தலைப்பு

வெள்ளி, 7 பிப்ரவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 7 | பக்தரைக் காக்கும் சாயி பாதம் -சுசீலா

🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சுசீலா அவர்களின்  சாயி அனுபவங்கள்.

கரணம் ஒடுங்கி யேமனம் கனிந்துருகி வந்தவர்க்கு
 அரணாக ஆவேன் என்றும் அன்பாவேன் கருணையாவேன்
 பரணாக ஆவேன் படியாவேன் பலமாவேன் பலனுமாவேன்
 சரணா கதியடைந்தோர்க்கு சகலமும் ஆவேன் நானே!
                                                                                                        -பாபா 

PART-1

சாயி சேவகி:

பக்தியும் சேவையும் இரு கண்கள் என்பது நம் ஸ்வாமி அடிக்கடி சொல்லும் வாசகம். ஸ்வாமியின் இந்த வாசகத்தைத் திருவாசகமாக்கி வாழ்ந்துவரும் பத்தை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சுசீலா.சாயி சேவையில் இவர் ஒரு சுறுசுறுப்பான தேனீ. அறுபதுகளிலிருக்கும் சுசீலாமாமியைத் தெரியாதவர்கள் அங்குள்ள சாயிவட்டத்திலோ இந்தியர் வட்டத்திலோ இல்லை என்று சொல்லுமளவிற்கு பறந்து பறந்து சேவை புரியும் பரந்த மனம் கொண்ட பக்தை.முதியோர் இல்லம், மருத்துவமனை,சாயி சென்ட்டர்கள், பிள்ளையார் கோவில்,ஷீரடிகோவில், என்று ஏதேனும் ஒரு தெய்வ காரியமாகவோ,தர்ம காரியமாகவோ காரில் விரைந்துக் கொண்டேயிருப்பார். பிங்க் சிஸ்டர்ஸின் ஸ்வாரா சர்வீஸ், கோவில் சர்வீஸ், 100 பேருக்குச் சாப்பாடு, நாராயண சேவை என்று சந்தோசமாகச் செய்துகொண்டிருப்பார். புட்டபர்த்தியில் சாயி சர்வீசுக்கு ஆண்டுக்கு ஒருமுறை அல்லது இருமுறை காண்டீனில் சர்வீஸ் செய்து விட்டு வருவார். இவருடைய மருமகன் வெங்கட் அங்குள்ள சாயி இளைஞர் வட்டத்தின் பொறுப்பாளர். கணவர் தாஸ் சாயி வழிபாட்டிற்கு சுசீலா மூலம் வந்தவர்.மூத்த பெண் சியாமளா,இளைய பெண் வித்யா இருவருமே தீவிர சாயி வழிபாட்டில் இருப்பவர்கள்.

சுசீலாவின் வீட்டில் வெளியில் ஹாலில் வரவேற்பறையில் ஸ்வாமியின் மிகப்பெரிய ரூபங்கள்.ஹாலில் ஸ்வாமி சிம்மாசனத்தில் அமர்ந்து ஒரு கை அபயஹஸ்தம் காட்டும் மிகப்பெரிய படம். அங்கு அடிக்கடி பஜன் நடப்பதுண்டு. அங்கு பஜன் நடக்கும் போது ஒருமுறை ஸ்வாமி நடந்து வந்து ஒரு பக்தையின் கரத்தில் குங்குமத்தைக் கை நிறைய பொழிந்திருக்கிறார்.பூஜையறையில் ஸ்வாமி நின்று அருள் பாலிக்கும் ஆளுயரப் படத்திலும் ஜூலாவிலும் ஸ்வாமி ஆசீர்வதித்துத்  தந்த வஸ்திரத்திலும் ஸ்வாமியின் பாதுகைகளிலும் விபூதி வந்து கொண்டிருக்கிறது. விபூதி வாசத்தில் நிறைந்திருக்கிறது பூஜையறை. ஹாலில் மாட்டப்பட்டிருக்கும்  ஸ்வாமியின் படத்திற்குச் சூட்டப்படும் மாலை வளர்ந்துகொண்டேயிருக்கிறது.

தெய்வீகக் காந்தம்:

அப்பா சோமசுந்தரம் தெய்வ பக்தி நிறைந்தவர். சிறுவயதிலேயே தாய் மறைந்துபோனார். பிள்ளையார் வழிபாடே பிரதானமாயிருந்தது குடும்பத்தில்.தாயற்ற பெண்கள் என்பதால் தந்தை சோமசுந்தரம் கட்டுப்பாடும் கண்டிப்பும் கொண்ட தந்தையாயிருந்து பெண்களை வளர்த்தார். ஜாஃப்னாவில் வளர்ந்தவர் சுசீலா. இலங்கையைச் சேர்ந்தவர். தாயில்லாத பெண்ணாயிருந்ததால் அம்மன் வழிபாட்டில் சுசீலாவுக்கு ஆரம்பத்தில் அதிக ஈடுபாடு இருந்தது. சத்யசாயி பாபாவின் மீதான நம்பிக்கை அவருடைய சிறுவயதில் 12வது வயதிலேயே தொடங்கிவிட்டது. இவருக்குள் ஸ்வாமியின் மேல் அன்பும் பக்தியும் நம்பிக்கையும் ஏற்படக் காரணமாயிருந்தது ஒரு சாயி பக்தரின் சொற்பொழிவு. சாவகச்சேரியிலிருக்கும் சிவன் கோயிலுக்கு முன் ஸ்வாமியைப் பற்றி சாயி பக்தரான டாக்டர் சோமசுந்தரம் பேசிய பேச்சு அவர் சொன்ன ஸ்வாமியின் சரிதம் ஸ்வாமியின் தெய்வீகம் மகிமை தனக்கு ஸ்வாமி தந்த அனுபவங்கள் எல்லாவற்றையும் அன்போடும் பக்தியோடும் அவர் பேசியது சிறுமி சுசீலாவின் மனதை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. சத்ய சாயிபாபா என்ற தெய்விகக் காந்தம் சிறுமியை ஈர்த்துவிட்டது. ஸ்வாமியின் மேல் பக்தி பிறந்து விட்டது.

சோமசுந்தரத்தைக் காத்த சாயி சுந்தரம்:

அன்று டாக்டர் சோமசுந்தரம் சொன்ன அனுபவம் இது. ஜாஃப்னாவிலிருந்து கொழும்புவிற்குச் சென்று கொண்டிருந்த பயணத்தில் ஒரு முறை காட்டு வழியாகப் பயணப்பட்டுக் கொண்டிருந்த போது நட்ட நடுக்காட்டில் இரவில் வண்டி நின்று விட்டது. என்ன செய்வதென்று புரியவில்லை. காரைப் பழுது பார்ப்பதற்கு யாராவது மெக்கானிக் வர வேண்டும். இந்த நள்ளிரவில் யார் தான் உதவிக்கு வர முடியும். அப்போது அவருக்கு பாபாவைப் பற்றி சுத்தமாகத் தெரியாது. 'கடவுளே என்ன செய்வது யாரையாவது இங்கே உதவிக்கு அனுப்பு' என்று மனதார வேண்டினார்; சற்று தூரத்தில் வயதான கிராமத்தான் சிரட்டையில் நெருப்போடு எதிரில் வந்து கொண்டிருந்தான்.உதவிக்கு ஆள் அனுப்பவேண்டும் என்று பிரார்த்தித்தால் சிரட்டையில் நெருப்பு பிடித்துக் கொண்டு வரும் இந்தக் கிராமத்து கிழவன் வருகிறானே இவன் எந்த விதத்தில் உதவ முடியும் என்று கேலியாக நினைத்தார். அந்தக் கிழவன் வண்டியருகே வந்ததும் டாக்டரைப் பார்த்துக் கேட்டான் 'வண்டி நின்று விட்டதா? பழுது பார்க்க வேண்டுமா? இவர் பதில் சொன்னார். எனக்கே ஒன்றும் தெரியாது உனக்கென்ன தெரியப் போகிறது என்று நினைத்தார்.பேனரைத் திறக்கச் சொல்லி கையிலிருக்கும் சிரட்டை நெருப்பு வெளிச்சத்தில் பழுது பார்த்தான். ஆச்சர்யப் படும்படியாக கோளாறைப் பழுது பார்த்துச் சரியாக்கினான்.டாக்டர் வியந்து போனார். அவருக்கு ஒரு சிலோன் 10 ரூபாயைத் தந்து நன்றி சொன்னார்.

பின்னாளில் பல வருடங்களுக்குப் பிறகு புட்டபர்த்திக்கு சோமசுந்தரம் ஒரு நண்பருடன் சென்றார். அப்போதும் ஸ்வாமி மேல் நம்பிக்கை ஏதுமில்லை. சும்மா நண்பருடன் தரிசனத்திற்கு வந்தார். தரிசனத்திற்குப் பிறகு ஸ்வாமி அவருக்குப் பேட்டி கொடுத்தார். ஸ்வாமி கேட்டார்'காரை மெக்கானிக் வந்து பழுது பார்த்தால் உங்கள் ஊரில் எவ்வளவு பணம் கூலி கொடுப்பீர்கள்... சோமசுந்தரம் நினைத்தார். இதென்ன இவர் மகானாவது ஒன்றாவது.. காசுபணம் கூலி என்று லௌகிகம் பேசுகிறாரே என்று டாக்டர் நினைத்தார்.அதேசமயம் கேட்டதற்குப் பதில் கூறிக்கொண்டிருந்தார். பல வருஷங்களானதால் அந்த மெக்கானிக் விஷயம் மறந்தே போனது. திரும்பவும் ஸ்வாமி கேட்டார்.நட்ட நடுக்காட்டில் நின்று போனால் எவ்வளவு கூலி? டாக்டர் ஒரு தொகை சொன்னார். நடுராத்திரியில் உதவிக்கு ஆள் வர முடியாத இடத்தில் வந்து மெக்கானிக் பழுது பார்த்தால்...? என்று கேட்க, அவர் கூலித்தொகையைச் சற்று அதிகமாகச் சொன்னார்.உடனே ஸ்வாமி, 'இந்தா உன் சிலோன் 10 ரூபாயை நீயே வைத்துக்கொள்' என்று சோமசுந்தரத்திடம் கொடுத்ததும் அவருக்கு உள்ளுக்குள் ஷாக்கடித்தது.! அதிர்ந்து போனார். ஓங்கி ஸ்வாமி மண்டையில் அறைந்தது போலிருந்தது. கடவுளே உதவிக்கு யாரையாவது அனுப்பு என்ற இவர் பிரார்த்தனையை ஏற்றதும் மெக்கானிக்காக வந்து காரைப் பழுது பார்த்து விட்டுப் போனதும் ஸ்வாமியே என்ற உண்மை புரிந்ததும் அழுகை கிளம்பிவிட்டது. அழத்தொடங்கினார். ஸ்வாமியின் பாதங்களில் விழுந்து கெட்டியாகப் பிடித்துக்கொண்டார். சரணாகதியடைந்து விட்டார். அந்த க்ஷணத்திலிருந்து சத்ய சாயிபாபாவின் அருமந்த பக்தராய் மாறினார். தன் ஊரில் இருப்பிடத்தில் ஸ்வாமியின் தெய்வீகத்தைப் பரப்பினார்.
அவர் வீட்டில் நடக்கும் பஜன்களும் அங்கிருக்கும் எண்ணற்ற விபூதி அமிர்தம் குங்குமம் பொழியும் ஸ்வாமி படங்களும் ஸ்வாமி அங்கு நிகழ்த்திய லீலைகளும் ஸ்ரீலங்காவைச் சேர்ந்த எண்ணற்ற மக்களை சாயி வட்டத்திற்கு ஈர்த்துவிட்டது. இந்த சாயி பக்தர் சோமசுந்தரத்தின் வீட்டு பஜன் அங்கு நடக்கும் லீலைகளை அனுபவித்த பின்பே ஸ்வாமி வட்டத்திற்கு பலர் வந்து சேர்ந்திருக்கிறார்கள். இது ஒரு சாயிஈர்ப்பு மையமாகவே பலருக்கு இருந்திருக்கிறது. சுசீலாவிற்குள் உருவான சாயிபக்திக்கு இதுவே காரணமானது.

சத்யசாயி வழிபாடு:

அம்பாள் வழிபாடும் அழகு தெய்வமாய் தன்னை ஈர்த்த முருகன் வழிபாடும் கொண்டிருந்த சுசீலாவுக்கு ஸ்வாமி சத்ய சாயிபாபா கடவுள் என்ற உண்மை புரிந்தது. ஸ்வாமி சத்ய சாயிபாபா கடவுள் பகவானே என்ற நம்பிக்கை பிறந்தது. ஸ்வாமி பாபாவின் படத்தை சுசீலா பூஜையறையில் வழிபாட்டுக்காக வைக்க வந்த போது மனிதர் படத்தை பூஜையறையில் வைக்கக் கூடாது என்று அவர் தந்தை மறுப்புத் தெரிவித்தார். உடனே சுசீலா சொன்னாராம் ராமகிருஷ்ணர் படத்தை நீங்கள் எடுத்தால் நானும் ஸ்வாமி படத்தை எடுத்து விடுகிறேன் என்று உறுதியாய்ச் சொல்ல சரி நீ அந்த மூலையில் உன் ஸ்வாமி படத்தை வைத்துக்கொள் நான் அந்தப் பக்கமாக வரவில்லை என்று சொல்லிவிட்டுப் போனார். அப்போதிருந்தே சாயிபாபா வழிபாடும் வியாழக்கிழமைகள் தோறும் பஜன்களுக்கு போவதும் தொடங்கியது. சுசீலா வளர வளர அவருக்குள் இருந்த சாயி பக்தியும் வளரத் தொடங்கியது.

அப்போது சுசீலாவின் அக்காவிற்கு கல்யாண முயற்சி தொடங்கியது. அக்காவைப் பார்க்க வந்தவர்களுக்கு சுசீலாவைப் பிடித்துவிட்டது. அவர்கள் சுசீலாவைப் பெண் கேட்க இவர் தந்தை பெரியள் இருக்க சிறியவளைக் கொடுப்பதில்லை. இது கட்டுப்பாடான குடும்பம்.தாயில்லையென்றாலும் கண்டிப்போடும் கட்டுப்பாட்டோடும் பெண்களை வளர்த்து ஆளாக்கியிருக்கிறேன்.  பெரியவள் இருக்க சிறியவளைக் கொடுப்பது முறையில்லை என்று சொல்லிவிட்டார். மறுபடியும் அவர்கள் கேட்டார்கள் சரி உங்கள் பெரிய மகளுக்குத் திருமணம் ஆகும் வரை காத்திருக்கிறோம். அதன்பிறகு சுசீலாவை எங்கள் மகனுக்குக் கல்யாணம் செய்து கொள்கிறோம் என்று கேட்டுக்கொண்டார்கள். சுசீலா சொல்கிறார் 'எனக்கு இந்தப் பேச்சும் நிகழ்ச்சியும் மிகுந்த வேதனையாய் போனது. ஸ்வாமியிடம் மனமுருகிப் பிரார்த்தனை செய்தேன். ஸ்வாமி இதென்ன சோதனை. அக்காவிற்கு நல்லபடியாய் கல்யாணம் நடக்கட்டும். இவர்கள் வந்து தொல்லை செய்ய வேண்டாம். எனக்கு இப்போது கல்யாணமும் வேண்டாம் என்று பிரார்த்தித்தேன். பின்னாளில் அது தான் என் புக்ககமானது.

ஒருமுறை என் அண்ணனோடு சாவகச்சேரியிலிருந்து கொழும்பிற்கு ரயிலில் சென்று கொண்டிருந்தேன். அக்காவிற்கு கல்யாணம் முதலில் நல்லபடியாக நடக்க வேண்டும் எந்த வரனும் என்னை வந்து தொல்லை செய்ய கூடாது என்று மனதில் ஸ்வாமியிடம் பிரார்த்தித்தபடியிருந்தேன். பயணம் போகும்போது என் பக்கத்திலிருந்த ஒரு மனிதர் என்னையே முறைத்துப் பார்த்தபடியிருந்தார். அண்ணனிடம் சொல்லிவிட்டுநான் இடம் மாறி உட்கார்ந்தேன்.
திரும்பவும் அந்த மனிதர் என்னையே பார்த்தபடியிருந்தார். அண்ணனைப் பார்த்து சாயிராம் நீங்கள் சாயி பக்தரா என்று கேட்டார். உடனே அண்ணன் அலட்சியமாக இல்லை இல்லை எனக்கெல்லாம் நம்பிக்கையில்லை.. இவளுக்குத் தான் சாயிபாபா பக்தியெல்லாம் என்று சொன்னார். என்னைச் சுட்டிக்காட்டி அவர் சொன்னார் சுசீலாவைத்தான் சாயி பக்தை என நான் அறிவேன் என்றார். தான் கொழும்புவில் வசிப்பதாகக் கூறி அங்கு மோடி ஹாலில் நடக்கும் பஜனைக்கு என்னை வரச் சொன்னார். அந்த க்ஷணத்தில் அவரை ஸ்வாமியாகவே உணர்ந்தேன்.

அக்காவிற்கு கல்யாணம் ஆனபின் 1974ல் எனக்காகக் காத்திருந்த மாப்பிள்ளையோடு எனக்கு திருமணம் ஆனது. என் கணவர் ஸ்வாமி பக்தரில்லை. ஆனால் என் சாயி வழிபாட்டை அன்போடு அனுமதித்தார். மாமனார் மாமியாரும் என் வழிபாட்டைத் தடுக்கவில்லை. முதலில் சிலோனில் இருந்தோம். அங்கு பேபி என்பவருடைய வீட்டில் சாயி பஜன் நடக்கும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிலோன் ரேடியோவில் சாயிபஜன் போட வேண்டும் என்று சொல்லிப் போட வைத்தேன். அங்கு பணிபுரிந்த அப்பாதான் அந்தப் புனிதப் பணியைத் தொடங்கினார்.சாயி நம்பிக்கை இல்லாமலிருந்த அப்பா தன்னுடைய கடைசிக் காலத்தில் ஸ்வாமிக்கு ஆனந்தமாகப் பூஜை செய்யத் தொடங்கினார். 1981ல் ஆஸ்திரேலியாவிற்கு வந்து சேர்ந்தோம். சிட்னியில் குடும்பம் நடக்கத் தொடங்கியது.

பக்த ரட்சகன்:

சிட்னியில் Mr.& Mrs.Singh என்று ஒரு ஃபிஜி இந்தியக் குடும்பம் அவர்களை சாயிராம் மாமி சாயிராம் மாமா என்றுதான் அழைப்போம். அவர்கள் தீவிர சாயிபக்தர்கள். ஒருமுறை மிஸஸ் சிங்கின் காதில் சீழ் வடியத் தொடங்கியது. நியூசிலாந்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர் வற்புறுத்திச் சொன்னார்.டாக்டர்களின் டாக்டர் பார்த்துக் கொள்ளட்டும் என்று புட்டபர்த்திக்குப் போய்ச் சேர்ந்தார். அங்கு மரத்தடியில் அமர்ந்து ஸ்வாமிக்காக காத்திருந்தார். அங்கு ஒரு சேவாதளத் தொண்டர் வந்து You are Mr.& Mrs.Singh Swami wants to see you என்று அழைத்துப்போனார். ஸ்வாமி அந்தத் தம்பதிக்குப் பேட்டி கொடுத்தார். அந்த மாமியின் தலையைத் தொட்டு ஆசீர்வதித்து, பின் விபூதியை உருவாக்கி சாப்பிடக் கொடுத்தார். ஸ்வாமியை வணங்கி பாத நமஸ்காரம் எடுத்துக் கொண்டு அவர்கள் வெளியே வந்தார்கள். அந்த மாமி ஸ்வாமி கொடுத்த விபூதியையெல்லாம் அங்கு வர முடியாத பக்தர்களுக்குக் கொடுக்க எடுத்துக்கொண்டார். எப்போது நீ பேர் சொல்லி அழைத்து தலையைத் தொட்டாயோ அப்போதே எனக்கு காது சரியாகிவிட்டது. நீ கொடுத்த விபூதியை சிட்னியிலிருக்கும் உன் பக்தர்களுக்காகக் கொண்டு போகிறேன் என்று கொண்டுவந்து பஜனைக்கு வந்த பக்தர்களுக்கெல்லாம் தந்தார். அங்கு வாரா வாரம் ஞாயிறு தோறும் சாயி பஜன் அற்புதமாக நடக்கும். அங்கு நாங்கள் தவறாமல் சென்று பாடுவதுண்டு.

கான மருத்துவம்:

ஆஸ்திரேலியா வந்ததிலிருந்து இரண்டாம் மகள் வித்யா அடிக்கடி நோய்வாய்ப்பட்டாள். மூத்த பெண் சியாமளாவிற்கு ஐந்து வயதிருக்கும். சிறியவள் வித்யாவிற்கு மூன்று வயதிருக்கும். ஒரு நாள் வேலைக்குப் போய் சீக்கிரமாக வந்து விட்டேன். அது இரவு நேரம் மருத்துவமனையோ மிகத் தொலைவிலிருந்தது. என் கணவர் வித்யாவை அழைத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குப் போனார். அங்கு டாக்டரைப் பார்த்து விட்டு உறவினர் வீட்டில் தங்கி விட்டு காலை வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போனார். கதவைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டு வீட்டிலிருந்தேன்.நள்ளிரவிருக்கும் சியாமளாவிற்கு கடுமையான காய்ச்சல். உடம்பு நெருப்பாய்க் கொதித்தது. வாந்தி எடுக்கத் தொடங்கினாள். தொலைபேசி இணைப்பும் அப்போது இல்லாமலிருந்தது. எல்லாம் ஒரே குழப்பமாக இருந்தது. என்ன செய்வதென்று எனக்குப் புரியவில்லை. Don't knowwhat to do அக்கம்பக்கத்தில் உதவி கேட்க முடியாது. தூங்கவும் முடியாமல் கணகணவென்று கொதிக்கும் காய்ச்சலும் வாந்தியுமாய் அழுதுகொண்டிருந்தாள். இந்த உலகத்தில் உன்னைத் தவிர வேறு யார் எங்களுக்கு நீதான் காப்பாற்ற வேண்டும் என்று ஸ்வாமியை தீவிரமாய் பிரார்த்திக்கத் தொடங்கினேன். ஸ்வாமி விபூதியை சியாமளாவின் நெற்றியிலிட்டு ஸ்வாமி பாடும் பாட்டை டேப் ரெக்கார்டரில் போட்டேன்.'முரளி கானலோலா  நந்தகோப பாலா' என்ற பாட்டை ஸ்வாமி பாடிக்கொண்டிருந்தார். 'இதபாரு ஸ்வாமி பாடுவார் நீ தூங்கு' என்று சியாமளாவை மடியில் போட்டுத் தட்டிக் கொண்டிருந்தேன். பின்னிரவில் எல்லாம் சரியாகி விட்டது. காய்ச்சல் அடியோடு நின்று விட்டது. வாந்தியும் நின்றுவிட்டது. ஸ்வாமி பாடிக்கொண்டிருந்தார்.சியாமளா நன்றாக உறங்கிப் போயிருந்தாள். ஸ்வாமி வைத்தீஸ்வரனல்லவா? கான மருத்துவம் செய்து காய்ச்சலைப் போக்கிவிட்டார்.

சாயி கோபால லீலை:

கணவர் காலையில் வித்யாவோடு வந்தபோது இரவில் அதிசயம் நடந்ததைச் சொல்வதற்கு காட்டுவதற்கு இரவில் சியாமளா வாந்தி எடுத்த தடயத்தைத் தவிர வேறில்லை. என் கணவருக்கு ஸ்வாமியின் மேல் தீவிர நம்பிக்கை வளர்ந்தது. சாயிபாபாவின் நூல்களை நிறையப் படிக்கத் தொடங்கினார். மிஸ்டர் சிங்க் மிஸஸ் சிங்க் (சாயிராம் மாமா, சாயிராம் மாமி) வீட்டு பஜனைக்கு குடும்பத்தோடு ஒவ்வொரு ஞாயிறும் செல்லத் தொடங்கினோம். அங்கு நடக்கும் பஜனில் அப்படியொரு ஒழுங்கு கட்டுப்பாடு. நல்ல வைப்ரேஷனோடு வழிபாடும் பஜனும் இருக்கும். ஒவ்வொரு பஜனைக்குப் போய்த் திரும்பும் போதும் அடுத்த வாரம் பஜனில் என்ன பாட்டு பாடப் போகிறோம் என்பதைச் சொல்லிவிட வேண்டும். வாரம் முழுவதும் 100 முறை அந்தப் பாடலை பாடிப் பார்த்துப் பயிற்சி செய்துவிட்டு வரவேண்டும் என்பார். மாமி, ஒரு முறை 50 முறை தான் மாமி இந்தப் பாட்டை பிராக்டிஸ் செய்தேன் என்று சொல்ல, அப்போது போனவாரம் நூறுமுறை பிராக்டிஸ் செய்து பாடிய 'சிவ மகேஸ்வரா' பாடலையே பாடு என்று சொல்லிவிட்டார். மிக அழகாக அலங்கரிக்கப்பட்ட மேஜையின் மீது ஸ்வாமி மஞ்சள் வஸ்திரத்தோடு நின்றிருக்கும் ஸ்வாமியின் மிகப்பெரிய படம்... அலங்கரிக்கப்பட்ட சிம்மாசனம்...பஜனுக்கு 50 பேருக்கு வருவார்கள். ஒரு பெண் ஒரு ஆண் மாற்றி மாற்றிப் பாடவேண்டும்.யாரும் பின்னால் திரும்பக்கூடாது. முன்னால் இருக்கும் ஸ்வாமியைப் பார்த்தபடி பாட வேண்டும். அந்த மாமியிடம் சொல்லி சியாமளாவிற்கு பாட்டு சொல்லிக் கொடுக்கக் கேட்டு இரு பாட்டை அவர் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.

'கோபாலா கோபாலா நாசோ கோபாலா
நாசோ நாசோ சாயி நந்தலாலா'

இரண்டு மூன்று முறை இந்தப் பாட்டை மாமி சொல்லிக் கொடுத்தாரே தவிர குழந்தைக்கு சரியாக பயிற்சி செய்து கொள்ள முடியவில்லை. இந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்வாமிக்கு விசேஷமான வழிபாடு 100 பேருக்கு மேல் பஜனில் கலந்து கொண்டார்கள்.பஜன் தொடங்கியது. தன் முறையாக முன்னால் அமர்ந்திருந்த 'குசும்'(Fiji Indian) என்ற பெண் பாடினாள். சற்றும் இடைவெளியில்லாமல் உடனே அடுத்தவர் பாடலைப் பாடவேண்டும். அடுத்ததாக அந்தப் பெண்ணின் கணவன் 'தன்சுக்' பாடவேண்டும். 'தன்சுக்' பாடவில்லை. சேர்ந்தாற்போல் சில நிமிடங்களாகிவிட்டன. எல்லோருக்கும் திக் திக்கென்றிருந்தது. ஏன் என்ன ஆயிற்று என்று யாரும் இப்படி அப்படி திரும்பிப் பார்க்கவும் கூடாது. பயம் எல்லோருக்கும் ஒரே பயம். சில வினாடிகளுக்கு பஜன்ஹாலில் அமைதியாயிருந்தது. திடீரென்று ஒரு குட்டிக்குரல்

'கோபாலா கோபாலா நாசோ கோபாலா
  நாசோ நாசோ  சாயி நந்தலாலா

அழகாக ஒரு குழந்தை பாடத் தொடங்கியது. அது யார் ?யாருடைய குழந்தை என்றும் திரும்பிப் பார்க்க முடியாது. சியாமளா தான் பாடினாள் என்பது அப்புறம் தெரிந்தது. பஜன் ஆரத்தி எல்லாம் ஆனதும் அந்த மாமி, 'தன்சுக்'கிடம் கேட்டாள் 'ஏன் உன் முறை வந்தபோது பாடவில்லை'?. அவன் சொன்னான் 'குசும்' பாடி முடித்து நான் பாட நினைத்தபோது சிவப்பு கம்பளத்தில் ஸ்வாமி நடந்து வந்து கொண்டிருந்தார். ஸ்வாமியைப் பார்த்ததும் எனக்கு எல்லாம் மறந்து போனது.ஸ்வாமியைத் தவிர யாரையும் தெரியவில்லை. ஆனந்தத்திலும் அதிர்ச்சியிலும் ஸ்தம்பித்துப் போயிருந்தேன் என்றான். கூட்டம் மெய்ம்மறந்தது. மாமியும் அமைதியானாள். பிறகு சியாமளாவை அழைத்தாள். பயந்தபடி குழந்தை வந்தாள். உனக்கு இரண்டு முறைதானே பாட்டைச் சொல்லிக் கொடுத்தேன். எப்படி அந்த நேரத்தில் இவ்வளவு அழகாகப் பாடினாய்? எங்கே ஒரு முறை பாடு என்று கேட்க சியாமளாவிற்கு பாடத் தெரியவில்லை.ஸ்வாமி தன் வருகையால் அங்கு அனைவரையும் ஆசீர்வதித்திருக்கிறார். அந்த நேரம் தன்னைப் பார்த்துவிட்டதால் திகைத்துப்போய் 'தன்சுக்'பாடாமல் போக அங்கு ஒர் இடைவெளி ஏற்பட்டதைப் பார்த்து அதை நிறைவு செய்ய சியாமளாவைப் பாட வைத்தது ஸ்வாமி என்பதால் அவள் ஜோராகப் பாடி விட்டாள். அம்மா அப்போது நான் பாடவேயில்லை என்று பயந்தபடி சொல்லிக் கொண்டிருந்தாள் குழந்தை! அது சாயி கோபால லீலையென்று புரிந்ததும் அனைவரும் ஆனந்தத்தில் ஆழ்ந்தோம்.

PART -2

அன்னபூரணி:

 அப்போது சிலோனில் இருந்தேன். சிறியவள் வித்யா திட உணவாக சாப்பிடத் தொடங்கவில்லை. நல்ல நாள் பார்த்து சாப்பிடக் கொடுக்கலாம் என்றிருந்தோம். அப்போது சுவாமி சாந்தானந்தா ஒரு சொற்பொழிவிற்காக வந்திருந்தார். வித்யாவிற்கு ஆறுமாதம் அப்போது. குடும்பத்தோடு போனோம். சாந்தானந்தா நன்றாகப் பாடுவார். சத்தம் போடும் குழந்தைகளை அமைதிப்படுத்தியபடி அங்கே இருந்த அவர் பேச்சையும் பாட்டையும் கேட்டுவிட்டு வருவோம்.பஜன் முடிந்ததும் வித்யாவை இடுப்பிலும் சியாமளாவைக் கையிலும் பிடித்துக் கொண்டு கீழே வந்தேன். பிரசாதம் பெற்றுக் கொள்ள வந்தேன். சாந்தானந்தா மொட்டை மாடியில் பஜன் பாடிவிட்டு கீழே வேகமாக வந்தார். கீழே இறங்கி வந்தார்.சற்றுத் தள்ளி நின்றதும் ஸ்வாமி என்னைக் கூப்பிட்டார். வித்யாவை வாங்கினார். சர்க்கரைப் பொங்கலை வித்யாவிற்கு ஊட்டினார். என் கண்களில் நீர் நிறைந்தது.முதல் தடவையாக சர்க்கரைப் பொங்கலை வித்யாவிற்கு ஊட்டிய அன்னபூரணி சாந்தானந்தா இல்லை சாயிபாபாவே என்பதை உணர்ந்ததும் எனக்குள் கண்ணீர் பெருகியது.அது ஸ்வாமியின் சங்கல்பம்.என்னைப் பொறுத்தவரை எனக்கு எல்லாம் ஸ்வாமியே என்கிறார் சுசீலா.அன்று காலையில் தான் நல்ல நாள் பார்த்து குழந்தைக்கு முதலில் உணவு கொடுப்பதைப் பற்றி பேசினோம்.  வழக்கமாய் பஜன் முடிந்ததும் அங்கு சுண்டல் தான் கொடுப்பார்கள். அன்று சர்க்கரைப் பொங்கல்! அதை ஸ்வாமியே ஓடி வந்து குழந்தையை வாங்கிப் பரிவோடு ஊட்டியது எத்தனை விசேஷம் அற்புதம்!

 சிட்னியில் மூன்று வருடங்களுக்குப் பிறகு அதே சுவாமிஜி வித்யாவைப் பார்த்து ஆசிர்வாதம் செய்தார்.ஸ்வாமி சொல்வார் நீங்கள் எங்கு சென்றாலும் யாரை வழிபட்டாலும் யாரால் ஆசீர்வதிக்கப்பட்டாலும் அங்கிருந்து வழிபாட்டை ஏற்றுக் கொள்வதும் ஆசீர்வதிப்பதும் நானே. மகான்கள் சித்தர்களிடம் படிப்படியாய் ஆன்மிக ஞானம் பெற்று என்னிடம் வரும்போது உங்களுக்கு எல்லாம் எளிதாகி விடுகிறது. பள்ளிகளில் பயின்று பல்கலைக்கழகத்திற்கு வந்துவிட்டதைப் போல என்னிடம் வந்து சேருகின்றீர்கள் என்பார்.அது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவம்.

 ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா:

பின்னாளில் ஜலசமாதியான ஹரிதாஸ் கிரி ஒரு முறை பிரிஸ்பேனுக்கு வந்தார். வந்து நிகழ்ச்சிகள் அருமையாக நடந்தபின் அவர் திரும்பிப் போகும்போது கணவரோடு அவரைப் பார்க்கப் போனேன். ஒரு பக்தர் வீட்டில் அவர் தங்கியிருந்தார். கதவைத் தட்டலாமா வேண்டாமா என்று தயங்கியபடி வெளியில் நின்றோம். ஹரிதாஸ்கிரி வெளியில் வந்தார். வரும்போது இப்படிச் சொல்லிக்கொண்டே வந்தார். ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா வாங்கோ வாங்கோ என்னை பார்க்க பக்தர்கள் வந்திருக்கிறார்கள் என்று சந்தோஷமாகச் சொல்லியபடி எங்களை அழைத்துப் போய் ஆசீர்வதித்தார். ஜனங்கள் ஹாய் ஹலோ என்கிறார்களே ராதே கிருஷ்ணா ராதே கிருஷ்ணா என்று வாய்க்கு வாய் சொல்ல வேண்டாமா என்றார். அந்த நேரம் பார்த்து எனக்கு தொலைபேசி அழைப்பு வர நான் 'ஹலோ' என்று சொல்லி பேசி முடித்ததும் விடிய விடிய ராமாயணம் சொன்னாலும் புரியாது என்று சொல்லிச் சிரித்தார். குழந்தைகளுக்கு நல்ல பண்பாட்டைச் சொல்லிக்கொடுங்கள் பிள்ளையார் கோவில் வழிபாடு சேவை மிகவும் முக்கியம் என்ற வாசகம் LOVE ALL SERVE ALL என்ற சாயி வாசகமாகவே சுசீலாவிற்குள் விதைக்கப்பட்டது. நீங்கள் செய்யக்கூடிய எந்த வழிபாடும் சாதகமும் உங்கள் ஆன்மீக வாழ்விற்கு சக்தியை வளர்க்கின்றன என்பார் ஸ்வாமி. இந்த உண்மை சுசீலாவிற்கு கிடைத்த ஆன்மிக அனுபவங்களின் மூலம் பலித்தே வந்திருக்கிறது.


குழந்தைகளோடு பேச்சுவார்த்தை:

1987ல் ஒரு முறை குடும்பத்தோடு ஸ்வாமி தரிசனத்திற்காகப் புட்டபர்த்திக்குப் போனேன். குழந்தைகளோடும் மாமியாரோடும் போனேன். குழந்தைகள் பாட்டியோடு ஒரு பக்கம், நான் ஒரு பக்கமுமாக அமர்ந்திருந்தோம்.ஸ்வாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.ஸ்வாமி நீ தெய்வம் என்று எனக்குத் தெரியும். குழந்தைகளைப் பார்த்து ஒரு வார்த்தையாவது ஒரு சொல்லாவது நீ பேச வேண்டும் என்றும் பிரார்த்தித்தேன்.ஸ்வாமி வெளியே வந்தார். மனம் நெகிழ்ந்துருகிக் கொண்டிருந்தது. கூட்டத்தில் எங்கு எப்படி வரிசைகளுக்குப் போனார் என்பதே சரியாகத் தெரியவில்லை.தரிசனம் ஆகி ஸ்வாமி புறப்பட்டானதும் குழந்தைகள் ஓடிவந்தார்கள். ஸ்வாமி வந்தார். வித்யா, 'சாயிராம்' என்று கூப்பிட்டிருக்கிறாள்.ஸ்வாமி திரும்பியிருக்கிறார்.சியாமளாவைப் பார்த்து 'வணக்கம்' என்று சொன்னாராம்.ஒரே குதூகலம் குஷி அவர்களுக்கு... ஒரு மூலையில் உட்கார்ந்து பிரார்த்தனை செய்தபடியிருந்தேன். அதே நேரத்தில் ஸ்வாமி பாட்டுக்குப் பேசி விட்டுப் போயிருக்கிறார். மூன்று நாட்கள் அங்கிருந்துவிட்டுக் கிளம்பும்போது ஒரே அழுகை எனக்கு.

ஆஸ்திரேலிய சிங்கம்:

 ஆஸ்திரேலியாவிலுள்ள வீட்டில் அடிக்கடி பஜன் நடக்கும் 'ஆர்தர்ஹில்' இங்கு பஜன் நடத்தும்படி கேட்டுக் கொள்வார். ஸ்வாமியிடம் போய் வந்த அனுபவங்களைப் பற்றி ஆனந்தமாகப் பேசுவார்.மோயாவோடும் அதற்கு முன்னாலும் ஸ்வாமியிடம் அடிக்கடி சென்று சகல பாக்கியங்களையும் அனுபவித்து விட்டு வருபவர். ஒருமுறை ஸ்வாமி தன்னருகேயிருந்த மாணவர்களிடம் பேசும்போது ஆஸ்திரேலிய சிங்கம் நீண்ட தாடியோடு இருக்கும்.. நீங்கள் பார்த்திருக்கிறீர்களா என்று கேட்க அவர்கள் இல்லையென்று சொல்ல அந்நேரம் ஸ்வாமி அழைப்பின் படி உயரமான தோற்றமும் நீண்ட தாடியும் கொண்ட 'ஆர்தர்ஹில்' ஸ்வாமியிடம் வர 'ஆஸ்திரேலிய சிங்கம் இதுதான் பார்த்துக்கொள்ளுங்கள்' என்று ஸ்வாமி சொல்ல அனைவரும் வாய்விட்டுச் சிரித்திருக்கிறார்கள். சிரிப்பில் ஆர்தரும் சேர்ந்து கொண்டாராம். அவர் ஸ்வாமியிடம் பெற்ற அனுபவங்கள் ஏராளம். ஆண்டுக்கு இருமுறை அல்லது மும்முறை சில வாரங்கள் அல்லது ஓரிரு மாதங்கள் என்று தங்கிவிட்டு வருவார். ஒருமுறை பக்தர்களோடு வந்த ஆர்தர் தான் மட்டும் உள்ளே நுழைந்ததைப் பார்த்து, வந்தவர்களை முதலில் போகச் சொல்லி பின்னால் வர வேண்டும் என்று ஒரு பேட்டியில் ஆர்தரிடம் சொல்லியிருக்கிறார்.


பிரிஸ்பேனில் குடும்பம் சீராய் நடந்துகொண்டிருந்தது. இவருக்கு வேலை சிட்னியில் கிடைத்தது. அங்கேயே போய்விடலாமா இங்கே இருக்கலாமா என்று குழப்பம். சதா பறந்து பறந்து போய்க் கொண்டிருப்பது போன்றிருந்தது. ஸ்வாமியிடம் 1008 நாமம் சொல்லிப் பிரார்த்தித்தேன்.ஸ்வாமியிடம் போக வேண்டும் என்ற முனைப்பு தோன்றியது. வேலைக்குப் போகும் போதெல்லாம் சாயி சஹஸ்ரநாமம் போட்டுக் கேட்டபடியிருந்தேன். இந்தியா போகவேண்டும் போகவேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து வலுப்பட்டது.

இடது பாதம்:

 ஒரு நீண்ட விடுமுறைக்குப் பிறகு வேலைக்குப் போனேன். ஸ்வாமியிடம் போக வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக மனம் மூழ்கியிருந்தது. அலுவலக மேலதிகாரி எப்படியிருக்கிறாய் என்று கேட்டார். விடுமுறை போதுமா என்றார். இந்தியாவிற்குப் போய் வர இன்னும் இரண்டு வாரம் விடுமுறை தந்தால் போய் வருவேன் என்றேன். சற்று நேரம் கழித்து தன் அறையிலிருந்து வெளியே வந்த அவள் உனக்கு இரண்டு வாரம் விடுமுறை தருகிறேன்.நீ இந்தியா போகலாம் என்றாள். எனக்கு ஒரே ஆச்சரியம். நன்றி சொல்லிவிட்டுப் பயணத்திற்குத் தயாரானேன். என் கணவர் இப்போதுதான் (விடுமுறை) விடுப்பு எடுத்து போய்ச் சேர்ந்திருக்கிறாய் திரும்பவும் விடுமுறையா உன்னை வேலையிலிருந்து எடுத்துவிடப் போகிறாள் என்று பயமுறுத்தினார். இல்லை லீவு தந்தாகிவிட்டது ஸ்வாமியிடம் போவதற்கு என்று பரபரத்தேன்.லீவு சாங்ஷன் எல்லாம் ஸ்வாமி வேலை லீலை. ஸ்வாமி தரிசனத்திற்கு உட்கார்ந்திருக்கும்போது ஒரு சேவாதளப் பெண் தொண்டர் வந்து ஸ்வாமி பக்கத்தில் வந்தால் பாதங்களைத் தொடாதே தொடாமல் பேசு என்று சொல்லிவிட்டுப் போனார். அவர் சொன்னது மனதில் வேலை செய்து கொண்டிருந்தது. வரிசையில் வந்து கொண்டிருந்த ஸ்வாமி முன்னால் வந்து நின்றார். பிரமித்தபடி நமஸ்காரம் செய்தேன். அழுகை பொங்கியது. பக்கத்திலிருந்த பெண்ணுக்கு விபூதி தந்தார். அந்தப் பெண் பாத நமஸ்காரம் எடுத்துக்கொண்டாள். என் முன் சற்று நேரம் நின்றும் கூட நான்  பாதநமஸ்காரம் எடுத்துக்கொள்ளவில்லை. சேவாதளத் தொண்டர் சொன்னதை நினைத்து,பக்கத்துப் பெண்மணி பாதங்களைப் பிடித்ததும் ஏக்கம் பொத்துக்கொண்டது.  ஸ்வாமியின் பாதங்களைப் பிடித்து நமஸ்காரம் செய்ய முயன்றேன். இடது பாதம் மட்டுமே கிடைத்தது .தரிசனம் ஆனதும் பிரிஸ்பேன் வீட்டிற்கு வந்து சேர்ந்தேன்.

நெருப்படக்கி நின்ற நெடுமால்:

1993ல் என்று நினைக்கிறேன். அன்று பிள்ளையார் கோயிலில் ஏதோ ஒரு விசேஷம். தோழி தேவி வீட்டில் பஜனை. ஸ்வாமிக்கு மாலை கட்ட நினைத்தேன். புரட்டாசி சனிக்கிழமை சமையல் செய்து கொண்டு போய் கோயில் குருக்களிடம் கொடுத்து விட்டு வரலாம் என்று நினைத்தேன். குக்கரை வைத்து விட்டு காய்கறிகளைக் கட் பண்ணிவிட்டு பூமாலை கட்ட நினைத்தேன். 'சட்'டென்று ஏதோ ஒர் ஒளி வந்தாற் போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தவள் அதிர்ந்தேன். மின்சார அடுப்பின் பக்கத்தில் வைத்திருந்த எண்ணெயில் நெருப்பு பிடித்து விட்டது. படாரென்று பற்றி எரியத் தொடங்கிவிட்டது. வெளி நாட்டில் எல்லாம் மரம் மரவீடு மரசுவர்தான்.கபகபவென்று நெருப்பு பரவலாய்ப் பிடித்துவிட்டது.'ஓ' வென்று அலறினேன். கணவரும் குழந்தைகளும் ஓடிவந்தார்கள். அந்த அதிர்ச்சியில் என்ன செய்வதென்று உடனே தோன்றவில்லை. சாக்கு போட்டு மூடிப் பார்த்தார் என் கணவர். அடங்கவில்லை. இதற்குள் சூடாக இருந்த பாத்திரத்தை எடுக்க பிடி உடைந்து விட்டது. அது அப்படியே என் இடது காலில் விழுந்து நெருப்பு பிடித்துக்கொண்டது. முழங்கால் வரையில் நெருப்பு ஏறியது. பயத்தில் கார்ப்பெட்டில் உருள நினைத்தேன். எல்லாரும் அலறுகிறார்கள். நகர முடியவில்லை தப்பிக்க மாட்டேன் என்று தோன்றியது. 'பகவானே சாயிராம்' சாயிராம் காப்பாற்று ஆபத்திலிருந்து காப்பாற்று என்று கதறத் தொடங்கினோம். 'சாயிராம் சாயிராம்' என்று குரல் கொடுத்தபடியே என் கணவர் நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடங்களிலெல்லாம் சாக்கைப் போட நெருப்பு எவ்வளவுதூரம் வந்ததோ அப்படியே நின்றுவிட்டது. நெருப்பு எரிந்து கொண்டிருந்த எல்லா இடங்களிலும் 'சாயிராம் சாயிராம்' என்று கூப்பிட்டப்படியே சாக்கைப்போட அப்படி அப்படியே நெருப்பு நின்றுவிட்டது. கண்ணால் பார்த்தபடியிருந்தோம்.ஆபத்பாந்தவன் சத்யசாயிநாதன் அந்த நெருப்பை 'பட்பட்'டென்று அணைத்து எங்களைக் காப்பாற்றிய அதிசயத்தை...!

என் இடது பாதம் எரிந்து போயிருந்தது. ஸ்வாமியின் நாமஸ்மரணையிலேயே இருந்தேன். தண்ணீரில் கால் வைத்தேன். 24 மணி நேரத்திற்குள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள்...மர வீட்டில் பிடித்து எரிந்த நெருப்பு அடங்கிப்போன அதிசயத்தை ஸ்வாமி லீலையை நினைத்தபடி இருந்தேன்.

பஞ்ச பூதங்களுக்கு சக்தி தரும் பஞ்சாட்சரன்:

 ஒரு பக்தர் ஒருமுறை ஸ்வாமியைக் கேட்டார்.ஸ்வாமி நீங்கள் சரியாகச் சாப்பிடுவதில்லையே நீங்கள் ஆண்டவனே யானாலும் மனித ரூபத்தில் இருப்பதால் பஞ்சபூதங்களால் ஆன உடம்பு தானே உங்களுக்கும் அந்த பஞ்சபூதங்களின் சக்தியிருந்தால் தானே உடல் ஆரோக்கியம்?ஸ்வாமி பட்டென்று பதில் சொன்னார். பஞ்சபூதங்கள் எனக்கு சக்தி தருவதில்லை. பஞ்சபூதங்களுக்கு நான் சக்தி கொடுக்கிறேன். எப்பேர்பட்டப் சத்யம்! எப்படிப்பட்ட தெய்வீகப்பேருண்மை! ; நெருப்பே அடங்கு' 'மழையே வராதே''வெள்ளமே திரும்பிப்போ' என்று ஸ்வாமி எத்தனை முறை பஞ்சபூதங்களின் திமிறலை  அடக்கியிருக்கிறார்.வெளிநாட்டு பக்தை இந்திராதேவியின் வீடு சாயி சென்ட்டரைச் சுற்றி தீப்பிடித்த போது ஸ்வாமி அங்கு தீயே வராமல் தடுத்தார். அதோடு மகாலட்சுமி டாலரை அவருக்குத் தந்து நோ மோர் ஃபயர்   (No more fire)என்று சொல்லி ஆசிர்வதித்தார். அதேதான் சுசீலா வீட்டிலும் நடந்தது. அதே அருளைக் காட்டியபடியே ஸ்வாமி சத்யசாயிபாபா நெருப்பின் உக்கிரத்தை அறவே அடக்கினார். கூண்டோடு கோவிந்தா என்று நினைத்த நிலையில் ஆண்டவன் சாயி கோவிந்தன் அன்போடு அணைத்துக் காப்பாற்றிவிட்டான்!.

மாலை வளரும் லீலை:

அன்று அந்த வலியிலும் வேதனையிலும் சுசீலா ஸ்வாமிக்கென்று செய்ய இருந்த கைங்கர்யத்தை நிறைவேற்றிவிட நினைத்தார். தயவுசெய்து தோட்டத்தில் இருக்கும் பூக்களையெல்லாம் பறித்துக் கொண்டுவந்து கொடுங்கள். ஸ்வாமிக்கு மாலை தொடுத்து விடுகிறேன் என்று என் கணவரைக் கேட்டுக் கொண்டேன். அவர் பறித்துக் கொண்டு வந்த பூக்களை அன்போடும் பக்தியோடும் நன்றியோடும் தொடுத்தேன். மாலையாக்கினேன்.தேவி வீட்டு மாடியில் பஜனை. எப்படி வலியோடு ஏறினேன், நடந்தேன், உட்கார்ந்தேன், இறங்கி வந்தேன் என்று தெரியவில்லை. மாலையை ஸ்வாமி படத்திற்குப் போட்டேன்.அந்த மாலை வளர்ந்தது வளர்ந்தபடியிருந்தது. அதிசயத்திலும் ஆச்சரியத்திலும் மூழ்கிப் போனோம். அதுதான் எனக்கு மாலை வளர்ந்து பார்த்த முதல் அனுபவம். கனவில் அன்று ஸ்வாமி வந்தார். பாத நமஸ்காரம் தந்தார். விபூதி தந்து ஆசீர்வதித்தார்.

அதன் பிறகு வெளிநாடு போக இருந்த உமா என்பவருடைய வீட்டில் வெளிநாடு செல்லும் பொருட்டு Farewell பஜன் நடந்தது. சிறிய மாலை தான் கட்டிக்கொண்டு போனேன். ஸ்வாமிக்கு பூமாலை போட்டால் மாலை வளர்ந்தபடி இருக்கிறது. முழங்கால் வரை வளர்ந்த மாலை பாதங்கள் வரை வந்தது.உமாவிடம் சொன்னேன். பயணத்திற்காக எல்லாவற்றையும் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறாய் இருந்தாலும் மாலையை எடுத்துப் போடாதே அப்படியே இருக்கட்டும். மாலை வளரும் லீலை அடிக்கடி நடக்கத் தொடங்கியது. சுசீலாவின் வீட்டு வரவேற்பறையில் உயரத்தில் மாட்டப்பட்டிருக்கும் ஸ்வாமியின் அழகிய வண்ணப்படத்தில் சூட்டப்பட்டிருக்கும், சூட்டப்படும் மாலை வளர்ந்து வளர்ந்து தரைவரை வளர்ந்து கொண்டிருப்பதைப் பார்த்து அதிசயித்தேன்.மாலை வளர்வது கோதை அம்சமென்பார் ஸ்வாமி.
பெண்கள் வளர்ந்தார்கள். பெரியவள்  சியாமளாவிற்கு சுசீலாவின் பிரார்த்தனைப்படி சாயி பக்தரான டாக்டர். வெங்கட் மருமகனானார். வித்யாவும் வேலைக்குப் போகத் தொடங்கிவிட்டாள்.'ஸ்வாரா'கூப்பர்ஸ்ப்ளெயின்ஸ் சென்ட்டர் ஸ்பெஷல் டே சர்வீஸ் எதாக இருந்தாலும் சுசீலா பரபரப்போடு நாராயண சேவையோ வேறு உதவியோ அன்போடு செய்து வருகிறார்.

சோதனையிலிருந்து மீட்ட சொக்கேசன்:

 நான்கு வருடங்களுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவத்தை அவர் சொன்னபோது அச்சத்திலும் வியப்பிலும் மனம் ஆழ்ந்து போனது. வழக்கமாக யுனிவர்சிடியில் படிக்கும் பிள்ளைகள் சிலர் வீட்டிற்கு வருவார்கள். பிரியமானதைக் கேட்டுச் சாப்பிடுவார்கள். உறவினர் வீட்டிற்கு வருவதைப் போல வந்து செல்வார்கள். படிப்பை முடித்துவிட்டு சிங்கப்பூருக்குத் திரும்பி இருக்கும் 'ரோஹித்' என்ற மாணவர்.. அதுபோலவே சொல்லிக்கொண்டு போக வந்தார். வீட்டிலுள்ள அனைவரும் ரோஹித்தோடு மௌண்ட் குர்த்தா (Mount Kurtha)சென்றோம். வீடு வந்ததும் என் கணவர் என் பெற்றோரைப் பார்க்கப் போய்விட்டார். வித்யா வேலைக்குப் போய் வந்து சாப்பிட்டானதும் படுத்துவிட்டாள். சுசீலா சொல்கிறார். ரோஹித்தோடு ஒரு ஹிந்திப் படம் பார்த்துக்கொண்டிருந்தேன்.

 அதன்பிறகு இரவு ஒன்றரை மணியிருக்கும் படுக்கும்போது 13/4 மணியிருக்கும். எனக்கு back pain தொடங்கியது. சற்று நேரத்திலேயே வலி தாளமுடியாது போனது. அசைய முடியவில்லை. பாத்ரூம் போகவேண்டும் எப்படியோ எழுந்து போய்விட்டேன். பாத்ரூமில் க்மோடில் உட்கார்ந்தபடியிருந்தேன். எழுந்திருக்க முடியவில்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை. திடீரென்று வித்யா அங்கு வந்தாள். அம்மா ஆர் யூ ஓகே என்று கேட்டாள். நான் சொன்னேன் நோ டார்லிங் ஐ அம் நாட் ஓகே என்னால் எழுந்திருக்கவே முடியவில்லை என்றேன். வித்யா வந்து என்னை எழுப்பி மெல்லப் பிடித்துச் சென்று இன்னோர் அறையில் ஒரு படுக்கையில் படுக்க வைத்தாள். தூங்கச் சொல்லி விட்டுப் போய்விட்டாள். வலி வலி முதுகு உடம்பெல்லாம் வலி. அந்த வலியிலும் ஒர் உணர்வு. வித்யா எப்போதோ தூங்கப் போய் விட்டாள். அவளாக வந்து அழைத்திருக்கமுடியாது. வந்தது வித்யா இல்லை ஸ்வாமி என்று புரிந்தது! இன்னும் வலி மோசமானது. இடது பக்கம் கை காலை அசைக்க முடியவில்லை. நிலைமை மோசமானது.திறந்த கண் திறந்தபடி கண்கள் நிலைகுத்தி நின்றன. செய்தி கேட்டு கணவரும் பெண்களும் உறவினர்களும் வந்து விட்டனர்.ஆம்புலன்சுக்கு  சொல்லியனுப்பி வண்டி வந்தது. இரண்டு பேர் தூக்கிக் கொண்டு போக வந்தனர். என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கணவர்.பெண்கள் அழைத்திருக்கிறார்கள்.ஒன்றும் தெரியவில்லை கேட்கவில்லை. ஆஸ்பத்திரியில் 'அட்மிட்' செய்தாக வேண்டிய அவசரம் ஏன் இப்படி ஆனது எதுவும் புரியவில்லை. கழுத்தில் நரம்பு முடிச்சு slip ஆகி வெளியில் வந்திருந்தது. என்ன நடந்ததென்று புரியவில்லை.MRI  ஸ்கேனில் எலும்பும் நரம்பும் merge ஆகியிருப்பதும் மூன்று நரம்புக்கு வெளியில் வந்திருப்பதும் தெரிந்தது. வெஜிடபிள் ஆகக் கிடந்தேன். பெரிய சர்ஜன் வந்தார். என்ன செய்தாலும் இது சிக்கலான ஆபரேஷன். ஆபரேஷன் சரியாகச் செய்யப்பட்டாலும் பக்கவாதம் வந்து விடும் ஆபத்திருக்கிறது. குரல் போனாலும் போய்விடலாம். கழுத்தில் ஒரு பக்கம் அறுத்துத்தான் ஆபரேஷன் செய்ய வேண்டும். மூன்று எலும்பையும் ஒன்றாய்க் கட்டி மெட்டல் ஒயர் உலோகக் கம்பியில் இணைக்க வேண்டும். இது பெரிய ஆபரேஷன் பக்க வாதம்  வரலாம். குரல் போய்விடலாம். உயிர் போனாலும் போகலாம். மனம் ஸ்வாமியை நினைத்தபடி இருந்தது.மருமகன் வெங்கட் இன்னும் தீவிரமான பிரார்த்தனையிலிருந்தான். ஏதோ ஒரு நம்பிக்கை வந்து கொண்டிருந்தது. ஆபரேஷன் பண்ண வேண்டுமென்றால் வியாழக்கிழமைக்கு  ஒத்துக்கொள் என்றார்  மருமகன் வெங்கட்.

உங்கள் குரு மிகவும் பெரியவர்:

 செவ்வாய்க்கிழமை இரவு 10.30 க்கு நல்ல உணர்வு(feeling).  ஸ்வாமி வந்து என் தலைமாட்டில் நிற்கிறார். சின்ன உருவமாக ஸ்வாமி நிற்கிறார். ஸ்வாமி நீ என்ன செய்வதென்று நினைத்தாயோ அதை நான் செய்தேன். யாரையும் எதையும் செய்யவில்லை. இரவு பிரார்த்தனை செய்தபடி உறங்கிப் போய் விட்டேன்.நல்ல தூக்கம். அடுத்த நாள் காலை எப்படியிருக்கிறீர்கள் என்று கேட்டபடி வந்தார் டாக்டர்.வியாழக்கிழமை ஆபரேஷன் செய்யலாம் என்றார். அது என் குருவின் நாள் என்றேன். உன் குருவின் ஆசியால் எனக்கு தியேட்டர் கிடைக்க வேண்டும். எனக்கு இன்னொரு ஆபரேஷன் வேறு இருக்கிறது. நானும் அன்று ஃப்ரீயாக இருக்க வேண்டும் என்றார் பெரிய சர்ஜன். சொல்லிவிட்டுப் போனவர் திரும்பி வந்தார் சற்று நேரத்தில்... இம்பாசிபிள் உன் குரு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டார்.நாளை வியாழக்கிழமை ஆபரேஷன் என் இன்னொரு ஆபரேஷன் கேன்சலாகி விட்டது.. என்று சொல்லிவிட்டு போனார்.தியேட்டரும் கிடைத்துவிட்டது.  உங்கள் குரு ரொம்பப் பெரியவர் என்றார். என்னவோ டாக்டரிலிருந்து நர்ஸ்வரை ஏதோ ஒர் ஆச்சரியத்தோடு கௌரவப் படுத்துவதுபோல் தனி அன்போடும் அக்கறையோடும் நடந்துகொண்டனர். சியாமளா வித்யாவிற்கு எப்படி இனி அவர்கள் இருந்து கொள்ள வேண்டும் என்று கவுன்சிலிங்(counselling) செய்தேன். குழந்தைகளுக்கு என் நிலைமையோ வேதனையோ தெரிய வேண்டாம் சாயிராம் சாயிராம் என்று சுவாமியின் நாம மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கத் தொடங்கினேன்.

அடுத்த நாள் விடிந்ததும் இனம்புரியாத கவலையில் மூழ்கியது. நம்பிக்கை..மனக் கலக்கம் மனம் காற்றில் ஊசலாடுவதைப் போலிருந்தது என்ன நடக்கப் போகிறதென்று தெரியவில்லை. வேறு உணர்வு ஏதுமில்லை.

சாயி சர்ஜன்:

சர்ஜன் வந்தார்.I feel your Guru's presence) என்றார். அத்தனை சந்தோஷம் பொங்கியது. சந்தோஷமாக இருந்தேன். சாயிராம் சாயிராம் சாயிராம் என்று நாமஸ்மரணையிலேயே மூழ்கியது மனம். மதியம் 1.30 மணிக்கு ஆபரேஷன் நடந்தது. இரவு 9.30 மணிக்கு என்னை எழுப்பியிருக்கிறார்கள். அனைவரும் 'காயத்ரி' சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என் கணவர் வந்து பக்கத்தில் குனிந்து கூப்பிட்டிருக்கிறார். எனக்கு தெரியவில்லை. கண்களைத் திறந்து பார்த்திருக்கிறேன். கவலைப்படாதீர்கள் ஓகே என்பதுபோலச் சொல்லியிருக்கிறேன். சர்ஜன் வந்தார்.ஹவ் ஆர் யூ சுசீலா என்று கேட்க இரண்டு கையை உயர்த்திக் கும்பிட்டேனாம். என் கணவர் ஓடி வந்து சர்ஜனைக் கட்டிப்பிடித்து நன்றி சொல்லத் தொடங்கினார். உங்கள் குருவிற்கு நன்றி சொல்லுங்கள் என்றார் சர்ஜன்.பெண்கள் மருமகன் உறவினர்களுக்கெல்லாம் ஒரே ஆனந்தம்.அவர் சர்ஜன் அல்ல சாயிசர்ஜன்! அடுத்தநாள் சர்ஜன் வந்து கூப்பிட்டதும் சத்தம் வந்தது 'ஹலோ' என்றேன்.சர்ஜனுக்கு மிகமிக சந்தோஷம்.she got the voice back என்றார். மயக்க நிலையிலிருந்தேன். மரணத்தின் பிடியிலிருந்து என்னை மீட்ட ஸ்வாமிக்கு மனம் நன்றி சொல்லிக் கொண்டிருந்தது. மருத்துவமனையிலிருந்து வீடு வந்து சேர்ந்தேன். மயக்க நிலையிலேயே இருந்தேன்.அது குளிர்காலமாக இருந்ததால் வலி அதிகரித்துக் கொண்டேயிருந்தது. பயங்கர வலி. மிகமிக அப்செட் ஆனேன். டாக்டராக இருந்த மருமகன் வெங்கட்டிடம் சொன்னேன்.வலி தாங்க முடியவில்லை. வலி நிவாரண மாத்திரையைத் தர வேண்டுமென்று கேட்டேன். மாத்திரை அதிகம் எடுக்க வேண்டாம். நான் சொல்கிறபடி செய்யுங்கள். வசதியான நாற்காலியைப் போட்டு உட்கார்ந்து கொள்ளுங்கள்.ஸ்வாமியின் விபூதி பிரசாதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.ஸ்வாமியின் சி.டி.யை கேட்டுக்கொண்டிருங்கள்.  மருமகன் சொன்னபடி நாற்காலியில் சாய்ந்தபடி உட்கார்ந்தேன். ஸ்வாமி பேசிக்கொண்டிருந்தார். 'பிரேமஸ்வரூபலாரா' என்று தொடங்கிப் பேசத் தொடங்கினார்.Why Fear When I am Here என்று அன்போடும் கருணையோடும் இதத்தோடும் ஸ்வாமி பேசப்பேச வலியின் ஞாபகம் மறந்து போனது. ஒரு பையனுக்கு மம்ஸ் வந்தது. அங்கு வந்து ஸ்வாமியிடம் அழுதான்.ஸ்வாமி அவனுக்கு இனிப்பு தந்தேன். அவனுடைய மம்ஸை ஏற்றுக்கொண்டேன். பையனுக்கு வலி போனது. வலி போய்விட்டது என்று சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கும் வலி போயே போனது.ஸ்வாமியின் அருளால் ஆபரேஷன் நடந்து சோதனையிலிருந்து மீண்டது போலவே இந்த வலியிலிருந்து மீண்டதும் மிகப் பெரிய அனுபவம்.ஸ்வாமியின் வைத்தீச்வரப் பேரருள் அற்புதம் மகிமையே இதெல்லாம்.

 வீட்டில் நடப்பது படுப்பது சாப்பிடுவது என்று இப்படியே இருந்தேன். குரங்கு மனம் விளையாட ஆரம்பித்தது.ஸ்வாமி அந்த ஆஸ்பத்திரியில் சின்ன உருவமாக வந்து நின்றது நிஜமா?என் பிரமையா?  உள்ளே கேள்வி தொடங்கியதும், ஒரு கால் வந்தது. சுசீலாவின் தோழி ஒருவர் பேசினார். சுசீலா இவ்வளவு பெரிய ஆபரேஷன் உனக்கு நடந்தும் உன்னைப் பார்க்க வர முடியாமல் போனதற்கு மன்னித்துக்கொள் தனக்கும் அதே சமயம் ஒரு பெரிய ஆபரேஷன் ஆனதென்று சொன்னார். அடுத்த நாள் காலை நர்ஸ் என்னிடம் ஓடி வந்தார். யாரோ இந்தியாவிலிருந்து வந்தவர் ஆரஞ்சு உடை அணிந்த பெரியவர் லிஃப்ட்டில் ஏறி வந்து உன் அறைக்கு வந்து உன் காலடியில் சற்று நேரம் நின்றிருந்தார் என்று சொன்னார். படாரென்று திரும்பி அங்கே நான் மாட்டியிருந்த சாயிபாபாவின் படத்தை பார்த்து இதோ இந்தப் படத்திலிருந்தவர்தான் என்று சொல்லி ஸ்வாமி எப்படி அங்கு நடந்து வந்தாரோ அதே போல் நடந்து காட்டினாள்.ஸ்வாமி தான் என்னைக் குணப்படுத்தினார். ஆபரேஷன் செய்ததும் குணப்படுத்தியதும் தானே என்பதைக் காட்டவே தன் அறையில் வந்து தன் முன் நின்ற காட்சியை நர்ஸுக்குக் காட்டினார். என் தோழி வியந்தபடியும் நெகிழ்ந்தபடியும் சொல்லிக்கொண்டிருந்தார்.நான் எனக்குள் உருகிக் கொண்டிருந்தேன்.ஸ்வாமிதான் வந்து மருத்துவமனை அறையில் என் முன் நின்றாரா என்று சந்தேகப்பட்ட எனக்கு ஸ்வாமி தந்த தெள்ளத் தெளிவான பதில்! சந்தேகப் படாதே என்னை நம்பு என்று ஸ்வாமி சொல்வது போலிருந்தது.

உள்முகமாற்றம்:

பர்த்தி சர்வீசுக்கு வருடத்தில் இரு முறையாகப் போய் வந்துவிடுவார் சுசீலா. 2007ல் லேடீஸ் குழுவோடு அப்படியே சென்று அதன் பிறகும் நவராத்திரி வரை இருந்து ஸ்வாமி தரிசனத்தை ஆனந்தமாய் அனுபவித்துத் திரும்பினார்.உள்முக மாற்றங்களையே  இம்முறை ஸ்வாமி தந்ததாகக் கூறினார்.காண்டீன் சர்வீசில் இருந்தவள் வேலையானதும் 'ஸ்வாமி தரிசனத்திற்குப் போவேன். அப்படி போனபோது ஒரு முறை ஒரு சேவாதளத் தொண்டர் என் முன்னிருந்த வயதான பெண்மணியை இங்கே உட்காரக் கூடாது என்று சற்றுக் கடுமையாகச் சொல்லிக் கையைப் பிடித்து எழுப்பி வேறு இடத்தில் போய் உட்காரச் சொன்னார். எனக்குக் கோபம் வந்தது. இப்படி வயதானவர்களைக் கைப்பிடித்துத் தள்ளாத குறையாய் நீ அனுப்புவது சரியில்லை என்றேன். அவள், ;நீ வாயை மூடு' என்று சொல்ல, நானும் 'உன் வாயை மூடு' என்று சொல்ல வார்த்தைகள் தடித்தன. எங்கிருந்தோ வருகிறோம் வயதானவர்களை எப்படி நடத்துவது என்று தெரிய வேண்டாமா? இப்படியா கண்மண் தெரியாமல் நடந்து கொள்வது? கடுமையான குரலில் சொன்னேன். அந்த வாக்குவாதத்திற்குப் பிறகு அவள் போய்விட்டாள். அப்செட்டாகி உட்கார்ந்தேன். இப்படி ஸ்வாமி தரிசனத்திற்காக உட்கார்ந்திருக்கும்போது குல்வந்த் ஹாலில் வந்து இப்படிக் கோபமாக வார்த்தைகளை விட்டு ஏன் பேசினேன் என்று நொந்து கொண்டேன். இன்னொரு டாக்டர் தம்பதி லேட்டாக வந்து சர்வீஸ் முடித்து விட்டு வருகிறோம். இங்குதான் நாங்கள் உட்காருவோம் என்று சேவாதளத் தொண்டர் சொன்னதையும் மீறி எனக்கு முன் உட்கார்ந்து கொண்டார்கள். நான் மனவருத்தத்தோடு இருந்ததால் இந்த வாக்குவாதத்தைக் கண்டு கொள்ளவில்லை. ஸ்வாமி அன்று தரிசனத்திற்கு வந்தார். ஒவ்வொரு முறை தரிசனத்தின் போதும் புன்னகையோடு வருவார். ஆசீர்வதிப்பார். அன்று சுவாமி எங்கள் பக்கம் திரும்பவேயில்லை. எங்கள் அகங்காரத்திற்கு ஸ்வாமியின் ரியாக் ஷன்(reaction) அது என்று புரிந்துவிட்டது. மனக்கலக்கத்தோடும் கலவரத்தோடும் திரும்பிப் போனேன். இரவு உறக்கமில்லை மனமுருகப் பிரார்த்தித்து மன்னிப்பு கேட்டபடியிருந்தேன். காலை வேலை முடித்து தரிசனத்திற்குப் போனதும் ஸ்வாமி வந்தார் எங்கள் பக்கமாக வந்தார். எல்லாரையும் பார்த்து என்னையும் பார்த்து புன்னகையோடு இரு கைகளையும் தூக்கி ஆசீர்வதித்தார். அவ்வளவுதான் எல்லாம் க்ஷணத்தில் உருகிக் கரைந்து ஸ்வாமிக்கு முன் அர்ப்பணமாகிவிட்டது. மீண்டும் அழுதேன். இது ஸ்வாமியின் கருணையால் வந்த அழுகை.

சுசீலாவிற்கு ஆஸ்திரேலியாவிலிருக்கும் அத்தனை பழைய சாயி பக்தர்களோடும் நல்ல பரிச்சயம்.சாயி  டிக் ஷனரி கைடு! யாரைப் பற்றிக் கேட்டாலும் அவருக்கு ஸ்வாமியிடம் உள்ள பக்தியையும் ஸ்வாமி தந்த அனுபவத்தையும் தெள்ளத் தெளிவாக கூறுகிறார். முதல் மகள் சியாமளாவிற்குத் திருமணமாகிப் பத்து வருடங்களாகியும் குழந்தை பிறக்கவில்லை. இரண்டாவது மகள் வித்யாவிற்கு இன்னும் திருமணமாகவில்லை. எல்லாம் ஸ்வாமி பார்த்துக்கொள்வார் என்று ஸ்வாமி சர்வீசுக்கு அவ்வப்போது காரில் பறந்து கொண்டிருக்கிறார் சுசீலா. இவர் ஒரு நல்ல சாயி  சேவகி. சத்சங்கம் சாயி சேவை என்று ஆனந்தமாக நடக்கிறது குடும்பம். பக்தியும் சேவையும் இரு கண்களாகக் கொண்டு முனைப்பாக  சாயிப்பணியில் அன்போடு தன்னை அர்ப்பணித்துக் கொண்டு வருகிறார் இந்த அருமந்த சேவகி.
   
ஜெய் சாய்ராம்!

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 
(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்) 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக