தலைப்பு

திங்கள், 24 பிப்ரவரி, 2020

உங்கள் தாய் தந்தையருக்கு எப்பொழுதும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும்!


மாதா பிதா குரு தெய்வத்தின் மூலமாகிய அடி வேராகிய பரப்பிரம்ம பாபா எவ்வாறு பிள்ளைகள் பெற்றோர்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும்... பெற்றோர்கள் எவ்வாறு பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்பதைப் பற்றியும் பட்டவர்த்தனமாய் பகிர்கிறார்...! பெற்றோர்களைப் பெற்ற பெற்றோர்களுக்கும் பெற்றோரான பாபாவே நம்மை ஒளிநடத்த வழிநடத்துவதற்கான முழு அக்கறையும் திறந்திருக்கிறது இதோ...

தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொருவரும் தவறுகள் இழைக்க நேரிடுகிறது. தாய்க்குத் தான் எவ்வளவு கடமைப்பட்டிருக்கிறோம் என்பதை மறக்கும் தவற்றினை ஒருநாளும் இழைக்கலாகாது. ஒருவன் என்ன தவறுகள் செய்தாலும், தாயிடம் கொண்டுள்ள அன்பு அவன் வாழ்வினைக் காப்பாற்றும், ஆற்றல்கள் மிகுந்த இவ்வுடல், பெற்றோர்கள் நமக்களித்த மாபெரும் பரிசு. எல்லா உயிர்களுக்கும் இறைவன் அதிகாரி என்றாலும், பெற்றோர்களே குழந்தைக்கு உடலை அளித்தவர்கள். களி மண்ணும் தண்ணீரும் இயற்கையின் பரிசுகள். ஆனால் அவற்றைக் கொண்டு குயவன் தான் பணிகளைச் செய்ய இயலும். ஆகையால் பெற்றோரிடம் நமக்குள்ள நன்றியுணர்வு, நமக்குள்ள முதன்மையான கடமை. இக்கால மாணவர்கள், "பெற்றோரிடம் நாம் ஏன் நன்றி கொள்ள வேண்டும்?" என்று கேட்கிறார்கள். இப்போது தமது நடத்தை உங்கள் தாய் தந்தையருக்கு எப்பொழுதும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும் மூலம் தம் பெற்றோருக்கு மனத்துன்பம் அளித்தால், பிற்காலத்தில் அவர்கள் குழந்தைகள் இதேபோல அவர்களுக்கு துன்பமளிப்பர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.


செயலும் இந்த பிரதிபலனும் ஆகிய இந்த விதி எப்போதும் செயல்படுகிறது. இளமை, செல்வம்,வலிமை இவற்றை நினைந்து தற்பெருமை கொள்ளலாகாது. இவையெல்லாம் நிலையற்றவை. ஆதிசங்கரர் கடிந்து எச்சரிப்பது: "நண்பர்கள், செல்வம், இளமை இவற்றைக் கொண்டு கர்வம் அடையாதே: காலம் இவற்றை ஒரு கணத்தில் பறித்துச் செல்லும்". இந்த நிலையற்ற உடமைகளில் நம்பிக்கை வைத்து, மக்கள் நிரந்தர உண்மைகளையும், உண்மையான ஆனந்தத்தின் மூலத்தையும் மறக்கிறார்கள். எத்தகைய உடமைகள் நீ கொண்டிருந்தாலும், எத்தகைய வசதிகளை நீ அனுபவித்தாலும், கடவுளிடம் கொண்டுள்ள நம்பிக்கை மட்டும் தான் உனக்கு உண்மையான மன அமைதியை கொடுக்க வல்லது. ஒரு ஏர் கண்டிஷனர் உனது உடலை குளுமைபடுத்தலாம். ஆனால் இறைவனது அருள் மட்டுமே கொதிக்கும் மூளையினையும், கொந்தளிக்கும் இதயத்தையும், குணப்படுத்தவல்லது. பெற்றோரிடம் யார் நன்றியுணர்வுடன் இருக்கிறார்களோ, பெற்றோருக்கு யார் அன்புடன் சேவை செய்கிறார்களோ, அவர்களுக்கு அத்தகைய அருள் கிட்டும். நன்றியுணர்வு, தாயிடம் தொடங்கி, பின் தந்தைக்கும் குருவுக்கும் பரவவேண்டும். இம்மூவருக்கும் நீங்கள் நன்றி தெரிவித்தால் அவர்களிடம், மும்மூர்த்திகளின் பிரசன்னத்தை உணர்வீர்கள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும் வழிபட்ட நற்பயனையும் பெறுவீர்கள்.

🌹பெற்றோர் செய்யும் தவறு:

தற்காலத்தில் குழந்தைகளில் 90 சதவிகிதம் கெடுவதற்குக் காரணம் பெற்றோர்களே என்பது துர்ப்பாக்கியமான உண்மை. குழந்தைகளை அவர்கள் சமயமறிந்து கண்டிப்பதில்லை. அவ்வப்போது குழந்தைகளின் தவறான செயல்களை திருத்தினால், குழந்தைகள் நல்ல முறையில் வளர்வார்கள். குழந்தைகள் தவறான வழியில் செல்கையில் பெற்றோர்கள் அவர்களுக்கு இரக்கங்காட்டலாகாது. தவறு செய்யும் குழந்தைகளைத் திருத்தாமல் இருத்தல், முறைதவறிய பாசமாகும்.


ஒழுங்கான நடத்தையில்லாத குழந்தைகள் இருப்பதால் என்ன பயன்?நூறு தீய மக்களால் திருதராஷ்டிரன் அடைந்த லாபம் என்ன? ஸ்ரீ கிருஷ்ணனும், விதுரனும் எச்சரித்தும் கூட, அவ்வரசனால் அவர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கடைசியில் குடும்பம் முழுவதும் அழிக்கப்பட்டது. குழந்தை பிறந்ததும் கொண்டாடுவதில் அர்த்தமில்லை. குழந்தை வளர்ந்து நற்பெயரெடுத்து, புகழ்பெற்று, பெற்றோருக்குப் பெருமை தேடித்தரும் அத்தருணமே மகிழ்வு கொள்ள வேண்டிய தருணம். ஒவ்வொரு மகனும் தனது தாய் மகிழ்ச்சியடையும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். தாயிடமிருந்து அன்பினையும், நல்லாசியையும் தவிர, வேறெதுவும் வேண்டாலாகாது. தாய்மார்கள் குழந்தைகள் நேர் வழியில் நடக்கும்படி செய்ய முயற்சி செய்ய வேண்டும். அத்தகைய தாய்மார்களே 'தாய்' என்று அழைக்கப்படவும், அத்தகைய மக்களே, 'மகன்' என்று அழைக்கப்படவும் தகுதி பெற்றவர்கள்.தாய்மார்களும்,மக்களும் ஒழுங்காக நடக்கும் போது, நாடு நேர்வழியில் வளர்ச்சி பெறும். தர்மம் குடும்பத்திலிருந்து உலக முழுமைக்கும் பரவும்.

ஸ்வாமியைக் காண செல்லும் குழந்தைகளை நோக்கி, "உனக்கென்ன பைத்தியம் பிடித்து விட்டதா? அந்த சாயியிடம் எதற்காக போகிறாய்?" என்று சில பெற்றோர்கள் கேட்கிறார்கள். தம் சந்ததியினருக்கு எந்தவிதமான கிறுக்குப் பிடிக்க வேண்டுமென்று பெற்றோர் விரும்புகிறார்கள்? போக்கிரிகளாகவும், குண்டர்களாகவும் மாற வேண்டுமென்று விரும்புகிறார்களா?பணப் பைத்தியம் பிடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?இறைவனின் திருவருளுக்குச் சமமான எதனைப் பணத்தால் பெறமுடியும்? இறைவனின் திருவருளையே ஒவ்வொருவரும் நாடவேண்டும். உலகிலுள்ள எல்லா செல்வங்களையும் விட அதுவே சிறந்த பொக்கிஷம்.

ஆதாரம்: பகவான் பாபாவின் பேரானந்தப் பேருரைகள் என்ற புத்தகத்திலிருந்து... 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக