ஒரு அபூர்வமான வியாதி ஒரு குறிப்பிட்ட நாட்டில் இருக்கும் போது, அதற்குரிய மருந்தும் அந்த நாட்டிலேயே கண்டுபிடிக்கப்படுகிறது. தீவிர முயற்சிக்குப் பின் மற்ற நாடுகளில் கிடைத்தாலும், இங்குள்ளது போல் சிறந்ததாகவோ, அதிக அளவிலோ இராது. அதுபோலவே இந்தக் கலியுகத்தில் இப்போது இந்தக் குறிப்பிட்ட மருந்து எல்லோருக்கும், எப்போதும் சுலபமாகக் கிடைக்கிறது.
இந்த கலியுகத்தில் ஒழுக்கக் கட்டுப்பாடு இல்லாமை, நேர்மை இல்லாமை, பொய்மை ஆகியவை இவ்வுலகைப் பிடித்திருக்கின்றன. அதனாலேயே சாத்திரங்கள் கலியுகத்தில் நாமத்தைத் தவிர விடுதலையளிக்கும் சாதனம் வேறெதுவுமில்லை என்பதை திரும்பத் திரும்ப அதிகம் வற்புறுத்துகின்றன. இதன் காரணமாகவே, நான்கு யுகங்களில் கலியுகத்தைச் சிறந்ததென கூறலாம். நாமஸ்மரண, ஜப, தியானம் ஆகியவை மனித குலத்தில் உள்ள தீமையை வடிகட்டி எடுத்து விடுகின்றன. இம்மூன்றும் மனிதத்தன்மைக்குக் காவலாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றன. ஆகவே, தியானத்தின் பலன்கள், யோகம்,யக்ஞம். பிராணயாமம் ஆகியவற்றின் மூலம் மிகுந்த கஷ்டத்துடன் கிடைக்கப்பெறும் பலன்களை விடச் சிறந்ததாகும்.
எந்த வேலைக்கும் ஒரே மனத்துடன் கவனமாகச் செயல்படுவது மிகவும் அவசியம். ஆத்மவிருத்திக்கும், சாதாரண உலகியலில் முன்னேற்றத்துக்கும் வித்தியாசமான சாதனைகள் தேவை என்பது சரியல்ல. சாதாரண உலக வாழ்க்கையின் புனிதமான நிலையே ஆன்மீக வாழ்க்கையாகும். இரண்டிலும் உள்ள வெற்றியும் தோல்வியும் ஒருமுனைப்பாட்டைப் (concentration) பொருத்தவை. இந்த ஒருமுனைப்பாடும், ஆன்மிகப் பயிற்சியே. இந்த சாதனா மார்க்கம் இரு வழிகளில் பிரிந்து செல்ல வாய்ப்புண்டு.
(1) எதிலும் கவனம் இல்லாத வழி
(2) பல நோக்குடன் செல்லும் வழி
முதலாவது தூக்கத்தை அளிப்பது. அது தமோ குணமாகும். இரண்டாவது படைப்பையும், அதன் பற்பல காட்சிகளையும் விரிந்த கண்களுடன் காண்டல். இது ரஜோ குணத்தின் விளைவு. இந்த இரண்டு வழிகளிலும் சிக்காமல், தூக்கத்திலுள்ளது போல முழுமையாக மூடாமலும், விழிப்பில் உள்ளது போல கண்களை விரிந்து திறக்காமலும், சிறிது கண்களைத் திறந்து மூக்குநுனியில் பார்வையைச் செலுத்தினால் சத்வகுணம் ஒருவரது இயல்பாக மாறிவிடும்; மனத்தின் ஒருமுனைப்பாடு சுலபமாக கைவசமாகும்.
பார்வையை மூக்கு நுனியில் நிறுத்துவது மட்டும் போதாது. தொடக்கத்தில் அவ்வாறு செய்ய வேண்டும். அத்துடன் மனதை ஒருமுனைப்படுத்தி நாமத்திலும் உருவத்திலும் செலுத்த வேண்டும். அதுவே தியானம்.
ஜப தியானத்தில் ஆழ்ந்திருக்கும் போது பலவித எண்ணங்கள் வருவது சகஜம். அதை பற்றிக் கவலை கொள்ளாமலும், அவைகளில் அதிகம் கவனம் செலுத்தாமலும் ஒரே எண்ணத்துடன் தியானத்தில் லயிக்க வேண்டும். எண்ணங்கள் தியானத்தில் லயிக்கவேண்டும். எண்ணங்கள் குறுக்கிடுவதால் பெருந்துன்பம் எதுவும் ஏற்படப்போவதில்லை. நாமஸ்மரணத்தைத் தொடங்கும்போது, ஆர்வத்துடன் அமரவேண்டும். மாறாத மன உறுதியுடன் ஒரு செயலில் இறங்கும் போது, எந்தக் களங்கமும் உன்னைப் பாதிக்காது. ஜபத்தைத் தொடங்கும்போது, நீ முழுத்தூய்மையுடன் இருப்பதில் கவனம் செலுத்து. இதற்கான பல கட்டுப்பாடுகளை நினைத்துக் கவலைப் படக்கூடாது. உனக்கு பிடித்தமான நாமத்தையும், அதற்குரிய உருவத்தையும் தேர்ந்தெடுத்துக் கொள். அந்த நாமமே மந்திரம். அந்த நாம மந்திரம் எப்போதும் தூய்மையாகவும், செயல்படுவதாகவும், எல்லாமாகவும் இருக்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு ஒன்றும், இன்னொரு நாளைக்கு வேறொன்றுமாக, நாமரூபத்தை உன் விருப்பத்திற்குத் தகுந்தவாறு மாற்றிக் கொண்டிராதே. எந்த நாமமும் உருவமும் மனதிற்குத் திருப்தி தந்ததோ அதை மாற்றாமல் விடாப்பிடியாக பற்றிக்கொள். அவை இதயத்தில் நிச்சயமாக வேரூன்றிவிடும். அதன்பிறகு ஒவ்வொன்றும் அவரது அருளால் நடைபெறும். பூமியைத் தோண்ட உத்தரவளிக்கப் பட்டால், வேலையாளின் தொழில் தோண்டிக் கொண்டே இருப்பதுதான். தோட்டக்காரன் மட்டுமே ஒரு செடிக்கு வேண்டிய எரு, மண் தேவைகளை அறிவான். நாமஸ்மரணை செய்ய வேண்டும் என்பது உனக்கு விதிக்கப்பட்ட கட்டளை. அந்த வேலையைத் தொடர்ந்து செய்து கொண்டே வருவாயானால், எங்கே எப்படி அதைப் பயன்படுத்துவது என்பதை அவரே வழி நடத்திக் காட்டுவார்.
நாமம், ரூபம் இவற்றின் மதிப்பு மனதிற்கு அளிக்கும் பயிற்சியைப் பொருத்தது. பயிற்சி அளிக்கப்பட்ட குதிரைக்கு மறுபடியும் பயிற்சியளிப்பதில் என்ன பயன்? பயிற்சியில்லாத குதிரைதான் பல உபாயங்களின் மூலம் அடக்கப்படுகிறது. அதைப்போல இங்குமங்கும் அலைபாயும் மனதை அடக்கி அதன் இலக்குக்குக் கொண்டுசெல்லத் தான் ஜபம், பஜனை, நாமஸ்மரணம், வழிபாடு முதலியவைகள் உதவுகின்றன. உதாரணமாக குதிரை பயிற்சியாளர் பயிற்சியின் முதல் படியிலேயே குதிரை அங்குமிங்கும் ஓடுகிறதே என்று கவலைப்பட்டால் என்ன பயன்? பயன் ஒன்றுமில்லை. பயிற்சியாளரும் இதற்காகக் கவலைப்படவும் கூடாது. கவலைப்படாமல் பயிற்சி கொடுப்பதில் முழுக் கவனமும் செலுத்தினால் வெற்றி கிடைப்பது நிச்சயம். அதைப்போல மனதும் ஆரம்ப காலங்களில் நாமஸ்மரணம், ஜெபம் செய்யும் பொழுது அங்குமிங்கும் ஓடத்தான் செய்யும்; அதற்காக கவலைப் படுவதோ, நம்மால் முடியாது என்ற முடிவுக்கு வருவதோ சரியல்ல. நாமத்தை விடாமல் ஒரே பிடியாகப் பிடித்துக் கொண்டால் வார்த்தைகள், எண்ணங்கள் எல்லாம் சுலபமாகக் கட்டுப்பாட்டுக்குள் தானாக வந்துவிடும். ஒரு முக்கியமான விஷயம். ஆண்டவன் நாமத்தை மறக்கச் செய்யும் எதையும் நெருங்க இடங் கொடுக்கலாகாது. இவ்வாறு பயிற்சி செய்யும்போது, நாமத்தின் முழுப் பலனையும் நீயே காலப்போக்கில் உணரலாம்.
செடி நட்டவுடனேயே பழம் கிடைக்க வேண்டுமென்று ஏங்காதீர்கள்.பழத்தின் ருசியை யூகித்தறிய வேண்டும் என்ற நம்பிக்கையில் குச்சிகளையும், இலைகளையும் பிடுங்கிச் சுவைக்காதீர்கள். அப்படிச் செய்தால் பழத்தின் ருசியையும் அனுபவிக்க முடியாமல், அந்தச் செடியும் மேலும் வளர முடியாமல் கடைசியில் அழிந்துவிடும்.
அதேபோல நாமம் என்ற சிறு செடியைப் பாதுகாத்து வளர்ப்பதே உன் வேலை. அதன் மகிமையைச் சந்தேகித்து ஆராய்ச்சி செய்யாதே.விடாமுயற்சியின் பயனாக, சிறுசெடியும் கண்டிப்பாக வளர்ந்து மரமாகி கடைசியாக நீ எதிர்பார்க்கும் பழத்தையும் உனக்குக் கொடுக்கும். நாமம் அத்தகைய பலனை அளிக்கவல்லது. நீ அதனை பெறுவாய். ஏகாக்கிரதத்தின் (ஒருமுனைப்பாட்டின்) நோக்கம், நாமத்தை மாற்றமில்லாது பற்றிக் கொள்வதும், உருவத்தை எப்போதும் கண் முன்னால் வைத்துக் கொள்வது தான். நாமஸ்மரணம் என்ற வலையில் எந்தவித ஓட்டைகளும் இருக்கக் கூடாது. அதாவது நாமஸ்மரணம் இடைவிடாது நடைபெற வேண்டும். அந்த இடைவெளி வழியாக பழம் நழுவி மறைந்து விடும். ஆகையால் விடாமல் தியானம் செய்து மனதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் வழியைக் கடைபிடி. அதுவே தலையாய கடமை.
ஆதாரம்: 'தியான வாஹினி'
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக