தலைப்பு

சனி, 22 பிப்ரவரி, 2020

சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை | Chapter 8 | தெய்வம் தந்த பாட்டு - சாயி ராதா


🇦🇺 ஆஸ்திரேலியாவில் வாழும் சாயி ராதா அவர்களின் சாயி அனுபவங்கள்.

ஆண்டவன் சாயி வாழ்வின் ஆரம்பகாலம் லீலை.
யாண்டுமே வளரும் சாயி தெய்விக மகிமை எல்லாம்
வேண்டும் ஞானம் புகட்ட உபதேசங்கள் எனினும்
ஆண்டவன் சாயி வாழ்வில் எப்போதும் மூன்றும் உண்டு!

தெய்வப் பாட்டு:

ஆஸ்திரேலியாவில் எந்த சென்ட்டர் பஜனுக்குச் சென்றாலும் எந்த வீட்டிற்குச் சென்றாலும் ஸ்வாமி தரும் தெய்விக அனுபவம் உன்னதம். சில சாயி பக்தர் வீடுகளுக்குப் போனபோது ஸ்வாமியின் பக்தையான ராதாமாமி என்பவரைப் பற்றி பலரும் சொன்னார்கள். அந்த பஜனுக்கு வந்தார் குங்குமம் வந்தது மஞ்சள் வந்தது சந்தனம் வந்தது என்றெல்லாம். அச்சமயம் அவர் மும்பையிலிருந்தார். அவருடைய மகள் வீடு ஆஸ்திரேலியாவிலிருந்தது. மகள் பிரசவத்திற்கு வந்தவர் 6 மாதங்களுக்கு மேல் அங்கு தங்கியிருந்தார். அம்பாள் உபாசகி. சோட்டானிக்கரை பகவதி அம்மனை வழிபடுபவர். அவருக்கு சகல தெய்வங்களின் அருளும் பூர்வ புண்ணியத்தால் கிடைத்தபடியிருக்கிறது. ஸ்வாமியின் மீது பேரன்பும் பக்தியும் கொண்டவர். சத்ய சாயியின் தரிசனமும் வழிகாட்டுதலும் கனவில் இவருக்கு அடிக்கடி வாய்க்கிறது. ஸ்வாமியைப் பற்றி இவர் எழுதிய பாடல்கள் அழகானவை அற்புதமானவை.

தன் மகளுடன் ராதாமாமி

ராதாமாமி பிறப்பில் மலையாளி. அவருக்கு மலையாளத்தில் மட்டுமே நன்றாக எழுத முடியும். தமிழ் தெரியாது. ஆனால் நடப்பதைக் கேளுங்கள். இரவு உறக்கத்தில் இவர் பக்கத்திலுள்ள நோட்டில் அந்தந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தில் தமிழ்ப் பாட்டு எழுதுகிறார். இதில் விசித்திரம் என்னவென்றால் அவர் எழுதுவது அவருக்கே தெரியாது. அவருக்குத் தமிழும் தெரியாது. காலையில் எழுந்து பார்த்தால் அந்தந்த தெய்வத்தின் அனுக்ரஹத்தில் பாட்டு எழுதப்பட்டிருக்கிறது. இந்த அதிசயம் அவருக்கே பிடிபடவில்லை.  இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள். இந்த அதிமதுர கீதங்கள் அதில் சில பாடல்களை ஆஸ்திரேலியாவிலிருக்கும் 'சுஷ்மிதா ரவி'பாடி சென்னையில் சி.டி. தயார் செய்து புட்டபர்த்திக்கு ஸ்வாமி சன்னிதியில் கொண்டுபோக ஸ்வாமியின் ஆசி கிடைத்திருக்கிறது. ஸ்வாமியின் அருளாசி அவரை அற்புதமாக எழுத வைத்திருக்கிறது. அதி நூதனமான சொற்பிரயோகங்களோடு அமிர்தவர்ஷமாய் ஆனந்தம் தருகின்றன அந்தப்பாடல்கள்.

ஸ்வாமி சத்ய சாயிபாபா இவருக்குள்ளிருந்து பேசுகிறார் வழிகாட்டுகிறார். பலருடைய சிக்கல்களுக்கும் வியாதிகளுக்கும் தீர்வு சொல்லி பலருக்கும் உன்னதமான உள்முக மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த பக்தை இருக்குமிடத்தில் ஸ்வாமி பிரத்யட்சமாய் நடமாடுகிறார்.

மங்கல குங்குமம் சாயி:

ஒரு பஜனுக்கு இவர் போயிருந்தபோது அது நவராத்திரி பஜனாக இருந்ததால் நிறைய சுமங்கலிகள் வந்திருந்தார்கள். இத்தனை சுமங்கலிகள் இருக்கிறார்கள்,ஸ்வாமி இவர்களுக்கெல்லாம் குங்குமம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என ஸ்வாமியிடம் இவர் கேட்டாராம். ஸ்வாமியிடம் இவர் கேட்டதும் ஸ்வாமி அந்த க்ஷணம் ராதா மாமியின் கண்களுக்கு மட்டும் தெரியும்படி நடந்து வந்து அவர் கைகளில் குங்குமம் கொட்டிவிட்டுப் போயிருக்கிறார்.வெள்ளை கார்ப்பெட்டெல்லாம் ஒரே குங்குமக் கோலமானதாம்.ஸ்வாமியின் பிரசன்னத்தை திடீரென்று பரவிய அற்புதமான பரிமளாதி வாசனையில் உணர்ந்து சிலிர்த்திருக்கிறார்கள் பக்தர்கள். கை நிறைய வழிந்து கார்பெட்டெங்கும் பெயிண்ட் அடித்த குங்குமத்தை வந்திருந்த பெண்களுக்கெல்லாம் அன்போடு தந்தார் மாமி. இன்னொரு இடத்தில் இவர் பஜன் பாடிக் கொண்டிருந்தபோது ஸ்வாமியின் படங்களில் சந்தனம் மொட்டு விட்டு மலர்ந்து வழிந்திருக்கிறது. விபூதி சந்தனம் குங்குமம் எல்லாம் ஸ்வாமியின் உபயத்தில் அவர்க்கு அடிக்கடி கிடைக்கும் தெய்வப்பிரசாதம்.

அனுபவங்கள் தரும் ஆண்டவன்:

ஸ்வாமியிடமிருந்து பெற்ற தெய்விக அனுபவங்களை அன்போடு பகிர்ந்துகொள்கிறார் ராதா மாமி.அம்பாள் பக்தையாக இருந்தேன். ஆனால்,ஸ்வாமி மேலான பரம் பொருளை ஆண் பெண்ணாகப் பிரிக்க இயலாது. ஏதேனும் ஒன்றில் அடங்குவதல்ல பரப்பிரம்மம் என்பதை ஸ்வாமி எனக்கு உணர்த்தியிருக்கிறார். தெய்வசக்தியை பால்பேதத்தால் விளக்கவோ பிரித்துணரவோ முடியாது.

ஸ்வாமி ஆண் என்று நீங்கள் நினைத்தால் ஆமாம் சக்தி என்றால் சக்தி. ஸ்வாமி எனக்குப் பாடல் எழுதும் வரத்தினைத் தந்திருக்கிறார். நூற்றுக்கணக்கான பாடல்களை சாயி கிருபையால் எழுதியிருக்கிறேன். இவை பக்தர்களால் இசையமைத்துப் பாடப் பெற்று வருகின்றன.உன்னதமான தெய்விக அனுபவங்களை இவருக்குத் தந்திருக்கிறார் ஸ்வாமி. சிலருக்கு சில செய்திகளை உணர்த்தவோ வழிகாட்டவோ தீர்வு சொல்லவோ செய்கிறார். ராதாமாமி சொல்கிறார்.

அது கனவில் வருவது போல் ஆனால் மிகத் தெளிவாக ஸ்வாமியால் எனக்கு சொல்லவோ காட்டவோ படுகிறது. எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள வீட்டில் புதிதாகத் திருமணமான பெண் புகுந்த வீட்டிற்கு வந்திருந்தாள். அவர்கள் சக்தி வழிபாடு செய்பவர்கள். புகுந்த வீட்டிற்கு வந்ததும் சாயிபக்தையான அவள் ஸ்வாமியின் படம் ஒன்று கூட அங்கு இல்லாததைக் கண்டு கவலை யடைந்தாள். தான் ஸ்வாமியின் படத்தை வைத்து வழிபட்டால் அவர்கள் எதிர்ப்பார்களோ என்று பயந்து தன்னுடைய 'கப்போர்டு'க்குள் பாபா படத்தை வைத்து வழிபடுவாள். பிறகு மூடி விட்டுப் போய் விடுவாள்.ஸ்வாமி என் கனவில் வந்து சொன்னார், மூடப்பட்ட இடத்தில் ஏன் நான் வைக்கப்படவேண்டும் பூஜையறை அலமாரியில் என்னை வைத்து வழிபடவேண்டும் என்று சொல்ல யார் ஸ்வாமி எந்த வீடு எவரிடம் சொல்வது என்று கேட்டதும் ஸ்வாமி அடையாளம் காட்டினார். உடனடியாய் அந்த வீட்டினரிடம் சென்று ஸ்வாமியின் செய்தியை விருப்பத்தைச் சொன்னேன். அந்த பெண்ணோ ஆச்சரியத்தில் அதிர்ந்து போனாள். அவளுக்குப் பேரானந்தமும் ஆச்சரியமும் ஏற்படும் விதத்தில் ஸ்வாமியின் படம் பூஜையறை அலமாரியில் வைக்கப்பட்டதோடு மட்டுமல்ல அவள் புகுந்த வீட்டினர் அனைவரும் சத்ய சாயிபாபாவை அன்போடு வழிபடத் தொடங்கினர். இந்தச் சம்பவத்தின்போது தான் ஸ்வாமிக்கான முதல் பாடலையும் ஸ்வாமி என்னை எழுத வைத்தார்.

இரண்டாவது சம்பவம். என் குருவாகிய எனக்கு ஸ்லோகங்கள் பாடங்களைக் கற்றுத் தருபவரான எண்பது வயதான மாமிக்காக ஸ்வாமி பேசினார். அந்த மாமியின் சந்தேகம் என்னவென்றால் எப்போதேனும் உடல்நலமில்லாது போகும் போது குளிக்க முடியாமல் போகிறது. உடம்பு குளிக்காமல் வழிபாடு செய்யலாமா? அவருக்கு ஸ்வாமியின் பதில் இப்படி வந்தது. அதையே கூட ஒரு பாடலாக எழுதியிருக்கிறேன்.

ஸ்வாமி பதில் சொன்னார். தெய்வ வழிபாடு செய்வதும் தெய்வீகப் பேருண்மைகளை உணர்வதும் ஆத்மாவே. ஆத்மாவிற்கு எந்த வகையான குளியலும் தேவையில்லை!

பின்னொரு முறை உலகிலேயே செல்வந்தர் யார் என்று ஸ்வாமியிடம் கேட்டபோது முதியவர்கள் என்றார். வயதும் காலமும் கொடுக்கும் அனுபவத்தை வேறு யாரும் சீக்கிரம் பெற முடியாது. மக்கள் அறிவை எந்த வழியில் வேண்டுமானாலும் அடையலாம். பறந்து போகலாம்.. வயது காலம் முதுமை பெற்ற அனுபவங்கள் உயர்ந்தவை மேலானவை காலங்காலமாய் வளர்ந்து வருபவை. எனவே வயதானவர்களே செல்வந்தர்கள் என்றார். முதியவர்களை மரியாதை செய்யும் நோக்கத்திலும் ஸ்வாமியால் சொல்லப்பட்ட செய்தி இது.

பிரிஸ்பேனிலிருந்தபோது ஒரு பக்தர் தன் பிரச்சினையைக் கூறி ஸ்வாமியிடம் பதில் கேட்கச் சொன்னார். அவருடைய மகன் ஒரு விபத்தில் மறைய தற்கொலை கேஸாக போலீஸ் பதிவு செய்தது. தன் மகன் எந்த ஒரு சின்னத்தனமான காரணத்திற்காக அப்படி செய்து கொள்ளக் கூடியவனல்ல என்பதைச் சொல்லி இதுகுறித்து ஸ்வாமியிடம் பதில் கேட்டார்.

ஸ்வாமி அவர் மகன் அறியாமையுள்ளவன் என்று சொன்னதோடு இந்த இறப்பிற்கு காரணமானவர்களையும் சுட்டிக்காட்டி விட்டார். மிகச்சரியான பெயர்களையும் இடங்களையும் சொல்லி தொடர்புகொண்டு விசாரிக்கச் சொன்னார். எல்லாமே கனவில் வந்தன.கேஸில் அனாவசியமாய்  இழுக்கப்பட்ட நல்லவர்கள் விடுதலையடைந்தார்கள். வழக்கு முடிந்து விட்டது. ஸ்வாமி தன் பக்தர்களைக் காக்க எந்த அளவிற்குச் செல்கிறார் என்பதை பக்தர்கள் உணரவேண்டும். சத்ய சாயிபாபாவால் செய்ய முடியாதது என்று எங்கும் எதுவும் இல்லை. எல்லாம் வல்ல இறைவனல்லவா ஸ்வாமி! வழிகாட்டுவது, வாழ்வைத் தருவது, சிக்கலைத் தீர்ப்பது, சேதி சொல்வது, நோய் தீர்ப்பது, மாண்ட உயிரை மீண்டும் தருவது, பக்தர்களின் அன்பாலும் நம்பிக்கையாலும் பக்தியாலும் மகிழ்ந்து போனால் அவர்கள் தலையெழுத்தையே கூட மாற்றிவிடுவது, சோதனைகளைத் தீர்த்து அதிரடியாய் வந்து காப்பது, கனவில் நேரில் சூக்ஷ்மத்தில் சகல நிலைகளிலும் பக்தரைக் காப்பது என்று எல்லாம் செய்யும் இறைவனே நம் சத்யசாயி.! மகேஸ்வரன் சாயி பக்தர்களுக்கு மாமருந்தாயிருந்து உண்மையான மகிழ்ச்சியை அளிக்கிறார் என்று சொல்கிறார் இந்த அருமந்த சாயிபக்தை. 

ஜெய் சாயிராம்!

ஆதாரம்: சத்ய சாயிபாபாவின் கடல் கடந்த கருணை 

(ஆஸ்திரேலிய சாயி பக்தர்களின் அனுபவங்கள்) 

தொகுத்து அளித்தவர்: சாயி ஜெயலட்சுமி (கவிஞர் பொன்மணி)

வெளியீடு:
ஶ்ரீ சத்யசாயி புக்ஸ் அண்ட் பப்ளிகேஷன் டிரஸ்ட், தமிழ்நாடு, சென்னை-600028.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக