தலைப்பு

திங்கள், 10 பிப்ரவரி, 2020

👍 சுயநம்பிக்கையை வளர்த்துக் கொள்!


தெய்வத்துவம் நீக்கமற நிறைந்துள்ளது. தெய்வத்துவத்தை அனுபவிக்க மனித முயற்சி அவசியம். மனிதன் ஐந்து புலனறிவுகள்,ஐந்து சூட்சுமப்புலன்கள், ஐந்து ஸ்தூலப்புலன்கள் இவற்றைப் பெற்றிருக்கிறான். உலகம் பஞ்சபூதங்களைக் கொண்டது. இவையனைத்தும் மனிதனிடம் கலவையாக, தெய்வத்துவம் கூடியிருக்கின்றன. இத்தெய்வத்துவம் காண இயலாதது, பற்ற இயலாதது. ஆகவே தெய்வத்துக்கு இருப்பு என்பது இல்லை என்று கூறுகிறார்கள்.

மேற்கூறிய 20 கூறுகளும் தெய்வத்துவத்தின் பகுதிகள். உடல், மனம், ஜீவன் இவற்றின் உதவிகொண்டு தெய்வத்துவத்தை புரிந்துகொள்ள இயலும். அது காலம், இடம் கடந்தது. ஆன்மீக வழியைப் பின்பற்றுபவர்கள் எளிதாக தெய்வீக சாந்நித்தியத்தைப் புரிந்துகொள்ளலாம். ஏனெனில் அவர்களின் இதயம் தூய்மைப் படுகிறது. தூய்மையடைவதற்கு, புலன்கள் எல்லாவற்றின் ஒருமை இருக்க வேண்டும். அது தெய்வத்துவத்தை அறிந்து அனுபவிக்க மனிதனுக்கு உதவுகிறது.உடல், இதற்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.

உடலில் உள்ள உறுப்புகளெல்லாம் ஒன்றாக வேலை செய்கின்றன. இல்லாவிடில் மனிதனுக்குப் பிரச்சினைகள் ஏற்படுகின்றன. நீ ஒரு மரத்தில் பழத்தைப் பார்க்கிறாய். அது வேண்டுமென்று விரும்புகிறாய். கால்கள் மரம் வரையில் நடக்கவேண்டும். கைகள் மரத்தின் அடிப்புறத்தைப் பிடிக்கவேண்டும். கால்கள் மரமேற வேண்டும். மனம் பழத்தை அடையும் வழியைத் தீர்மானிக்கிறது. மேலேறும் போது கண்கள், கைகள், கால்கள் இவற்றின் அசைவை கவனிக்கின்றன. காதுகள், பலமான காற்று அடிக்கிறதா இல்லையா என்று கவனிக்கின்றன. முடிவில் பழத்தைக் கையில் எடுத்ததும் பழமா, காயா என்றறிய முகர்கிறாய்.பற்கள் பழத்தைக் கடிக்கின்றன. அதிலுள்ள சாறு, நாவினால் சுவைக்கப் படுகிறது. சுவை நன்றாக இருந்தால் சாறு வயிற்றுக்கு அனுப்பப்படுகிறது. வயிறும், கல்லீரலும் இவற்றை சீரணித்து, அதன் ரஸம் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. எல்லா உறுப்புகளும் ஒன்றிணைந்து பழத்தின் சாரத்தை அனுபவிப்பதே தூய்மை எனப்படும். எதிர்ச்செயல் பிரதிபலிப்பு, எதிரொலி இவையே தெய்வத்துவம் எனப்படுகின்றன. இம்மூன்றும் மனிதனிடம் இருக்கின்றன.

கண்ணாடிப் பாத்திரத்தில் பழரசம் இருக்கிறது. கண்ணாடி பாத்திரத்திற்கு பழரசம் இருப்பது தெரியாது. அதற்கு ரஸம் இருப்பது தெரியாது. இருப்பினும், குழல், சாற்றை உறிஞ்சும் போது வாய்க்கு அனுப்புகிறது. நாவுதான் அதனுடைய சுவையை அறிந்து நல்லதா கெட்டதா என்று அறிந்து உள்ளே அனுப்புகிறது. உடல்தான் கண்ணாடிக் குடுவை. உறிஞ்சும் குழலே புலன்கள். அறிவே குடிக்க முடிவெடுப்பது. நாவுதான் ஏற்றுக் கொள்ளலாமா வேண்டாமா என்று தீர்மானிக்கும் விவேகம். கண்ணாடிக் குடுவையில் உள்ள பழச்சாற்றின் இனிப்பை அனுபவிக்கும் வழிமுறையே சாதனா.

கண்ணாடிக் குடுவையில் தண்ணீர் இருக்கிறது. ஒரு ஸ்பூன் சர்க்கரையை அதில் போடுகிறாய். அது கண்ணாடியின் அடிப்புறத்திற்குச் செல்கிறது. கண்ணாடிக் குடுவையின் மேலே உள்ள தண்ணீர், இனிப்பாக இராது. ஏனெனில் சர்க்கரை அடியில் இருக்கிறது. சாதனா என்ற ஸ்பூனைக் கொண்டு நன்றாகக் கலக்கினால் தண்ணீர் முழுவதும் இனிப்பாகிறது. கண்ணாடி என்பது உடல். எங்கும் பரவியுள்ள சர்க்கரை இனிப்புதான் தெய்வத்துவம். மனிதனிடமுள்ள தெய்வத்துவம் மேற்புறத்தில் காணப்படுவதில்லை.அது அவனுள்ளே மறைந்திருக்கிறது. மேற்பக்கம் உள்ள நீரைச்சுவைத்துக் கொண்டே இருப்பதால், தெய்வத்துவத்தை உணருவதில்லை. ஆகையால் வாழ்க்கையில் திருப்தி இருப்பதில்லை. இனிப்பில்லாத மேல்நீரை் சுவைப்பது, தற்காலிகமாக உள்ள வெளிப்புற இன்பத்தை அனுபவிப்பதைப் போன்றது.

மாணவர்கள் நன்றாக படிக்கிறார்கள். பரிட்சையில் சிறப்பான மதிப்பெண்கள் பெறுகிறார்கள். தேர்வு முடிவுகள் பற்றி மிக மகிழ்ச்சியடைகிறார்கள். பிறகு வேலை வேண்டுமென்று விரும்புகிறார்கள். வேலை தேடும் போது அவர்கள் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். வேலை கிடைத்ததும், சிறிது காலம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். சில காலம் கழித்து, வேறு ஒரு நிறுவனத்தில் இன்னும் சிறந்த வேலை கிடைக்கும் என்று கேள்விப்பட்டு அதற்கு மனுப்போட்டு புது வேலையும் கிடைக்கிறது. மறுபடி சிலகாலம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். குடும்பம் நடத்த பொருளாதார வசதியுள்ள வேலை இருப்பதால், அவர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். குடும்ப வாழ்க்கை தொடங்கி, சில காலம் மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். வேலை உயர்வு எதிர்பார்க்கிறார்கள். அது உடனுக்குடன் கிடைப்பதில்லை. பிறகு முடிவில் அவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கிறது. மகிழ்ச்சியுடன் இருக்கிறார்கள். இப்போது மகன் பிறக்க வேண்டுமென்ற ஆசை தீவிரமாகிறது. மகன் பிறந்ததும், தந்தை மகிழ்ச்சியடைகிறான்.மகன் நோய்வாய்ப்படும்போது, மகிழ்ச்சி முழுவதும் மறைந்து விடுகிறது. இவ்வாறு நடக்கும்போது இதுவரையிலும் அவன் அனுபவித்த மகிழ்ச்சி நிலையானது அல்ல, ஏனெனில் அது தோன்றி மறைகிறது. அவன் நிரந்தர மகிழ்ச்சிக்காக தீவிர வேட்கை கொள்கிறான். நிரந்தர மகிழ்ச்சி கிடைக்காததால் அவன் மனச்சோர்வடைகிறான்.இத்தகைய தற்காலிக மகிழ்ச்சிகள் அனைத்தும் ஓடும் மேகங்கள்.

