ்வாறு அவரை நோக்கிக் கோபப்பட்டு,பொறுமையின்றித் தொடருங்கள். உங்களது கோபம் அப்போது தீர்மான எண்ணமாக உங்கள் வாழ்க்கையின் நல்ல அம்சமாக நற்குணமாக மாறும்".
லோபம்:
"லோபம் என்பது கஞ்சத்தனம். அதனை இறைவனை நோக்கி செலுத்தும்போது, அது இறைவனைத் தன்னுடையதாக்கிக் கொள்ள வேண்டும் என்ற வேகம் எழுகிறது. நீங்கள் "அவர் எனக்கு மட்டுமே,எனக்கே எனக்கு மட்டுமே சொந்தமானவர். அவர் எனது கடவுள், அவர் வேறு யாருக்கும் சொந்தமல்ல! என்று உங்களது மனம் ஏக்கத்துடன் அழத் தொடங்கும். அதுமட்டுமல்ல இறைவனை விடாமல் முழுமையாக பற்றிக்கொள்ள நினைத்து ஏங்கும். அவரைத் தன்னுடையராக மட்டுமே ஆக்கிக் கொள்ள நினைத்து நடந்துகொள்ளும். லோபம் கடைசியில் இறைவனைத் தனக்காக மட்டுமே ஏற்றுக் கொள்ளும் ஏக்கமாக மாறும். அதன் மூலம் ஒருவனை, இறைவனைப் பற்றிப் பிடித்துக் கொண்டு ஒரு முனைப்பான சொந்தம் கொண்டாட வைக்கும்".
மோஹம்:
மோஹம் என்றால் ஒரு வகையான ஆசை. அதற்கு விவேகம் கிடையாது. அதை இறைவன் மேல் திருப்பினால், தன்னால் இறைவன் இன்றி வாழ முடியாது என்ற நினைப்பு ஏற்படும். இவ்வுலக வாழ்க்கையில் இறைவன் இன்றி எந்த இன்பமும் இல்லை, மகிழ்ச்சியும் இல்லை, அர்த்தமும் இல்லை என்று தோன்றிவிடும்.மனம் எந்த ஒரு காரணத்தையும் கேட்க மறுக்கும். வேறு யாரைப் பற்றியும் அக்கறை காட்டத் தோன்றாது. இறைவனுக்கான ஏக்கத்தின் மூலம் பித்துப் பிடித்துவிடும். மோஹம் கடைசியில் கடவுளின் மேல் கண்மூடித்தனமான, ஆனால் மிகவும் கண்டிப்பான ஆசையாக பக்தியாக மாறி விடும்".
மதம்:
"மதம் என்றால் பெருமை கலந்த அஹங்காரம். இதனை இறைவனை நோக்கி செலுத்தினால், "எனக்கென்று இறைவனது உதவி இருக்கிறது. என்னைப் பாதுகாக்க இறைவனது சூழல் இருக்கிறது. என் வழியில் எவரும் குறுக்கே வர முடியாது. நான் எதைக் கண்டும் பயப்பட மாட்டேன். கடவுள் எப்படி என்னைக் கைவிடுவார்?" இந்த எண்ணம் மதத்தை, இறைவன் மேல் வைக்கும் நம்பிக்கையாகவும், முழுமையான அர்ப்பணமாகவும் மாற்றிவிடும்".
மாத்ஸர்யம்:
"மாத்ஸர்யம் என்பது பொறாமை. அதனை இறைவனை நோக்கி செலுத்தினால் உனக்கு "எனது கடவுள், எனக்கு சொந்தமான கடவுள் யாராலோ கவர்ந்து செல்லப்படுகிறார். அதனால் அவர் என்னை விட்டுத் தொலைதூரம் சென்று விட்டார்" இத்தகைய எண்ணங்கள் உன்னை மிகவும் பதட்டப்பட வைக்கும்.கடைசியில் உனது பொறாமை குணம் மறந்து,எப்படியாவது இறைவனது அண்மையை அடைந்து விட வேண்டும் என்ற எண்ணமாக மாறிவிடும்".
சர்க்கஸில் இருக்கும் சிங்கங்கள் ரிங் மாஸ்டருக்குக் கட்டுப்பட்டு பணிகின்றன. அதைப்போல மனிதனது, ஆறு தீய சக்திகளும் அவர்களது தலைவருக்கு அடங்கும் போது அவைகளுடைய இயல்பான தீமை மறந்து அவை அடக்கப்படுகின்றன. இதுதான் உண்மையான அர்த்தம். இதுவே ஆயுத பூஜையின் உள்ளர்த்தம்.
ஆதாரம்: தபோவனம்
🌻 மிக மிக எளிதான மடை மாற்றம் இறைவன் சத்ய சாயி சொல்வது.. அதற்கும் அவரே வழிவகை செய்து நம்மை பிறவிச் சேற்றிலிருந்து கரை சேர்க்க வேண்டும் என்றே இறைவன் சத்யசாயி பாதார விந்தங்களில் தஞ்சம் அடைவோமாக! 🌻
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக