நேரடியாக கடலுக்குள் குதிக்கப் போகிறேன். கரை பார்த்து கடல் வியப்பது இந்தப் பதிவில் இல்லை.. பகிர நிறைய ஆச்சர்யங்கள் இருக்கின்றன..
திரு ரவிச்சந்திரன் சாய்ராம்
1991 ன்றிலிருந்து குடும்பத் தொழிலான கட்டுமானப் பணிகள் செய்பவர்..
அவரை எப்படி சுவாமி கட்டியமைத்தார் என்று சொல்வதற்கு முன்..
கூட்டு குடும்பம் இவருடையது..
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பது இதை வைத்தே சொல்லப்பட்டது..
அறிமுகம்:
திரு ரவிச் சந்திரன் சாய்ராம் அடியேனுக்கு விஜயராகவன் சாய்ராம் வழியாக அறிமுகம் கிடைத்தது..
திரு விஜயராகவன் சாய்ராம் சுவாமி மாணவர்.. தன்னலமற்ற சேவகர்..
ஒரு கிராமத்தையே தத்தெடுத்து சுவாமி சங்கல்பத்தால் வெளிச்சம் பாய்ச்சும் சுவாமி ஏற்றிய மெழுகுவர்த்தி அவர்.
பரம்பரை பக்தி:-
1. திருமதி முருகம்மா சாய்ராம்:
அது 1950. ரவிச்சந்திரன் சாய்ராமின் பெரியப்பா மனைவியின் சகோதரி திருமதி முருகம்மா..
அவரிடமிருந்து தான் ஆரம்பித்தது சுவாமி பக்தி..
முருகம்மா சாய்ராமின் கணவர் திரு ராமச் சந்திரன் ஆர்.டி.ஓ அதிகாரியாக அனந்தபூர் மாவட்டத்தில் பணியாற்றி வருகிற சமயம் அது..
சென்னையில் வேலை பார்த்த அவரை பணிமாற்றம் செய்ய வைத்ததே சுவாமி தான்.
அரசாங்க அதிகாரிகளுக்கான மமதையையும் அவரிடமிருந்து மாற்ற அவரை பணி மாற்றம் செய்ய வைத்து சுவாமி விபூதி வழங்கி கனிந்த மனமாகவும் மாற்றி.. ராமச்சந்திரன் சாய்ராமை பக்குவப்படுத்தி இருக்கிறார்..
பாத மந்திரம் கட்டுகின்ற சமயத்தில் ஆர்.டி.ஓ ராமச் சந்திரன் சாய்ராமே அதற்கான கட்டுமானப் பணிகளின் போக்குவரத்து சேவையை சுவாமிக்கு கவனித்திருக்கிறார்.
சித்ராவதி நதியிலிருந்து கொண்டு வரவேண்டிய பொருட்களுக்கானவற்றை சவுகரியமாக்கி அப் பணியை சேவையாக செய்திருக்கிறார்..
கணவர் மூலம் சுவாமியை தரிசிக்கும் பாக்கியம் முருகம்மா சாய்ராமிற்கு கிடைத்திருக்கிறது.
குழந்தை இல்லாத முருகம்மா தம்பதியின் இல்லம் சென்று சுவாமி ஆசி வழங்கி முருகம்மாவை பாத மந்திரத்தில் (பழைய பஜனை மந்திர்) தங்க அழைத்திருக்கிறார்...
முருகம்மாவும் இரண்டு வருடம் அந்த மந்திரில் சுவாமிக்கு சமைப்பது... உணவைப் பரிமாறுவது போன்ற சேவையைச் செய்து வந்திருக்கிறார்..
அந்த இரண்டு வருடங்களும் இறைவன் வருடங்கள் அவர்களுக்கு.. புது அனுபவம்.. சுவாமியை கடவுள் என உணர்ந்த தினங்கள் அவை ..
ஆர்.டி.ஓ ராமச்சந்திரன் சாயாராமின் சேவையைப் பாராட்டியும்.. அவரது மனைவியான முருகம்மாவுக்கும் சேவையாற்ற பாக்கியம் அமைத்திருக்கிறார் பகவான்..
அந்த இரண்டாண்டில் ஒருநாள்..
சித்ராவதி நதிக்கரையில் அந்தப் புறம் வசிக்கின்ற ஒரு ஜமீன் குடும்பம் ஊருக்குச் செல்வதால் தங்கள் வளர்க்கின்ற இரண்டு நாய்க்குட்டிகளை சுவாமியிடம் பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருக்கின்றனர்..
பார்த்துக் கொள்ளத்தானே சுவாமியே பூமியில் இறங்கி வந்திருக்கிறார் பார்த்துக் கொள்ள மாட்டாரா?
நாட்கள் நகர்ந்தன..
ஒரு நாள் முருகம்மாவை சுவாமி அழைத்து... முருகம்மா நீ போய் இந்த நாய்க்குட்டிகளை ஒப்படைத்துவிட்டு வா எனச் சொல்லி துணைக்கு ஒரு பெண்மணியை அனுப்பி இருக்கிறார்..
பேருந்து ஏறி செல்லும் போது பின்னால் திரும்பிப் பார்க்காதே என்றிருக்கிறார்...
இருவரும் செல்ல.. அது மழைக் காலம்.. இவர்கள் பேருந்து ஏறிய போது வெள்ளம் சித்ராவதியில் பெருக்கெடுக்க இடுப்பளவு தண்ணீர் மடியை நிரப்பி இருக்கிறது..
பேருந்தோ நதியில் மிதக்கும் ஆமையாய் ஊர்ந்து கொண்டிருக்கிறது..
மடியை நீர் நனைக்க.. வயிற்றை மரண பயம் நனைக்க.. சற்று திரும்பி சுவாமி திசை நோக்கி கும்பிடலாம் எனத் தோன்றி இருக்கிறது முருகம்மாவிற்கு..
திரும்பியவுடன்.. திடுக்கிட்டுப் போயிருக்கிறார்... வெய்யில் காலம் போல வேர்த்துப் போயிருக்கிறது அந்த அற்புதக் காட்சியைக் கண்டவுடன் ... சுவாமி என மனதிற்குள் பேர் சொல்லி சாய்ராம் என ஜபம் செய்திருக்கிறார்..
அந்தக் காட்சி அரிய காட்சி..
அந்தக் காட்சி அற்புதக் காட்சி ...
ஆம்.. சுவாமி பேருந்துக்குப் பின்புறம் அந்தரத்தில் பறந்து இவர்களைப் பின்தொடர்ந்து வந்திருக்கிறார் ஆஞ்சநேயர்மலை தூக்கிப் பறந்து வரும் காட்சி போல்...
இதை ரவிசந்திரன் சாய்ராமிடம் கேட்டு மனத் திரையில் இக்காட்சியை ஓட்டிய போது அடியேன் உடம்பு நடுங்கிச் சிலிர்த்தது..
அடியேனுக்கே இப்படி என்றால் முருகம்மாவிற்கு எப்படி இருந்திருக்கும் என நினைத்துக் கொண்டேன்..
சுவாமி பேருந்தைத் தொட.. வெள்ளம் வடிந்திருக்கிறது..
இவர்களும் சுவாமி கொடுத்த சேவை முடித்து பாத மந்திரத்திற்கு திரும்புகின்றனர்..
என்ன முருகம்மா போய்ட்டு வந்துட்டியா எனக் கேட்டிருக்கிறார்..
ஆமா சுவாமி நீங்க தான் கூடவே வந்தீங்களே ...இது முருகம்மா..
ஆமா.. நான் தான் உன்ன திரும்பிப் பார்க்கக் கூடாதுன்னு சொன்னேனே ... ஏன் பாத்த? என்று சுவாமி கேட்க..
பயமாயிடுச்சு சுவாமி அதான் என்ற முருகம்மாவுக்கு
நான் இருக்கும் போது உனக்கு என்ன பயம்? உன்ன எதுவும் ஒண்ணும் பண்ணிடாது என்று சுவாமி சொல்லியிருக்கிறார்.
திரேதா யுகத்தில் ஆஞ்சநேயரை பறக்க வைத்த சுவாமி.. இந்த யுகத்தில் தானே பறந்திருக்கிறார் என நினைக்கையில் சுவாமி என அடியேன் இதயத்திற்குள் உருகி உருகிக் கரைந்தேன்...
இந்த அரிதான அற்புதத்தை ரவிச்சந்திரன் சாய்ராமிடம் முருகம்மா சொல்ல ரவியும் ஒரு டைரியில் எழுதி வைத்திருக்கிறார்..
சுவாமியின் அற்புதம் சுமந்த அந்த கர்ப்ப டைரி முதன்முதலாய் சுவாமி சங்கல்பத்தில் இதோ இதோ பிரசவமாகி இருக்கிறது.. பரவசமாகிக் கொண்டிருக்கிறது...
93 வயது வரை வாழ்ந்த முருகம்மா
இவரின் புகைப்படம் பார்ப்பதே பாக்கியமாக கருதுகிறேன்.
குழந்தை இல்லாத காரணத்தினால் தனது கணவரின் தம்பி குழந்தைகளை இவரே வளர்த்திருக்கிறார். அதில் ஒரு குழந்தையை அழைத்து போன சமயம். 8 வயதான அந்த பாலகனிடம் நீ நல்ல படிச்சு நாட்டுக்கு சேவை செய்யனும்.. சுவாமியும் இங்க ஸ்கூல் நடத்த போறேன்.. அது காலேஜ் ஆகி .. யுனிவர்சிட்டி ஆகி பெரிய அளவுக்கு வரப் போகிறது என சத்திய பிரமாணம் சொல்லி இருக்கிறார்.
சுவாமி சங்கல்பித்தது எது நடக்காமல் போயிருக்கிறது?
தனது எண்பத்தைந்தாவது வயதில் செவிலிப் பெண் உதவியோடு வீட்டில் குளித்தும்... துணி மாற்றியும் கொள்வார்...
ஒரு நாள் அந்த செவிலிப் பெண் வரவில்லை..
தானே குளியலறை சென்று குளித்துக் கொண்டிருக்க சட்டென வழுக்கி விழுந்திருக்கிறது அந்தப் பழுத்தப் பழம்...
ஐந்து விநாடி கூட தாமதமாகவில்லை..
கட்டிலில் படுத்தபடி சரியாக கட்டிவிடப்பட்ட புடவையோடு படுத்திருக்கிறார்.. இவரின் உடல் முழுக்க விபூதி...
யார் இதற்கு காரணம் என அடியேன் விளக்கத் தேவையே இல்லை...
பிறகு சுவாமிக்கு நன்றி சொல்ல பூஜையறை சென்றிருக்கிறார்...
அந்த நன்றியுணர்வைப் பாருங்கள்.. அந்த வயதிலும் சுவாமிக்கு நன்றி சொல்ல வேண்டும் என்ற தூய பக்தி..
அதற்குத் தான் சுவாமி இறங்கி வருவார்..
சதா வாதம் செய்து.. விவாதம் ஏற்படுத்தி.. பிறரை புறம் பேசி... சந்தேகப்படுபவர்க்கு அல்ல..
எளிமைக்கே சுவாமி மகிமையாய் அமைவார்...
இதை தனது குடும்பத்தினரிடம் சொன்னால் வழுக்கி விழுந்ததற்கு கவலைப்படுவார்களே என ரவி சாய்ராமை அழைத்தே இந்த ஆபத்பாந்தவ அனுபவம் பகிர்ந்திருக்கிறார்..
ஒருமுறை சுவாமியை தரிசிக்க தனது குடும்பத்தோடு கொடைக்கானல் சென்றிருக்கிறார் முருகம்மா..
முதல் நாள் சுவாமி இவர்கள் அமர்ந்திருக்கும் வழியோடு தரிசனம் தர .. முருகம்மா.. முருகம்மா என சொல்லி நடந்து போயிருக்கிறார்
யாருடைய பெயர் அழைக்கிறார் என அருகிலிருக்கும் காரிதரிசிகளுக்கு புரியாமல் இருந்திருக்கிறது...
பிறகு அடுத்த நாள் இன்னொரு தரிசனத்தில் சுவாமி முருகம்மாவின் அருகில் வந்து
முருகம்மா எப்படி இருக்க என்று சுவாமி சிறிது நேரம் பேசிவிட்டு நகர்ந்திருக்கிறார்..
பாத மந்திர அனுபவங்கள் சுமந்த முருகம்மா சுவாமியிடம் எப்போதும் உரிமையோடு.. பயபக்தியில் பக்தியோடு பயமின்றிப் பேசுபவர்..
பல்லாண்டுகள் கழித்து சுவாமியும் முருகம்மாவும் பேசும் கண்கொள்ளாக் காட்சியை முருகம்மா குடும்பத்தினர் கண்டு பரவசம் அடைந்திருக்கின்றனர்..
பழம்பெரும் பக்தை முருகம்மா..
சுவாமி எந்த பக்தரையும் மறக்காதவர்..
அவர்களே மறந்தாலும் பழையபடி பிடித்து இழுத்துக் கொள்பவர்..
உரிய நேரத்தில் உரியதைச் செய்து புஷ்பக விமானம் ஏற்றுபவர்..
பாதமந்திர பக்தை முருகம்மா பூரண வயது வாழ்ந்து சுவாமி பாதத்திலேயே பூர்த்தி ஆனார்..
இப்படி பிள்ளையார் சுழி என சுவாமி சுழியிட்ட சுவாமி பக்தி
அவரின் பரம்பரையில் அடுத்து
2. சண்முகம் சாய்ராம்:
ரவிச்சந்திரன் சாய்ராமின் பெரியப்பாவான இவர் 1959ல் புற்று நோய் கண்டு படுத்த படுக்கையானார்.
கல்லூரி முதல்வராகவும் பல கல்வி சேவையும்.. சென்னை தியாகராஜ கல்லூரி உருவாவதற்கு காரண சேவையாற்றியும் வந்த இவர் அப்போது நோய் கண்டு பாயில் சருகாய் சயனித்திருக்கிறார்.
முருகம்மா சாய்ராம் அழைத்ததன் பேரில் சுவாமி நான் சென்னை வருகிறேன் அப்போது இல்லம் வந்தே பார்க்கிறேன் எனச் சொல்லி இருக்கிறார்..
வாக்கு தவறாத வாத்ஸல்ய கடவுள் நம் சுவாமி..
சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை வேங்கட முனி பங்களாவில் தங்கி இருந்ததை அறிந்து
ரவி சாய்ராமின் (ரவிச்சந்திரன் சாய்ராம்) தந்தை திரு சம்பந்தன் சாய்ராம் காரை எடுத்து அந்த இடத்தில் மூன்று நாள் வந்தும் சுவாமி தரிசனம் தந்து போவதுமாக இருக்க .. இவருக்கோ சுவாமியை எப்படி அணுகுவது எனப் புரியவில்லை..
திரு. சண்முகம் சாய்ராம்
உன் காரில் கடற்கரை வரை செல்.. இந்த காரில் வந்து பிறகு உனது காரில் மாறி வருகிறேன் எனச் சொல்ல..
பயணமாகிறார்.
சென்னை தம்பு செட்டி தெருவில் இருந்த இரண்டாவது மாடியின் தனியறையில் படுத்திருக்கும் 50 வயதான திரு சண்முகத்திடம் சுவாமி தனியாகப் பேசி மாடியிலிருந்து கீழே இறங்கி இருக்கிறார்...
சுவாமி அவரோடு என்ன பேசினார் என இதுவரை சுவாமிக்கு மட்டுமே வெளிச்சமாக இருக்கிறது..
இரங்கி.. கீழே இறங்கிய சுவாமி..
முருகம்மா அழைத்ததற்கோ .. உங்கள் கோரிக்கைக்காகவோ சுவாமி இங்கே வரவில்லை..
சண்முகம் நிறைய சேவையாற்றி இருக்கிறான் அதற்காகத்தான் தேடி வந்தேன்.. கவலைப்பட தேவையில்லை.. அருளிவிட்டேன்.. சத்கதி தான்.. அவன் காலம் முடிந்துவிட்டது என சுவாமி மொழிந்திருக்கிறார்..
உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் சுவாமி பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிட்டுக் கிளம்புகிறார்..
இப்படியே சுவாமி ரவி சாய்ராமின் குடும்பத்தில் அருளாய் அரவணைப்பாய் அனுகிரகமாய் நுழைந்தது...
3. திரு சம்பந்தன் சாய்ராம்:
வழி அனுப்ப காரின் பின் இருக்கையில் சுவாமியும் திரு சம்பந்தன் சாய்ராமும் அமர்ந்திருக்க.. பல ஆண்டுகளாய் குழந்தை இல்லாமல் இருக்கும் சம்பந்தன் சாய்ராமிற்கோ மனதிற்குள் தவிப்பு.. சுவாமியிடம் இந்தப் பெருங்குறையைச் சொல்ல வேண்டுமே .. எப்படி ஆரம்பிக்க என தயக்கக் கடல் உள்ளே அலைபாய வார்த்தை வராமல் இதழ் துடிக்கிறது..
உதடு அசைகிறது அப்போதும் மௌனமே வெளியேறுகிறது..
திரு. ரவிச்சந்திரன் சாய்ராம் அவர்களின் தாய் தந்தையர்
சுவாமி அவர் தொடையைத் தட்டி..
குழந்த இல்லாம நீ கஷ்டப்படற உனக்கு கண்டிப்பா குழந்த பொறக்கும் எனத் தமிழிலேயே பேசி இருக்கிறார் அந்தர்யாமியான நம் அருள்மிகு ஆண்டவ சாயி
1963 இவருக்கு முதல் குழந்தை பிறந்திருக்கிறது.. பெயர் லோக சந்திரன்.
ரவி சாய்ராம் பிறந்த ஆண்டு 1967.
1960 லிருந்து 1990 வரை சுவாமியை சம்பந்தன் சாய்ராம் கொடைக்கானலில் தரிசனம் செய்தபடி இருக்கிறார்.
அவருக்கு அங்கே வீடிருந்த காரணத்தினால் யாருக்கும் சொல்லாமல் மாலை நடையாக மாதவ நடையை தரிசிக்கப் போய்விடுவார்.
ரவி சாய்ராமுக்கு சுவாமியின் கருணையை அறிமுகப்படுத்தியதும் தந்தை சம்பந்தன் சாய்ராமே..
4. திரு ரவிச்சந்திரன் சாய்ராம்:
75 'ஆம் ஆண்டு தனது தாயை இழந்த ரவி சாய்ராம்.. பி.காம் படித்து சி.ஏ படித்துக் கொண்டிருக்க.. உடல் நிலைப் பிரச்சனை காரணமாக அவதிப்பட தந்தை கடிதம் எழுதி பரம சஞ்சீவினியான சுவாமியை தரிசிக்க அழைக்கிறார்.
அது மே 5 1990.
கொடைக்கானல் தரிசனம். நேராக ரவி சாய்ராம் நோக்கி சுவாமி நடந்து வர ஐந்து நிமிடம் இவரையே உற்றுப் பார்த்திருக்கிறார்.. பிறகே பிறர் நீட்டிக் கொண்டிருந்த கடிதங்களை வாங்கி இருக்கிறார்..
திரு. ரவிச்சந்திரன் சாய்ராம்
சுவாமி உற்றுப் பார்க்க உற்றுப் பார்க்க ரவி சாய்ராம் கண்களில் இருந்து கங்கை பெருக்கெடுத்து வந்த வண்ணம் இருக்கிறது.
கங்காதரனை காண்கையில் கங்கை வராமல் என்ன செய்யும்?
அந்த நயன தீட்சைக்குப் பிறகிலிருந்து அவரின் பயணம் பவித்ரமாக ஆரம்பித்திருக்கிறது
சுந்தரம் செல்வதும். பஜனில் பங்கேற்பதும் .. சுவாமி இலக்கியம் வாசிப்பதும் சுவாசிப்பதுமாக இருக்கிறார்..
ஏற்கனவே உடல் நிலையால் சில கிலோ எடை குறைந்த ரவி சாய்ராம் கிரிக்கெட் விளையாடுவதை நிறுத்த.. அதை விசாரித்த நபரிடம் விபரம் சொன்னதற்கு .. ஒரு வீட்டில் சுவாமி வரவழைத்துத் தந்த லிங்காபிஷேக நீரை உண்டால் உடல்நிலை சீராகும் என உரைக்க..
அங்கே சென்றிருக்கிறார்.. அதுதான் முன்பு குறிப்பிட்ட அடியேனின் நண்பர் சுவாமி மாணவர் திரு விஜய ராகவன் சாய்ராமின் இல்லம்.
அவரின் தாயார் திருமதி இந்திரா சாய்ராம் திருச்சியில் சுவாமியை தரிசிக்க செல்கையில் முதல் தரிசனத்திலேயே லிங்க பாக்கியம் கிடைக்கப்பெற .. அதன் அற்புதங்களும் .. மகிமைகளும் தொடர்கின்றன..
ரவி சாய்ராம் மேலும் சொன்னார்
சுவாமி யாரை தான் பார்த்துக் கொள்கிறேன் எனச் சொல்கிறாரோ அவரை எப்படியும் எந்த ரூபத்திலும் பார்த்துக் கொள்வார்.. அவர்களே மாயையால் குழம்பி சுவாமியை பிரிந்து போனாலும் தடுத்தாட் கொள்வார்..
சில பேர் மூலமாக சுவாமி சிலவற்றை செய்ய வைப்பார் .. அது அவர்களல்ல சுவாமியே அவர்களை அனுப்பி அந்த சேவையாக அவர்களை ஆற்ற வைக்கிறார்..
சுவாமி சர்வாந்தர்யாமி என்பதால் அவரின் கடவுட் பணி தொய்வின்றி நிகழ்கின்றன
இது என் அனுபவம் என்றார்...
மேலும் சில கொடைக்கானல் மற்றும் பர்த்தி தரிசன அனுபவம் கேட்டேன்..
திரியைத் தூண்டிவிட்டால் தானே பிரகாசமாக எரியும்..
அங்கேயே நான் இருக்க.. இங்கே ஏன்?
ஒருமுறை 1992 -93ல் பர்த்தி தரிசனத்தில் ரவி சாய்ராம் அமர்ந்திருக்க .. சுவாமி வேறெங்கும் செல்லாமல் நேரடியாய் இவர் முன் நின்றிருக்கிறார்...
ரவி சாய்ராமுக்கு பதட்டத்தில் வேர்த்து கொட்டுகிறது..
பிறகு சுவாமி ரவி சாய்ராம் பின் அமர்ந்திருந்தவரை நோக்கி
நான் தான் காஞ்சிபுரத்திலேயே உன்ன பாத்துக்கறேனே அப்பறம் இங்க ஏன் வந்த? எனக் கேட்டுவிட்டு நகர்ந்து விடுகிறார்.
மொழியற்றுப் போன அவர் கண்களில் நீர் ததும்ப செய்கையற்று நின்றிருக்கிறார்.
ரவி சாய்ராம் விசாரிக்கிறார்..
சிறிது நேரம் பேச்சற்றுப் போய் பின்னால் அமர்ந்த அவர் தன் அனுபவம் பகிர்கிறார்.
அவர் காஞ்சிபுரவாசி.. காஞ்சிமடத்திற்குப் போய் வருபவர்.
காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிக்கு மிகுந்த நெருக்கமானவர். வேண்டியவர்.
காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்
இவர் அந்த மகா பெரியவரிடம் தான் பாபாவை தரிசிக்கச் செல்ல வேண்டும் அதற்கு தாங்கள் உத்தரவு தர வேண்டும் என மூன்று ஆண்டுகளாக வேண்டுகிறார்.. பெரியவரோ இப்போ வேண்டாம் என்பதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்..
மூன்றாம் ஆண்டு எப்படியாவது புட்டபர்த்தி வந்து சுவாமியை தரிசித்தே ஆக வேண்டும் என கங்கனம் கட்டி மகா பெரியவரிடம் உத்தரவு கேட்க அத் துறவோ..
சற்று குரலை உயர்த்தி .. எதுக்கு நீ அங்க போகணும்னு நெனைக்கிற எனக் கேட்கிறார்..
இல்ல பெரியவா எல்லாரும் அவரப் போய் தரிசனம் பண்றா அதான் போலாமேன்னு
என பவ்யமாய் தலை குனிந்து பேசுகிறார்
அதற்கு மகா பெரியவரோ
அவர் யாருன்னு உனக்கு தெரியுமா?
என கேள்வி எழுப்ப..
பதிலற்று பெரியவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்..
அவர் தான் நம்ம காஞ்சிபுரத்துல இருக்கிற சாக்ஷாத் காமாட்சி அம்பாள்..
அவ தான் உன்ன இங்கயே நல்ல பாத்துக்கறாளே .. நீ அங்க ஏன் போகணும் ? அதான் வேணாம் னு சொன்னேன் என்றிருக்கிறார்..
அதையும் மீறி சுவாமியை தரிசிக்க பர்த்தி வந்த அவரைப் பார்த்து மகா பெரியவர் கேட்ட அதே கேள்வியை நம் மகா கடவுள் கேட்க..
இவரோ பேச்சு மூச்சற்று விழியில் நீர் ததும்ப ரவி சாய்ராமிடம் சொல்லி முடிக்க..
அடியேனுக்கும் உடம்பு சிலிர்த்தது..
இதை நேரடியாய் அனுபவிக்கும் பாக்கியம் ரவி சாய்ராமுக்கும்.. அவரிடமிருந்து கேட்கும் பாக்கியம் அடியேனுக்கும்..
மகான்கள் பொய் சொல்வதில்லை.. மாற்றி மாற்றியும் பேசுவதில்லை..
இந்த அனுபவம் வைத்தே மகா பெரியவர் ...பெரும் பாடகி எம்.எஸ் அம்மா மற்றும் ரா.கணபதி சாய்ராமிடம் சுவாமியை சாக்ஷாத் காமாட்சி என சொன்னது சத்தியமே என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன்..
சத்தியம் என்பது ஒன்றே .. அது நம் சுவாமியே.. அதை சிலபேரே சுவாமி சங்கல்பத்தினால் அனுபவிக்க முடிகிறது.
உள்ள எடுத்துட்டு வா:
கொடைக்கானல் தரிசனத்தில் ஒருமுறை வெளிநாட்டவர் ஒருவர் பெயர் ஜான் போரன் தனது கேமரா சகிதமாக சுவாமியை தரிசனம் செய்ய வருகிறார். பிறகு கேமரா அனுமதியில்லை என கிளாக் ரூமில் வைக்கிறார்.
ரவி சாய்ராமுக்கு அருகே அவரின் சுவாமி தரிசனம். அதுவும் முதல் தரிசனம்.
தரிசனம் முடிகிறது.
வெளியே வரும் ரவி சாய்ராமை பின் தொடர்கிறார் போரன். அழைக்கிறார்..
உங்களிடம் பேச வேண்டும் என்கிறார். உங்களின் ஆரா நன்றாக இருக்கிறது அதனால் பேச வந்தேன்.
ஆரா அப்டின்னா இது ரவி சாய்ராம்
போரன் விளக்குகிறார். அவர் ஒரு தியான சாதகர். தினந்தோறும் அடியேன் போல் இருமுறை தியானிப்பவர்.. தியான வகுப்பும் எடுப்பவர். அமெரிக்கா -- வாஷிங்டன் -- சியாட்டலில் வசிப்பவர்..
5. ஜான் போரன் சாய்ராம்:
இவரை சந்தித்து ஒரு பெண்மணி அமெரிக்காவில் சுவாமி படம் தந்து தியான அறையில் வைக்கச் சொல்லி இருக்கிறார்..
யார் இவர் ? இது போரன்
இவர் இந்தியாவில் இருக்கும் சத்ய சாயி பாபா .. எனச் சொல்லியதற்கு ஆர்வமே இல்லாமல் தியான அறையில் வைக்கிறார்.
அன்று இரவு தியான அமர்வில் சுவாமி தியானத்தில் காட்சி தருகிறார்..
ஆச்சர்யப்படுகிறார் போரன்.
அடியேனுக்கும் ஆச்சர்யம்.. நம் அனுபவம் போல் இருக்கிறதே என்று..
அதை படம் தந்த பெண்மணியிடம் சொல்ல.. இதற்காகக் கூட பகவான் படம் உங்களிடம் வந்திருக்கலாம் என்கிறார் அந்தப் பெண்மணி.
சுவாமி படம் என்பது வெறும் படமல்ல.. நம்மை சுவாமி தொடர்பு கொள்ளும் பல கருவிகளில் ஒன்று.. பல மீடியம்களில் ஒன்று...
அடுத்த நாள் தியான அமர்வில் சுவாமி காட்சிதந்து பேசுகிறார்..
இந்தியா வந்து என்னைப் பார் என்கிறார் சுவாமி..
ஆச்சர்யப்படுகிறார் போரன். அடியேனுக்கும் ஆச்சர்யம். சுவாமி தியானத்தில் அடியேனிடம் பேசுவது போல்.. போரன் சாய்ராமிடமும் பேசியது ..
இந்த தியான அனுபவம் புதிதல்ல.. பல தியான சாதகருக்கு நிகழ்கிறது என்பதை தெளிவுபடுத்தியது..
சுவாமி கருணையே...
இந்தியா வருகிறார். விசாரிக்கிறார். பெங்களூருக்கு புக் செய்கிறார்.
அன்றிரவு தியானத்தில் சுவாமி காட்சி தந்து கொடைக்கானல் வா என்கிறார்..
பிறகு விசாரித்து முதல் தரிசனமும் ஆனது.. இதை ரவி சாய்ராமிடம் சொல்லச் சொல்ல ரவி சாய்ராம் ஆச்சர்யப்படுகிறார்..
ஒரு மாத காலம் வரை போரன் தங்குகிறார்..
மாலை நேரங்களை ரவியோடு அந்த சாதகப் புவி கழிக்கிறது.
அதில் ஒரு நாள் .. ஒரு தரிசனத்தில் .. கிளாக் ரூமில் வைக்காமல் கேமராவோடு தரிசனத்திற்கு வரும் போரனை வினாக் குறியோடு பார்க்கிறார் ரவி சாய்ராம்..
அவர் செக்கிங் செய்யும் சேவாதள தொண்டர் முன் நிற்க..
வெள்ளைச் சீறுடை அணிந்த ஒருவர் உள்ளிருந்து ஓடோடி வந்து போரனை அழைத்து உள்ளே செல்கிறார்..
ரவி சாய்ராம் புதிராய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
தரிசன வளாகத்தில் போரன் நின்ற படி படம் எடுக்க.. சுவாமி ஒரு இடத்திலிருந்து நுழைந்து.. நடந்து.. என ஒவ்வொரு நிகழ்வாய் அரங்கேற ... போரனோ கண்ணில் நீர் தேங்க கேமராவில் பதிவு செய்கிறார்..
தரிசனம் முடிகிறது.
பிறகு வினாவோடு விசாரித்த ரவி சாய்ராமிற்கு ஆச்சர்யம் கலந்த பதில் போரனிடமிருந்து வந்திருக்கிறது...
சுவாமி அந்த நாளின் முந்தைய இரவு தியானத்தில் காட்சி அளித்து அந்த நாளின் தரிசனக் காட்சியைக் காண வைத்து..
நாளை கேமராவோடு தரிசனத்திற்கு வா என சொல்லி இருக்கிறார்..
எப்படி எல்லாம் சுவாமி நடந்து தரிசனம் தந்ததை தியானக் காட்சியில் கண்டாரோ .. அதில் இம்மி அளவும் பிசகாமல் அதே போன்று நேரடி தரிசனத்திலும் சுவாமி கேமராவில் பதிவு செய்ய வைத்ததைக் கூற
உணர்ச்சிவசப்பட்டது மூன்று பேர்
அனுபவம் சொன்ன போரன் சாய்ராம்
அதை நேரடியாய்க் கேட்ட ரவி சாய்ராம்
அதை தொலைபேசி வழி கேட்ட அடியேன்..
சுவாமி தான் எல்லா நிகழ்வையும் நிகழ்த்துகிறார் அனைவர் வாழ்விலும்...
எல்லாம் அவரின் சங்கல்பமே..
எல்லாமே உலகிலும்.. வாழ்விலும் சுவாமியால் தீர்மானிக்கப்பட்டவையே...
உணர உணர.. உணரும் பாக்கியத்தையும் உணர உணர அடியேன் நிறைந்து போனேன்..
போரன் சாய்ராமோ நிச்சயம் எங்கள் நாட்டினருக்கு இதெல்லாம் புதிது..
சுவாமியை இன்னமும் அறிந்து கொள்ள வேண்டுமென ரவி சாய்ராம் அனுபவத்தையும் கேமராவில் பதிவு செய்திருக்கிறார்.
சுவாமி தியானத்தில் போரனுக்கு பலமுறையில் வழி காட்டியிருக்கிறார்.
அனுபவங்கள் ஓய்வதில்லை:
ஒரு முறை
ரவி சாய்ராம் தரிசனத்தில் அமர்ந்திருக்க..
அவர் பின்னே வேறொரு வெளிநாட்டவர் தியானத்தில் அமர்ந்திருக்கிறார்.
ரவி சாய்ராம் அவரையே பார்க்க .. அவரோ கண்களை மூடி தியானத்தில் அமர்ந்திருக்க.. சுவாமி வருகை.. தரிசன உவகை.. சுபம்..
பிறகு வெளியே வரும் ரவி சாய்ராமை அழைத்து ஏன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்ததாக கேட்ட அந்த வெளி நாட்டவரைப் பார்த்து ஆச்சர்யப்பட .. கண்கள் மூடி இருப்பினும் வெளிப்புற காட்சியை பார்க்க முடியும் என்றிருக்கிறார்..
இது தியான ஆழத்தில் ஒரு ஸித்தி நிலை..
அந்த வெளிநாட்டவர் மகிழ்ந்து போய் தான் அமரும் குஷன் இருக்கையைப் பரிசளித்திருக்கிறார்.
ஒரு முறை..
என்ன இவன் ஒரு முறை .. ஒரு முறை என்றே நீள்கிறான் என வாசிப்பவர்கள் கருதலாம்..
ரவி சாய்ராம் ஒரு அனுபவச் சுரங்கம்..
வற்றாத அனுபவ அலை.. அதில் மூழ்கிப் போனேன்..
ஒரு முறை சுவாமி உனக்கு இனி பிறவி இல்லை என்று சொல்ல.. அதற்கு ரவி சாய்ராமோ இல்லை சுவாமி உன் அடுத்த பிரேம சாயி அவதாரத்திலும் எனக்கு சேவை பாக்கியம் அருள வேண்டும் எனக் கேட்க ..
அடுத்த அவதாரம் நிகழும் ஆனால் இது தான் உனக்கு கடைசி பிறவி எனச் சொல்லி இருக்கிறார்..
சரி உனக்கு சொர்க்கம் வேண்டுமா.. வைகுண்டம் வேண்டுமா எனக் கேட்ட சுவாமியிடம் இரண்டுக்கும் என்ன வித்தியாசம் என ரவி சாய்ராம் கேட்க...
ஆன்மிக ஞானம் இல்லாவிட்டாலும் மிக மிக நல்ல மனிதராய் வாழ்ந்தால் சொர்க்கம் கிடைக்கும்..
ஆன்மிக ஞானமும் பெற்று நல்ல மனிதராய் வாழ்ந்தால் மட்டுமே வைகுண்டம் என்றிருக்கிறார் நம் பரப்பிரம்ம சுவாமி...
ஒரு முறை தரிசன நேரத்தில் ரவி சாய்ராம் அமர்ந்திருக்க .. அவரின் அருகே அமர்ந்திருந்தவர் சுவாமி நெருங்கிவரும் போது சுவாமியிடம் ஏதோ பிரச்சனையைப் பேச வர..
அவர் சொல்வதற்குள் .. வீட்டுல இருக்கற ஸ்ரீ தேவிய நீ ஏன் மூதேவின்னு திட்ற என்றாரே பார்க்கலாம்..
இது அவருக்கு மட்டுமா..
அப்படி நடந்து கொள்பவர்க்கும் சேர்த்துத் தான்...
மருத்துவ சேவை மகத்துவ சேவை:
தாம்பரம் மன்னிவாக்கத்தில் இருக்கும் ரவி சாய்ராம் இல்லத்தின் கீழ் அறை .. சுவாமிக்கான பஜனை மற்றும் வழிபாட்டு அறை ...
படத்தில் விபூதி மழை..
அண்ட சராசரத்தையே படைத்த நம் சுவாமி .. சிறு மகிமையான விபூதி வரவழைத்தலைப் பற்றி பலரும் ஏன்? எதற்கு? எப்படி ? என் வீட்டில் ஏன் இல்லை எனப் பல அபிப்ராய பேதங்களில் சுவாமி
விபூதி வரவழைத்தலையும் தாண்டி அவர்களுக்குள் நிகழ்த்த வேண்டிய அக மாற்றங்கள் அவர்களின் இருண்மையிலேயே நின்றுவிடுகின்றன.. என்கிறார் ரவி சாய்ராம்..
எவ்வளவு சத்தியம்..
சுவாமியின் சங்கல்பம் நம்மை வைத்து ஒன்றை நிகழ்த்தப் பார்க்கிறது. நம் அறியாமையோ சுவாமியை வைத்து நம் விருப்பத்தை நிறைவேற்றப் பார்க்கிறது..
விருப்பத்தை விடுத்தால் சுவாமியின் சங்கல்பம் எந்தத் தடையுமின்றி நமக்குள் நிகழ்ந்து விடுகிறது..
நோயாளிகளுக்கு சுவாமி விபூதி நீரில் கரைத்து மருந்தாகத் தருகிறார்..
மருத்துவர் தரும் அலோபதியை விட நம் வெங்கடாஜலபதி தரும் விபூதி அளப்பெரும் ஆற்றல் வாய்ந்தது..
மாபெரும் மகிமை தோய்ந்தது..
பிறவிப் பேறே அளிக்க வல்லது..
இவர் பூஜிக்கும் சுவாமி படத்தில் சுவாமி ஒரு மந்திரத்தை கையெழுத்து இட..
"ஓம் யும் நமஹ
ஓம் ரும் நமஹ"
யும்'மை அழுத்த வேண்டும்
ரு'வை நீட்ட வேண்டும்
அதன் உச்சாடனம் பழுத்தப் புற்று நோயைக் கூட முற்றிலும் போக்கி வருகிறது
அவர் உச்சாடனம் செய்யும் போதே அதிர்வலைகள் அடியேன் உடம்பெங்கும் பரவியது...
சுவாமி ஒரு லிங்கமும் இவருக்கு சிருஷ்டி செய்து தர அதன் அபிஷேக நீராலும் பலபேர் பயன் அடைந்து வருகின்றனர்.. பூரண நலம் அடைந்து வருகின்றனர்...
பிரசாந்தி நிலய திரு ரத்னாகர் சாய்ராம் கேட்டதற்கிணங்க ஆசிரமத்தில் சுவாமியின் பிரம்மாண்ட உருவப் படத்தையும் செய்து சேவையாற்றி இருக்கிறார்
தன்னமற்ற சேவையே தெய்வம்..
பொதுநலமே பகவான் நலம்...
இந்த நீளமான ... ஆழமான.. ஆத்மார்த்தமான அனுபவம் அனுபவித்தவரை...
அனுபவித்த வரை...
சுவாமியே பேசியது .. சுவாமியே கேட்டது..
இப்போது உங்களுள் சுவாமியே வாசித்தது..
ஒரு பரம்பரையையே சுவாமி பார்த்துக் கொண்டிருக்கிறார்..
இன்று ரவி சாய்ராமின் மருத்துவக் கரமாக.. கவுன்சிலிங் வரமாக சுவாமியே செயலாற்றுகிறார்..
இந்த சூரிய பக்தரின் ஆன்ம சுடரொளியால் அடியேனும் ஒரு சுற்று பிரகாசமாய்ப் பெருத்தேன்...
சுவாமியே கடவுள் ... சுவாமியே பரப்பிரம்மம்...
சுவாமியே பரிபூரணம்...
சுவாமியே சர்வமும்... சகலமும்...
வேறெவரும் இல்லை ...
வேறெதுவும் இல்லை...
சுவாமியிடம்
சரணாகதியோடு
சுயத்தை சுகித்திருப்போம்
பக்தியுடன்
வைரபாரதி ✍🏻
Blessed to view the link which contains so much of divine information about Swami.
பதிலளிநீக்குThanks for sharing and interested in viewing other related information as and when i am blessed to get.
ஓம் சாயிராம்
பதிலளிநீக்கு