வாழ்க்கை முழுவதும் தற்காலிக மகிழ்ச்சி மட்டுமே பெற்று வந்ததால், அவன் நிரந்தர மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெற வேண்டுமென்று யாசிக்கிறான். அவன் அனுபவித்து வந்தது ஒரு தற்காலிக மகிழ்ச்சி என்று உணர்கிறான். இந்த வேளையில், வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று தன்னைத்தானே கேட்டுக் கொள்கிறான்: உண்கிறான், குடிக்கிறான், வளர்கிறான். இளமைப்பருவம் வருகிறது. மணம் புரிகிறான், குழந்தைகள் பெறுகிறான். முதுமையடைகிறான். முடிவில் இறக்கிறான். பறவைகள், விலங்குகள், மற்ற ஜீவராசிகள் அனைத்தும் இதையேதான் செய்கின்றன. அவனுடைய வாழ்க்கையும் விலங்குகளையும், பறவைகளையும் போன்றது என்று நினைக்கிறான். அவைகள் எந்த பல்கலைக்கழகத்துக்கும் செல்லவில்லை. அவன் பெற்ற முதுநிலைப் பட்டம் பெறவில்லை. ஆனால் இருவகையினரும் ஒரேவிதமாக வாழ்கின்றனர்.பின், மனிதனுக்கு படிப்பெதற்கு? பறவைகளும், விலங்குகளும், கல்வி கற்பதில்லை. அவன் பெற்ற கல்வி, ஜீவனோபாயத்துக்குத்தான் (வயிறு வளர்க்கத்தான்) உதவுகிறது. மிருகங்களும், பறவைகளும், கல்வியறிவில்லாமலேயே வயிறு வளர்க்கின்றன. இப்போது ஆழ்ந்து சிந்திக்கத் தொடங்குகிறான்.தனக்குள் விசாரணை செய்து கொள்கிறான். தனது அறிவை விடைபெறுவதற்கு ஒரு அடிப்படையாகக் கொள்கிறான்.

அறிஞர்கள் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். படித்தபின் என்னசெய்வதென்று புரிவதில்லை. ஞானிகளாகவும் ஆகவில்லை. கெட்டதையும் கைவிடவில்லை.தாழ்ந்து அழிவதை ஏன் படிக்கவேண்டும்? அழியாதவற்றைப் படித்தறியுங்கள்.

நீங்கள் கற்கும் கல்வி வெறும் பட்டத்துக்காக இருக்கலாகாது. எவ்வளவு சீக்கிரம் நடைமுறைக்கு கொண்டு வருகிறீர்களோ, அவ்வளவுக்கு உண்மையிருப்பைப் புரிந்து கொள்வதற்கு அது உதவி புரியும். உங்களிடம் கல்வியறிவு உண்டு. அதை நீ நடைமுறையில் பயிலவில்லை. உருளைக்கிழங்கும் சப்பாத்தியும் தட்டில் இருக்கின்றன. உன்னிடமுள்ள அறிவு, சப்பாத்தியையும் உருளைக்கிழங்கையும் உன் வாயில் போட்டுக்கொள்ள உதவி செய்ய வேண்டும். ஆகவே உனது உள்ளிருக்கும் அறிவுப்புலனுக்கும் (ஞானம்) வெளி உலகத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும். இந்தத்தொடர்பு தெய்வத்துவம் எனப்படுகிறது.இத்தெய்வத்துவம் உள்ளிருக்கும் ஞானத்தை வெளிப்புறப் பொருளோடு இணைக்க வேண்டும். ஒருமுறை இத்தொடர்பை நிலைநாட்டி விட்டால், மனசாட்சி (ஜீவசாட்சி_Consience) ஒவ்வொரு பொருளிலும் தெய்வத்துவத்தை உணர்ந்து அனுபவிக்கும் அனுபவத்துக்கு திசை காட்டுகிறது. பிறகு நீ தன்னலமற்ற எண்ணங்கள் பெறத்தொடங்குகிறாய்.

ஆதாரம்: சாயி அருளமுதம் கொடை-1994 (தொகுக்கப்பட்ட அருளுரைகள்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக