ஒருவருக்கு ஆண்டவனை அடைய வேண்டும் என்ற ஒரே ஆசை தான் இருக்க வேண்டும். இந்த உலக சம்பந்தப்பட்ட ஆசைகளில் ஒருவர் தம் வாழ்க்கையை அடகு வைக்கக் கூடாது. எல்லாவற்றையும் ஆண்டவனுக்கே அர்ப்பணம் செய்யுங்கள். அதுவே உண்மையான திருப்தியாகும். அது சாந்தி, சந்தோஷம், விசாரணை (பிரித்தறியும் மதிநுட்பம்) ஆகியவற்றை அடைவதால் ஏற்படுகிறது. அதன்பிறகு, சாட்சாத்காரமும் அதாவது ஆண்டவனை அறிதலும் அடையப் பெறும்.
இவைகளை அடைய ஸ்மரணமும், தியானமே ஒரே வழியாகும். அவை மட்டுமே இதற்குரிய ஆற்றலைக் கொடுக்கும். இவைகளை வேறெதின் மூலமாகவும் அடைய இயலாது, அடையவும் மாட்டீர்கள். அது மட்டுமல்ல. சந்தோஷத்தைக் கைவரப் பெற்றால், மற்ற இரண்டையும் பெறுவீர்கள். ஒரு மனிதனுக்கு மற்ற எல்லாவற்றையும் விட மனத்திருப்தியே சிறந்த லாபம். இது மூவுலகங்களை விடச் சிறந்த புதையல். திருப்தியுள்ள மனிதன் ஆண்டவனின் வர்ணிக்க முடியாத மகிமையை அனுபவிக்கிறான். அவன் காமதேனு, கல்பதருவை பெற்றவர்களை விட அதிக ஆனந்தமுடையவனாக இருக்கிறான். தனக்குள் தானே அமிழ்ந்து ஆனந்தத்தை அங்கே பெறுகிறான்.உள் அமைதி உட்திருப்தியால் கிடைக்கும் நிரந்தர ஆனந்தத்தை விலக்காதீர்கள். அதை விலக்கிவிட்டு உடல் சந்தோஷத்துக்காக முயற்சி செய்யாதீர்கள்.
மறையப் போகும் உடலுடன் ஒட்டிக் கொள்ளாதீர்கள். உடலை ஒரு கருவியாக பயன்படுத்துங்கள். பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உருவாக்கப்பட்ட இந்த அழியும் உடலிலிருந்து நீ வேறுபட்டவன் என்று கருதிக் கொள். நீ என்றும் அழியாத ஆத்மா என்பதாக உணர்ந்துகொள். நீ வசிக்கும் வீடு, உன்னிடமிருந்து தனிப்பட்டது. அதேபோல உன்னைச் சூழ்ந்திருக்கும் உடலும், உன்னிடமிருந்து (ஆத்மாவிலிருந்து) தனிப்பட்டு இருக்கிறது. இவ்வுடலே எல்லாவிதத் துன்பங்களுக்கும், அடிமைத்தனத்துக்கும், வேர் மூலமாகும். இதை நன்கு புரிந்து கொள். உனது உறுதியான முடிவுக்கு உடலைக் கீழ்ப்படிய செய். உடலுக்கு அடிபணிந்து அதன் இஷ்டங்களையெல்லாம் பூர்த்தி செய்யாதே. அதை உதறித்தள்ள தயாராக இரு. அதைக் கட்டுப்படுத்தி, கடுமையான கட்டுப்பாட்டுக்குட்படுத்த உறுதியெடுத்துக் கொள். உடலை மிகவும் எச்சரிக்கையுடன் நடத்த வேண்டும். அதற்கு மிகுந்த கவனத்துடன் பயிற்சி அளிக்க வேண்டும். இதுவரையிலும் கூறியது ஆத்மாவைப் பற்றியதாக இருந்தாலும், ஒவ்வொருவரும் சிற்சில செயல்திறன்களில் கவனம் செலுத்தவேண்டும். வாழ்க்கை என்ற ஓடையைக் கடக்க, இவ்வுடல் என்ற படகை எவ்வாறு பயன்படுத்துவது? படகு அக்கரைக்குப் போகும் வரையில் படகுக்கு எந்தவிதக் கெடுதலும் வராமல், ஓட்டையும் விழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். படகு உடையக்கூடாது. அதற்கான அடையாளங்களை அடிக்கடி கவனிக்க வேண்டும். அதாவது குறிப்பிட்ட வேளைகளில் சாத்வீக உணவு உட்கொள்ள வேண்டும். உடல் மூலம் செய்யும் கருமங்களை தியானம், ஸ்மரணம், பூஜை, பஜனை ஆகியவற்றிற்கு உதவும்படி முறையாக செய்ய வேண்டும். இவ்வாறு செயல்படும்போது ஆனந்தத்துடனும், ஆர்வத்துடனும் இருக்கவேண்டும். எவ்விதச் சோம்பலுக்கும் இடங் கொடுக்கக்கூடாது. களைப்புக்கும் மனத் தளர்ச்சிக்கும் இடங் கொடுக்கலாகாது என்பதை மறவாதீர்கள். அவ்வாறு களைப்பு ஏற்பட்டால், தியானம் முடிந்ததும், சிறிது வேர்க்கடலை அல்லது வாதாம்பருப்பை தண்ணீரில் ஊறவைத்துத் தின்றால் உடலைக் குளிர வைத்து வலுவை அளிக்கும்.
ஒவ்வொரு மனிதனும் இவ்வாறான முறையில் தியான சாதனத்தின் மூலம் திருப்தி என்னும் நற்குணத்தை வளர்த்துக்கொள்ளவேண்டும். திருப்தி, சத்வ குணத்தை சேர்ந்தது. அது உன்னை சோம்பேறியாக மாற்றாது. மாறாக, ஆண்டவனை நோக்கிச் செல்லும் பாதையில் மனதைச் செலுத்தும். அது சுய லாபத்தை கருதிச் செய்யும் வேண்டாத செயல் திறன்களைத் தடுக்கும். திருப்தியுள்ள மனிதன் எப்பொழுதும் சாத்வீகமாக இருப்பான்; ஆத்மாவுடன் தொடர்பு கொண்டு உள் வாழ்வை நடத்துவான். அவன் ஓய்வில்லாமல், குறை கூறாமலும் எந்த வேலையையும் செய்யக் கூடியவன். அவனிடம் பல திசைகளிலும் அசைகின்ற எண்ண அலைகள் ஒரே நோக்கத்தைப் பெறுகின்றன. பழங்காலத்தில் ரிஷிகளும், பிட்சுக்களும், யோகியரும், திருப்தியின் மூலம் கிடைக்கும் அமைதியைக் கொண்டு வாழ்க்கையின் குறிக்கோளை அடைந்தார்கள். சாட்சாத் காரத்துக்கு இட்டுச் செல்லும் வழியில் நடப்பதற்கான உற்சாகத்தையும், வலிமையையும், இது எல்லாக் சாதகர்களுக்கும் அளிக்கிறது. திருப்தி நிறைந்த இச்சாதகர்கள் இவ்வழியில் எதிர்ப்படும் கஷ்டங்களையும் அபாயங்களையும் கவனியாமல் புறக்கணிக்கும் வல்லமை பெறுகின்றனர். இவ் வாழ்க்கையின் நிலையற்ற எல்லாவற்றையும் நஞ்செனக் கருதி, குப்பையென விலக்குகிறான். திருப்தியின் மூலம் விவேகம், விசாரணை, துறவு ஆகியவை வளர்கின்றன. மீராவின் வரலாறு இதற்கோர் எடுத்துக்காட்டு. ராதை, ஜெயதேவர், கௌரங்கர் ஆகியோரின் வரலாறுகளை நன்கு புரிந்து கொள்ளுங்கள். அவை உங்களுக்கு உண்மையைக் கற்பிக்கும்.
ஆதாரம்: தியான வாஹினி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக